ஒரே ஒரு மனித ஜீவியின் பிரிவுதான் ஸீரோ டிகிரி நாவலாக வந்தது. வருத்தத்தை, துக்கத்தை வேறு ஒரு எண்ணமாக, சிந்தனையாக, வஸ்துவாக மாற்ற முயல வேண்டும். அது ஒரு மகத்துவத்தைக் கொண்டு வரும்.
– சாரு
இனி வருவது ஜெகா, முகநூலில்…
2014 புத்தகக் காட்சி சமயம், சாரு மற்றும் நண்பர்களுடன் ஜிஆர்டி க்ராண்ட் ரூப் டாப்பில் உட்கார்ந்திருந்தோம். அவர் அப்போது மது அருந்துவார். அவருக்கு அர்ஜண்டினியன் ஒய்ன், நா வழக்கம் போல ஜேடி, நண்பர்கள் பியர்.
நான் வாழ்க்கையில் இதுவரை கேட்டிராத, கடந்து போகவும் வாய்ப்பில்லாத, ஒரு மனிதனின் உண்மைக் கதையைச் சொன்னார். பயங்கரமான சோகம். ஆனால் ஒரு ஞானியின் முகத்தோடு படு இயல்பாக அந்த மனிதனின் வாழ்வில் ஏற்பட்ட அவலத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
திடீரென உணர்ச்சி மிகுதியில் (அவர் அப்படி எல்லாம் உணர்ச்சிவசப்படமாட்டார். துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் குட்டி நாயைக் கொஞ்சுவது போன்ற பாவனையில்தான் நம்முடன் எப்போதும் பேசிக்கொண்டிருப்பார். ஆனால் இலக்கியம் என வரும் போது விஸ்வரூபம் பார்ட் 2 எடுத்துவிடுவார். ஒரு முறை குற்றாலத்தில் அதிகாலை மூணு மணிக்கி ‘அவரப்பத்தி ஏன் என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க, என் தகப்பன் மௌனி யாருன்னு தெரியுமா?!! ஜெகாவ கூப்புடுங்க, இத கேட்டே ஆகனும்’ என்று ஐந்தருவி பாறையில் பட்டுத் திரும்புவது போல கர்ஜித்தார். விழித்துக் கொண்டுதான் இருந்தேன் என்ற போதும் கண்ண இறுக்கி மூடி குறட்டை விட்டு தூங்குனாப்ல நடிச்சு எஸ்ஸாயிட்டேன். ஆத்தீ) ‘இத்தனை துக்கத்தில் அவன் என்ன செய்திருக்க வேண்டும்?!! அப்படியே உட்கார்ந்து அவன் துக்கம் அனைத்தையும் இலக்கியமாக அல்லவா ஆக்கியிருக்க வேண்டும்?!! அதைச் செய்யாமல் ஒதுங்கி அமைதியா போய்ட்டான், இது அநியாயம் இல்லியா?!!’
பாருங்க.. ஒரு க்ளாசிக் படைப்பு வருகிறதென்றால் அதன்பொருட்டு எழுத்தாளன் தாண்டி வந்த துயரங்களையும் மன உளைச்சலையும் உங்களால கற்பனை கூட செய்ய முடியாது.
அதனால்தான் ஒரு படைப்பாளியின் இழப்பில் ‘குடிச்சான் செத்துட்டான்’ என வெத்து நாயம் பேசுறவைங்கள கடந்தா, கொஞ்சம் மூடிட்டு கம்னு இரேண்டா என சொல்லத் தோன்றுகிறது, ஆனா சொல்ல முடிலே…