பிச்சை, உதவி, தட்சிணை, கட்டணம்… எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்…

http://www.jeyamohan.in/74673#.Vf42qtKqqko

மீண்டும் உதவி கேட்டு.  பண உதவி கேட்டால் ஏன் எல்லோரும் மிரண்டு போய் பதற்றம் அடைகிறார்கள் என்று இன்னமுமே எனக்குப் புரியவில்லை.  ஒரே காரணம்தான் இருக்க முடியும்.  ஒருவரின் ஆளுமையைப் புரிந்து கொள்வதில், மதிப்பிடுவதில், ஏற்பதில் அல்லது மறுப்பதில் பணம் ஒன்றையே அளவுகோலாக வைக்கிறார்கள்.  என்னைத் திட்டி எழுதப்படும் அத்தனை எழுத்துமே நான் வாசகர்களிடம் பணம் கேட்கிறேன் என்ற ஒரே விஷயத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.  ஆக, ஒரு எழுத்தாளனை மதிப்பிட, ஏற்க, வெறுத்து ஒதுக்க இந்தப் பண விஷயம் மட்டும் ஆதாரமாக இருக்கிறது.  பணம்தான் பிரதானம்.  எனக்கு அப்படி அல்ல.  பணம் என் சிந்தனையிலேயே இல்லை.  பணம் எனக்குத் தேவை.  ஆனால் அது என் வாழ்வில் என்றுமே ஒரு பொருட்டாக இருந்ததில்லை.  நான் சொல்வது பலருக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன்.  உதாரணம் சொல்லி விளக்கலாம்.  எனக்கு ஒருவர் பண உதவி செய்கிறார்.  அதற்காக அவருக்கு நான் நன்றிக் கடன் பட மாட்டேன்.  அதாவது, அவர் மீது நான் அன்பு கொள்ள அவர் எனக்குச் செய்யும் பண உதவியைக் காரணமாக வைக்க மாட்டேன்.  இன்னொரு உதாரணம்.  2001-இல் ஷோபா சக்தி தன்னுடைய சொந்தப் பணத்தில் என்னை ஃப்ரான்ஸ் வரவழைத்தார்.  அவருடைய செலவு மட்டும்தான்.  இரண்டு மாதம் தங்கியதாக ஞாபகம்.  அப்போதே இரண்டு லட்ச ரூபாய் ஆகியிருக்கும்.

அதே ஆண்டு, அவருடைய நாவல் கொரில்லா வெளிவந்தது.  வெளியீட்டு விழாவில் பேச அழைத்தார்.  பேசினேன்.  என்ன பேசினேன்?  இது ஒரு நாவலே அல்ல.  வெறும் டயரி.  அதோடு மட்டும் அல்ல.  இனரீதியாக இரண்டு பட்ட சமூகத்தில் நடந்த ஒரு போரை தனிநபர்களின் மதிப்பீட்டு வீழ்ச்சியாகக் கொச்சைப்படுத்தியிருக்கிறது கொரில்லா என்று தாக்கினேன்.

ஆக, என் உறவுகளை, நட்பைப் பரிபாலித்துக் கொள்வதற்கு பணம் என்ற விஷயத்தை நான் அனுமதிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறீர்களா?

எனக்கு உதவி செய்பவர்கள் மீது எனக்கு நன்றியுணர்வு இருக்கும்.  ஆனால் அதையே அந்த நட்புக்கு ஆதார சக்தியாக வைக்க அனுமதிப்பதில்லை.  சமீபத்தில் மதுரை சென்றிருந்தேன்.  அருணாசலம்தான் எனக்கு மூன்று தினங்கள் அறை வாடகை, உணவு எல்லா செலவையும் ஏற்றார்.  10000 ரூபாய்க்கு எனக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்.  யாருக்கு இப்படியெல்லாம் மனம் வரும்?  அவர் மீது எனக்கு மிகுந்த அன்பும் நன்றியுணர்வும் உண்டு.  அதற்காக நாளை அவர் ஒரு கவிதைத் தொகுதியைக் கொடுத்து படித்துப் பாருங்கள் என்று சொன்னால், படிப்பேனே தவிர, அது நன்றாக இருந்தால் மட்டுமே பாராட்டுவேன்.  அது அருணாசலத்துக்கு மட்டும் அல்ல; என் நண்பர்கள் அனைவருக்குமே தெரியும்.  (கோவையிலிருந்து மதுரை வந்து என்னை சந்தித்த மனோ, உங்களையும் மறக்கவில்லை!)

ஒருவரை மதிப்பிட பணம்தான் அளவுகோல் என்றால் அங்கே நான் இல்லை.  அதனால்தான் என்னைத் திட்டுபவர்களையும் நான் கண்டு கொள்வதில்லை.   ஆனால் ஒரு விஷயம்தான் ஆச்சரியமாக இருந்தது.  எழுத்தாளர்கள் அத்தனை பேரையுமே இந்தச் சமூகம் பிச்சைக்காரர்களாகத்தான் வைத்திருக்கிறது.  நான் கடவுளில் வரும் பிச்சைக்காரக் கூட்டத்தைப் போல்.  இந்த நிலையில் நான் பிச்சை எடுப்பதைக் கண்டு சக எழுத்தாளர்களே என்னை நையாண்டி செய்யும் போது ஆச்சரியப்படுவேன்.  ஒரு பிச்சைக்காரர் இன்னொரு பிச்சைக்காரரை நக்கல் செய்ய முடியுமா? தர்மம் அல்லவே?

இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று குமுதத்தில் ஞாநிதான் ஆரம்பித்து வைத்தார்.  அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று படிப்பவருக்குத் தெரியும்.  அதிலிருந்து தொடங்கியதுதான் இது.  ஆனால் அவர் ஆரம்பிக்காவிட்டாலும் வேறொருவர் தொடங்கியிருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஆனால் கடைசியில் என்ன ஆயிற்று?  ஞாநியே தன் அன்றாட செலவுகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று எழுதினார்.  இவ்வளவுக்கும் ஞாநி சென்னையில் சொந்த வீடு வைத்திருக்கிறார்.  மகன் சினிமா துறையில் பிரபலமான ஒளிப்பதிவாளர்.  என் மகனும் மரைன் எஞ்சினியர் என்று சிலர் வெடி போடுகிறார்கள்.  சொன்னால் என் மகன் கோபித்துக் கொள்வான்.  அவன் வேலைக்குப் போன கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் அவனிடமிருந்து ஒரு பைசா கூட நான் வாங்கியதில்லை.  ஆனால் அவன் சக்திக்கு மீறி குடும்பத்துக்காகப் பணம் கொடுத்திருக்கிறான்.  எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாக ஸோரோ, பப்புவுக்கு செலவாகிக் கொண்டிருக்கிறது.  ஒரே ஒரு க்ஷணம் நான் ஒரு ஆணாதிக்கவாதியாக இருந்து, அவந்திகாவிடம், “நான் சொல்வதைக் கேள்” என்று சொல்லியிருந்தால் நான் பிச்சையெடுக்கவே நேர்ந்திருக்காது.  என் மகன் அனுப்பிய பணத்தில் ஒரு வீடே வாங்கியிருக்கலாம்.  அவந்திகாவின் பேச்சை என்றுமே நான் தட்டியதில்லை.  அதுதான் காரணம்.  ஒரு க்ரேட் டேனும், ஒரு லாப்ரடாரும் வாங்கினாள்.  எட்டு ஆண்டுகள் ஆகிறது.  என் மகன் கப்பலில் சம்பாதித்த அத்தனை பணமும் காலி.  இப்போது அவனுடைய திருமணத்துக்குக் கூட பணம் இல்லை.  க.நா.சு.வுக்கும் இப்படி ஆகியிருக்கிறது.  அவருடைய மகள் திருமணத்துக்காக சக எழுத்தாளர்களிடம் பணம் வாங்கியிருக்கிறார்.  இது பற்றி இந்த வார பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.  அந்தப் பகுதி:

பாப்பாவுக்கு – அதாவது க.நா.சு.வின் மகளுக்கு டெல்லியில் கல்யாணம் நிச்சயமாகிறது. மகளே பார்த்துக் கொண்ட மாப்பிள்ளை. மகளும் மாப்பிள்ளையுமாக செலவு செய்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். க.நா.சு.விடம் பணம் இல்லை. ‘உங்கள் அப்பா தந்த பணத்தையெல்லாம் வைத்திருந்தால்…?’ என்று குத்திக் காட்டுகிறார் மனைவி. இனி க.நா.சு.:

‘அதெல்லாம் இப்போ பேசி என்ன லாபம்? யார் யாரையோ கடன் கேட்டேன். அவர்கள் கொடுத்திருந்தால் நான் எப்படித் திருப்பிக் கொடுத்திருக்கப் போகிறேன்? ஒரு குஜராத்தி எழுத்தாளர், ஒரு ஹிந்தி எழுத்தாளர் இருவரும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஒரே ஒரு தமிழ் எழுத்தாளர் (தி. ஜானகிராமன்) ஒரு எழுநூற்றியைம்பது ரூபாய் கொடுத்து உதவினார். இதில் ஐநூறு இரண்டொரு மாதத்தில் திருப்பித் தந்து விட்டேன். பாக்கி 250 அவரே ’சிரமப்படாதே, வேண்டாம்’ என்று சொல்லி விட்டார்.’ இந்த மேற்கோள்கள் அனைத்தும் க.நா.சு.வின் ‘பித்தப்பூ’ நாவலிலிருந்து.

இது மட்டும் அல்ல;  தன்னுடைய நாவல்கள் அனைத்திலுமே முழுநேர எழுத்தாளனாகத் தான் பணத்துக்குப் படும் பாடு பற்றி ரத்தக் கண்ணீர் வர எழுதியிருக்கிறார் க.நா.சு.  பணக் கஷ்டம் போதாது என்று எழுத்தாளரான அவருடைய கதை நாயகரை அவர் மனைவி வேறு தொடர்ந்து அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார்.  அதுதான் இன்னும் கொடுமையாக இருக்கிறது.  நல்லவேளையாக அந்தப் பிரச்சினை எனக்குக் கிடையாது.

நேற்று நான் அவந்திகாவிடம் என் மனக் குறையைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.  என்னால் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போக முடியாமல் இருக்கிறதே;  அது என் கனவு ஆயிற்றே; சுமார் 35 ஆண்டுகளாக தென்னமெரிக்க நாடுகளைப் பற்றியும், அவற்றின் கலாச்சாரம், இலக்கியம், இசை, சினிமா பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறேன்; ஆனால் நேரில் போய்ப் பார்க்க முடியவில்லையே…  இதுதான் என் புலம்பல்.  அதற்கு அவந்திகா என்ன சொன்னாள் தெரியுமா?

யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.  நீ சத்தியத்தின் நெருப்பை ஏந்திக் கொண்டிருக்கிறாய்.  உன்னை நான் பாரதியின் வாரிசாக மட்டுமே பார்க்கிறேன்.  உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு ஐம்பது பேர் இருக்கிறார்கள்.  உனக்கு என்ன குறைச்சல்?  எதற்கும் கவலைப்படாதே…

-இப்படித் துவங்கி ஒரு பத்து நிமிடம் பேசினாள்.

திரும்பவும் நான் கடவுளுக்குச் செல்வோம்.  நான் கடவுள் பிச்சைக் கூட்டத்தில் ஒரு முதியவர் இருப்பார் இல்லையா?   அவரைப் போன்ற மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன்.  பாண்டிச்சேரியில் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்.  பிள்ளைகள் ஃப்ரான்ஸில் இருக்கிறார்கள்.  எழுத்தாளர்களிலேயே மைனர் என்றால் அவர்தான்.  சில்க் சட்டையும் வாசனைத் திரவியமுமாக அவர் வந்தாலே அந்த இடம் ஜொலிக்கும்.  அவருடைய எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் முதல் ரசிகன் நான்.  அப்படிப்பட்டவர் நான் வாசகர்களிடம் பணம் கேட்பது பற்றி ஆனந்த விகடனில் நக்கலாக எழுதியிருந்தார்.   ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  பிரபஞ்சன் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எழுத்தையே தொழிலாகக் கொண்டவர்.  ஒரு கட்டத்தில் அன்றாடப் பாட்டுக்காக குமுதம் பத்திரிகையிலேயே வேலையில் சேர்ந்தார்.  அதெல்லாம் பழைய கதை.  இப்போதும் அவருக்கு ஒன்றும் கதை எழுதி தின வாழ்க்கை ஓடவில்லை.  கதை எழுதினால் என்ன ஐம்பாதாயிரமா கிடைக்கும்?  500 ரூ கொடுப்பார்கள்.  அதையும் கதை வந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு கொடுப்பார்கள்.  அது அவருடைய ஒரு வாரத்து சிகரெட் செலவுக்கே போதாது.  அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்த போது அதற்குத் தேவையான ஐந்து லட்சத்தை அவருடைய சிநேகிதரான சினிமா இயக்குனர் கொடுத்தார் என்று பத்திரிகையில் எழுதியிருந்தார் பிரபஞ்சன்.  இது என்னங்க லாஜிக்?  மாமியார் உடைத்தால் மண் குடம்.  மருமகள் உடைத்தால் பொன் குடமா?  நான் கேட்டால் அது பிச்சை.  இவர் கேட்டால் அது உதவி!  இவருக்கு இயக்குனர் இருக்கிறார்.  என்னைக் கண்டால் இயக்குனர்கள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்களே, நான் என்ன ஐயா செய்வது?

சினிமாவுக்குப் போங்களேன்… எஸ்.ரா., ஜெயமோகன்… என்று ஆரம்பிக்கிறார்கள் பல அன்பர்கள்.  இதற்கும் நான் பலமுறை பதில் சொல்லி விட்டேன்.  சினிமா சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே என்னைக் கண்டால் தெறித்து ஓடுகிறார்கள்.  அதிலும் குறிப்பாக, இளம் இயக்குனர்கள்.  காரணம், ”இவர் கமலுக்கே வேண்டாதவர் ஆயிற்றே?  இவர் போய் நம் பெயரை எழுதி வைத்தால் வரும் ஒன்றிரண்டு சான்ஸும் வராமல் போய் விட்டால் என்ன செய்வது?”  அவர்கள் பயப்படுவதும் நியாயம்தானே?  அரசாங்கத்தை விடுங்கள்.  அவர்களைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்றால் மண்புழு.  எது பெரிய பிரச்சினை என்றால், சினிமா.  தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம்.  சினிமாவை விமர்சித்தால் தொலைந்தது கதை.  இளையராஜாவை விமர்சித்து விட்டு நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா?  எந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதினேனோ அவர்கள் அனைவருமே என்னை உயிரோடு விட்டு வைத்திருப்பது அவர்களின் கருணையைத்தான் காட்டுகிறது.  அந்த அளவுக்கு மதத்தின் இடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது சினிமா.   இப்படிப்பட்ட ஒரு விரோதமான சூழலில் என்னை வசனம் எழுத யார் அழைப்பார்?  உதைக்காமல் விட்டு வைத்திருப்பதற்கே நான் தினந்தினம் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு விஷயம் என் ஞாபகத்துக்கு வருகிறது.  சில ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகன் ஒரு பட விஷயமாக நமிதாவுக்கு – ஸாரி, நமீபியாவுக்குச் சென்றிருந்தார் அல்லவா?  பயணக் கட்டுரைகள் மீதான என் இயல்பான ஆர்வத்தினால் அதை நான் படித்தேன்.  அதுவும் ஆஃப்ரிக்க நாடாயிற்றே, இந்த ஜென்மத்தில் நம்மால் பார்க்க முடிகிறதோ இல்லையோ, நம் தம்பியாவது போயிருக்கிறானே என்றுதான் படித்தேன்.  ஆனால் எடுத்த எடுப்பில் போட்டாரே ஒரு போடு.  துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி வந்து விட்டேன்.  எதுவும் தப்பிதமாகச் சொல்லவில்லை.  அவர் ரசனை அப்படி.  என் ரசனை அப்படி.  சில பேர் அச்சில் வார்த்தது போல் ஒன்றே போல் இருப்பார்கள்.  இளையராஜாவும் அவருடைய புதல்வரும்.  அது போல் சில பேர் துருவ வித்தியாசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.  இந்தோனேஷியத் தீவு மனிதன் நாலரை அடி உயரத்தில் இருப்பான்.  சில ஆஃப்ரிக்கர்களின் சராசரி உயரமே ஆறரை அடி.  அண்டார்க்டிகாவில் கடும்பனி; சென்னையின் கடும் வெப்பம் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  அந்தக் குறிப்பிட்ட நமீபியா கட்டுரையில் ஜெயமோகன் மும்பையில் கேங்ஸ் ஆஃப் வாஸேபூரைப் பார்த்திருக்கிறார்.  கேணத்தனமான படம்.  குப்பை என்ற வார்த்தையைத் தவிர்த்து அதை விட மட்டமாகத் திட்டியிருக்கிறார்.  நானோ அந்தப் படத்தைப் பாராட்டி டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் ஏஷியன் ஏஜில் தனிக் கட்டுரையே எழுதியிருந்தேன். பின்வரும் இணைப்பில் அந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கலாம்.

http://charunivedita.com/2015/01/08/the-joy-and-pain-of-good-cinema/

அந்தக் கட்டுரையின் கடைசிப் பத்தி இது:

So far I have written reviews of numerous films, but felt Gangs of Wasseypur was beyond comprehension. Can you describe in words your most wonderful sexual experience?

ஜெயமோகனின் ரசனைக்கும் என்னுடைய ரசனைக்கும் வித்தியாசம் தெரிகிறதா?  அவருக்கு கேங்ஸ் ஆஃப் வாஸேபூர் குப்பை; கேணத்தனமான படம்.  எனக்கு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புத அனுபவம்.  இதைப் போலவேதான் பாலாவின் பரதேசி என் சினிமா அனுபவத்தில் ஒரு குப்பை; சமூக விரோதமான படம்.  மக்களின் ரசனையையே மழுங்கடிக்கக் கூடிய ஆபாசம்.  ஆனால் ஜெயமோகனுக்கும் எஸ்.ரா.வுக்கும் அது காவியம்.  எனவே நண்பர்களே, இனிமேலாவது யாரும் சினிமாவுக்கு வசனம் எழுதிக் காசு பாருங்கள் என்று என்னிடம் அறிவுரை சொல்ல வேண்டாம்.

எந்தப் பதிப்பகமாக இருந்தாலும் ரெண்டாயிரம் பிரதி தான் விற்கிறது.  ஊரெல்லாம் பேசுகிறார்களே, ஜெயமோகனின் மகாபாரதம்.  அதற்கே ப்ரீ ஆர்டர் திட்டத்தில் 300 பிரதிகளுக்குத்தான் பணம் வந்தது என்று ஜெ. எழுதியிருந்தார்.  ஆனானப்பட்ட மகாபாரதத்துக்கே இந்தக் கதி என்றால் நானெல்லாம் எம்மாத்திரம்?  எனவே, ராயல்டி என்ற பேச்சுக்கே எழுத்தாளனின் வாழ்வில் இடமில்லை.  50 புஸ்தகம் போட்ட முன்னணி எழுத்தாளனுக்கே மாத ராயல்டி 5000 ரூ. கிடைத்தால் அதிகம்.  பத்திரிகைகளில் கொடுப்பது, அந்தக் கட்டுரையை எழுதுவதற்காக ஆகும் செலவில் ஐந்தில் ஒரு மடங்குதான்.  ஒரு கட்டுரை எழுத 5000 ரூ செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம் – புத்தகங்கள், சினிமா, ஸ்கேன் இத்தியாதி செலவுகள் – அந்தக் கட்டுரை வெளியானால் 1000 ரூ கிடைக்கும்.  அதையும் புதிய தலைமுறை போன்ற சில நல்ல பத்திரிகைகளில் ஆறு மாதம் கழித்து அனுப்புவார்கள்.

அதனால்தான் நண்பர்களே, காசு கேட்கிறேன்.  கொடுத்தால் நலம்.  கொடுக்காவிட்டால் அதுவும் நலமே.  ஆனால் இதில் அசூயை கொள்ளவோ பதற்றம் அடையவோ என்ன இருக்கிறது என்றுதான் எனக்குப் புரியவில்லை.  இப்படி நான் பணம் கேட்பதால் என்னை இணையப் பிச்சைக்காரன் என்று சில மூடர்களும் என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சக எழுத்தாளர்களும் திட்டுவது பற்றி எனக்கு எள்ளளவும் கவலை இல்லை.  ஆனால் என்னுடைய இரண்டு முக்கியமான நண்பர்கள் சாருஆன்லைனையே படிக்காமல் போய் விட்டார்கள்.  நான் பணம் கேட்டு எழுதும் ‘அவலத்தை’ அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம்.  அவர்களால் பண உதவியும் செய்ய முடியாத நிலை.  என்ன செய்வது?  இந்த ஒரே ஒரு நஷ்டத்தைத் தவிர வேறு எந்த மன உளைச்சலும் எனக்கு இல்லை.

ஜெயமோகன் சமீபத்தில் இணைய ஊழல் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  இப்போது அதற்கு இணைப்பு கொடுக்கலாம் என்று பார்த்தால் அதை நீக்கி விட்டார்.  நீக்கியது சரியே.  இல்லாவிட்டால் வீணான வழக்கு, அலைச்சல் என்று வரும்.  சில அன்பர்கள் இந்துத்துவ எதிர்ப்பு என்று சொல்லி இணைய நண்பர்கள் மூலம் பணம் திரட்டித் தம் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்கிறார்களாம்.   எத்தனையோ விதமான திருட்டும் மொள்ளமாரித்தனமும் நடக்கிறது.  இதற்கெல்லாம் நாம் எதிர்வினை காட்ட வேண்டுமா என்ன?  பிரச்சினை பெரிதானால் எப்படியும் ஜூனியர் விகடனில் வந்து விடும்.  அப்புறம் என்ன? அந்தக் குறிப்பிட்ட கட்டுரையில் நான் வாசகர்களிடம் பணம் கேட்பது பற்றி உண்மையான புரிதலுடன் எழுதியதற்காக ஜெயமோகனுக்கு என் மனமார்ந்த நன்றி.

இது பற்றித் தொடர்ந்து வசை பாடுபவர்களிடம் ஒரு கேள்வி:  நான் என்ன உங்கள் பாக்கெட்டிலா கை விட்டேன்?  என்னுடைய எழுத்து உங்களுக்கு எந்த விதத்திலாவது பயன்பட்டால், அதற்கான தட்சிணையாக, உங்களிடம் இருந்தால் கொஞ்சம் காசு கொடுங்கள்.   

இதில் என்னய்யா பிரச்சினை இருக்கிறது?  ஒரு டாக்டரைப் பார்க்கப் போனால் கன்ஸல்டேஷன் பீஸே 200 ரூபாய் வாங்குகிறார்கள்.  அதிலும் இதயம் அது இது என்று போனால் 1000 ரூ.  பெங்களூர், மும்பை போன்ற ஊர்களில் ஒரு சினிமா டிக்கட் 1000 ரூ.  முதல் நாளில்.  நான்கு பேர் உள்ள குடும்பம் போனால் முதல் நாள் சினிமா பார்க்க, இடைவேளையில் தின்ன, மொத்தம் ஏழெட்டாயிரம் ஆகி விடும்.  ஒரு சினிமா பார்க்க.  இடைவேளை பாப்கார்ன் விலை 200 ரூ.  ஆனால் 5000 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கி, அதைப் படித்து, மாங்கு மாங்கென்று எழுதினால் கிடைக்கும் கூலி 1000 ரூ.  எழுத்தாளன் பிச்சை எடுப்பானா இல்லையா?

சமீபத்தில் பிரபு காளிதாஸ் 300 படங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் கொடுத்தார்.  நான் பார்த்த முதல் படம் Pixote.  பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.  முதலில் இதைப் பற்றி எழுத வேண்டும்.  ப்ரஸீல் படம். எழுதவே நான்கு நாள் எடுக்கும்.  மிக மிக முக்கியமான படம்.  இதற்கெல்லாம் கூலி?   யார் தருவார்?  அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன்.  முடிந்தால் கொடுங்கள்.  இல்லையேல் பதற்றம் அடையாதீர்கள்.  பணம் ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயம் அல்ல.

கடைசியாக ஒரு விஷயம்.  இப்படியெல்லாம் எழுதுவதால் யாரும் லட்சம் லட்சமாக அனுப்பி விடப் போவதில்லை.   அதிகபட்சம், ஒட்டு மொத்தமாகக் கூட்டிச் சேர்த்தால் 5000 ரூ வரும்.  பூஜ்யத்தை சரியாகப் பாருங்கள்.  ஐந்தாயிரம்.  அவ்வளவுதான்.  அப்படிப்பட்டவர்கள்தான் வாசிக்கிறார்கள்.  பணம் இருப்பவர்கள் யாரும் இதைப் படிப்பதில்லை.  மேலும், எனக்கு வரும் பணத்தைக் கொண்டு நான் ஒன்றும் வீடு கட்டப் போவதில்லை.  என் எழுத்துக்கான செலவுகளுக்கும், மருந்துக்கும்தான் எனக்குப் பணம் தேவைப்படுகிறது.  வீட்டுச் செலவுக்கு அல்ல.

Axis bank account No.

911010057338057

Account holder’s name: K. ARIVAZHAGAN

Branch: Radhakrishnan Salai, Mylapore,

Chennai

IFSC Code:    UTIB0000006 

MICR Code:    600211002

branch code:    000006

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026