taemil!

11.4.2017

தமிழில் படிப்பதையே நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன்.  அதிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதப்படும் தமிழைப் பார்க்கும் போது தமிழை வன்கலவி செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எழுதியிருந்த கட்டுரையில் சுமாராக 150 சந்திப் பிழைகள் இருந்தன.  பேசாமல் ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவிலும் ஒற்றெழுத்துக்களைப் போட்டு விடுங்கள் என்று சொன்னேன்.  சுத்தமாக யாரும் ஒற்றெழுத்தே போடுவதில்லை.  சந்திப் பிழை என்றால் சந்தி பிழை.  750 வார்த்தைகள் கொண்ட கட்டுரையில் 150 சந்திப் பிழைகள்.  இப்படி எழுதினால் ஒரு நண்பர் – பெயரைச் சொன்னால் அடிக்க வருவார் – எல்லா இடங்களிலும் ஒற்றெழுத்தைப் போட்டு விடுகிறார்.  இப்படி:  ஒற்றெழுத்தேப் போடுவதில்லை.

நான் இலக்கணம் படித்ததில்லை.  ஆனாலும் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுகிறேன்.  எப்படி?  ஒரு காமன் சென்ஸ்.  அவ்வளவுதான்.  தி இந்து இப்போது முன்பை விட கொஞ்சம் அதிகம் வாசிக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டேன்.  இலக்கியத்தைப் பொதுஜனத்திடம் எடுத்துப் போனதில் தி இந்துவுக்கு முக்கியமான இடம் உள்ளது.  வாஸந்தி முன்பு இந்தியா டுடேயில் முயற்சி செய்தார்.  ஆனால் இந்தியா டுடே வெகுஜனப் பத்திரிகை அல்ல. அதனால் வாஸந்தியின் முயற்சி போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.  ஒரு நல்ல, தரமான glossy literary magazine என்றுதான் இந்தியா டுடே இலக்கிய மலர்களைச் சொல்ல வேண்டும்.  கண்ணில் ஒற்றிக் கொள்கிறாற்போல் இருக்கும்.

ஆனால் தி இந்து தினசரிப் பத்திரிகையாகவும் – அதன் ஆசிரியர் குழுவினர் தேர்ந்த இலக்கிய வாசகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் இருப்பதால் இலக்கியத்தை வெகுஜனத்திடம் எடுத்துச் செல்வதில் வெற்றி அடைந்து விட்டார்கள்.  அதில் nepotism, குழு மனப்பான்மை போன்ற அசிங்கமான பிரச்சினைகள் இருந்தாலும் கூட அதை நான் இலக்கியம் என்ற ஒரே காரணத்திற்காகப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் தி இந்துவின் தமிழ்தான் கொடுமையாக இருக்கிறது.  வாக்கியத்தின் இடையிலேயே கேள்விக் குறியைப் போடுகிறார்கள்.  ஷங்கர் ராமசுப்ரமணியன், ஆசை, சமஸ், அரவிந்தன் போன்றவர்கள் எழுதும் தமிழில் தவறே இருப்பதில்லை.  ஆனால் மற்றவர்கள் – குறிப்பாக, பத்திரிகைக்கு வெளியே இருப்பவர்கள் – எழுதித் தருவதை கண்ணை மூடிக் கொண்டு பிரசுரித்து விடுகிறார்கள்.  இதைக் குறிப்பிட்டு நான் இதோடு பத்து கட்டுரைகள் எழுதியிருப்பேன்.  இதுவே ஜெயமோகன் எழுதினால் ஜெயமோகனுக்கு பதில் கடிதம் எழுதுவார் அரவிந்தன்.  ஆனால் சாரு தானே?  அந்தக் கழிசடை சொல்வதையெல்லாம் பொருட்படுத்த வேண்டுமா என்ன?

வாராவாரம் அரவிந்தன் ஒரு சிறிய தொடர் எழுதுகிறார்.  அதை என்னைத் தவிர வேறு யாரும் படிக்கிறார்களா என்று தெரியவில்லை.  ஆனால் தி இந்துவில் பணிபுரியும் ஒருவர் கூடப் படிப்பதில்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.  என்னவென்றால், அவர் அதில் எப்படியெப்படியெல்லாம் தமிழ் எழுதக் கூடாது என்று சொல்கிறாரோ அப்படியெல்லாம் அதில் கட்டுரைகளும் செய்திகளும் வருகின்றன.  உதாரணமாக, “அவள் என்னை வரும் சனிக்கிழமை ‘பப்’புக்குப் போகலாமா? என்று கேட்டாள்” என்று எழுதுவது தவறு.  இங்கே கேள்விக்குறி எதற்கு?  ஆனால் தி இந்துவில் வரிக்கு வரி அந்தக் கேள்விக் குறியைப் பார்க்கலாம்.  எழுதுவது வெகுஜனம்தான் என்றாலும் பத்திரிகையில் பணி புரிவோர் அதைத் திருத்த வேண்டாமா?  எனக்கே ஒரு சமயம் தோன்றும், அரவிந்தன் எழுதுவதெல்லாம் மற்றவர்களுக்காகவா என்று.

இன்றைய தினம் என் அன்பு நண்பன் சரவணன் சந்திரன் எழுதியிருந்த தேசிய அவமானம் என்ற சிறிய கட்டுரையைப் படித்தேன்.  இங்கே ஒரு விஷயம்.  நான் தினமும் பேப்பர் கடைக்குப் போய் தான் பேப்பர் வாங்கி வருவது வழக்கம்.  நடைப் பயிற்சிக்குப் போகும் போது அந்தக் காரியத்தைச் செய்வேன்.  அதனால் ஒரு பெரிய உயிராபத்தையும் எதிர்கொள்கிறேன்.  பேப்பர் வாங்கும் போது எனக்கு மீதி கொடுக்கும் சில்லறைக்காக கடைக்காரர் கல்லாவைத் துழாவிக் கொண்டிருக்கும் ரெண்டு நிமிஷத்தில் நாலைந்து பேர் கப் கப்பென்று ஊதும் மட்டமான சிகரெட் புகை என் நாசியில் போகிறது.  அதற்காக ஒரு நிமிடம் மூச்சு விடாமல் எல்லாம் இருந்து பார்க்கிறேன்.  ரொம்ப நேரம் சுவாசத்தை அடக்க முடியவில்லை.  தினமும் வீட்டிலேயே பேப்பர் போடச் சொல்லலாம் என்றால் அந்தப் பேப்பர் பாய் ஒவ்வொரு மாதமும் மிட்நைட்டில் கேட்டைத் தட்டி அவந்திகாவை டார்ச்சர் செய்கிறான்.  காலை ஆறு மணி என்பது அவந்திகாவுக்கு மிட்நைட்.  படிப்பு எழுத்து எல்லாம் முடித்து விட்டு (ஆன்மீகம், ஆன்மீகம்) அவள் உறங்க அதிகாலை இரண்டு மணி ஆகி விடும்.  நானோ பத்திலிருந்து நான்கு.  பேப்பர் பாய் ’மிட்நைட்’டில் கேட்டைத் தட்டும் போது நான் பூங்காவில் நடைப் பயிற்சியில் இருப்பேன்.

இன்றைய தினம் நடைப் பயிற்சிக்குப் போகாததால் என் கார் டிரைவர் நித்யானந்தத்திடம் பத்து ரூபாய் கொடுத்து தி இந்து வாங்கி வரச் சொல்லலாம் என முயன்றேன்.  உடனே அவந்திகா அதெல்லாம் தப்பு, கார் டிரைவரை கார் மட்டுமே ஓட்டச் சொல்ல வேண்டும் என்று எனக்கு புத்திமதி சொன்னதால் நானே வேகாத வெயிலில் – மதியம் ஒரு மணி – கடைக்குப் போய் தி இந்து வாங்கி வந்து புரட்டினால் தமிழ்க் கொலை!

சரவணன் சந்திரன் தான்.  “அண்ணா யுனிவர்சிட்டியில் போய்க் கேட்டால்” ‘க்’கைப் பயன்படுத்தியதற்காக சரவணன் சந்திரனுக்கு நூறு முத்தங்கள்.  இல்லாவிட்டால் எல்லோரும் ’போய் கேட்டால்’ என்றே எழுதுகின்றனர்.  ஆனால் அது என்ன தம்பி அண்ணா யுனிவர்சிட்டி?  யுனிவர்சிட்டி பல்கலைக்கழகம் ஆகி ரொம்ப நாள் ஆச்சே, தெரியாதா?

அடுத்ததாக, “எங்களால் நிலத்தடி நீர்மட்டத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாது.  ரேண்டமாகத்தான் சொல்வோம் என்று கை விரிக்கிறார்கள்.” மீண்டும் நூறு முத்தம்.  த், க் என்ற இரண்டு ஒற்றெழுத்துக்களைப் பயன்படுத்தியதற்காக.  ஆனால் என்ன தம்பி அது ரேண்டமாக?  அங்குமிங்குமாக அல்லது குத்துமதிப்பாக என்று சொல்லலாமே?  சரவணன் சந்திரன் எழுதினால் தி இந்து குழுவினர் அப்படியே போட்டு விடுவதா?  இதையெல்லாம் சரி பார்க்க யாருமே இல்லையா?