விசு

சாரு

வணக்கம்!

      பெண்கள் பற்றியும் காமம் பற்றியும் உங்களைப் போல் வேறு எவரும் விவரிக்க முடியாது என்பது என்னுடைய எண்ணம் .
   இயக்குநர் விசு இயக்கிய “சகலாகலா சம்பந்தி” என்னும் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்.
 இருதினங்களுக்கு முன்னால் நீங்கள் எழுதிய “பிரான்ஸூம் நானும் 7 ” வலைப்பக்கத்தை வாசித்தேன்.  அதிலிருந்த காமம் பற்றிய சில தகவல்களை உங்கள் எழுத்துக்களோடு சேர்த்து நான் பேசிக் கொண்டிருந்தேன்.  எனக்கொரு விசித்திரமான அனுபவத்தை உங்கள் எழுத்துக்கள் தந்தன.
நெடுநாட்களாக உங்களைப் பின் தொடரும் பெரிய வாசகன் அல்ல நான்;  உங்கள் வார்த்தைகளை உள்வாங்க முயன்று கொண்டிருக்கும் ஒரு கத்துக்குட்டி .
 சொல்லவந்த விசயத்தைச் சொல்லி விடுகிறேன் . இயக்குநர் விசு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? சாருவின் பார்வையில் விசுவைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் . நீங்கள்​ விருப்பப்பட்டால் எனக்கு பதில் தரலாம் .
உங்கள் மறு பதிலுக்காக காத்து கொண்டிருக்கும் உங்களின் இளம் வாசகன் .
பீமன்
டியர் பீமன்
உங்களைப் போல் பல இளம் வாசகர்கள் உருவாவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இப்போது உங்கள் கேள்விக்கு என் பதில்:  ஒரு எழுத்தாளன் எல்லா விஷயங்களைப் பற்றியும் அபிப்பிராயம் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.  நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை.  அதனால் விசு நடத்தும் நிகழ்ச்சி எதையும் பார்த்ததில்லை.  சினிமாவும் எப்படியென்றால், என்னுடைய சினிமா தொடர்பான நண்பர்கள் சொன்னால் மட்டுமே பார்ப்பேன்.  அதிலும் சமீபத்தில் ஒரு படம் சறுக்கி விட்டது.  சினிமா தொடர்பான நண்பர்கள் என்றால், சினிமா நண்பர்கள் அல்ல; சினிமாவை ஒரு கலையாக ஆய்வு செய்யும் ராஜேஷ், பிரபு காளிதாஸ் போன்ற நண்பர்களின் சிபாரிசு இல்லாமல் நான் ஒரு தமிழ்ப் படமும் பார்ப்பதில்லை.  பல ஆண்டுகளாகவே அப்படித்தான்.   ராஜேஷ், பிரபு எல்லாம் எல்கேஜி படித்துக் கொண்டிருந்த போது ஆலோசனை சொல்ல வேறு நண்பர்கள் இருந்தார்கள்.  எனவே, விசு நடித்த படம் எதையும் நான் பார்த்ததில்லை.  அவர் மீது எனக்கு ஒன்றும் வெறுப்பு இல்லை.  பார்க்க நேர்ந்ததில்லை; அவ்வளவுதான்.  ஆனால், நான் திட்டமிட்டே பார்க்காமல் இருப்பது ராஜேந்தர் படங்களை.
மேலும், நான் சினிமா சம்பந்தமான கேள்விகளைத் தவிர்க்க நினைக்கிறேன்.  ஏனென்றால், நம் வாழ்வில் சினிமா அதிகமாகவே ஊடுருவி விட்டது.  வாழ்வே சினிமாவாக மாறி விட்டது.  இருந்தாலும் நீங்கள் எனக்குத் தேவையான புத்தகங்களை உடனுக்குடன் பிடிஎஃப்பில் அனுப்பிக் கொண்டிருப்பதால் உங்கள் மீது கொண்ட தனிப்பட்ட அன்பினால் இதை எழுதியிருக்கிறேன்.
சாரு