குடியை நிறுத்திய பிறகு – எப்போது நிறுத்தினேன் என்று ஞாபகம் இல்லாத அளவுக்கு நீண்ட காலம் ஆகி விட்டது – நாம் உயிருக்கு உயிராக நேசித்த ஒருவரை நிரந்தரமாகப் பிரிந்து வாழும் தனிமையை உணர்கிறேன். குடியோடு வாழ்ந்த போது ஒவ்வொரு ஞாயிறு மாலையும் ரெமி மார்ட்டின் அல்லது ஃப்ரெஞ்ச் வைன் அல்லது அபிஸிந்த் போன்றவற்றோடு கழியும். இப்போது அது கடந்த காலம். மேலும், என்னைப் போன்ற முழுநேர எழுத்தாளனுக்கு – எத்தனை அபத்தமான பிரயோகம் முழுநேர எழுத்தாளன், குணச்சித்திர நடிகன் என்பது போல! – எல்லா நாளுமே ஒரே நாள்தான். எல்லா நாளுமே படிப்பும் எழுத்தும்தானே? ஆனாலும் ஞாயிறு மாலைகளில் ஒருவிதமான தனிமை சூழத்தான் சூழ்கிறது. பொதுவாக மாலை நேரத்தில் கொரியன் ஆக்ஷன் படங்கள் அல்லது ஹாலிவுட் படங்கள் நெட்ஃப்ளிக்ஸில் பார்ப்பேன். ஆனால் இன்று மாலை அதற்கும் மனம் இல்லை. Amir Tag Elsir என்ற சூடானிய எழுத்தாளரின் The Yelling Dowry என்ற நாவல் மேஜையில் மீது கிடக்கிறது. பத்து இருபது பக்கங்கள் படித்தேன். தொடர வேண்டும். யோசாவின் Bad Girl நூறு பக்கத்துக்கு மேல் படித்து விட்டேன். அதை முடிக்கலாம். மை நேம் இஸ் ரெட் மிக மிக மெதுவாகப் போகிறது. ஓரான் பாமுக்கின் நாவல்கள் படு சுவாரசியமாக இருக்கும். ஆனால் என் பெயர் சிவப்பு வித்தியாசமாக ஏதோ ஆய்வுக் கட்டுரை கணக்காக இருக்கிறது. மனுஷ்ய புத்திரனுக்கு ஃபோன் போட்டு அரை மணி நேரம் பேசினேன். ஷாலினுக்கு ஃபோன் போட்டேன். கக்கூஸ் பட விழாவில் இருக்கிறேன் என்றார். activist. கார்ல் மார்க்ஸ் என்ன பண்ணிக் கொண்டிருப்பார்? நிர்மல் என்ன பண்ணிக் கொண்டிருப்பார்? ஜெகா என்ன பண்ணிக் கொண்டிருப்பார்? ஜெயமோகன் என்ன பண்ணிக் கொண்டிருப்பார்? ஸ்ரீராமுக்கு ஃபோன் போட்டேன். ஃபோனே போகவில்லை. அவருக்கு இன்று ஒருநாள்தான் மருத்துவமனை வேலை. எதாவது ஆபரேஷன் தியேட்டரில் இருக்கிறாரா?
ரைட்டர்ஸ் ப்ளாக் என்கிறார்கள். எனக்கெல்லாம் அது இந்த ஜென்மத்தில் சாத்தியம் இல்லை. ஆனால் ரீடர்ஸ் ப்ளாக் என்பது இருக்கும் போல் இருக்கிறதே? படிப்பு வாசனையே இல்லாத சமூகத்தில் ரீடர்ஸ் ப்ளாக் பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனம். ஸோரோவும் பப்புவும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ச்சிண்டு உறங்கி எழுந்து வந்து குரல் கொடுத்து அழைத்து மீன் சாப்பிட்டு விட்டு நகர் வலம் போயிருக்கிறது. அதன் நகர்வலம் என்பது தோட்டத்தைச் சுற்றி வருவது. மாடியில் இருபது பேர் தியானம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஞாயிறு மாலையில் அவந்திகாவின் ஆன்மீக வகுப்பு மாடியில். என்ன புத்தகத்தைப் படிக்கலாம் என்று யோசிப்பதிலேயே மாலை கழிந்து விடும் போல் இருக்கிறது. இது போன்ற சமயங்களில் Cradle of Filth கேட்பேன். இப்போது கேட்டால் மேலே தியான வகுப்புக்கு இடைஞ்சலாக இருக்கும்.
ம்… என்னமோ…