படிக்க வேண்டிய நூல்கள் (2)

http://charuonline.com/blog/?p=3399

இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன் மேற்கண்ட இணைப்பில் உள்ள கடிதங்களைப் படித்து விடக் கேட்டுக் கொள்கிறேன்.  படித்து விட்டுத் தொடரலாம்.

சாரு,

நான் தருணின் மூன்று நாவல்களையும் படித்து விட்டேன். அந்த மூன்றில் எனக்குப் பிடித்தது ‘The Story of My Assassins’. அதே போல் Alchemy of Desire -ல் Kama என்ற பாகத்தைப் படித்து மிரண்டு விட்டேன்.  அப்படியே உள்ளே இழுத்து விட்டது.  தருணின் மொழி மிக வசிகரமானது.  The valley of Masks – ஐப் படித்து முடிக்கும் போது ஒரு புது உலகத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு. இப்போது கூட அந்த நாவலின் aroma-வை என்னால் உணர முடிகிறது. அதுவும் சரியாக சென்ற தீபாவளியில் தான் அந்த நாவலை முடித்தேன். The Valley of Masks-ஐ நினைக்கும் போது அயன் ராண்டின்  The Fountain Head நாவல் நினைவிற்கு வருகிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை தான், இருந்தும் இரண்டும் individuality – ஐ மையப்படுத்தித்தான் பேசுகிறது. ஆனால் The Valley of Masks-ல் இருக்கும் மனிதம் The Fountain Head -ல் இருக்காது. நான் தருணை என்னில் ஒருவராக உணர்கிறேன். ஏன், ஒரான் பாமுக்கையும் தான். ஆனால் யோசா-வுடன் அப்படி உணர முடியவில்லை.
என்ன சாரு இப்படிக் கேட்டு விட்டீர்கள், நான் தமிழில் வாசிப்பேனா என்று. ஆங்கிலம் எல்லாம் கடந்த நான்கு வருடங்களாகத்தான். எங்கள் ஊரில் MYM என்ற தனியார் நூலகம் ஒன்று உள்ளது. தனியார் நூலகமென்றால் தாறுமாறாக நினைத்து விடாதீர்கள். ஊரிலுள்ள சில பெரியவர்களால், தங்கள் கைப்பணம் போட்டு நடத்தப்படுவது. மாதச் சந்தா ஐந்து ரூபாய் தான்.  அது ஒரு புதையல்.  கிட்டத்தட்ட தமிழ் இலக்கிய முன்னோடிகள் அனைவரும் அங்குள்ள புத்தக அலமாரியில் நிறைந்துள்ளார்கள். ஆனால் என்ன,  ‘எல்லாம் இங்கதானே இருக்கு, எங்க ஓடிற போவுது’ என்ற மிதப்பில் இருக்கிறேன். தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் படிப்பதில் இன்னொரு பயம் இருக்கிறது. எல்லாம், ல.சா.ரா -வின்’ அபிதா’ நகுலனின் ‘நினைவுப்பாதை’ – களில் ஆரம்பித்த வினை.            ‘எவன்டா இதையெல்லாம் படிப்பான்’ என்று விட்டு விட்டேன்.    அதேபோல் சுந்தர ராமசாமி பற்றி நீங்கள் எழுதியிருந்தாலும், ‘எதுவானாலும் நாமே படித்து முடிவு பண்ணலாம்’ என்று நினைத்து, ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ ஆரம்பித்தேன்.  ஆரம்பித்த வேகத்திலேயே கீழே வைத்து விட்டேன். ம்ஹும், சுத்தமாக ஒன்ற முடியவில்லை.

அதன் பிறகு ’மோகமுள்’. என் அப்பா ‘மோகமுள் எப்டி நாவலு!!! கெட்டிகாரன்டே ஜானகிராமன்’ என்பார். அதனாலயே அதை படிக்காமல் விட்டேன்.  ‘பசித்த மானிட’மும் படித்தேன்,அறுவை. ஏன் Zorba the Greek- ஐ கூட என்னால் ரசிக்க முடியவில்லை. ஒருவேளை அனுபவம் போதாதோ. அதே போல Hemingway -யையும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவருடைய The Old Man And The Sea ஐத் தவிர.

ஆனால் நான் ஆதவனின் ரசிகன். அவருடைய ‘பழைய கிழவரும் புதிய உலகமும்’ எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. அவருடைய இரு நாவல்களும் தான். அசோகமித்திரன், நான் முழுதும் படிக்க நினைக்கும் எழுத்தாளர். இதுவரை நான்கு படித்துள்ளேன். 18-வது அட்சக் கோடு, கரைந்த நிழல்கள், ஒற்றன், இன்று.
அவருடைய ‘அப்பாவின் ரயில் வண்டி’ எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை.

ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ இரண்டு அட்டம்ட். ஆனால் இப்போது அந்நாவலின் ஜீவன் பிடிபடுகிறது. சில காம்யுவின் நாவல்களும் இப்படித்தான். சில காலம் கழித்துத் தான் அதுனுடைய ஆழம் புரிகிறது.   இனி தமிழில் கொஞ்சம் மாதங்கள் கழித்து ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு முன்னால் Milan Kundera, Guntar Grass, Umberto Eco, Murakami ஆகியோர் அழுத்தம் கொடுக்கிறார்கள். அத்துடன் உங்கள் ஆள் Michel Houellebecq. அவருடைய The Elementary Particles (Atomised) மற்றும் Submission ஆகியவற்றைக் கட்டாயம் படிக்க வேண்டுமென்று நினைத்துள்ளேன். (உபயம்: வரம்பு மீறிய பிரதி).

அதேபோல் Milorad Pavic ன் Dictionary of the Khazars மற்றும் Landscape Painted With Tea போன்ற நாவல்கள் குதிரைக் கொம்பாக உள்ளது. விலை எல்லாம் இரண்டாயிரம் மூவாயிரம் என்று இருக்கிறது.

Roberto Bolano- வின் ‘2666’ நீங்கள் படித்து விட்டீர்களா?வித்தியாசமான அனுபவம். ஒரு முன்னூறு பக்கத்திற்கு கொலை கொலை கொலை மட்டுமே.

பின்குறிப்பு:
1. சென்ற புத்தக விழாவில் தான் நீங்கள் The Bad Girl வாங்கினீர்கள். படித்திருந்தால் எப்படியும் உங்கள் பக்கத்தில் எழுதி இருப்பீர்கள்.

  1. நீங்கள் எழுதும் அனைத்தையும் படித்துக் கொண்டு தான் வருகிறேன். எப்படியும் நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர்களையும் படித்து விடுவேன்.
  2. அப்புறம் This Blinding Absence of Light ஐ அறிமுகபடுத்தியமைக்கு யார் நன்றி சொல்வார்களாம்.

4.உங்கள் நாவலில் எனக்கு மிகவும் பிடித்தது ராஸலீலா தான். என்ன ஒரு நடை.  என் பெயர் சிவப்பின் முதல் அத்தியாயத்தை படிக்கும் போது ஏற்பட்ட அதே  உணர்வு ராஸலீலாவின் முதல் அத்தியாயத்திலும் ஏற்பட்டது.

5.நிலவு தேயாத தேசம் அற்புதமாகச் செல்கிறது.
6.என்ன ஒரு வாய்ப்பு. புத்தக விழாவில் உங்களுடன் புத்தகம் தேட.

அன்புடன்,

முகம்மது ரிஃபாஸ்.

13.11.2015.

டியர் ரியாஸ்,

உங்கள் கடிதத்துக்கு மிகத் தாமதமாக பதில் எழுதுகிறேன்.  சில தினங்களுக்கு முன்பு திடீரென்று நினைத்துக் கொண்டு தருணுக்கு எப்போது உன் அடுத்த நாவல் என்று வாட்ஸ் அப்பில் கேட்டிருந்தேன்.  அரே வாஹ், நேற்று இரவுதான் எழுதி முடித்தேன்; அனுப்பி வைக்கிறேன்.  படித்து விட்டுச் சொல் என்று அனுப்பி வைத்தார்.  பொதுவாகவே நான் மெதுவாகப் படிப்பவன்.  தமிழிலேயே வேகம் கம்மி; ஆங்கிலத்தில் இன்னும் மோசம்.  அதிலும் தருணின் ஆங்கிலம் மிகவும் ஆழமானது.  இது பற்றி மனுஷ்ய புத்திரன் சொன்னது ஞாபகம் வருகிறது.  அருந்ததி ராயின் ஆங்கிலம் அலங்காரமானது; தருணின் ஆங்கிலம் ஆழமானது.  அதிலும் தருணின் இப்போதைய நாவல் ஒவ்வொரு வரியும் கவிதை போல் பல நுணுக்கங்களைக் கொண்டிருக்கிறது.  இப்படி ஒரு நாவலை எப்போதாவது படித்திருக்கிறோமா என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.  ம்ஹும்.  இதுதான் முதல்.  நாவல் எதைப் பற்றியது என்பது போன்ற விஷயங்களை நாவல் வெளிவந்த பிறகுதான் பேச முடியும்.  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.  இதற்கு நிச்சயமாக புக்கரோ அல்லது அதற்குச் சமமான வேறு பரிசோ கிடைக்கும்.  கருத்துச் சுதந்திரத்திற்கு மிகப் பெரிய ஆபத்து வந்திருக்கும் இந்த பிஜேபி ஆட்சியில் இந்த நாவல் தடை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  (ஆனால் நாவல் அரசியல் ரீதியானது அல்ல.)

தருணின் முந்தைய மூன்று நாவல்களை நான் பின்வருமாறு வரிசைப்படுத்துவேன்:

The Valley of Masks.

The Alchemy of Desire.

The Story of My Assassins.

ஏனென்றால், ’பள்ளத்தாக்கை’ப் போன்ற ஒரு நாவலை ஒரு மனிதனால் எழுத முடியும் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.  சில விஞ்ஞானக் கோட்பாடுகளைப் படிக்கும் போது அதன் சாத்தியங்கள் பற்றி நம்மால் கற்பனையே செய்ய முடியாது என்கிறார்கள்.  ஸ்ட்ரிங் தியரியில் வரும் ஒன்பதாவது, பத்தாவது பரிமாணங்கள்.  அது போல் தருணின் ’பள்ளத்தாக்கி’ல் நடப்பதை ஒரு மனித மனம் எப்படிக் கற்பனை செய்ய முடியும் என்றே என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.  அதில் வரும் ஒன்று கூட நிஜம் இல்லை.  எல்லாமே Fable.  ஒரு ஆள் எப்படி Fable-ஐ 600 பக்கம் எழுத முடியும்?  எழுத்தாளனுக்கு எதார்த்தத்தின் ஏதேனும் ஒரு பிடிமானமாவது வேண்டாமா?  ’பள்ளத்தாக்கி’ல் எதார்த்தத்தின் வாசனையே கிடையாதே?

’ஆல்கெமி’ என்னுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நாவல்.  ’அஸாஸின்ஸை’ தருணைத் தவிர வேறு யாரும் கூட எழுதி விடலாம் என்பதால்தான் அதை மூன்றாவதாக வைத்தேன்.  ஆனால் இப்போதைய தருணின் நான்காவது நாவல் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க இதிகாசங்களைப் போல் பல நூற்றாண்டுகளுக்கு மக்களால் வாசித்துப் போற்றப்படும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.  இப்படி தன்னுடைய நாவலை பிரசுரிக்கப்படுவதற்கு முன்பே படிக்கக் கொடுத்திருப்பது தருண் என் மீது கொண்டுள்ள அன்பையே காட்டுகிறது.  அதையும் விட, என்னுடைய உலக இலக்கிய வாசிப்பின் மீது தருண் வைத்துள்ள மரியாதையையும் காட்டுகிறது.  இன்னும் நாவல் பதிப்பாளருக்குக் கூட அனுப்பப்படவில்லை.   என் இலக்கிய வாழ்வில் என்னால் மறக்க முடியாத ஒரு கௌரவமாகவே இதைக் கருதுகிறேன்.

ஆனால் என்னுடைய மெதுவான வாசிப்பினால் பல காரியங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன.  இதோ இன்னும் மூன்று தினங்களுக்கு அந்த நாவலுக்குள் போக முடியாது.  நிலவு தேயாத தேசமும், தி.ஜா. பற்றிய கடைசி அத்தியாயமும் காத்துக் கொண்டிருக்கின்றன.

அயன் ராண்டின் The Fountainhead: 1943-இல் எழுதப்பட்ட அந்த நாவல் இன்னமும் வாசகர்களைத் தன் பால் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.  சமீபத்தில்தான் அயன் ராண்ட் ஒரு பெண் என்பதே எனக்குத் தெரியும்.  ராகவன் இந்த நாவல் பற்றி சுமார் ஐநூறு முறையாவது சொல்லியிருப்பார்.  ஆனால் நான் இந்த ஜென்மத்தில் அதைப் படித்து முடிப்பேன் என்று தோன்றவில்லை.  என்னுடைய மெதுவான வாசிப்பினாலேயே பல புத்தகங்களை வாசிக்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றன.  எனக்குத் தெரிந்து பல பேர் 600 பக்க நாவலை (ஆங்கிலத்தில்) மூன்று நாளில் முடித்து விடுகிறார்கள்.  எனக்கு 15 நாட்களாவது ஆகும்.  ஒரு மணி நேரத்தில் எத்தனை பக்கம் படிப்பேன் என்று பார்த்து கணக்குப் போட்டால் சரியாக வராது இந்தக் கணக்கு.  ஏனென்றால், ஒரு பக்கத்தைப் படிக்க 2 நிமிடம் என்று கணக்குப் போட்டால் ஒரு மணி நேரத்தில் 30 பக்கம் படிக்க வேண்டும் அல்லவா?  ஆனால் அப்படி நடக்காது.  ஒரு மணி நேரத்தில் பத்து பக்கம் கூடத் தேறியிருக்காது.

தமிழில் நீங்கள் லா.ச.ரா., நகுலன் என்று போயிருக்கக் கூடாது.  சமகாலத் தமிழ் இலக்கியத்தைப் படிக்க பழுப்பு நிறப் பக்கங்கள் ஒரு நல்ல வழிகாட்டி.  அதன் மூலமாகவே செல்லுங்கள்.  அதில் நான் இன்னமும் லா.ச.ரா., நகுலன் என்றெல்லாம் செல்லவில்லை என்பதை கவனியுங்கள்.  கு.ப.ரா., தி.ஜா., எம்.வி. வெங்கட்ராம் என்று தஞ்சாவூர்க்காரர்களிடமிருந்து துவங்குங்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹெமிங்வே, பொலானோ இருவரையும் இன்னும் படிக்கவில்லை.  இன்னும் ஆறு மாதங்களில் இருவரையும் படித்து விடுவேன்.  முராகாமி அவரது தாய்நாடு உட்பட உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதால் அவரைப் படித்தேன்.  தாங்க முடியாத அறுவையாக இருக்கிறது.  இவர் எப்படி உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.   யோசாவின் Bad Girl-ஐயும் படிக்க வேண்டும்.  நீங்கள் சொல்வது சரிதான்.  பாமுக்கையும், தருணையும் படிக்கும் போது, அடடா நாம் நினைத்ததை இவன் எழுதி விட்டானே என்று தோன்றுகிறது.  அதிலும் ஆல்கெமியில் தருண் என் மனதினுள் நுழைந்து எல்லாவற்றையும் களவாடி விட்டதைப் போல் உணர்ந்தேன்.  அப்படியெல்லாம் யோசாவிடம் உணர முடியவில்லை. யோசாவின் எழுத்தில் நான் சொக்கிப் போனாலும்.  இந்த உலகிலேயே எனக்குப் பிடித்த முதல் கதைசொல்லி யோசா தான் என்றாலும் என் மன உலகை அவன் எழுதவில்லை.

அப்புறம் அந்த வுல்பெக் விஷயம் தி இந்து பாரிஸ் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்…

இன்னொரு முக்கியமான விஷயம் ரியாஸ்.  நான் பல ஆண்டுகளாக ஒரு விஷயத்தைச் சொல்லி வருகிறேன்.  இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் மட்டுமே இலக்கியத்தைப் படித்துப் பாராட்டிக் கொண்டிருப்பது ஒரு சமூகத்தின் சாபக்கேடு.  இலக்கியத்தை எல்லோரும் படிக்க முடியாவிட்டாலும் பிற துறைகளில் வல்லுநர்களாக இருப்பவர்களாவது படிக்க வேண்டும்.  உதாரணமாக, மருத்துவர்கள், பொறியியலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் இந்தப் பட்டியலில் விடுபட்டுப் போன சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்கள்.  ஒரே வார்த்தையில் சொன்னால் அப்துல் கலாம் போன்றவர்கள்.  அவருக்கெல்லாம் நவீனத் தமிழ் இலக்கியம் தெரிந்திருந்தால் சமூகத்தில் எத்தனை பேருக்கு இந்த விஷயம் போய்ச் சேர்ந்திருக்கும்!  திருக்குறள் பற்றிப் பேச கலாமா வேண்டும்?  அதுதான் நாம் பிறந்த அன்றிலிருந்தே கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே?  தமிழர்களின் வேதமாக இருக்கும் ஒரு நூலுக்கு கலாமின் சிபாரிசா தேவை?  என் கருத்து என்னவென்றால், ஒரு மருத்துவரோ, எஞ்ஜினியரோ, ஆசிரியரோ இலக்கியம் படித்திருந்தால் சமூகம் இன்று இருப்பது போல் இருந்திருக்காது.  நீங்கள் ஒரு பொறியியல் மாணவராக இருந்தும் இத்தனை புத்தகங்களைப் படித்திருப்பது எனக்குப் பெருமிதமாக உள்ளது.  என் எழுத்தின் பயன் இது என்று தெரியும் போது இதை விட சன்மானம் வேறு எதுவும் வேண்டாம் என்று தோன்றுகிறது.

சாரு

வாசகர்களுக்கு ஒரு விளக்கம்:  முகம்மது ரிஃபாஸ் கடையநல்லூர்வாசி.  பொறியியலில் மேற்படிப்பு படிக்கும் மாணவர்.  குடும்பப் பெயர்: ரியாஸ்.