சாரு,
நான் உங்களுக்கு ஒரு விஷயத்தில் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்றால் அது மரியோ பார்கஸ் யோசா (Mario Vargas Llosa) – வை நீங்கள் அறிமுகபடுத்தியமைக்குத் தான். ‘The Feast of the Goat’ மற்றும் ‘Conversation in the Cathedral’ஐ நினைக்கும்போதே போதையேறுகிறது. நான் அவருடைய நாவலில் ஏழு மட்டுமே படித்ததுள்ளேன்.
1.The Feast of the Goat
2.Conversation in the Cathedral
3.War of the End of the World
4.The Bad Girl
5.Aunt Julia and the Scriptwriter
6.The Dream of Celt
7.Who Killed Palomino Molero
இப்படித்தான் தரவரிசைப் படுத்தியிருந்தேன் இவ்வளவு நாளும். ஆனால் இப்போதுதான் மற்றவைகளைக் காட்டிலும் The Dream of Celt சிறந்ததென்று தோன்றுகிறது. The Dream of Celt ஐ படிக்கும் போது அலுப்பாக இருந்தது. காரணம் அது semi fiction. முழுவதும் புனைவு கிடையாது. ஆனால் இப்போதுதான் அந்த நாவலின் வீரியத்தை உணர முடிகிறது. Roger Casement -ன் வரலாற்றைத் தான் நாவலாக எழுதிருக்கிறார். ஒரு வரலாற்று நாயகனை இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். Roger Casement ன் ஒவ்வொரு, சின்னச் சின்ன மனோட்டத்தையும் தெளிவாக விவரித்திருப்பார்.
அப்புறம் இன்னொரு விஷயம். நீங்கள் The Bad Girl ஐ இன்னும் படித்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.படித்தால் அட்டகாசமான நாவலென்று அதைத்தான் கூறுவீர்கள். Who killed Palomino Molero ஐ அல்ல. அட்டகாசம் என்ற வார்த்தைக்குப் பொருத்தமானது The Bad Girl தான். சும்மா புகுந்து
விளையாடிருப்பார்.
பின் குறிப்பு:
1.சென்ற சென்னை புத்தகத் திருவிழாவில் நாம் சந்தித்திருக்கறோம். Kathy Acker புத்தகத்தை 100 ரூபாய்க்கு வாங்கியவன் நான் தான்.
2. தருண் தேஜ்பால் (Tarun Tejpal) -ஐ அறிமுகபடித்தியமைக்கும் நன்றி.
முகம்மது ரியாஸ்
கடையநல்லுர்.
அன்புள்ள ரியாஸ்,
இந்த ஆண்டும் புத்தக விழாவுக்கு வருவீர்களா? வந்தால் உங்களோடுதான் ஆங்கிலப் புத்தகக் கடைகளை அலச வேண்டும். கேத்தி ஆக்கரை நூறு ரூபாய்க்குப் பிடிப்பதெல்லாம் அசகாய சூரத்தனம். வாருங்கள், அள்ளி விடலாம்.
தருணின் மூன்று நாவல்களையும் முடித்து விட்டீர்களா? மூன்றிலும் ஆகப் பிடித்தது எது என்று என்னைக் கேட்டால் The Valley of Masks-ஐத்தான் சொல்வேன். ரொம்ப அசாத்தியமான நாவல் அது. ஆல்கெமி ஆஃப் டிஸைர் என்னைப் பலவிதங்களிலும் மாற்றி அமைத்த நாவல். வாழ்க்கை பற்றிய அணுகுமுறையே அதைப் படித்த பிறகு மாறி விட்டது.
Bad Girl-ஐப் படித்திருக்க மாட்டேன் என்று எப்படி சரியாக யூகித்தீர்கள்? இன்னும் படிக்கவில்லை. Dream of Celt-உம் இன்னும் படிக்கவில்லை. இன்னும் ஆறு மாதங்களுக்கு முடியாது என்று நினைக்கிறேன். பழுப்பு நிறப் பக்கங்களில் மூழ்கியிருக்கிறேன்.
உங்களுடைய யோசா வாசிப்பில் கிரீன் ஹவுஸை விட்டு விட்டீர்களே? யோசாவின் மிகக் கடினமான புத்தகம் அது. அவருடைய மிக முக்கியமான நாவலும் கூட. அவர் எழுதியதிலேயே கான்வர்ஸேஷன், வார், க்ரீன் ஹவுஸ் மூன்றையும்தான் க்ளாஸிக்ஸ் என்கிறார்கள். எனக்குமே அப்படித்தான் தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டவைகளையும் படிக்க வேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயம். நேற்று மோகமுள் படித்தேன். தி.ஜா. செத்து விடலாம் என்று தோன்றியது. அல்ட்டிமேட். கடவுளை தரிசித்து விட்டது போல் இருந்தது. உங்களால் தமிழ் வாசிக்க முடியும் என்றால் நான் பழுப்பு நிறப் பக்கங்களில் குறிப்பிட்டுள்ள எல்லா எழுத்தாளர்களின் எல்லா புத்தகங்களையும் வாசித்து விடுங்கள். நான் சில இசங்களின் பாதிப்பினால் இளம் வயதில் தி.ஜா.வைக் கோட்டை விட்டு விட்டேன். நீங்கள் இப்படி இழந்து விடலாகாது. நீங்கள் உடனடியாக வாசிக்க வேண்டிய எழுத்தாளர்கள்:
தி.ஜ.ர. (தி.ஜ.ரங்கநாதன்)
உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்.
அசோகமித்திரன்
ஆதவன்
கோபி கிருஷ்ணன்
தி.ஜானகிராமன்
எம்.வி. வெங்கட்ராம்
கு.ப.ரா.
கு. அழகிரிசாமி
ஆர். ஷண்முக சுந்தரம் (சட்டி சுட்டது, நாகம்மாள்)
ந. பிச்சமூர்த்தி
அரு. ராமநாதன் (வீரபாண்டியன் மனைவி)
ந. சிதம்பர சுப்ரமணியன்
ஆ. மாதவன்
எஸ். சம்பத்
தஞ்சை ப்ரகாஷ்
நகுலன்
க.நா.சு.
மேற்கண்டவர்களின் அத்தனை நூல்களையும் படிக்கலாம். இரண்டு பேர் மட்டும் விதிவிலக்கு. அவர்கள் எழுதியதில் படித்தாக வேண்டிய நூல்களை அடைப்புக் குறிக்குள் கொடுத்திருக்கிறேன். இன்னும் பலர் இருக்கிறார்கள். பழுப்பு நிறப் பக்கங்களில் இனிமேல்தான் எழுத வேண்டும்.
சாரு