கையெழுத்து : பா. ராகவன்

14.04.2017

என் கையெழுத்து அச்சுக் கோர்த்தது போல் இருக்கும், முன்பு.  இப்போது கொஞ்சம் மெருகு குறைந்துள்ளது.  கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்பார்கள்.  அதேபோல் கையெழுத்து மோசமாக இருந்தால் தலையெழுத்து ஜோராக இருக்கும்.  காந்தி, ஜெயமோகன் இருவரின் கிறுக்கல் கையெழுத்து ஞாபகம் வருகிறது.

பா. ராகவன் கல்கியில் பணியாற்றிய சமயத்திலிருந்து என் நண்பர்.  சமீபத்தில் எக்ஸைல் படிக்க ஆரம்பித்தார்.  எப்படிப் போகிறது என்று மெஸேஜ் கொடுத்தேன்.  ’மவன, எவன் எடுத்தாலும் வெக்கமாட்டான்’ என்று பதில் வந்தது.  ஜிவ்வென்று ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.  நல்ல நாவலா, கெட்ட நாவலா, இலக்கியமா, குப்பையா என்பதெல்லாம் அடுத்த பட்சம்.  எடுத்தால் வைக்க முடியாது என்பதை விட பெரிய பாராட்டு இருக்க முடியாது என்பது என் கருத்து.  மேலும் நாம் என்ன ரமணி சந்திரனா?  பிறகு ஒருநாள் வேறு ஏதோ பேச போன் செய்த போது ”என் பொழப்பக் கெடுத்துடுவிங்க போல இருக்கே, எடுத்தா வைக்க முடியலியே” என்றார்.

நேற்று மீண்டும் ராகவனுக்கு ஃபோன் செய்து, எடுத்தால் வைக்க முடியவில்லை என்பது இருக்கட்டும், நாவல் எப்படி இருக்கிறது, சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று கேட்டேன்.  ஏனென்றால், வேறோர் இடத்திலிருந்து வேறு விதமான எதிர்வினை வந்து கொண்டிருந்தது.  அந்த எதிர்வினையை என்னால் புரிந்து கொள்ளவும் இயலாதிருந்தது.  அதனால் ஒரு குழம்பிய மனநிலையில்தான் ராகவனிடம் பேசினேன்.

”பண்டிகை” என்றார்.

”என்ன?”

“பண்டிகை.”

“ம்ம்ம்… என்ன?”

“எக்ஸைல் ஒரு பண்டிகை.”

போதும், இதற்கு மேல் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.

ஆம்.  எக்ஸைல் ஒரு பண்டிகை.

***

கையெழுத்து பற்றி சுவாரசியமான பதிவு ஒன்றை பா. ராகவன் எழுதியிருக்கிறார்.

இணைப்பு:

http://www.writerpara.com/paper/?p=11478