கூலி இல்லாத வேலை (4)

இதை வாசிக்கும் எழுத்தாளர்கள் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  என் மீது உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், இதை ஒரு பொதுப் பிரச்சினையாகக் கொள்ளவும்.  பத்திரிகை நண்பர்களும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  விஷயம் இதுதான்.  எல்லா தொலைக்காட்சிகளிலும் எழுத்தாளர்களை அழைக்கிறார்கள்.  நான்கு மணி நேரம், ஐந்து மணி நேரம் என்று எங்கள் நேரத்தைத் தருகிறோம்.  ஒரு க்ரீன் டீ கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.  ஒரு நயா பைசா கொடுப்பதில்லை.  புதிய தலைமுறையில் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எல்லாம் எங்களுடைய நான்கு மணி நேரத்துக்கு பிசாத்து.  நான்கு கோடியும் ஐந்து கோடியும் பத்து கோடியும் சம்பளம் வாங்கும் திரையுலகப் பிரமுகரும் நூறுகளில் சம்பளம் வாங்கும் எழுத்தாளனும் ஒன்று அல்ல என்பதைத் தொலைக்காட்சி நிறுவனங்கள் உணர வேண்டும்.  கேட்டால் பல தொலைக்காட்சி சேனல்கள் நட்டத்தில் ஓடுவதாகச் சொல்கிறார்கள்.  என்ன எழவோ தெரியவில்லை.  நிச்சயம் சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி  எல்லாம் நட்டத்தில் நடக்காது என்று நினைக்கிறேன்.

இது பற்றி என் பத்திரிகை நண்பர்கள் தங்கள் பத்திரிகையில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  கௌதம சித்தார்த்தன், மனுஷ்ய புத்திரன் போன்றவர்கள் தொலைக்காட்சியில் அழைத்தால் அவர்களுடைய நேரத்துக்கான பணத்தைக் கேட்க வேண்டும்.  அப்போதுதான் நான் சொல்லும் நியாயம் அவர்களுக்குப் புரியும்.  மனுஷ் வேண்டுமானால் கலைஞர் டிவியில் இலவசமாகப் பேசிக் கொள்ளட்டும்.

இது குறித்து பெருந்தேவி எழுதியிருப்பதற்கு என் மனமார்ந்த நன்றி.  பெருந்தேவி தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  யாரை எடுத்தாலும் சாரு என்று பெயர் போட்டால், அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்… இப்படியே தொடர்ந்து படித்தால் எனக்கே என்னைப் பற்றி பல விபரீத சந்தேகங்கள் எழ ஆரம்பித்து விடுகின்றன.  கெட்ட கெட்ட கனா எல்லாம் வருகிறது.  பெருந்தேவிக்காவது தி.ஜா.வைப் படித்தால் உறக்கம் வந்து விடுகிறது.  ஆனால் என் கொடுங்கனாக்கள் தி.ஜா.வையே விரட்டி விடுகின்றன.  என் மீது விமர்சனம் இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை.  திருவள்ளுவர் மீதே விமர்சனங்கள் இருக்கும் போது சாரு மீது இருக்கும் விமர்சனங்கள் அந்த அளவுக்குத் தீவிரமானவையா, அப்படி இருந்தால் அது பற்றி விவாதிக்கலாமே, நானும் கொஞ்சம் திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்கலாமே என்றுதான் அப்படி எழுதியிருந்தேன்.

இனி பெருந்தேவி:

பெருந்தேவி, முகநூலில், 7.9.16:

“விமர்சனங்கள் இருந்தாலும்” என்று நான் முன்னர் எப்போதோ எழுதியதைச் சுட்டி வருத்தப்பட்டிருக்கிறார் சாரு. இதை அவரிடம் கூறிய எங்கள் பொது நண்பர்கள் முக்கியமாக பண விஷயத்தில் சில நாட்கள்முன் நான் எழுதியதையும் அவரிடம் தெரிவிக்கவேண்டும். குறிப்பாக, நிகனர் பர்ரா தான் தோன்றும் முப்பது செகண்ட் பால் விளம்பரப் படத்துக்கு ஷகீராவுக்கு இணையாக முப்பதாயிரம் டாலர்கள் வாங்கினார் என்று எழுதியிருந்தேன். தமிழ்ச்சூழலில்தான் எழுத்தாளர்களைச் சுரண்டும் அவலம் நடக்கிறது (பெரும்பத்திரிகைகளாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி நிறுவனங்களாக இருந்தாலும் சரி) இதையும் நான் சுட்டி எழுதியிருந்தேன். திட்டமிட்ட இத்தகைய நிறுவனச் சுரண்டல் விஷயத்தில் நான் சாருவின் ஆதரவுத்தரப்பில் தான் இருக்கிறேன் என்பதைக் கூறிக்கொள்கிறேன். உண்மையில் தொலைக்காட்சியில் தோன்றும் சாரு, மனுஷ்யபுத்திரன் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு குறைந்தபட்சம் பத்தாயிரமாவது தரப்பட வேண்டும்.

#நிறுவனங்களின் கருத்துச் சுரண்டல் ஒழியவேண்டும்

***
 
பெருந்தேவி, முகநூலில், 5.9.16:நிகனர் பர்ரா-வைப் பற்றிய ஒரு தகவல் (சோர்ஸ்: பாரிஸ் ரிவ்யூ). பால் சம்பந்தமான கமர்ஷியல் விளம்பரப் படமொன்றில் அவரை தோன்றக் கேட்கிறார்கள். அந்த விளம்பர ப்ராஜெக்டில் பாடகர்-நடனக் கலைஞர் ஷகீராவும் இருக்கிறார். ஷகீராவுக்குத் தருகிற அளவு சன்மானம் தனக்கும் தரவேண்டும் எனக்கோருகிறார் பர்ரா. எவ்வளவு தெரியுமா? அரை நிமிடம் தோன்ற முப்பதாயிரம் டாலர்கள். அதன்பின் தன் நேரத்துக்கான சார்ஜ் ஒரு வினாடிக்கு ஆயிரம் டாலர் என்றுக் கூறத் தொடங்கினாராம் பர்ரா. 🙂 # கவிஞர்டா # எழுத்தாளர்டா (தமிழகச் சூழலை நினைத்தால் வயிறெரிகிறது. தொலைக்காட்சியில் தோன்றும் நம் எழுத்தாளர்கள் இதையெல்லாம் மனதில்கொள்ளவேண்டும். தங்களைச் சுரண்ட இனிமேலும் அனுமதிக்கக்கூடாது.)

இதுதான் அது என்றொரு யூகம்.