ஒரு நேர்காணல்

தினகரன் தீபாவளி மலர், 2016

பேட்டி எடுத்தவர்: நா. கதிர்வேலன்

“சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள். ஆனால், இந்த ஜித்தன் போக்கை எவராலும் கணிக்க முடியாது. காலை வேளையில் சாரு நிவேதிதாவிடம் தொடர்பு கொண்டால், ‘எப்போது வேண்டுமானாலும் பேசலாம்,’ என சுலபமாக நேரம் ஒதுக்குகிறார். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. சில முன்மாதிரிகளை உண்டாக்கி முதல் அடி எடுத்து வைத்தவர். தயங்காமல் கருத்து வைக்கும் கலகப் போராளி. உலக இலக்கியங்களை அறிமுகப் படுத்தியவர். இப்படி செழுமையான பின்னணி அவரிடம் உண்டு. ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்டது இந்த தேநீர் உரையாடல்.”

முன்பெல்லாம் சாரு என்றால் கலகக்காரர் என்ற பிம்பம் இருந்தது. இப்போது சாருவிடம் பழைய கோபமோ, கலகமோ இல்லை. எல்லாம் இப்படித்தான் இருக்கும்; நம்மால் செய்வதற்கு ஏதும் இல்லை என்ற சரணடைந்த நிலை தெரிகிறதே, ஏன்?

கிட்டத்தட்ட என்னை அறிந்த எல்லோருமே கேட்கும் கேள்விதான் இது.  இதை நான் முழுமையாக மறுக்கிறேன். முன்பெல்லாம் என் நடவடிக்கைகளில் ஒரு முரட்டுத்தனம் இருந்தது. இப்போது இல்லை. ஆனால் முரட்டுத்தனம் கலகம் இல்லை.  காந்தியின் செயல்களில் முரட்டுத்தனம் இருந்ததில்லை.  ஆனால் அவர் செய்த அத்தனையும் கலகம்தான்.  ஒருவர் அகிம்சாவாதியாக இருப்பதால் கலகத்தன்மையை இழந்து விட்டார் என்று அர்த்தம் அல்ல.  முன்பு நான் பெரியாரின் பாதையை ஏற்பவனாக இருந்தேன்.  இப்போது காந்திதான் என் ஆதர்சமாகத் தெரிகிறார்.  இது பெரியாரா, காந்தியா என்ற ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்கக் கூடிய விஷயம் அல்ல. முன்பு எனக்கு நாய்களைப் பிடிக்காது; இப்போது நாய் மட்டும் அல்ல; எல்லா விலங்குகளையும் நேசிப்பவன் ஆகி விட்டேன்.  நான் இப்போது ஐந்து நாய்கள், மூன்று பூனைகளை வளர்க்கிறேன். முப்பது காகங்கள் காலையில் வந்து என்னிடம் உணவருந்தி விட்டுச் செல்கின்றன.

எப்போது ஒரு எழுத்தாளன் – சரி, எழுத்தாளனை விடுங்கள், மனிதன் என்று பொதுவாகவே பேசுவோம் – சமரசம் செய்து கொள்ள ஆரம்பிக்கிறானோ அப்போது அவன் வீழ்ச்சி அடைய ஆரம்பித்து விட்டான் என்று அர்த்தம்.  என் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நான் சமரசம் செய்து கொண்டதில்லை. இதற்காக நானும் என் மனைவி அவந்திகாவும் இழந்தது மிகவும் அதிகம்.

சமரசம் இல்லாமல் வாழ்வதே கலகம்.  மகாத்மாவுக்கே ஆசானாக இருந்தவர் டால்ஸ்டாய். கோடீஸ்வரர்.  மிகப் பெரிய நிலப்பிரபு.  அவருடைய அன்னா கரினினா என்ன கதை? திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான அன்னா வேறொருவனைக் காதலிக்கிறாள். கணவனையும் மகனையும் பிரிந்து அவனுடனேயே போய் விடுகிறாள்.  இது கலகம் இல்லையா? என்னுடைய எக்ஸைல் நாவலும் இதே கதைதான்.  எக்ஸைல், ராஸ லீலா போன்ற என் நாவல்கள் எல்லாமே கலக எழுத்துதான்.  எக்ஸைல் சமீபத்தில் எழுதியதுதான்.

பொதுவாக, கலகம் என்றால் நாம் தஸ்தயேவ்ஸ்கியைத்தான் நினைக்கிறோம்.  காரணம், அவர் ஒரு குடிகாரர், சூதாடி.  இப்படி பிறழ்வான வாழ்க்கை முறையே கலகம் என்பதாக நினைக்கும் மனோபாவம் நம்மிடம் இருக்கிறது.  ஆனால் கலகம் என்பது அது அல்ல; உங்கள் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாலும் என் கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று சொல்வதே கலகம்.

இன்னும் ஒரு உதாரணம் தருகிறேன்.  விசாரணை வந்த போது எல்லோரும் பாராட்டினார்கள். அதுவரை நான் வெற்றிமாறனின் எல்லா படங்களையும் பாராட்டியே எழுதி வந்திருக்கிறேன். ஆனால் விசாரணை ஒரு விஜய் படம்.  துப்பாக்கி மாதிரியான படம்.  இதை விசாரணை படத்தின் பாராட்டு விழாவிலேயே பாரதிராஜா, வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையிலேயே சொன்னேன்.  விளக்கவும் செய்தேன்.  ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்தார்கள்.  கலாட்டா ஆகியிருந்தால் என் எலும்பு கூட மிஞ்சியிருக்காது.  இப்படிச் சொல்வதற்கு எவருக்கு தைரியமும் துணிச்சலும் இருக்கிறதோ அவரை கலகத்தன்மையை இழந்து விட்டார் என்று சொல்ல முடியாது.

உலகம் முழுக்கவும் எழுத்தாளர்கள் நாடோடியாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழில் எழுத்தாளர்கள் வசதியாக, சொகுசாக வாழ்கிறார்கள்.  இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் எப்படி உலக இலக்கியம் படைக்க முடியும்?  

மிக முக்கியமான கேள்வி இது.  ஆனால் தமிழில் எந்த எழுத்தாளரும் வசதியாக வாழவில்லை. ஒன்றிரண்டு எழுத்தாளர்கள் வசதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், அவர்கள் சினிமாவுக்கு எழுதுகிறார்கள்.  மற்றபடி எழுத்தை மட்டுமே நம்பினால் இங்கே தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டியதுதான்.  எழுத்தையே தனது ஜீவனோபாயமாகக் கொண்டு வாழ்ந்த அசோகமித்திரனைக் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு ரத்தக் கண்ணீர் வரும்.  ஆனால் அவர் சொல்ல மாட்டார்.  புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்கள் வறுமையில் செத்திருக்கிறார்கள்.  அதைப் பார்த்த அடுத்த தலைமுறையினரான நாங்கள் அரசு வேலைக்குப் போய் விட்டோம்.  அதனால் எங்களுக்குக் கிடைத்தது குமாஸ்தா வாழ்க்கை.  குமாஸ்தாவாக வாழும் ஒருவன் எப்படி நாடோடியாக அலைய முடியும்?  கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்ல எனக்கு வீசா மறுக்கப்பட்டதன் காரணம், என் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லை என்பதுதான்.  வெளிநாடு என்றால் தாய்லாந்தும் சிங்கப்பூரும்தான் போய் வர முடியும்.  சினிமாவில் சேர்ந்தால் பெரூவின் மாச்சுபிச்சு அழிவுகளுக்கு நடுவே ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் நடனம் ஆடும் போது ஓரத்தில் அமர்ந்து அடுத்த காட்சிக்கு வசனம் எழுதலாம்.

என் எழுத்துக்கள் ஆங்கிலத்திலும் தொடர்ந்து வெளிவருவதால் எனக்கு வெளிநாட்டு எழுத்தாளர்கள் சிலருடன் தொடர்பு இருக்கிறது.  அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாட்டிலிருந்து என்னோடு பேசுகிறார்கள்.  இன்னொரு விஷயம்.  அந்தக் காலத்தில் குச்சு வீடுகளில் வறட்டி அடுக்கி வைத்திருப்பார்கள், பார்த்திருக்கிறீர்களா?  அதைப் போல்தான் என்னிடம் இருக்கும் 7000 புத்தகங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கிறேன். ஒன்றை எடுத்தால் எல்லாம் சரிந்து விடும்.  மர அடுக்கு வாங்கி விடலாம்.  அதை வைக்கக் கூட வீட்டில் இடமில்லை.  Drawing Blood என்று ஒரு புத்தகம்.  Molly Crabapple எழுதியது.  விலை 2000 ரூபாய்.  எல்லாமே இப்படிப்பட்ட புத்தகங்கள்தான்.  இந்த நிலையில் நாடோடியாக எப்படி வாழ்வது?  நாடோடியாக வாழவே பணம் தேவைப்படுகிறதே?

ஆனால் இப்படிப்பட்ட நிலையிலும் நம்முடைய முன்னோடிகள் உலகில் எந்த மொழியிலும் நேர்ந்திருக்கும் சாதனைகளுக்கு நிகராக எழுதியிருக்கிறார்கள்.  சுமார் 50 பேரை அப்படிச் சொல்ல முடியும்.

இன்னொரு முக்கிய பிரச்சினை, எழுத்தாளனுக்கு என்று ஒரு அடையாளம் இருந்தால்தானே அவன் ரயில்வே ஸ்டேஷனில் கூட தரையில் அமர்ந்து எழுத முடியும்?  சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி அப்படி எழுதியவர்தான்.  ஆனால் இங்கே அப்படி எழுதினால் போலீஸ் சந்தேகக் கேஸில் பிடித்துக் கொண்டு போய் விடும்.  அப்புறம் நான் லோக்கல் கவுன்சிலரின் சிபாரிசில்தான் வெளியே வர முடியும்.  அப்புறம் கவுன்சிலர் என் மனைவியிடம் சொல்லுவார், உங்க வீட்டுக்காரரைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்கம்மா என்று.  சுருக்கமாகச் சொன்னால், இங்கே சினிமா கலைஞர்களுக்கு இருக்கும் மரியாதையில் பத்தில் ஒரு மடங்காவது எழுத்தாளருக்கு இருந்தால்தான் நீங்கள் சொல்லும் எதுவுமே சாத்தியம்.

நீங்கள் அதிகமாக பாலியலை எழுதினீர்கள்.  இப்போது பல பேர் அதை எழுதுகிறார்கள். அதிகமாகவே எழுதுகிறார்கள்.  அது ஒரு ட்ரெண்டாகவே ஆகி விட்டது.  இது பற்றி உங்கள் கருத்து?

சமகால எழுத்தில் பாலியல் என்பது அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே எழுதுவது போல் தோன்றுகிறது.  நான் சொல்வது தவறான கணிப்பாகவும் இருக்கலாம்.  ஆனால் இவை என் மனதை ஈர்க்கவில்லை.  அமெரிக்காவில் எழுதிய கேத்தி ஆக்கரிடம் (Kathy Acker) தெரிந்த வலியும் வாதையும் இவர்கள் எழுத்தில் எனக்குக் கிடைக்கவில்லை.  இல்லாவிட்டால், ரொம்பப் பச்சையாக எழுதுகிறார்கள்.  எவ்வளவு பச்சையாகவும் எழுதலாம்.  ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) எழுதாத செக்ஸ் இல்லை.  அவருடைய கண்ணின் கதை என்ற கதை நம்முடைய சரோஜாதேவி மொழிநடையில் எழுதப்பட்டது.  ஆனால் அது ஒரு மகத்தான இலக்கியப் படைப்பாகக் கொண்டாடப்படுகிறது.  செக்ஸ் என்பது கலையாக மாறும் மேஜிக் தமிழில் தற்கால எழுத்தாளர்களிடம் இன்னும் சாத்தியப்படவில்லை.  இதை எம்.வி. வெங்கட்ராமும், தஞ்சை ப்ரகாஷும் பிரமாதமாக எழுதியிருக்கிறார்கள்.

சுயசரிதை எழுதும் அளவுக்கு உங்கள் வாழ்வில் எத்தனையோ திருப்பங்களும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.  அதை ஏன் சுயசரிதையாக எழுதக் கூடாது?

சமீபத்தில் ஹாருகி முராகாமியின் நார்வேஜியன் வுட் என்ற நாவலைப் படித்தேன்.  அவருடைய 17 வயதிலிருந்து 20 வரையிலான கல்லூரி வாழ்வின் அனுபவங்கள் அவை.  தமிழிலும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், ஆதவன் போன்ற பல எழுத்தாளர்களும் அவர்களின் வாழ்க்கையைத்தான் கதைகளாக எழுதியிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வை ஆராய்ந்தால் அதேதான் அவர்களின் கதையிலும் இருப்பதைப் பார்க்கலாம்.  அப்படி எழுதுவதற்கு நீங்கள் மிகப் பெரிய தியாகத்தைச் செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கையை, உங்கள் அருகில் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பலி கொடுக்க வேண்டும்.  அதற்கு இப்போதைய எழுத்தாளர்கள் பலரும் தயாராக இல்லை.  அது நியாயமும் கூட.  எழுத்துக்காக உங்கள் குடும்பத்தையே பலி கொடுப்பது நியாயமா?  உதாரணமாக, எஸ். சம்பத்தின் இடைவெளி நாவலை மறுபிரசுரம் செய்யக் கூடாது என்று அவர் குடும்பத்தினரே நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.  வெளிநாடுகளில் ஒரு எழுத்தை அரசாங்கம் தடை செய்யும். அல்லது தீவிரவாதிகளிடமிருந்து நெருக்கடி வரும்.  ஆனால் இங்கே எழுத்தாளரின் குடும்பமே தடை செய்கிறது.  ஏனென்றால், சம்பத் அந்த நாவலில் தன்னையும் தன் குடும்பத்தையும் பலி கொடுத்திருக்கிறார்.

இப்படி தன்னையும் தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் பலி கொடுத்த மற்றொரு எழுத்தாளன், நான்தான்.  என் எழுத்து எல்லாமே என் சுயசரிதைதான்.  தனியாக எழுத வேண்டிய அவசியம் இல்லை.

முதலில் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்.  பிறகு திட்டினீர்கள்.  ஆதரித்த போது உங்கள் எழுத்தின் மீது மதிப்பு வைத்திருப்பவர்களும் தாமாகவே அவர் பின்னால் சென்றார்கள். உங்களைப் போன்ற ஒரு எழுத்தாளருக்கு இதெல்லாம் தகுமா?  

வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் நேரடியாக பதில் சொல்ல இயலாது.   ஆனால் துறவு என்பது சாதாரண விஷயம் அல்ல.  நாம் நம்முடைய உயிரை விட நம் வாரிசுகள் மீது உயிரையே வைத்திருக்கிறோம்.  மனைவி, தாய் தந்தை எல்லோர் மீதும் அப்படியே.  ஆனால் துறவி என்பவர் இது எல்லாவற்றையும் துறந்தவர்.  உற்றம் சுற்றம் எதுவுமே இல்லை.  சற்றே கண்களை மூடி அப்படிப்பட்ட துறவு நிலை உங்களுக்கு சாத்தியமா என்று யோசியுங்கள்.  எனவே, இந்த லௌகீக வாழ்வையும், உற்றார் சுற்றாரையும், வாரிசையும் துறந்தவரை நான் வணங்குகிறேன். அப்படித்தான் எல்லா சூஃபிகளையும் சந்நியாசிகளையும் பணிகிறேன்.  பாதை தவறு என்கிற போது திரும்பி விடுகிறேன்.

சரி, எத்தனையோ ஆயிரக் கணக்கான புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் கார்ல் மார்க்ஸைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டார்கள்.  சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கம்யூனிஸம் அங்கே எப்பேர்ப்பட்ட சீரழிவுகளைச் செய்தது என்பதை அறிந்த பிறகு அத்தனை புத்திஜீவிகளும் தங்களுடைய தவறை உணர்ந்தார்கள்.  அதற்காக அவர்களை யாரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லையே?  எழுத்தாளர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள்.  அவர்கள் வாசிக்கப்பட வேண்டியவர்களே தவிர வழிகாட்டியாகக் கொள்ளத் தக்கவர்கள் அல்ல.  எல்லா கலைஞர்களுக்கும் இது பொருந்தும்.  வான்கோவைப் போல் ஒரு சராசரி மனிதன் காதல் செய்ய முடியுமா?  இரண்டு மலைமுகடுகளுக்கு நடுவே கயிற்றைக் கட்டி அதில் நடப்பவர்களைப் போன்றவர்கள் எழுத்தாளர்கள்.  அவர்கள் செய்வதை மற்றவர்கள் பின்பற்றக் கூடாது.

சமகாலத்தில் நீங்கள் உங்கள் நண்பர்களை அதிகம் வளர்த்து விடுகிறீர்கள் என்று தோன்றுகிறது. இது இலக்கியத்துக்கு ஆகுமா?

என் வாழ்வில் சமரசத்துக்கே இடமில்லை என்று சொன்னேன்.  என் வாழ்வின் தீராத ஆசை, தென்னமெரிக்க நாடுகளில் பயணம் செல்ல வேண்டும் என்பது. குறைந்த பட்சம் 50 லட்சம் ஆகும்.  இந்தச் செலவை ஒருவர் ஏற்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அவர் எழுதிய நாவலை என்னிடம் கொடுத்து மதிப்பீடு செய்யச் சொல்கிறார்.  அது நன்றாக இருந்தால் நன்றாக இருந்தது; குப்பை என்றால் குப்பைதான்.  இதில் சமரசத்துக்கே இடமில்லை.  அப்படிச் செய்தால் என்னால் இந்த 64 வயதிலும் இவ்வளவு துடிப்பாக இருக்க முடியாது.  இவ்வளவு நிம்மதியாகத் தூங்க முடியாது.  பொய் சொன்னால் தூக்கம் வராது.  உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றால், உங்களுடைய இளமையான வாழ்வுக்கு வழி சொல்வேன்.  எனக்குத் தெரிந்த விலை மதிக்க முடியாத மூலிகை ரகசியங்களைச் சொல்வேன்.  எத்தனையோ பேருக்கு அற்புதமான தாம்பத்ய வாழ்க்கையை வாழ குளிகைகள் தந்திருக்கிறேன்.  அப்படித்தான் உதவி செய்வேனே தவிர, எழுத்து நன்றாக இருக்கிறது என்று பொய் சொல்ல மாட்டேன்.

ஆனால், என் நண்பர்கள் என்பதற்காகவே அவர்கள் நன்றாக எழுதியிருந்தாலும் வாயைத் திறக்காமல் இருக்க மாட்டேன். அராத்து, கார்ல் மார்க்ஸ், பிரபு காளிதாஸ் போன்றவர்களை இப்படித்தான் ஊக்குவித்தேன். கருந்தேள் ராஜேஷ் என் மாணவர். அவர் தினகரனிலும், பிறகு தி இந்துவிலும் எழுதிய சினிமா தொடர்களை லட்சக் கணக்கான பேர் படித்தார்களே?

சாரு நிவேதிதாவின் எழுத்து என்பது ஒரு பள்ளி. இந்தப் பள்ளியிலிருந்து வந்தவர்களே அவர்கள். தகுதியில்லாதவர்களை ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன்.

அறம் என்பது என்ன?  ஒரு விஷயத்தை சரி அல்லது தப்பு என்று எப்படி உணர்கிறீர்கள்?  

யாருக்கும் நம்மால் தொந்தரவு வரக் கூடாது.  யாரையும் நான் துன்புறுத்தக் கூடாது.  அறம் மட்டும் அல்ல; என் மதமே இதுதான்.  இது பார்க்க எளிதாகத் தோன்றினாலும் மிக விரிவான அர்த்தத் தளங்களைக் கொண்டது.  யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று சொன்னால் மற்ற மொழிகளை நீங்கள் அவமதிக்கிறீர்கள் என்று அர்த்தம்.  யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதே என் அறம்.  எல்லா மொழியும் என் மொழி. எல்லா நாடும் என் நாடு.  எல்லா மதமும் என் மதம்.  இதில் இது உசத்தி, இது தாழ்த்தி என்ற பேச்சுக்கே இடமில்லை.

மட்டுமல்லாமல் நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு மந்திரம் சொல்வதால் எந்தப் பயனும் இல்லை; நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்பது சித்தர் வாக்கு.  நாதன் என்றால் யார்? மனசாட்சி.  ஒருநாள் கச்சேரி ரோட்டில் உள்ள டப்பாச் செட்டி கடையில் நாட்டு மருந்து வாங்கும் போது நூறு ரூபாயை அதிகம் கொடுத்து விட்டார் செட்டியார்.  கொடுத்த தொகையில் ஏதோ பிரச்சினை என்று தெரிகிறது; ரோட்டில் வாகனங்கள் அதிகம் இருந்ததால் நின்று நிதானிக்க முடியவில்லை.  ஆட்டோவில் ஏறி விட்டேன்.  கையிலேயே இருக்கிறது காசு. எண்ணிப் பார்த்தேன். நூறு ரூபாய் அதிகம்.  ஆட்டோவைத் திருப்ப முடியாது.  கபாலீஸ்வரர் கோவில் விசேஷம். மறுநாள் கொண்டு போய்க் கொடுக்கும் வரை எனக்கு மனசே ஆகவில்லை.  நூறு ரூபாய் என்றாலும் அது அடுத்தவர் பணம் ஆயிற்றே என்று பதற்றமாக இருந்தது.

ஒரு பூனை வீட்டுக்குள் வந்து அதகளம் செய்து கொண்டிருந்தது.  நான் வளர்க்கும் நாயை விட்டுத் துரத்தி அடிக்கலாம்.  அப்புறம் இவ்வளவு படித்து என்ன பயன்?  பூனைக்கான உணவை வாங்கி வந்து தினமும் அதற்குக் கொடுக்க ஆரம்பித்தேன்.  இப்போது அந்தப் பூனை என் வாழ்வில் நீங்காத இடம் பெற்று விட்டது.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்.  இதுதான் என் அறம்.  இதுதான் என் எழுத்தின் சாரம்.

உங்கள் எழுத்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவு கூரப்படும் என்று நம்புகிறீர்களா?

Sappho என்ற லெஸ்பியன் கவி கிரேக்கத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்னே எழுதினாள்.  இன்றும் அவளுடைய கவிதைகள் வாசிக்கப்படுகின்றன.  சங்க இலக்கியத்தில் 473 கவிஞர்களின் கவிதைகள் கிடைக்கின்றன.  அதில் 102 கவிகளின் பெயர் தெரியவில்லை.  இருந்தால் என்ன? கவிதை இருக்கிறது.

7000 புத்தகங்களையும் வறட்டி அடுக்குவது போல் அடுக்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னேன்.  அது எழுத்தாளனின் சாபம்.  ஆனால், இன்னும் 7000 ஆண்டுகளுக்கு என் எழுத்து நிற்கும்.  அது வரம்.

பெருமாள் முருகன்?

பெருமாள் முருகன் எழுதிய அந்த நாவல் இலக்கியத் தரமற்ற குப்பை என்பதுதான் என்னுடைய முதல் கண்டனம்.  அப்படிப்பட்ட குப்பை எப்படி உலகளாவிய கவனம் பெற்றதற்குக் காரணம், அதில் கலந்திருந்த பொய்.  ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த குழந்தையில்லாத பெண்கள் கோவில் திருவிழாவுக்குப் போய் அங்கே கண்ணில் தென்படும் தலித் இளைஞர்களோடு புணர்ந்து குழந்தை பெற்றார்கள் என்று எழுதுவது எப்பேர்ப்பட்ட அநியாயம், அக்கிரமம்.  அதுவும் இது 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று ஊர் பெயர் எல்லாம் போட்டு எழுதியிருக்கிறார்.  மேற்கு நாடுகளில் சிலர் ஆஃப்ரிக்காவுக்குப் போய் அங்கே உள்ள ஏதாவது ஒரு பழங்குடியினத்தினர் ஆடையே அணியாமல் நிர்வாணமாக வாழ்வதை புகைப்படம் எடுத்து வெளியிடுவார்கள். அதிலாவது ஒரு நிஜம் இருக்கிறது.  ஆனால் பெருமாள் முருகனின் நாவல் முழுப் பொய். அவருடைய பூக்குழி என்ற நாவலையும் படித்தேன்.  அதுவும் இலக்கியத் தரமற்ற குப்பை.  சினிமா நடிகை போன்ற தோற்றம் கொண்ட, வெள்ளை நிறத்து அழகி ஒருத்தியை பன்றிகளைப் போல் தோற்றம் கொண்ட (பெருமாள் முருகனின் வார்த்தை) ஒரு தாழ்ந்த சாதி இளைஞன் காதலித்துக் கூட்டிக் கொண்டு வருகிறான்.  அந்தத் தாழ்ந்த சாதியினர் அந்தப் பெண்ணை உயிரோடு கொளுத்தி விடுகின்றனர்.  இதுதான் பூக்குழிக்கு அர்த்தம்.  இப்படி எங்கேயாவது நடந்திருக்கிறதா?  தாழ்த்தப்பட்ட சாதியினர்தானே அடி வாங்குகிறார்கள்?  இதுவும் பொய். இலக்கியத் தரம் என்று பார்த்தால் விஜய்காந்த் சினிமா அளவு கூடத் தேராது.  அத்தனை மொக்கை.

ஜல்லிக்கட்டு ?

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட உடன் கட்டை ஏறுதல் என்ற பழக்கம் இருந்தது.  வடக்கில் சதி என்பார்கள்.  கணவன் இறந்தால் அவனுக்கு வைக்கும் சிதையிலேயே மனைவியும் இறங்கி உயிர் விடுதல்.  இதெல்லாம் ஒரு காலத்தில் நமது பண்பாடாகத்தான் இருந்தது.  எது தப்பு எது சரி என்ற ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம்.  அந்தந்தக் காலத்தில் அது அதற்கு ஒரு நியாயம் இருந்திருக்கலாம்.  அதேபோல் ஜல்லிக்கட்டு விளையாட்டு ஒரு கால கட்டத்தின் பண்பாட்டு அடையாளம்.  ஆனால் காலம் மாறி விட்டது.  சினிமாவில் கூட விலங்குகள் துன்புறுத்தப்படுவதில்லை என்று ஸ்லைடு போட்டு விட்டு நாம் ஒரு பக்கம் மாடுகளை விரட்டி விளையாடிக் கொண்டிருக்கலாமா?  அதில் இருக்கும் சாதீய அம்சத்தையும் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும் நம்மை விட அறிவில் குறைந்த ஜீவன்களை விளையாட்டு, பண்பாடு என்ற பெயரில் கூட துன்புறுத்தக் கூடாது என்பது என் கருத்து.

ஜெயமோகனோடு சமரசமாகப் போய் விட்டது போல் தெரிகிறதே?

கடவுளோடு கூடவே சமரசமாகப் போய் விட்ட போது ஜெயமோகன் எம்மாத்திரம்?  முன்பு என் நோக்கங்களும் இயங்குதளமும் வேறாக இருந்தன.  இப்போது நான் ஆங்கில வாசகர்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மேலும், ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு முதிர்ச்சியும் நிதானமும் வந்து விட்டது.  என்னை ஒருவர் தாக்கினாலும் அதையும் அன்றைய தினம் எனக்குக் கிடைத்த பரிசு அது என்று ஏற்கும் பக்குவம் வந்து விட்டது.  மது அருந்துவதையும் நிறுத்தி விட்டேன்.  செய்வதற்கு ஏராளமான வேலைகள் குவிந்து கிடக்கின்றன.  படித்து முடிக்க வேண்டிய புத்தகங்கள் மேஜை மேல் மலை போல் ஏறிக் கொண்டிருக்கின்றன.  இதில் வம்புச் சண்டை, வெட்டி அரட்டை, சச்சரவுக்கெல்லாம் நேரமே இல்லை.

வயது 64.  ஒவ்வொரு நிமிடத்தையும் creative ஆக செலவு செய்ய வேண்டும் என்ற அக்கறையே இந்த மாற்றத்துக்குக் காரணம்.