கெட்ட வார்த்தை (சென்ற கட்டுரையின் தொடர்ச்சி)


அன்புள்ள ———க்கு,

காலையில் எழுந்ததும் நீ அனுப்பியிருந்த பத்துப் பதினைந்து வாட்ஸப் தகவல்களைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தேன்.  மகிழ்ச்சிக்குக் காரணம் அந்த நடிகர்.  அவரிடம் அவரது நெருங்கிய நண்பர்களால்கூட மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க முடியாது.  தெரிவித்தால் அவர் அவர்களை ஜென்ம விரோதிகளாகக் கருத்த் தொடங்குவார்.  உதாரணமாக, அவர் அடிக்கடி எழுதி வெளியிடும் கவிதைகளை “குப்பை” என்று சொல்ல அவரைச் சுற்றி ஒருத்தரும் இல்லை.  இத்தனைக்கும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் இலக்கிய ஜாம்பவான்கள்.  சொல்ல முடியும்தான்.  ஆனால் சொல்வதற்கான ‘ஸ்பேஸ்’ இல்லை. 

என் விஷயத்தில் அப்படி ஆகாமல் இருப்பது என் பாக்கியம்.  உங்களால் (நீ, சீனி, வினித் மற்றும் வாசகர் வட்ட நண்பர்கள்) உங்களுடைய மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க் கருத்துக்களையும் என்னிடம் எந்தவொரு தயக்கமும் இல்லாமல், அச்சமும் இல்லாமல் சொல்ல முடிவதுதான் என் மகிழ்ச்சிக்குக் காரணம்.  இத்தனைக்கும் நான் “கிட்டத்தில் நெருங்கினாலே பாய்ந்து விடுவார்” என்பது மாதிரியான பெயர் எடுத்திருப்பவன்.  உதாரணமாக, எனக்குத் தெரிந்த இரண்டு இளம் நண்பர்கள் நான் ரூபாஸ்ரீயுடனும் சக்திவேலுடன் பேசிக்கொண்டிருந்த போது தூரத்தில் நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.  அதை நான் கவனிக்கவில்லை.  இப்படி ஒரு மணி நேரம் காத்திருந்திருக்கிறார்கள்.  பிறகு நான் ரூபாவுடனும் சக்தியுடனும் வெளியே போய் ஒரு ஓரமாக நின்று அவர்களுடன் பேச்சைத் தொடர்ந்தபோது அந்த இருவரும் ஓடி வந்து என்னிடம் என் புத்தகம் ஒன்றில் கையெழுத்து வாங்கினார்கள்.  லீனா மணிமேகலையின் கனவுப் பட்டறை வெளியிட்ட என்னுடைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல். அது ஒரு கனாக்காலம். இப்போது அது ஒரு அரிய பொக்கிஷம்.  இருபத்தெட்டு ஆண்டுகள் இருக்கலாம். யாரிடமும் அதன் பிரதி இருக்க வாய்ப்பில்லை.  எதற்குச் சொல்கிறேன் என்றால் என்னை அறிந்த நண்பர்களே என்னை நெருங்க அத்தனை தயக்கம் கொள்கிறார்கள். 

சமயங்களில் நானுமே அந்த நடிகர் மாதிரி மாறி மாற்றுக் கருத்தை எதிர்கொண்டால் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்ய ஆரம்பிப்பதும் உண்டு.  அதையும் மீறி நான் அந்த நடிகர் மாதிரி ஆகி விடாமல் என்னைக் காபந்து செய்யும் உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளும் அன்பும் எப்போதுமே உண்டு.  நான் திட்டினாலும் பரவாயில்லை என்று மாற்றுக் கருத்தை முன்வைக்கும் உங்கள் துணிச்சலையும் தைரியத்தையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன்.

இப்போது விஷயத்துக்கு வருவோம்.  நீ சொல்வதன் சாரம் இதுதான்: 

“இப்போதுதான், இந்த எழுபத்து மூன்று வயதில்தான் முதல் முதலாக நீங்கள் இந்திய அளவில் சென்றிருக்கிறீர்கள்.  இப்போதுதான் இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.  இந்தச் சமயத்தில் போய் இப்படி கெட்ட வார்த்தை போட்டு கட்டுரை எழுதி உங்கள் தளத்தில் வெளியிட்டால் அது உங்களுக்கு நன்மை தருமா?  நீங்களே உங்களுக்குக் கிடைத்திருக்கும் பாதையை அடைத்து விடுவது போல் ஆகாதா?”

ஆகும்தான்.  ஆனால் நாம் நமது இயல்பை எக்காலத்திலும் விட்டுக் கொடுத்துவிடலாகாது.  பாரதியும் செல்லம்மாவும் பட்டினி கிடந்து கொண்டிருந்தார்கள்.  பாரதி வீட்டுக்கு எட்டயபுரம் மகாராஜா வந்து பேசிக்கொண்டிருந்தார்.  எல்லாம் பெரிய விஷயங்கள்.  ஞானமார்க்கம்.  ராஜா கிளம்பி விட்டார்.  வீட்டில் குந்துமணி அரிசி இல்லை.  ராஜாவிடம் கேட்டீர்களா என்று கேட்டாள் செல்லம்மா.  பாரதி என்ன பதில் சொல்லியிருப்பார்?  அதே பதிலைத்தான் உனக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.  சரியோ தவறோ, என் இயல்பிலிருந்து நான் மாறுதல் கூடாது.

நீ பூண்டு வெங்காயம் உண்ண மாட்டாய்.  பூண்டும் வெங்காயமும் உடல் நலத்துக்கு எத்தனை உகந்தது, இன்றிலிருந்து உண்ணத் தொடங்கு என்று நான் உன்னிடம் சொன்னால் அது நான் உன் மீது செலுத்தும் வன்முறை இல்லையா?  உன் நல்லதுக்குத்தானே சொல்கிறேன்?  இருந்தாலும் அது வன்முறையே.

நான் அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்திருந்தால் கெட்ட வார்த்தை பேசியிருக்க மாட்டேன்.  (அதுவும் திருவல்லிக்கேணி என்றால் வேறு விஷயம்.)  ஆனால் நான் பிறந்து வளர்ந்ததோ ஒரு சேரி.  நான் இப்போது ஒரு பூர்ஷ்வாவாக இருந்தாலும் மொழியை மாற்ற முடியாதுதானே?  மேலும், எந்தக் காலத்திலும் என் வேர்களை அறுத்துக்கொண்டு, வேர்களை மறுதலித்து இளையராஜாவாகவோ, அப்துல் கலாமாகவோ என்னால் மாற முடியாது.  இதனால் எனக்கு நோபல் பரிசே கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை.  ஏனென்றால், நோபலை விட என் தூக்கம் எனக்கு முக்கியம்.  தூக்கம்தான் உடல், மன ஆரோக்கியத்தின் அடிப்படை. 

என்னைப் பார்க்கும் பலரும் நான் பளபளவென மின்னுவதாகக் கூறுகிறார்களே, அதன் காரணம் இந்த நொடிதான் எனக்குப் புரிகிறது.  நான் ஒரு குழந்தையைப் போல் வாழ்கிறேன்.  அதனால்தான் பாரதிராஜா சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னை நிர்வாண மனிதன் என்று கூறுகிறார்.  சரியோ தப்போ, என் மனதில் நினைப்பதை வார்த்தையில் வடிக்கிறேன்.  நான் அதைச் சொல்வதால் எனக்கு என்ன நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை, நான் நினைப்பதைச் சொல்லி விடுகிறேன். 

“தஞ்சாவூர் தந்திரம் அத்தனையும் கொண்ட நீங்களா குழந்தை?” என்று நீ பலமுறை கேட்டிருக்கிறாய். அது சில விஷயங்களில்தான்.  என் அடிப்படை விஷயத்தில் – எழுத்தில் –  நான் தந்திரம் பயில்வதில்லை. 

அதனால்தான் என்னால் என் இயல்பைப் பேண முடிகிறது. படுத்த மூன்றாவது நிமிடம் உறங்கி விடும் ஒரு நபர் யாரையாவது உனக்குத் தெரியுமா?  உன் குழந்தைகள் அப்படித்தான் என்று சொல்லக் கூடாது.  உழைப்பாளிகள் யாவரும் படுத்ததும் உறங்கி விடுவர்.  நான் சொல்வது சிந்தனையாளர்களை.  எழுத்தாளர்களை.  கலைஞர்களை.  வாசகர்களை. ஒரு சிறிய அறையில் பத்து பேர் அமர்ந்து சத்தமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்.  அத்தனை விளக்குகளும் எரிந்து பகல் போல் திகழும் ஒளி.  நான் இரவு பதினோரு மணி அளவில் அங்கே ஒரு ஓரத்தில் இருக்கும் படுக்கையில் படுத்து நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பேன். இப்படி ஒரு மனிதனை உன்னால் காண்பிக்க முடியுமா? கெட்ட வார்த்தை பேசுவதால்தான் இது சாத்தியம். அதாவது, ஊரில் கிடைக்கும் சமூக அங்கீகாரத்தை எதிர் நோக்கி நான் கெட்ட வார்த்தை பேசாமல் தந்திரம் பயின்றால் என்னால் அப்படித் தூங்க முடியாது.  அதற்காக தூக்கம் வராதவர்கள் எல்லாம் தந்திரசாலிகள், பொய்யர்கள் என்று சொல்லவில்லை.  என்னைப் பற்றி மட்டுமே நான் இங்கே முன்வைக்கிறேன். 

மேலும், சர்வதேச அளவில் செல்வதற்கும் இது போன்ற நற்செயல்களுக்கும் சம்பந்தமே இல்லை.  இருந்திருந்தால் எப்போதோ எஸ். ராமகிருஷ்ணனுக்கு நோபல் விருது கிடைத்திருக்கும்.  ஏன், அதற்கும் முன்னாலேயே அசோகமித்திரனுக்குக் கிடைத்திருக்கும்.  இத்தனைக்கும் அசோகமித்திரனுக்குத் தெரியாத ஆங்கிலமா?  இளம் வயதிலேயே அயோவா பல்கலைக்கழகத்துக்கெல்லாம் போய் வந்த ஜாம்பவான். 

ஏன் கிடைக்கவில்லை?

ஒரே காரணம்தான்.  அவருக்கு முறையான இலக்கிய முகவர் (லிட்ரரி ஏஜெண்ட்) இல்லை.  இல்லாவிட்டால் நீ கார்ஸியா மார்க்கேஸ் மாதிரி எழுதினாலும் ஒரு மயிரும் கிடைக்காது. 

மேலும், எனக்கு எதிராக இங்கே நடக்கும் சதிகள் பற்றி உனக்குத் தெரியும்.  ராஸ லீலாவுக்கு அமெரிக்க விருது கிடைத்தும் என்னுடைய ஒரு நலம்விரும்பியின் முயற்சியில் அவ்விருது திரும்பப் பெற்றுக் கொண்டதையும் நீ அறிவாய்.  நானும் நந்தினியும் அதை எதிர்த்ததும் அமெரிக்க நிறுவனம் எங்கள் மீது வழக்குத் தொடருவோம் என்று மிரட்டியதும் உனக்குத் தெரியும்.  ஒவ்வொரு ஹியரிங்குக்கும் நான் அமெரிக்கா சென்று வர வேண்டும்.  என்னிடம் மட்டும் பணம் இருந்திருந்தால் வழக்குத் தொடருங்கள் என்று சொல்லி, அதை ஒரு சர்வதேசச் செய்தியாக மாற்றியிருப்பேன். 

வட இந்திய இலக்கிய ஜூரிகள் முன்பாகவும் என் மீதான அவதூறுகள் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் நான் என்ன அந்தத் தமிழ் எழுத்தாள அடிமை மாதிரி எஸ் வடிவில் வளைந்து நெளிய வேண்டுமா?  நெளிந்தால் விருது கிடைக்கும் என்றால் எனக்கு அந்த விருது வேண்டாம். 

உனக்குத் தெரிந்த Michel Houellebecq எப்படி வாழ்கிறார்?  அவருக்கு விருது வழங்குகின்ற விழாவுக்கே போதையில் தள்ளாடியபடிதான் போகிறார்.  தன்னை நேர்காணல் செய்ய வந்த பிபிசி நிருபரிடம் “என்னோடு படுக்கிறாயா?” என்று கேட்க, அந்த இளம் பெண் மிரண்டு போய் பிபிசிக்கு ஃபோன் போட, அவர்கள் வெல்பெக்கைத் தொடர்பு கொண்டால், “ஐயையோ, நான் அந்தப் பெண்ணை ஒன்றுமே செய்யவில்லையே, படுக்க வருகிறாயா என்றுதானே கேட்டேன்?  அப்போது என் மனைவிகூட என்னோடு இருந்தாளே?” என்று ”வெகுளியாகச்” சொல்லியிருக்கிறார்!  ”அதெல்லாம் ஐரோப்பா அப்பா, இது இந்தியா” என்று நீ சொல்லலாம்.  இந்தியா என்பதற்காக நான் என்ன மைலாப்பூர் அம்பியாகவா மாற முடியும்?  நான் என்ன மிஷல் வெல்பெக் மாதிரியா அட்டகாசம் செய்கிறேன்?  அக்ரஹாரத்தில் பிறக்காமல் சேரியில் பிறந்ததால் கோபம் வந்தால், என்னை என் நண்பர்கள் அவமானம் செய்தால் கெட்ட வார்த்தை பொழிந்து எழுதுகிறேன்.  என்னை ஒரு பத்திரிகை ஆசிரியன் திருடன் என்று எழுதினான்.  நான் பதிலுக்குக் கெட்ட வார்த்தை போட்டு கட்டுரை எழுதினேனா?  அமைதியாக இருந்து விட்டேன்.  அவன் எனக்கு மயிருக்கு சமானம்.  ஆனால் என் நண்பர்கள் அப்படி இல்லையே?  நான் மதிக்கும் ஒரு பெண் எழுத்தாளர் என்னைப் பார்த்து “என்ன டல்லாக இருக்கிறீர்கள்?” என்று கேட்பது என் முகத்தில் மூத்திரம் அடிப்பது போல் இருந்தது.  இப்படி அவர் வசிக்கும் ஐரோப்பாவில் கேட்டிருந்தால் அவர் கதி என்ன ஆகியிருக்கும் என்று அவருக்குத் தெரியும்.  ஒரு கேர்ள் ஃப்ரெண்டுக்குக் கூட அப்படிக் கேட்கும் உரிமை கிடையாது.  தமிழ்ச் சமூகத்தின் சுரணையுணர்வு பற்றி நான் போரிட்டுக்கொண்டிருக்கிறேன்.

உதாரணம் சொல்கிறேன் கேள்.  நீ உன்னுடைய பதினைந்து வயது மகளை அழைத்துக்கொண்டு புத்தக விழாவுக்கு வருகிறாய்.  நான் அவளைப் பார்த்து “என்னம்மா, சென்ற ஆண்டு பளீரென்று ப்ரைட்டாக இருந்தாய், இந்த ஆண்டு ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்?” என்று கேட்டால், அவள் அந்த அடியைத் தன் வாழ்நாள் பூராவும் மறக்க முடியுமா?  இது கிட்டத்தட்ட ஒரு வன்கலவி மாதிரிதான் என்று நான் நினைக்கிறேன். மிகக் கொடூரமான child abuse அது.  இதே கேள்வியை ஒரு ஆசாமியிடம் கேட்டால் மட்டும் அது எப்படி நல்ல கேள்வி ஆகி விட முடியும்?  குழந்தையிடம் கேட்டால் சைல்ட் அப்யூஸ்.  எழுபது வயது ஆசாமியிடம் செய்தால் அது human abuse. யாரிடம் கேட்டாலும் அப்யூஸ் அப்யூஸ்தானே?

ஒரு பெண்ணின் முலையை ஒருத்தன் அமுக்கி விட்டான்.  உடனே அந்தப் பெண் அவனை டேய் புண்ட மவனே என்று திட்டி விட்டாள்.  விஷயம் பஞ்சாயத்துக்குப் போகிறது.  ”என்ன இருந்தாலும் நீ பெண்.  அந்த ஆளை நீ அப்படிக் கெட்ட வார்த்தையால் திட்டியிருக்கக் கூடாது.  இத்தனைக்கும் உனக்கு அடுத்த வாரம் கல்யாணம்.  இந்த நிலையில் நீ அந்த ஆளை புண்ட மவனே என்று திட்டியது உன் வருங்காலக் கணவனுக்குத் தெரிந்தால் கல்யாணமே நின்று போய் விடாதா?”

நீ சொல்லும் வாதமும் இப்படித்தானே இருக்கிறது?  இப்போதுதான் உங்கள் பெயர் வெளியே போகிறது.  நாளை சர்வதேச விருதும் கிடைக்கலாம்.  இப்போது போய் நீங்களே உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ளலாமா?

இதோ பார் பெண்ணே, charu’s writing is always an anti establishment.  He writes for the liberation of the unspoken and underprivileged.

இறுதியாக, என் ஆன்மீக குரு மஹா பெரியவர் என்று எழுதியிருக்கிறேன்.  பலமுறை.  இதை வைத்து சாரு ஒரு மைலாப்பூர் அம்பி என்று அவதூறு கிளப்பிக்கொண்டிருக்கிறது ஒரு புலம் பெயர்ந்த முற்போக்கு.  அது ஒரு போலி முற்போக்கு என்பது பலருக்கும் தெரியாது.  ஆனால் என் ஆன்மீக குரு மஹா பெரியவர் என்று நான்தானே எழுதினேன்?  ஏன் எழுதினேன்?  எழுது என்று என்னைப் பிரம்பால் அடித்தாரா மஹா பெரியவர்?  நான் ஏன் இப்படி வெளிப்படையாக எழுதி மைலாப்பூர் அம்பி என்று பேர் எடுக்க வேண்டும்?  ஏன் என்றால், எனக்கு எதையுமே மறைக்கத் தெரியாது.  நான் ஒரு நிர்வாண மனிதன்.  அதனால்தான் என் ஆன்மீக குரு மஹா பெரியவர் என்கிறேன்.  அதனால்தான் சகஜமாகக் கெட்ட வார்த்தையும் எழுதுகிறேன்.  எனக்கு ரெண்டுமே ஒன்றுதான்.  வெளிப்படைத்தன்மைதான் என் மதம்.  அராத்துவின் புருஷன் நாவலில் ”அது அல்ல இது அல்ல” என்று ஒரு கதாபாத்திரம் வரும்.  பிரம்மம்தான் அது அல்ல, இது அல்ல.  நான் பிரும்மம்.  எனக்கு ”மஹா பெரியவர் என் குரு” என்று சொல்வதும் ஒன்றுதான்.  கெட்ட வார்த்தை பேசுவதும் ஒன்றுதான். ஏனென்றால், மனிதர்களுக்குத்தான் நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை எல்லாம்.  பிரம்மத்துக்கு எல்லாம் ஒன்றுதான்.

மேலும், எனக்கு ஒரு சர்வதேச விருது கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு என் லிட்ரரி ஏஜெண்டுக்கும் மேலே ஒரு விஷயம் இருக்கிறது.

ஒரு பெண்மணிக்கு திடீரென்று கண் தெரியாமல் போனது.  மகன் ஒரு பெரியவரின் பேச்சைக் கேட்டு, தன் அம்மையை அழைத்துக்கொண்டு பல புனித ஸ்தலங்களுக்குச் சென்றான்.  ஒரு குருக்கள் அவனை மஹா பெரியவரிடம் போகச் சொன்னார்.  போனான். 

மஹா பெரியவர் ஒரு டார்ச் லைட்டை எடுத்து தன் முகத்தில் அடித்தபடி, உன் தாயைக் கண் திறந்து என்னைப் பார்க்கச் சொல் என்றார்.

தாய் பார்த்தாள்.  பெரியவரின் முகம் தெரிந்தது.

சாஷ்டங்கமாய் பெரியவரின் காலில் விழுந்தார்கள் இருவரும்.

பெரியவர் சொன்னார், என்னிடம் எந்த அதிசய சக்தியும் இல்லை.  உன் அம்மாவின் கர்மாதான் இதைச் செய்வித்தது.

அதனால் நான் என்னதான் இளையராஜா வேஷம் போட முயற்சித்தாலும் என் கர்மாவின் பிரகாரம்தான் நடக்கும்.  அதனால்தான் நான் யார் வேஷத்தையும் போடாமல் என் இயல்போடு ஒத்து வாழ்கிறேன்.

மேலும், என்னுடைய நாவல் தியாகராஜா என்னுடைய எல்லா கெட்ட வார்த்தைகளையும் absolve செய்து விடும்.  ஆனால் அப்படி absolve செய்து கிடைத்த நற்பெயரை என்னுடைய ரொப்பங்கி நைட்ஸ் நாவல் சமன் செய்து விடும்.  முழுக்கவும் கெட்ட செயல்களால் ஆன நாவல் அது. 

நீ சொல்வதும் புரிகிறது, புனைவில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்.  கட்டுரைகளில் வேண்டாம் என்கிறாய்.  அதற்குத்தான் இத்தனை பெரிய பதில்.

என் தரப்பின் நியாயத்தை சரியாகச் சொல்லி விட்டேன் என்றே நினைக்கிறேன்.  

சாரு