எதுவரை?

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சாரு,

எனது பெயர் Fashry.  நான் இலங்கையைச் சேர்ந்தவன். தற்போது கத்தாரில் வசிக்கிறேன். உங்களது எழுத்துக்களின் தீவிர வாசகன். உங்களது நாவல்கள் ராஸ லீலா, ஃபான்ஸி பனியன் போன்றவை வாசித்து பல வருடங்கள் ஆகி விட்டன. அவை எனது வீட்டுப் புத்தக ராக்கையில் இன்னுமுள்ளன. தற்போது உங்கள் வலைத் தளத்தை தினமும் வாசித்து வருகிறேன். (நிலவு தேயாத தேசம் உட்பட ) மற்றும் நீங்கள் கலந்து கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தவறாமல் you tube இல் பார்த்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் நீங்கள்.  ஈழத்து எழுத்தாளர்களான உமா வரதராஜன், கவிஞர்  சோலைக்கிளி, பேராசிரியர் மௌனகுரு, ரியாஸ் குரானா, கவிஞர் மன்சூர் ஏ காதிர், கவிஞர் எச்.எம்.பாரூக்  போன்றவர்களுடன் மிக நெருங்கிய நட்புண்டு. உங்களது எக்ஸைல் நாவல் வாசிக்க மிகுந்த ஆர்வத்தோடுள்ளேன். இலங்கையில் இருந்த போது எவ்வளவோ முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. உயிர்மை, காலச்சுவடு, லண்டனில் இருந்து வரும் எம். பௌசரின் ’எதுவரை’ சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் உண்டு.  உங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்த்து மிக ஆவலில் உள்ளேன்.

என்றும் அன்புடன்,

உங்கள் வாசகன்,

ஃபஷ்ரி

 

டியர் ஃபஷ்ரி,

உங்கள் பெயர் எனக்கு மிகவும் புதுமையாக உள்ளது.  இதுவரை இப்படிக் கேள்விப்பட்டது இல்லை.

கத்தாரில் என் நெருங்கிய நண்பர்கள் இருவர் இருக்கின்றனர்.  ஒருமுறை கத்தார் கிளம்ப நினைத்தேன்.  இங்கே வந்து ஏன் அல்லல் படுகிறீர்கள்; பேசாமல் ஐரோப்பா பக்கம் செல்லுங்கள் என்று நண்பர்கள் சொன்னதும்தான் துருக்கி கிளம்பினேன்.  பௌசரின் எதுவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  பொதுவாக கவிதை, அரசியல் இரண்டிலும் எனக்கு ஈடுபாடு இல்லை.  உடனே சில நண்பர்கள் கோபாவேசமாகக் கிளர்ந்து எழுவார்கள்.  ஒரு எழுத்தாளருக்குக் கர்னாடக இசையில் எப்படி ஈடுபாடு இல்லையோ அப்படித்தான் எனக்கும் அரசியலில் ஈடுபாடு இல்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.  இதை விமர்சிப்பவர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை.  இந்த என்னுடைய ஈடுபாடின்மையையும் மீறி சிலருடைய கவிதைகள் என்னைக் கவர்ந்து விடுகின்றன.  எம். ரிஷான் ஷெரீப் அவர்களில் ஒருவர்.  எதுவரையில் எனக்குப் பிடித்த ஒரு பேட்டி ஷோபா சக்தி கொடுத்தது.  அதில் என்னுடைய சினிமா விமர்சனங்களைப் பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.  ரொம்பவே ரசித்தேன்.  சினிமா பற்றி ஆறு நூல்கள் எழுதியிருக்கிறேன்.  சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் என்ற நூலும் அதில் ஒன்று.  அதிலிருந்தெல்லாம் ஷோபா சக்தி எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.  ஹொடரோவ்ஸ்கி என்று ஒரு இயக்குனர் உண்டு.  அவரைப் பார்ப்பவர்கள், பார்த்தவர்கள் தமிழ்நாட்டிலேயே இரண்டு மூன்று பேர் தான் உண்டு.  அவர் படங்களைப் பற்றிக் கட்டுரை எழுதியவர்கள், விவாதித்தவர்கள் என உலக அளவிலேயே பத்து பேரைத்தான் சொல்ல முடியும்.  அந்தப் பத்து பேரில் அடியேனும் ஒருவன்.  பரவாயில்லை.  ஷோபா சக்தியின் விருப்பத்திற்குரிய விமர்சனம் எழுத முடியவில்லையே என்ற வருத்தம்தான் ஏற்படுகிறது.  என்னை அ. ராமசாமியோடு ஒப்பிடுகிறார்.  நன்றி.  இங்கே பலரும் என்னை சுப்ரமணிய சாமியோடும் ஒப்பிடுகிறார்கள்.  ரசமில்லாத வாழ்க்கையில் இது போன்ற விஷயங்கள் ரசத்தை உண்டாக்குகின்றன.  ஷோபா சக்தியின் விமர்சனம்:

”பொதுவாக இலக்கியத்தில் ஒருவரை இன்னொருவர் எழுத்தால் காலிபண்ணிவிடுவது என்பது நடவாத ஒன்று. ஆனால் அதை நடத்திக் காட்டியவர் சாரு நிவேதிதா. முன்பு தமிழ் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து மோசமான திரைப்பட விமர்சனங்களை எழுதிவந்த பேராசிரியர் அ.ராமசாமியை அதைவிட மோசமான திரைப்பட விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் காலிபண்ணியவர் சாரு நிவேதிதாவே. ‘குரு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ போன்ற படங்களுக்கு சாரு நிவேதிதா எழுதிய விமர்சனக் கட்டுரைகளைப் படிக்கும் ஒருவர் தமிழ்த் திரைப்படங்களைவிட அவை குறித்த விமர்சனக் கட்டுரைகள் படுகேவலமாயிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.”

மற்ற வாசகர்களுக்காக ”எதுவரை” இணைய இதழின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன்.

http://eathuvarai.net/

ஃபஷ்ரி, எக்ஸைல் நாவல் வரும் ஜனவரி 9-ஆம் தேதி நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் வெளிவரும்.  திருத்தப்பட்ட பதிப்பு.  இப்போதெல்லாம் வெளிநாட்டில் வசித்தாலும் இங்கிருந்து விரைவில் புத்தகங்கள் அனுப்பப்பட்டு விடுகின்றன.

வெளியுலகத் தொடர்பே இல்லாமல் எப்போதும் எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கும் போது திடீரென்று யாருக்காக எழுதுகிறோம் என்ற ஆயாசம் சில சமயம் ஏற்படுவதுண்டு.  உங்களைப் போன்ற வாசகர்களின் கடிதங்கள் அந்த ஆயாசத்தைப் போக்குகின்றன.

அன்புடன்,

சாரு.