எழுத்தாளனின் மரணம்

எழுத்தாளனின் மரணம்
மனுஷ்ய புத்திரனின் புத்தம் புதிய கவிதை
……………
சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு
ஒரு அருவிகரையோரத்தில் வைத்து
என்னிடம்
கோட்பாட்டாளன் ஒருவன்
நல்ல போதையில்
நிதானமாக சொன்னான்
” ஆசிரியன் இறந்துவிட்டான்”

நான் அப்போது மிகவும்
இளைஞனாக இருந்தேன்
அப்போதுதான் எழுதத்தொடங்கியிருந்தேன்
” எந்த ஆசிரியன்?”
என்றேன் பயத்துடன்
” எல்லா ஆசிரியர்களும்தான்” என்றபோது
எனது பயம் அதிகரித்துவிட்டது
” நானுமா?” என்று
ஒரு பேய்வீட்டிற்குள் இருந்து
கேட்பதுபோல கேட்டேன்
” சந்தேகமே இல்லாமல்”
என்றான் கோட்பாட்டாளன்
அப்போது விக்கிரமாதித்யன்
அருவிக்குள்ளிருந்து கத்தினார்
” நான் இங்கதாண்டா
உயிரோடு இருக்கேன்”

அதற்குப்பிறகு உயிரற்ற ஒரு எழுத்தாளனாக
நான் வீட்டிற்குத் திரும்பினேன்
பின்னர் உயிரோடு இருக்கும்
ஓவ்வொரு எழுத்தாளனிடமும்
” நீங்களுமா இறந்துவிட்டீர்கள்?”
எந்று கேட்டேன்
அவர்கள் குழப்பத்துடன்
தங்களைத்தாங்களே
உற்றுப்பார்த்தபடி கடந்து சென்றார்கள்
அந்த விளையாட்டு எனக்கு மிகவும்
பிடித்திருந்தது
எழுத்தாளர்கள் இறந்துபோய்
கோட்பாட்டாளர்கள் மட்டுமே உயிரோடிருக்கும் உலகத்தில்
எழுத்தாளர்கள் தனிப்பட்ட
மரண பயம் ஏதுமின்றி
இருந்தார்கள்

” எழுத்தாளர்கள்
மறுபடி உயிரோடு வர
ஏதும் வாய்ப்பிருக்கிறதா?”
என்று ஒரு முறை
ஒரு கோட்பாட்டாளனிடம்
தயவாகக் கேட்டேன்
” பிரதிகள் உயிரோடிருக்கும்வரை
எழுத்தாளர்களை உயிர்ப்பிப்பது
சாத்தியமே இல்லை”
என்று கையை விரித்துவிட்டான்
” செத்த பிரதிகளை எழுதிய எழுத்தாளர்களையாவது
உயிர் வாழ அனுமதிக்கலாமே”
என்று கேட்டபோது
கோட்பாட்டாளன் பதில் அளிக்க மறுத்துவிட்டான்

எழுத்தாளர்களின் மரணம் தொடர்பான
இவ்வளவு குழப்பங்களுக்கு நடுவில்
உண்மையாகவே சில எழுத்தாளர்கள் இறக்கிறார்கள்
உண்மையாகவே சில ஆசிரியர்கள் இறக்கிறார்கள்

நாங்கள் நினைத்ததுபோல
அவ்வளவு சுவாரசியமான
விளையாட்டாக இல்லை அது
அது நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலியில்
ஒரு கால்மட்டும் திடீரெனெ முறிவதுபோன்ற
சமன் குலைவை உண்டாக்குகிறது.

நாங்கள் எழுந்துகொள்ள மனமில்லாமல்
நீண்ட நேரமாக அந்த நாற்காலியில்
ஒரு புறமாக சரிந்து உட்கார்ந்திருக்கிறோம்

– மனுஷ்ய புத்திரன்

26.3. 2017
மதியம் 12.15

கவிதையைப் படித்த உடனேயே பதில் கவிதை எழுத ஆரம்பித்து 1.15க்கு முடித்தேன். அந்தக் கவிதை கீழே:

எழுத்தாளனின் மரணம்
***

இருபத்தைந்தா முப்பத்தைந்தா
ஞாபகம் இல்லை
ஆனால் சொன்னது
நிஜம்தான்
“எழுத்தாளன் இறந்து விட்டான்”

‘கோட்பாடே கெட்ட வார்த்தை
அனுபவம் சொன்னது
அனுபூதி எழுதுகிறது’
என நினைத்துப் பழகியிருந்த
எழுத்தாளர் கூட்டம் கிலி பிடித்து நடுங்கியது
உயிரோடு இருப்பவனை
செத்ததாகச் சொல்லும்
கோட்பாட்டாளனை ஒழித்துக் கட்டு
என்றது பீடம்

நான் உயிரோடுதானே இருக்கிறேன்
என்னைப் போய் செத்ததாகச் சொல்கிறாயே நியாயமா
எனக் கேட்டுத்
தேம்பி அழுதான் ஒரு இளம் எழுத்தாளன்
தாடி வைத்த கவிஞனோ கோட்பாட்டாளனிடம்
இப்படி ஒரு கேள்வியைப் போட்டான்
’டேய் நான் இங்கதாண்டா
உயிரோடு இருக்கேன்
நம்ப முடியவில்லையா
கேள்
நேற்று இரவு குடித்த ஓல்ட் மாங்க்கும்
தொட்டுக் கொள்ள வைத்த சிக்கன் துண்டங்களும்
சற்று முன்னர் தான் ஏப்பமாக வந்தது
ஹேங்கோவரில் தலையும் வலிக்கிறது
நான் எப்படி இறந்து விட்டேன் என்கிறாய்’
கோட்பாட்டாளனுக்கு
சிரிப்பதா அழுவதா
என்று தெரியவில்லை
தந்தக் கோபுரத்தின் மீது
அமர்ந்தபடி
மானுட குலத்துக்காகச் சிந்திக்கக்
கடவுளால் அனுப்பப்பட்ட
எழுத்தாளனிடம் கோட்பாட்டாளன் சொன்னான்
”பிரதியைத் திற
வாசகியை அனுமதி
உயிர்த்துக் கொள்வாய்”

”நான் சிந்தித்தேன்
நான் எழுதினேன்
வாசி
வாசிக்காமல் போ
அது உன் தலைவிதி
ஆனால்
என்னால் பிரதியைத் திறக்க முடியாது
தரிசனங்கள் பங்கு போடுவதற்கல்ல”
என்ற எழுத்தாளனிடம்
கோட்பாட்டாளன் சொன்னான்:

ஆண்குறிகள் பரிதாபத்திற்குரியவை
குறை ஆயுள் கொண்டவை
தட்டையானவை
நீர்மையற்றவை
இதயமற்றவை
அதனாலேயே
கற்பனைத் திறனற்றவை
விரல் நாக்கு என்ற பலஹீனர்களை
மெய்க்காப்பாளர்களாய்க் கொண்டவை
ஆனால்
யோனிகளோ
எல்லையற்ற கற்பனைத் திறனும்
ஈரப்பதமும் கொண்டவை
மரணமற்றவை
ஜனனமும் அற்றவை
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை தெரிந்தவை
மாந்த்ரீகம் தாந்த்ரீகம் அறிந்தவை
யோனியின் மறுபெயர் நுதல்
யோனியின் மறுபெயர் புருவம்
யோனியின் மறுபெயர் கன்னக்கதுப்பு
யோனியின் மறுபெயர் உதடு
யோனியின் மறுபெயர் நாக்கு
யோனியின் மறுபெயர் இமைப்பீலி
யோனியின் மறுபெயர் கூந்தல்
யோனியின் மறுபெயர் செவிமடல்
யோனியின் மறுபெயர் பின்னங்கழுத்து
யோனியின் மறுபெயர் முலை
யோனியின் மறுபெயர் முலைக்காம்பு
யோனியின் மறுபெயர் நாபி
யோனியின் மறுபெயர் விரல்
யோனியின் மறுபெயர் முதுகு
யோனியின் மறுபெயர் பிருஷ்டம்
யோனியின் மறுபெயர் பாதம்
ஆண்குறி ஒரு முக்கோணம்
எவ்வளவு வரைந்தாலும்
திரும்பத் திரும்ப
புறப்பட்ட இடத்துக்கே
வந்து சேரும் சாபம் சுமப்பவை
யோனியோ ஒரு சுருள்கோடு
புதிர்வட்டப் பாதை
ஆரம்பம் முடிவு இல்லாத
காமப் பெருவெளி
எழுத்தாளன் இறந்து விட்டான்
எனக் கேட்டு
இருபத்தைந்து வருடமாய்த்
தேம்பி அழும் எழுத்தாளனே கேள்:

உனக்கு மரணமிலாப் பெருவாழ்வு
வேண்டுமானால்
உன் ஆண்குறியை அறுத்தெறி
யோனியாய் மாறு

26.3.2017

1.15 p.m.