என்னவென்று சொல்வது?

முகநூலில் எப்போதாவது  ஐந்து நிமிடம் மேய்வது வழக்கம்.  அப்போது பின்வரும் குறிப்பைப் படித்த போது நான் எழுதியதை யாரோ எடுத்து மேற்கோள் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்.  ஆனால் தொடர்ந்து படித்த போது இல்லையே, இப்படி எங்கே எழுதினோம், ஆனால் நாம் எழுதிய மாதிரியே இருக்கிறதே என்று நினைத்தேன்.  பிறகுதான் லீனா மணிமேகலை என்று தெரிந்தது.  நானும் முன்பெல்லாம் இப்படி விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  பிறகு அது தேவையில்லை என்று தோன்றி விட்டது.  லீனா எழுதிய குறிப்பு கீழே:

என் பெயரில் ஒரு அடி நிலம் கூட இல்லை. காதல், திருமணம் மற்றும் என் அரசியல் தேர்வுகளால், நான் பிறந்த சாதி மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பிலிருந்து விலகி இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. மாத வருவாய் கூட இல்லாத உதிரி படைப்பாளி நான். எனக்கு கீழ் யாரும் வேலை செய்யவில்லை. என் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நிறுவனம் ஏதுமில்லை.வருடந்தோறும் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும், அரசாங்கத்திற்கு டாக்ஸ் ரிட்டர்ன் ஃபைல் செய்கிறேன். அவ்வப்போது என் பில்ஸ் கட்ட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பிரீலான்ஸ் செய்து பொருளாதாரத்தை சமாளித்துக் கொள்கிறேன். கடனுக்கு பயந்து க்ரெடிட் கார்ட் கூட வைத்துக் கொள்வதில்லை. என்னை “ஆண்டை” என்றும், “மேட்டுக்குடி” என்றும், “கார்ப்பரேட்” என்றும் எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் எனப் புரியவில்லை. நல்லது. சிறிதும் பெரிதுமாக இதுவரை 13 படங்கள் எடுத்திருக்கிறேன். 10 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஒரு புத்தகம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. என் களம் பெரியது. வெற்றியோ, தோல்வியோ, என் வாழ்நாளில் விரும்பி செய்து முடிக்க வேண்டியவற்றுக்குப் பின் சளைக்காமல் ஓடவே எனக்கு விருப்பம். கீழ்மைகளுடன் மல்லுக்கட்டும் போது,கீழ்மையை பொருட்படுத்துபவளாகவும் ஆகிவிடுகிறேன். இனி இந்த தவறை செய்ய மாட்டேன்.

லீனா மணிமேகலை (முகநூலில்)