கூலி இல்லாத வேலை (3)

நீங்கள் எழுதியிருந்த கூலி இல்லாமல் செய்யும் வேலை படித்தேன்.  நேற்றைய விஜய் டிவியில் ஒளிபரப்பிய ’நடந்தது என்ன?’ என்ற நிகழ்ச்சியில் பா.விஜய் நா.முத்துக்குமாரை பற்றிப் பேசும் போது, அவரது மறைவுக்குக் காரணம் மன அழுத்தம் எனவும், மன அழுத்தத்திற்குக் காரணம் அவருடைய உழைப்புக்கான கூலி சரியாக தரப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்… இது ஒரு சாபமோ?

சந்திரசேகரன்

”வெகுசன பத்திரிகைகளில் என்னுடைய கவிதை ரசிகர்கள் யாராவது இருந்து வருடத்திற்கு ஒரு முறை அதில் என்னுடைய கவிதையை வரவழைக்க பல்வேறு தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதைக் கண்டு எனக்கு ரத்தக் கண்ணீர் வரும்.” மனுஷ்ய புத்திரன்.

சந்திர சேகரனின் கடிதம் முக்கியமானது.  கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், கோடிகளில் புரளும் சினிமாத் துறையிலும் பேனா பிடிப்பவனுக்கு (வசனம் எழுதுபவனுக்கு) ஒரு லட்சம் தான் கூலி.  பாட்டு எழுதுபவனுக்குப் பத்தாயிரம்.  அதுவே காசோலை திரும்பி வரும்.  திரும்பித் திரும்பி வந்ததால் திரும்ப முடியாத இடத்துக்குப் போய் விட்டான் முத்துக்குமார்.

மனுஷ்ய புத்திரனின் குறிப்பில் உள்ளதைக் கவனியுங்கள்.  நான் எழுதுவது எதுவுமே பத்திரிகைகளில் பணியாற்றும் என் நண்பர்களைப் பற்றி அல்ல.  நான் முதலாளிகளைப் பற்றி, நிர்வாகிகளைப் பற்றி எழுதுகிறேன்.  இந்த விஷயமெல்லாம், இந்தப் பிரச்சினை பற்றி நான் எழுதுவதெல்லாம் அவர்களின் செவிகளையே எட்டாது.  எட்டவும் வழியில்லை.  உதவி ஆசிரியர்களாக இருக்கும் என் நண்பர்கள்தாம் மனம் புழுங்குகிறார்கள்.  திரும்பவும் சொல்கிறேன்.  இது அவர்களைப் பற்றிய விஷயமே அல்ல.  ஒரு இதழில் என்னுடைய கட்டுரை வருவதற்காக தாங்கள் பணிபுரியும் பத்திரிகைகளில் போராடுகிறார்கள் என் நண்பர்கள்.  அவர்களுக்கெல்லாம் இப்படி நான் எழுதுவது பிரச்சினையாகத்தான் இருக்கும்.  எத்தனை நாள்தான் நான் ஓசியில் எழுதுவது?  இவர்கள் கொடுக்கும் ஐநூறும் ஆயிரமும் ஓசியில் எழுதுவது மாதிரி தான்.  15 ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசு வேலையை விட்ட போது 7000 ரூபாய் சம்பளம்.  இப்போது அந்த வேலைக்குச் சம்பளம் 70,000 ரூ.  ஆனால் அப்போது ஒரு கட்டுரைக்கு 500 ரூ. இப்போது 1000 ரூ அல்லது 750 ரூ.  புரிகிறதா?  பிற துறைகளில் கடந்த பத்தாண்டுகளில் சம்பளம் பத்துப் பதினைந்து மடங்கு உயர்ந்திருக்கிறது.  ஆனால் எழுத்தாளனுக்கான கூலி இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது.  இதை விடக் கொடுமை, தொலைக்காட்சி சேனல்கள்.  சன் டிவி என்ன ஏழையா?  சன் டிவியில் கூட ஒரு பைசா தருவதில்லை.  ’புதிய பார்வை’யில் மட்டும் 1000 ரூ தருகிறார்கள்.  மற்ற தொலைக்காட்சிகளில் ஒரு பைசா கிடையாது.  இதுதான் மிக மோசமான சுரண்டல் என்கிறேன்.

என். சொக்கன் இந்தப் பிரச்சினை பற்றி முகநூலில் எழுதியிருப்பது:

என். சொக்கன், முகநூலில்:

செப்டெம்பர் 5, 2016

‘ஓசியில் எழுதமாட்டேன்’ என்று சாரு நிவேதிதா தீர்மானித்திருப்பது மிகச் சரியான விஷயம். வெகுஜன எழுத்தில் தொடங்கி இலக்கிய எழுத்து வரை அனைத்து வகைகளிலும் எழுதுகிற ஒவ்வொருவரும் இப்படித் தீர்மானித்தாலன்றி சில பூனைகளுக்கு மணி கட்டவே முடியாது.

***
என். சொக்கன், முகநூலில்:
செப்டெம்பர் 6, 2016

இனி இலவசமாக எழுதப்போவதில்லை என்று சாரு நிவேதிதா எழுதியிருந்ததை வரவேற்று ஒரு சிறு பதிவு எழுதியிருந்தேன். அதை விமர்சித்திருந்த இரு நண்பர்கள் (ஜகதீஸ்வரன், முருகுதமிழ் அறிவன்) ஒரு முக்கியமான கேள்வி கேட்டிருந்தார்கள்: திருவள்ளுவர் இப்படி நினைத்திருந்தால் நமக்குத் திருக்குறள் கிடைத்திருக்குமா? கம்பராமாயணம் எழுதப்பட்டிருக்குமா? சிலப்பதிகாரம் வந்திருக்குமா?

’அறிவென்பது பொதுச்சொத்து, அதை வழங்குவோர் ஊதியம் எதிர்பார்க்கக்கூடாது’ என்ற கருத்து நம் ரத்தத்திலேயே இருக்கிறது. இதைப் பலமுறை இங்கே எழுதியிருக்கிறேன்.

கொடுமை என்னவென்றால், இதைச் சொன்னால் என்னுடைய பல எழுத்தாள நண்பர்களே அந்தப் பதிவுக்கு ‘லைக்’ போடமாட்டார்கள் :)) அப்படிப் போட்டால் அவர்களைப் ‘பணப்பேய்’ என்று வாசக சமூகம் நினைத்துவிடுமோ என்கிற எண்ணம்தான்!

முதலில், எழுத்துக்குப் பணத்தை யாரும் கொட்டித்தருவதில்லை, அப்படி யாரும் எதிர்பார்ப்பதும் இல்லை, இதனை ‘மதிப்பூதியம்’ என்றுதான் அழைக்கிறார்கள், ’ஒரு கட்டுரைக்காக/கதைக்காக நீங்கள் உங்களுடைய அறிவைப் பயன்படுத்தி உழைத்துள்ளீர்கள், உங்கள் ஞானத்தில் ஒரு பகுதியை விண்டுதந்துள்ளீர்கள், அதற்கேற்ற ஊதியம் கணக்கிடுவது சாத்தியமில்லை. ஆகவே, நாங்கள் உங்கள்மீது வைத்துள்ள மதிப்பின் அடையாளமாக இந்தத் தொகையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்பதுதான் அதன் பொருள்.

ஆக, ஒரு கட்டுரைக்கு ஒருவர் ஐநூறு ரூபாய் எதிர்பார்க்கிறார் என்றால், அது தட்டச்சுக்கூலி அல்ல, தன் எழுத்துக்கு மதிப்பு அளிக்கப்படுகிறது என்கிற அடையாளத்தைதான்.

திருவள்ளுவரோ கம்பரோ ஊதியம் வாங்கிக்கொண்டு எழுதினார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ஊதியம் வாங்காமல் எழுதி வறுமையில் வாடிய பல எழுத்தாளர்களை நமக்குத் தெரியும். அவர்களுக்கெல்லாம் அந்த ஊதியம் எந்த அளவு உதவியிருக்கும் என்பதும் தெரியும்.

இதைவைத்து, வறுமையில் உள்ள எழுத்தாளர்களின் எழுத்துக்கு ஊதியம் தரப்படவேண்டும், முழுநேர எழுத்தாளர்களுக்கு ஊதியம் தரப்படவேண்டும், மற்றவர்களுக்கு வேண்டியதில்லை என்றெல்லாம் பஜனை பாடலாகாது. அது மதிப்பூதியம், ஐந்து ரூபாய் என்றாலும் தங்கக்குவியலுக்குச் சமம், அதைக்கூடத் தராமல் ஓசியில் அறிவுப்பகிர்வை எதிர்பார்க்காதீர்கள் என்று அவர் (சாரு நிவேதிதா) வணிகப்பத்திரிகைகளிடம் கேட்பதில் எந்தப் பிழையும் நான் காணவில்லை. ஒருவேளை சாரு நிவேதிதா ஒரு பெரும்பணக்காரராக இருந்து, இந்த மதிப்பூதியம் அவருக்குத் தேவைப்படவில்லை எனில், அவரே அதை மறுக்கலாம், அல்லது, ‘என்சார்பாக ஒரு சமூகசேவை அமைப்புக்கு அதனை நன்கொடையாகத் தந்துவிடுங்கள்’ என்று சொல்லலாம், But it should be his choice.

என்னுடைய நண்பர் ஒருவர் (இங்கேதான் இருக்கிறார்) தன்னுடைய நூல்களின்மூலம் வரும் ராயல்டிமுழுவதையும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குத் தருகிறார். அது அவரது பெருந்தன்மை. ஆனால் அதற்காக, ஒரு பதிப்பகம் அவருக்கு ராயல்டி தராவிட்டால் ’எப்படியும் யாருக்கோ போகிற விஷயம்தானே?’ என்று அவர் விடமாட்டார், கழுத்தில் துண்டைப்போட்டுக் கேட்பார், வாங்கி இன்னொருவருக்குத் தருவார். காரணம், அது அவருடைய எழுத்துக்கான மதிப்பு, அதை விட்டுக்கொடுக்கக்கூடாது.

அதே கட்டுரையில் சாரு நிவேதிதா குறிப்பிடுவதுபோல, பல இலக்கிய இதழ்களுக்கு அவர் பணம் எதிர்பார்க்காமல் எழுதியிருக்கிறார். அங்கே அவருக்கு வேறுவிதமான மதிப்பூதியம் (அவ்விவரங்களைப் பகிர்ந்துகொள்வதில் இருக்கும் திருப்தி/வாசகர் வட்டம்) கிடைத்திருக்கும். ஆனால் இங்கே, தன்னைவைத்து ஓர் இதழ்/தொலைக்காட்சி நிலையம் சம்பாதிக்கிறது எனும்போது, அதில் ஒரு நியாயமான பங்கைக் கோருகிறார். அதனை அளிப்பதே நியாயம். அவரைத் திருவள்ளுவராகச்சொல்வதெல்லாம் எழுதுபவனுக்கு பர்ஸைத் திறக்க விரும்பாதவர்களின் பம்மாத்து.

சாருமீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் இந்த விஷயத்தில், எழுதுகிற ஒவ்வொருவரும் அவர் பின்னே  நிற்கவேண்டும் என்று நினைக்கிறேன்.”

***

மேலே உள்ளது என். சொக்கன்.  கடைசிப் பத்தியில் உள்ள ஒரு வாக்கியம் பற்றி ஒரு விஷயம். அது என்ன, யாராக இருந்தாலும் இப்படி ஒரு இக்கு வைக்கிறார்கள்?   ”சாருமீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு.” இதன் அர்த்தம் என்ன?  என்னை சாரு ஆள் என்று நினைத்து விடாதீர்கள்.  எனக்கு அவர் மீது பல விமர்சனங்கள் உண்டு.  அது என்ன பல விமர்சனங்கள்?  ஒரே ஒரு விமர்சனத்தைச் சொல்லுங்கள்.  எனக்கு இது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது.  என். சொக்கனுக்கு என். சொக்கன் மீது விமர்சனம் இல்லையா?  நம்முடனேயே நாம் முரண்படுவதோ விமர்சிப்பதோ இல்லையா?  அப்படி நம் மீதே நமக்கு விமர்சனம் இருக்கும் போது இன்னொருத்தர் பற்றி விமர்சனம் இருப்பதில் என்ன ஆச்சரியம்?  சரி, என். சொக்கனுக்கு இந்தப் பூவுலகில் யார் மீது ஒரு விமர்சனம் கூட இல்லை.  சொல்லுங்கள்.  அந்த மகாத்மாவை நான் பின் தொடர விரும்புகிறேன்.  சரி, திருவள்ளுவர் எப்பேர்ப்பட்ட ஜீனியஸ்?  அவருடைய எல்லா குறள்களையும் நாம் ஏற்றுக் கொள்கிறோமா?  எத்தனை குறள்களில் பெண்ணடிமைத்தனம்?  உதாரணமாக, இந்தக் குறள்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இந்தக் குறள் மீது என். சொக்கனுக்கு விமர்சனம் இல்லையா?

நான் சொல்ல வருவது என்னவென்றால், என் மீது ஒருவருக்கு விமர்சனம் இருப்பது மிக இயல்பான விஷயம்.  அதை ஏன் ஒவ்வொருவரும் டெம்ப்ளேட் போல என்னைப் பற்றி எழுதினாலே தவறாமல் சொல்லி விடுகிறார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை.  கவிஞர் பெருந்தேவி கூட இதேபோல் எழுதியிருந்தார்.  ”சாருவின் மீது எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும்…”

இது என்ன, நான் என்ன கொள்ளையடித்தேனா?  பொய் புரட்டல் செய்தேனா?  நான் என்ன கிரிமினலா?  என். சொக்கன், பெருந்தேவி போன்றவர்கள் இப்படிச் சொல்லும் போது எனக்கு ’நாம் என்ன சமூக விரோதியா?’ என்று எண்ணத் தோன்றுகிறது.

சரி, இந்த உபகதையை விட்டு விட்டு மெயின் கதைக்கு வருவோம்.  திருவள்ளுவரும் இப்படி நினைத்திருந்தால் – கூலி கொடுத்தால்தான் எழுதுவேன் – திருக்குறளே வந்திருக்காதே என்கிறார் சொக்கனுக்கு மறுப்பு எழுதுபவர்.  திருவள்ளுவருக்கும் கம்பனுக்குக் கிடைத்தது போல் ஒரு சடையப்பர் இருந்திருப்பார்.  இல்லையேல் திருக்குறள் வந்திருக்காது.  சங்க இலக்கியத்தில் பல நூறு புலவர்கள் இப்படித்தான் பிச்சை எடுத்துத் திரிந்திருக்கிறான்கள்.  ஒரே ஒரு உதாரணம் தருகிறேன்.

சங்க காலத்தில் யாழை மீட்டியபடி பாடல் புனைந்து பாடி ஊர் ஊராகத் திரிந்தவர்கள் பாணர்கள்.  இவர்கள் புலவர்களும் கூட.  அந்தப் பாணர்களில் ஒருவன் நல்லூர் நத்தத்தன் என்பவன்.  இவன் நல்லியக் கோடன் என்ற அரசனைப் பார்த்து, யாழ் மீட்டிப் பரிசில் பெற்று வருகிறான். வழியில் இன்னொரு பாணனைப் பார்த்து நல்லியக் கோடனின் சிறப்புகளைப் பாடலாகப் பாடுகிறான்.  அதுதான் சங்க இலக்கியத்தில் வரும்  சிறுபாணாற்றுப் படை.  பத்துப் பாட்டு என்ற பிரிவில் வரும் 269 அடிகளால் அமைந்த பாடல் இது.  இதில் ஒரு இடத்தில் தன் வறுமை பற்றிக் கூறுகிறான் நத்தத்தன்.

”இந்நாள் திறவாக் கண்ண சாய்செவிக் குருளை

கறவாப் பால்முலை கவர்தல் நோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்

காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த

பூழி பூத்த புழற்காள் ஆம்பி

ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்

அழிபசி வருத்தம்”

சிறுபாணாற்றுப்படை (130 – 140)

இதன் பொருள்:

நத்தத்தன் தன் பெரிய சுற்றத்தாருடன் வாழ்ந்த வீட்டின் அடுக்களை.  அங்கே நெருப்பையே காணாத அடுப்படியில் இன்னும் கண் திறக்காத வளைந்த செவிகளைக் கொண்ட சமீபத்தில் ஈன்ற தன் குட்டிகளோடு படுத்துக் கிடக்கிறது நாய்.  குட்டிகள் தாயின் வற்றிய முலையை இழுத்துப் பால் குடிக்க முயற்சி செய்கின்றன.  பால் இல்லை.  பசித்த வயிறும், சுரக்காத காம்புகளுமாக படுத்துக் கிடக்கும் தாய் குட்டிகள் காம்புகளை இழுக்கும் வேதனையும் சேர்ந்து கொள்ள ஈனக்குரலில் குரைக்கிறது.

மரத்துடன் சேர்ந்த பழைய சுவரில் கரையான் புற்றினால் கொட்டிக் கிடக்கும் புழுதியில் காளான்கள் பூத்துக்கிடக்கின்றன.

இப்படிப்பட்ட வீட்டில் பசியால் வாடிய உடலுடன் கூடிய கிணைமகள் (கிணை – ஒருவகை பறை) குப்பையில் முளைத்த கீரையை பெரிய நகத்தால் கிள்ளிக்கொண்டு வந்தாள்.  அதை சமைக்க அங்கே உப்பு கூட இல்லை.   இது போன்ற வறுமையெல்லாம் உலக இயல்பு என்பதைக் கூட புரிந்து கொள்ளாத மூடர்கள் தங்களை நகைப்பார்கள் என்பதால் வீட்டின் வாசலை அடைத்து விட்டு சுற்றத்தாருடன் சேர்ந்து உண்ணும் பசித் துன்பத்தை நீக்கினான் நல்லியக் கோடன்.”

மேற்கண்ட பாடலில் ’நகைப்பார்கள்’ என்று வருகிறதல்லவா, அந்த ஏளனத்தைத்தான் நானும் எதிர்கொண்டேன்.  தன்னுடைய ஏழ்மையை நகைப்பவர்களை மடவோர் என்று ஏசுகிறார் நத்தத்தன்.  இப்படி ஒரு பாடல், இரண்டு பாடல் அல்ல; நூற்றுக் கணக்கான பாடல்கள் இருக்கின்றன.  தமிழ்ச் சமூகமே கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக கற்றறிந்தோரையும், புலவர்களையும், பாணர்களையும் பிச்சைதான் எடுக்க வைத்திருக்கிறது.  புலவனின் வேலை என்ன?  வயலில் இறங்கி நாற்று நடுவதா, களை எடுப்பதா, கதிர் அறுப்பதா?  புலவனின் வேலை கவி புனைவது.  அதை ஆண்டுக்கு ஒருமுறை அரசவையில் பாடிப் பரிசில் பெறலாம்.  அது தீர்ந்ததும் பட்டினிதான்.  இதில் சுற்றி இருப்பவர்களின் ஏளனம் வேறு!

***

தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிவீர்கள்.  அதில் மூத்த எழுத்தாளரான இந்திரா பார்த்தசாரதி பற்றி ஏன் இன்னும் எழுதவில்லை தெரியுமா? சொன்னால் வெட்கக் கேடு.  அந்தக் கட்டுரைகளுக்கு எனக்குக் கொடுக்கப்படும் கூலி 900 ரூ.  (ஆயிரம் ரூபாய் இன்கம் டாக்ஸுக்கு அவர்களே கழித்துக் கொள்கிறார்கள்) இதில் இன்னொரு பெரிய ட்ராஜிக்காமெடி என்னவென்றால், அங்கே ஒரு கட்டுரைக்கு 500 தான் தருவார்கள்.  அங்கே பணி புரியும் என் நண்பர்கள் நிர்வாகத்தோடு சண்டை போட்டு இதை ஆயிரமாக ஏற்றி, அதில் இன்கம்டாக்ஸ் நூறு போக 900 கிடைக்கிறது.  இப்போது இதை வேறு எழுதித் தொலைத்து விட்டேனா, அந்த நண்பர்களுக்குப் பிரச்சினை எழலாம்.  இப்போது இந்திரா பார்த்தசாரதிக்கு வருவோம்.  அவர் எழுதிய தொகுதிகளை வாங்க வேண்டுமானால் சுமார் 5000 ரூபாய் ஆகும்.  அதனால்தான் தாமதிக்கிறேன்.  முன்பெல்லாம் எனக்குத் தேவையான நூல்களை என் தோழிகள் இருவர் வாங்கித் தருவர்.  ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஃபோன் பண்ணிச் சொன்னார்.  ”தற்கொலை செய்து கொள்வதாக இருந்தால் எனக்கு ஆறு மாதங்களுக்கு ஃபோன் எதுவும் செய்யாதீர்கள்; பின்னால் போலீஸ் விசாரணை வந்தால் என்னையும் விசாரிப்பார்கள்” என்று மெஸேஜ் செய்தேன்.  அதோடு அவரிடமிருந்து தொடர்பு இல்லை.  நானும் பயந்தாங்கொள்ளி என்பதால் விட்டு விட்டேன்.  தற்கொலைக் கேசுகளோடு சங்காத்தமே வைத்துக் கொள்ளக் கூடாது.

புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் இன்னொரு தோழி வீடு கட்டி விட்டார்.  அதனால் அவரிடம் பணப்புழக்கம் கம்மியாகி விட்டது.  இந்த நிலையில் அவரிடம் கேட்க லஜ்ஜையாக இருக்கிறது.  ஒவ்வொரு கட்டுரையை முடிக்கும் போதும் இ.பா.வை நினைப்பேன்.  புத்தகம் கிடைத்ததும் எழுதலாம் என்று விட்டு விடுவேன்.  க.நா.சு. பற்றி எழுதிய போதும் இப்படித்தான் ஆனது.  ஆனால் வெட்கத்தை விட்டு நற்றிணை யுகனுக்கு ஃபோன் போட்டு க.நா.சு. எழுதி நீங்கள் பதிப்பித்த அத்தனை நூல்களும் வேண்டும்; என்னால் காசு கொடுக்க முடியாது என்று சொன்னேன்.  க.நா.சு. எனக்கு அப்பன்; நீங்கள் எனக்கு சித்தப்பன் என்று சொன்ன யுகன் உடனே புத்தகங்களை அனுப்பி வைத்தார்.  ஒருவரிடம் ஒருமுறைதான் தானம் கேட்க முடியும் என்பதால் இ.பா. இப்போது தொங்கலில் இருக்கிறார்.  பார்ப்போம்.

இந்த வெட்கக்கேட்டு விவகாரம் ஏன்?  ஒரு கட்டுரைக்கு இன்னொரு தினசரியில் 5000 ரூ.  நான் இந்த தினசரியைப் பிடித்தேன்.  நீ ஒரு வீணாப் போனவன் என்று என்னை என் நண்பர்கள் ஏசுவதற்கு இதுதான் காரணம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுத ஆரம்பித்த போது இதுதான் niche பத்திரிகை என்று நினைத்தேன்.  ஆனால் இப்போது ஒவ்வொரு கட்டுரைக்கும் எனக்கு ஆகும் புத்தகச் செலவு, ஸ்கான் செலவையெல்லாம் பார்க்கும் போது விழி பிதுங்குகிறது.

இதைத்தான் சூழல் என்று சொல்கிறேன்.  எழுத்தாளனைப் பிச்சை எடுக்க வைக்கும் சமூகம் என்று சொல்கிறேன்.

இது விஷயத்தில் எனக்கு ஆதரவு கொடுத்த என். சொக்கன், பா. ராகவன், மனுஷ்ய புத்திரன் ஆகிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.