ஒரு பிழை நேர்ந்து விட்டது. விகடன் அனுப்பிய 2000 ரூபாய் காந்தி கணக்கில் சேர்ந்து விட்டது. அதாவது, என்னுடைய பழைய சின்மயா நகர் வங்கிக் கணக்கு. அது அவந்திகாவின் பெயரில் இருப்பது. தவறுக்கு உண்மையிலேயே வருந்துகிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. இலக்கியப் பத்திரிகை என்றால் பணம் கொடுக்க மாட்டார்களோ என்ற என் அச்சமும், பணம் வரவில்லையே என்ற கவலையோடு சேர்ந்து கொண்டு விட்டது. இதை நீங்கள் குழந்தைப் பிராயத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்த பிறகும் ஆண்களைக் கண்டால் அஞ்சுமே அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பணம் வரவில்லை; ஃபோன் செய்து கேட்டும் பலன் இல்லை என்றதும் கிலியாகி விட்டது. ஆனால் விஷயம் விகடனை மட்டும் உள்ளடக்கியது அல்ல. எழுத்தாளனுக்கு ஊடகங்கள் தகுந்த ஊதியம் அளிப்பதில்லை; பல இடங்களில் ஊதியமே அளிப்பதில்லை என்பதுதான் பொதுவான பிரச்சினை. ஒரு எழுத்தாளர் ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் ஆறு மணி நேரம் செலவு செய்கிறார்; அவருக்கு ஒரு நயா பைசா கூட கொடுப்பதில்லை என்றால் என்ன அர்த்தம்? புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மட்டுமே 1000 ரூ. தருகிறார்கள். வேறு எந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திலும் ஒரு பைசா கொடுப்பதில்லை. ஏற்கனவே கூறியபடி புதிய தலைமுறையிலும் இனிமேல் 2000 ரூ கொடுத்தால்தான் தலை காட்டுவேன்.
பொதுவாகவே எழுத்தாளனுக்கு மதிப்பு இல்லாத சூழலை மட்டுமே நான் உங்கள் முன் பரிசீலனைக்கு வைக்க விரும்புகிறேன்.
விதிவிலக்கான ஒன்றையும் சொல்ல வேண்டும். ஒரு பத்திரிகைக்கு உலக சினிமா பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். சிறப்பிதழுக்காக. அதைப் படித்து விட்டு ஆசிரியர் என்னைத் தொடர்பு கொண்டு, இதற்கு எவ்வளவு சன்மானம் வேண்டும் என்று கேட்டார். இத்தனை படங்களைப் பார்த்து, இவ்வளவு சிரமப்பட்டிருக்கிறீர்களே, இதற்கும் எல்லாவற்றையும் போல் கொடுத்து விடக் கூடாது என்றே கேட்கிறேன் என்றார். ஐந்து இலக்கத்தின் குறைந்த பட்சத் தொகையைச் சொன்னேன். உடனே சரி என்றார். வேண்டியவர் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அதில்தான் ஞானக்கூத்தன் பற்றிய என் கட்டுரை வெளிவரவில்லை; (காரணம், எனக்கு முன்பே வேறு ஒருவர் அனுப்பி விட்டார்). ஆனால் ஜெயமோகனின் 50 கட்டுரைகள் 50 தினம் தொடர்ந்து வந்தது. அந்தப் பத்திரிகையைப் பொறுத்தவரை வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்க மாட்டார்கள்.
சிறு பத்திரிகைகளிலும் எல்லாவற்றிலும் சன்மானம் கொடுக்காமல் இருப்பதில்லை. காலச்சுவடுவில் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உயிரெழுத்துவில் பிரமாதமாகச் செய்கிறார் என் நண்பர் சுதிர் செந்தில். இவ்வளவுக்கும் செந்தில் செல்வந்தர் அல்ல. நான் திருச்சி போன போது என்ன வேண்டும் என்றார். (நான் அடா புடா போட்டுப் பேசும் இரண்டு பேரில் செந்தில் ஒருவர்; மற்றொருவர் தாதாவாக இருக்கிறார். மெட்றாஸ் தாதா. மற்றொரு பெயர் விமலாதித்த மாமல்லன்.) வாக்கிங் போக நல்ல ட்ராக்ஸ் வேண்டும்; வேட்டி சட்டையைப் போட்டுக் கொண்டு வாக்கிங் போனால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள் என்று சொன்னதும் ட்ராக்ஸ் வாங்கிக் கொடுத்தார் செந்தில். சமீபத்தில் பொன். விஜயன் காலமான போது அவருக்காக நிதி திரட்டிக் கொடுத்தார். திரட்டி என்ன திரட்டி, தன் கையில் இருந்து 80000 ரூபாயும் நண்பர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 20000 ரூபாயும் சேர்த்துக் கொடுத்தார். இப்படித்தான் வாழ வேண்டியிருக்கிறது. இனிமேல் காசு கொடுங்கள் என்று கேட்க மாட்டேன் என்று எழுதி விட்டேனா; ஆனால் சினிமா தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளுக்கு 5000க்குக் குறையாமல் எழுத மாட்டேன். மதிப்புரை வேறு; ஆய்வு வேறு. என்னுடைய மொழிபெயர்ப்பாளருக்கு நான் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுத்த ஒரு லட்சம் கோய்ந்தா. பதிப்பகத்தில் அந்த மொழி குப்பை என்று சொல்லி விட்டார்கள். சரி செய்யும் நிலையில் கூட இல்லையாம். இப்படியாகப் போகிறது வாழ்க்கை.
சுதிர் செந்திலும் மனுஷ்ய புத்திரனும் போன் செய்து நீண்ட நேரம் பேசினார்கள். மனுஷ் அதை முகநூலில் பகிர்ந்திருக்கிறார். தயவு செய்து இந்தப் பிரச்சினையை விகடனோடு மட்டுமே தொடர்பு படுத்திக் குறுக்கி விட வேண்டாம். இது ஒரு பொதுவான பிரச்சினை. சினிமாவிலும் குறைந்த காசு எழுத்தாளனுக்குத்தான். பல எழுத்தாளர்களுக்கு சம்பளமே கொடுக்கப்படுவதில்லை. ஊதியப் பிரச்சினை காரணமாகவே பல வாய்ப்புகளை நான் மறுத்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் கூட கதை விவாதம், திரைக்கதை உருவாக்கம், வசனம் ஆகிய மூன்றுக்குமாகச் சேர்த்து ஒரு லட்சம் சம்பளம் என்று ஒரு நண்பர் வந்த போது கை கூப்பி வணங்கி மறுத்து விட்டேன். ஒரே ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். நான் இதுவரை யாரிடமும் கடன் வாங்கியதில்லை. திருப்பித் தர இயலாது என்பதே காரணம். ஆறு மாதம் முன்பு ஒருநாள் பப்பு, ஸோரோவுக்கு பெடிக்ரி வாங்கப் பணம் இல்லை. வங்கியிலும் இல்லை. பெடிக்ரி தீர்ந்து விட்டது. தேர்தல் வேலையில் இருந்த மனுஷுக்கு ஃபோன் போட்டு பத்தாயிரம் ரூபாய் அவசரத் தேவை என்று கேட்டு வாங்கி பெடிக்ரி வாங்கினேன். இப்படித்தான் மாதாமாதம் எனக்கான மருந்தும் வாங்கிக் கொண்டிருக்கிறேன். இதோ ஐந்து தேதி ஆகி விட்டது. மருந்து வாங்க 7000 ரூ. தேவை. ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆகாயத்தைப் பார்த்தால் எத்தனை ஆனந்தமாக இருக்கிறது தெரியுமா? அதிலும் இரவு நேரத்தில்… அற்புதம்… அற்புதம்… எத்தனை நட்சத்திரங்கள்.. எத்தனை கோள்கள்…
மனுஷின் முகநூல் பதிவு:
சாரு இதை பலமுறை எழுதிவிட்டார். இதற்குப் பின்னால் இருக்கும் வலியும் துயரமும் ஆழமானது. எள்ளி நகையாடுவது எளிது. செளர்யமான வாழ்நிலைகளையும் பிழைப்பிற்கான உத்தரவாதங்களையும் உருவாக்கிகொண்டவர்கள் சாருவைக்கண்டு சிரிப்பது எளிது. ஆனால் எழுத்தாளனாக வாழ்வது அவ்வளவு எளிதானதல்ல.. பணப்பிரச்சினைகள் மட்டுமல்ல..தீவிரமாக தொடர்ந்து எழுதும் காலங்களில் உடல் நிலையும் மன நிலையும் அடையும் சீர்கேடுகள் என்பது தனிக்கதை. ஒவ்வொரு வருடமும் ஆறு மாதம் இந்த துயரத்தை அனுபிக்கிறேன். அதையெல்லாம் சொன்னால் அறிவீனர்கள தங்கள் ஆபாச பல்லைக் காட்டி சிரிப்பார்கள்.
இதைவிட பெரிய கொடுமை நிறைய எழுதக்கூடிய எழுத்தாளனுக்கு பத்திரிகைகளே கிடையாது என்பது. அதிலும் என் போன்ற ஒருவனின் நிலை இன்னும் மோசமானது. நான் வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதுகிறவன். அதில் சுமார் 50 கவிதைகளை உயிர்மையில் வெளியிடுவேன். மீதி பிரசுரம் காண்பது அரிது. பதிப்பக அரசியல், பத்திரிகை அரசியல், என்மீதான தனிப்பட்ட காழ்ப்பு என எத்தனையோ காரணங்கள். ஒரு முறை தீபாவளிக்கு ஊருக்குப் போகிறவர்கள் பற்றி ஒரு முக்கியமான கவிதையை எழுதினேன். ஜெயமோகன்கூட அந்தக் கவிதை பற்றி ஒருமுறை எழுதினார். அதை ஒரு நாளிதழில் அந்தப் பகுதிக்கு பொறுப்பான ஆசிரியருக்கு அனுப்பி ‘ தீபாவளியன்று வெளியிடுங்கள். மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும்’ என்றேன். பதில் இல்லை. ஆனால் அந்த நாளிதழில் அவ்வபோது ஸ்பேஸ் ஃபில்லர்களாக கவிதைகள் பயன்படுத்தப்படுகின்றன. சினிமாக் கவிஞர்கள், ஜனரஞ்சகக் கவிஞர்களின் கவிதைகளை வாராவாரம் வெளியிட்டு புளகாங்கிதம் அடையும் ஏடுகள் உண்டு. அவர்கள் அதற்கு உரியவர்கள் என்பதில் ஐயமில்லை. எந்தப் பொறாமையும் இல்லை. ஆனால் ஒரு நவீன கவிஞனுக்கு அத்தகைய வாய்ப்புகள் ஒரு போதும் வராது. அவர்களுக்கான பிரசுர வாய்ப்பு என்பது பொங்கல் இனாம் போல. கடுமையான ரேஷன் முறை உண்டு. ஒரு கவிதை அனுப்பினால் ‘ இப்பதானங்க..மூணு மாசத்துக்கு முன்னாடி உங்க கவிதை வந்துச்சு” என்பார்கள்.
வெகுசன பத்திரிகைகளில் என்னுடைய கவிதை ரசிகர்கள் யாராவது இருந்து வருடத்திற்கு ஒரு முறை அதில் என்னுடைய கவிதையை வரவழைக்க பல்வேறு தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதைக் கண்டு எனக்கு ரத்தக் கண்ணீர் வரும்.
இப்போதெல்லாம் கவிதைகளை நேரடியாக ஃபேஸ்புக்கிலேயே எழுதிவிடுகிறேன். துண்டுப்பிரசுரங்களாக அடித்து இலட்சகணக்கானோருக்கு கொடுக்கும் எண்ணமும் உண்டு. நான் என் சொந்த துயரங்களை எழுத வந்தவனல்ல, ஒரு பண்பாட்டை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு மிகப்பெரிய மானுட சமூகத்தைப் பற்றி எழுதிகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கவிதையும் எழுதும்போது அது ஒரு மலைப்பிரசங்கம் போல மனதில் எழுச்சிகொள்கிறது. ஆனால் கவிஞன் இங்கே கள்வனைபோல மறைந்து திரிகிறான்.
இதையெல்லாம் நான் சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை. சாருவின் கட்டுரை இதையெல்லாம் தூண்டிவிட்டுவிட்டது.
மனுஷ்ய புத்திரன், முகநூலில்…