இன்னும் அழகிய உலகில்…

Charu with a pet

நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனோடு நடக்கும் போது பேச்சில் ஆண்டாளும் வரும், லிங்கனும் வருவார், ஸ்டாலின் கருணாநிதி போன்றவர்களும் வந்து போவர். அநேகமாக ஜெயமோகன் பற்றி இரண்டு தினங்களுக்கு ஒரு முறை நான் அவரிடம் சொல்வேன். நான் சொல்வதைக் கேட்டு விட்டு, “இதெல்லாம் அவருக்குத் தெரியுமா?” என்றார் ஒருநாள். ம்ஹும். வாய்ப்பில்லை என்றேன். அப்படித்தான் நேற்று ஜெ. பற்றிப் பேச்சு வந்தது. அவர் ஏன் அப்படி ஆக்ரோஷமாக எழுதுகிறார். அவரால் விமர்சிக்கப்படுபவருக்கு ஜன்னி வந்து விடும் போல் இருக்கே என்றார். ஜெயமோகன் மிகவும் அன்பான மனிதர். சிரிக்க சிரிக்கப் பேசுவார். கொஞ்சம் கூட அகந்தை கிடையாது. (குறுக்கிட்டு ஐயோ என்றார் ராகவன்). ”எழுத்தில் தெரியும் அகந்தை வேறு. எழுதும் போது நான் என்னைப் பற்றி கடவுள் என்று தான் நினைத்துக் கொள்வேன், தெரியுமா உங்களுக்கு? ஆனால் நீங்கள் என்னை அடக்கமான ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றேன். சொல்லி விட்டு மீண்டும் ஜெயமோகனுக்குத் தாவினேன். அவரோடு எனக்கு ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அவரைப் போல் அன்பான மனிதரைப் பார்ப்பது அரிது என்று முடித்தேன். “ஆனால் அவர் எழுத்தைப் பார்த்தால் ரொம்ப முரடராகத் தெரிகிறார். ஆனால் உங்களைப் பற்றியும் அப்படித்தானே சொல்கிறார்கள்?” என்று முடித்தார்.

பிறகு நேற்று ஒரு சொந்த விஷயமாக ஜெயமோகனை அழைத்த போது “என்ன ஆச்சரியம், இன்றுதான் உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். உங்களிடமிருந்து ஃபோன்” என்றார். என்ன விஷயம் என்று கேட்கவில்லை. அவராகவே சொன்னார். எழுத்தாளர்களின் புகைப்படங்கள் பற்றிய கட்டுரை அது. நடந்து முடிந்த சென்னை புத்தக விழாவில் பவா செல்லத்துரையின் வம்சி புத்தக அரங்கில் பல எழுத்தாளர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. எல்லா புகைப்படங்களும் ஒரே நபரால் எடுக்கப்பட்டவை போன்ற ஒரு தனித் தன்மை அப்புகைப்படங்களில் தெரிந்தாலும் விசாரித்ததில் வெவ்வேறு நபர்களால் எடுக்கப்பட்டவை என்று தெரிந்தது. அதில் ஒன்று ஜெயமோகன். பொதுவாக ஜெயமோகன் புகைப்படங்களுக்குத் தோதான தோற்றம் கொண்டவர் அல்ல; ஒருவேளை இன்னும் இருபது ஆண்டுகள் கடந்தால் அப்படி ஆகலாம். பொதுவாகவே மலையாளிகள் புகைப்படங்களுக்குத் தோதான (photogenic) தோற்றம் கொண்டவர்கள் அல்ல; மம்முட்டியும் கேரளப் பெண்களும் மலப்புரத்து மலையாளிகளும் விதிவிலக்கு. தென் கேரள மலையாளிகளுக்கு ஒருவித முரட்டுத்தனமான தோற்றம் உண்டு. அது ஜெயமோகனிடமும் தெளிவாகக் காணப்படும். எனக்கு பஷீரின் புகைப்படம் பிடிக்கும். அது அனுபவத்தின் முதிர்ச்சி அளித்த கொடை. அதனால்தான் ஜெயமோகனுக்கும் இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்றேன். காந்தியின் இளவயதுத் தோற்றத்தை விட முதிய வயதில் அவர் அழகு கூடிக் கொண்டே போனதை கவனியுங்கள்.

ஆனால் வம்சி அரங்கில் நான் பார்த்த ஜெயமோகனின் படம் காவிய நயம் மிக்கதாக இருந்தது. உடனே என்னுடைய அலைபேசியில் அதைப் படம் பிடித்துக் கொண்டேன். உடனே உயிர்மைக்கு வந்து அங்கிருந்த பிரபு காளிதாஸிடம் அதைக் காண்பித்தேன். நான் பார்த்த எழுத்தாளர்கள் புகைப்படங்களிலேயே எனக்கு ஆகப் பிடித்த படம் இது என்று சொன்னேன். அந்தப் புகைப்படத்தை யார் எடுத்தது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஜெயமோகன் குறிப்பிட்டு எழுதியுள்ள என் புகைப்படம் பிரபு காளிதாஸ் எடுத்தது. ArtReview Asia பத்திரிகையில் நான் எழுதும் கட்டுரைகளுக்காகக் கள ஆய்வுகள் சில மேற்கொண்டு வருகிறேன். அதன் நிமித்தமாக தாராசுரம் சென்ற் போது பிரபு காளிதாஸையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன். என் கட்டுரைகளோடு பிரபுவின் புகைப்படங்களும் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் வந்து கொண்டிருக்கின்றன. தாராசுரத்தில் ஸ்தபதி வித்யாஷங்கர் அவர்களின் வீட்டில் அவர் வளர்த்து வரும் சிப்பிப்பாறை என்னோடு கொஞ்சிக் கொண்டிருந்த போது பிரபு காளிதாஸ் எடுத்த புகைப்படம் அது. வித்யாஷங்கருக்கு வயது ஆகி விட்டபடியால் நாயைக் கட்டிப் போட்டிருக்கிறார். இல்லாவிட்டால் யாரும் நாயைக் கட்ட மாட்டார்கள்.

பொதுவாக எழுத்தாளர்களை அவர்களது புத்தகங்களோடுதான் புகைப்படம் எடுப்பார்கள். என்னை அப்படி எடுத்தால் அது எனக்கு ஆபாசமாகத் தோன்றுகிறது. புத்தகம் என் வாழ்வில் ஒரு பகுதி. அவ்வளவுதான். நான் ஒரு பயணி. சமையற்காரன். ரசிகன். சௌந்தர்ய உபாசகன். இன்னும் எத்தனையோ. ஒரு கடற்கரையில் ஒரு மலையடிவாரத்தில் தனியாக அமர்ந்திருக்கும் போது எடுக்கப்படும் படம் எனக்குப் பிடிக்கும். நாய்களோடும் பூனைகளோடும் எடுக்கப்படும் புகைப்படம் பிடிக்கும். அதுவும் என்னுடைய நாய்களோடு எடுக்கப்படுவதில் என்ன சிறப்பு இருக்கிறது. வித்யாஷங்கரின் சிப்பிப்பாறையை – பெயர் மறந்து விட்டேன், மன்னிக்கவும் – அப்போதுதான் பார்த்தேன். ஒட்டிக் கொண்டு விட்டது. இந்தப் புகைப்படம்தான் என்னுடைய படங்களிலேயே எனக்கு ஆகப் பிடித்தது. பிரபு காளிதாஸுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.

ஜெயமோகனின் கட்டுரையைப் படித்த போது என்னையறியாமல் கண்கள் பனித்து விட்டன.

http://www.jeyamohan.in/95854#.WLfAx_mGPIV

***

பின்குறிப்பு:

சாருவின் முகம் அவர் நாய்களின் உலகில் நாய்களால் அனுமதிக்கப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது.

– ஜெயமோகன்
சாருவின் எழுத்து அவர் எழுத்தாளர்களின் உலகில் எழுத்தாளர்களால் அனுமதிக்கப்படாதவர் என்பதைக் காட்டுகிறது.

– யாரோ