தில்லையின் தாயைத்தின்னி: பெண்ணுடலின் அரசியல் குறித்த ஒரு மாடர்ன் க்ளாஸிக்


ஐரோப்பிய இலக்கிய வாசகர்கள் மற்றும் இலக்கிய நிறுவனங்களின் ரசனை, குருதி வேட்கையுடன் அலையும் ஓநாய்களையே ஒத்திருக்கிறது.  ஆசியா மற்றும் ஆஃப்ரிக்க மக்களின் போர் அனுபவங்கள், போரின் அவலங்கள், துயரங்கள் போன்றவற்றையே அவர்கள் இலக்கியம் என வரையறுத்து ரசித்து ருசிக்கிறார்கள்.  பள்ளிக்கூடத்தில் ஏவுகணை விழுந்து அதில் செத்துப் போன நூற்றுக்கணக்கான சிறார்கள், ராணுவத்தினரால் வன்கலவி செய்யப்பட்ட பெண்கள், கண்ணி வெடியில் கைகால் இழந்த மனிதர்கள், நாட்டையும் வீட்டையும் இழந்து அகதிகளாய் அந்நிய நிலத்துக்கு வெளியேறும் அனாதைகள் என ’கடவுளால்’ கைவிடப்பட்டவர்களின் கதைகள் இலக்கியமாக வரும்போது அதை ஆரவாரத்துடன் ரசித்துக் கொண்டாடுகிறது ஐரோப்பிய மனம்.  காரணம், மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் மனிதர்கள் ஐரோப்பியரைப் பொறுத்தவரை காட்டுமிராண்டிகள்தான்.  இந்தக் ‘காட்டுமிராண்டிகளில்’ ஒரு சிலர் தங்களின் கண்ணீர்க் கதைகளை எழுத்தில் வடிக்கும்போது அது மூன்றாம் உலக இலக்கியமாக அடையாளப்படுத்தப்பட்டு ருசிபொருள் ஆகிறது. 

போர் என்று மட்டும் அல்ல; அசாதாரணமான நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் வாழ்க்கை எழுத்தாக மாறும் போதும் அது இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது.  முதல் முதலில் இப்படி நடந்தது 1966-ஆம் ஆண்டில்.  ஆஸ்கார் லூயிஸ் எழுதிய La vida (வாழ்க்கை) என்ற மானுட ஆய்வு நூல் அது வெளிவந்த சில காலத்திலேயே Testimony literature என வகைப்படுத்தப்பட்டது. 

ஆக, மூன்றாம் உலக நாடுகளிலிருந்து கிடைக்கும் ’சாட்சிய இலக்கிய’த்தைத்தான் ஐரோப்பிய சமூகம் இலக்கியம் என கொண்டாடிக்கொண்டிருக்கிறது.  இதற்கு தென்னமெரிக்கா வரை போகாமல் நம் சூழலிலேயே நளினி ஜமீலாவின் சுய வரலாறு, திருடன் மணியன் பிள்ளையின் கதை போன்ற உதாரணங்களை எடுத்துக் கொள்ளலாம். பாலியல் தொழிலாளியின் கதையும், திருடனின் வாழ்க்கையும் வாசிப்பதற்கு எத்தகைய வித்தியாசமான அனுபவங்களைத் தருபவை என்று நமக்குத் தெரியும்.  ஆனால் ஜான் ஜெனே ஒரு திருடனாக வாழ்ந்தவன்தான்.  அவனுடைய Thief’s Journal நாவல் ’சாட்சிய இலக்கியம்’ அல்ல.  ஒரு மகத்தான கலைப் படைப்பு.  இது எப்படி நிகழ்கிறது?  இலங்கையிலிருந்து வரும் பெரும்பாலான கண்ணீர்க் கதைகளிலிருந்து விலகி தில்லையின் ’தாயைத்தின்னி’ ஒரு கலை வெளிப்பாடாக மாறியது எப்படி?  இதை அறிந்து கொள்ள முயற்சி செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

’தாயைத்தின்னி’யை வாசிப்பதற்கு முன்னால் இலக்கியத்தில் ஆண் எழுத்து பெண் எழுத்து என்ற வித்தியாசம் எதுவும் இல்லை என்றே நினைத்திருந்தேன்.  Kathy Acker, Elfriede Jelinek, Cristina Perri Rossi, ஸில்வியா ப்ளாத் போன்றவர்களைப் படித்த பிறகும்கூட என்னுடைய இந்தக் கருத்தில் மாற்றம் ஏற்படவில்லை.  கூடு விட்டுக் கூடு பாயும் முறையில் பெண்களின் வதைகளை ஆண்களால் எழுதிவிட முடியும், அதனால் இலக்கியத்தில் பால் பேதம் தேவையில்லை என்பதே என் நம்பிக்கையாக இருந்தது.  ஆனால் தில்லையின் தாயைத்தின்னி அந்த என் நம்பிக்கையைத் தகர்த்து விட்டது.

தாய் தகப்பன் இல்லாத இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரின் ஒரே மாதிரியான வாழ்க்கையை முன்வைத்து இதை அணுகுவோம்.  ஜான் ஜெனேயின் அன்னை ஒரு பாலியல் தொழிலாளி.  தகப்பன் பெயர் தெரியாத ஜெனேயைப் பெற்றுப் போட்டு விட்டு செத்து விடுகிறாள்.  குழந்தை ஜெனேயை ஒரு உறவுக்காரர் எடுத்துக்கொண்டு போய் வளர்க்கிறார்.  பள்ளியில் ஏதோ ஒரு சிறு திருட்டில் ஈடுபட்டு வீட்டை விட்டு ஓடிப் போகும் ஜெனே பிக்பாக்கெட் திருடனாகவும் குப்பி கொடுப்பவனாகவும் (குதப் புணர்ச்சியின்போது குதத்தைக் காண்பிப்பவன் – catamite) வாழ்கிறார்.  ஒருமுறை போலீஸில் பிடிபடும்போது ஒரு போலீஸ்காரன் ஜெனேயின் நிக்கர் பாக்கெட்டுக்குள் கைவிட்டு அங்கே இருந்த lubricantஐ எடுத்து எல்லா போலீஸ்காரர்களிடமும் காண்பித்து “இது எதற்குத் தெரியுமா?  வாடிக்கையாளர்களின் ஆண்குறியால் இவனுடைய சூத்து கிழிந்து விடாமல் இருக்க!” என்று கத்துகிறான். 

இது ஜெனேயின் சுயசரித நாவலான திருடனின் நாட்குறிப்புகளில் வரும் ஒரு இடம். 

முஹம்மது ஷுக்ரி மொராக்கோவைச் சேர்ந்த ஒரு பிரபலமான எழுத்தாளர்.  இளம் வயதில் அனாதையாக வளர்ந்தவர்.  காலுக்கு செருப்பு கூட இல்லாமல் தெருமுனைகளில் இருக்கும் குப்பைத்தொட்டிகளில் ரொட்டித்துண்டுகளைப் பொறுக்கித் தின்பது அவர் வழக்கம்.  அதனால் தெருச் சிறார்கள் அவரை அல் கூப்ஸ் அல் ஹஃபி என்று பட்டப் பெயர் சூட்டிக் கேலி செய்வது வழக்கம்.  அல் கூப்ஸ் என்றால் ரொட்டி.  அல் ஹஃபி என்றால் செருப்பு அணியாதவன்.  குப்பைத்தொட்டியில் ரொட்டித்துண்டு பொறுக்குவது தவிர அவ்வப்போது குப்பி கொடுப்பதும் ஷுக்ரியின் வழக்கமாக இருந்தது.  அதன் காரணமாக ஒருமுறை சிறையில் தள்ளப்பட்ட ஷுக்ரி அங்கே அரபி மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்கிறார்.  அப்போது அவர் வயது இருபது.  அந்த வயது வரை அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.  பிறகு சிறை நூலகத்திலேயே ஜான் ஜெனே, லூயி ஃபெர்தினாந் செலின் போன்ற இலக்கியவாதிகளைப் பயின்று தானும் தன்னுடைய அனுபவங்களை வைத்து ஒரு நாவல் எழுதலாமே என நினைத்து எழுதியதுதான் பின்னாளில் அரபி இலக்கியத்தில் பெரும் புகழ் பெற்ற அல் கூப்ஸ் அல் ஹஃபி.  அந்த நாவல் வெளிவந்த பிறகு ஷுக்ரி அரபி மொழியின் ஜெனே என்று கொண்டாடப்பட்டார். 

இந்த இருவரைப் போன்ற வாழ்க்கைப் பின்னணி கொண்டவள்தான் தாயைத் தின்னி.  அவள் பிறந்த அன்றே குழந்தையைக் கோவில் வாசலில் போட்டு விட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள் தாயைத்தின்னியின் அம்மை.  அதன் காரணமாகத்தான் அந்தக் குழந்தைக்கு அந்தப் பெயரைச் சூட்டுகிறது அந்தச் சிறிய கிராமம்.  தாயைத்தின்னியின் நிஜப்பெயரே கிராமத்துக்கு மறந்து விடுகிறது.  நாவலிலும் வேறு இடங்களில் தப்பித் தவறிக்கூட தாயைத்தின்னியின் நிஜப்பெயர் தென்பட்டுவிடவில்லை. 

குழந்தை அதன் அம்மையின் தங்கையிடம் கொடுக்கப்படுகிறது.  சின்னம்மாவிடம் வாழும் தாயைத்தின்னி ஏன் முஹம்மத் ஷுக்ரி போலவும், ஜான் ஜெனே போலவும் வாழ முடியவில்லை என்று சிந்தித்த போதுதான் பெண்ணுடல் என்பது வேறு, ஒரு பெண்ணை சமூகம் எப்படி நடத்துகிறது/எதிர்கொள்கிறது என்பதையும், அந்தக் கதையை ஒரு பெண்ணால் மட்டுமே எழுத முடியும் என்பதையும், எழுத்தில் ஆண் பெண் பேதமில்லை என்று கருதுவது ஆண்மையவாத அணுகுமுறை என்பதையும் நான் முதல்முதலாகப் புரிந்து கொண்டேன். 

***

தில்லையின் ’தாயைத்தின்னி’ நாவலை நான் எப்படிப் படித்தேன் என்பதையும் இந்நாவல் பற்றிய மதிப்பீட்டுடன் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.  ஒரு இருநூறு பக்க நாவலைப் படிக்க எனக்கு அதிக பட்சம் ஒரு நாள் எடுக்கும்.  ஆனால் அதே அளவிலான ’தாயைத்தின்னி’யைப் படிக்க எனக்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆயிற்று.  அத்தனை வதை.  வாசிப்பில் அல்ல.  நாவலில் அல்ல.  நாவலில் சொல்லப்பட்டிருக்கும் கதையில்.  காரணம், ’தாயைத்தின்னி’யை ஒரு பிரதி என்றே என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.  ஒரு நாடகத்தைக் காணும்போது எப்படி நாம் அந்த நாடகத்தினுள்ளே வரும் கதாபாத்திரங்களாகவே உருமாறி அந்த நடிகர்களின் வாதையை அல்லது உணர்வுகளை நம்முடையதாக வாழ்ந்து பெறுகிறோமோ அவ்வாறே நாமும் இந்த நாவலை வாசிக்கும்போது தாயைத்தின்னியாக மாறி விடுகிறோம்.  விதி என்று சொல்வதா அல்லது துரதிர்ஷ்டம் என்று சொல்வதா அல்லது காரண காரியம் புரியாத வாழ்வின் அபத்தம் என்று சொல்வதா? தாயைத்தின்னியின் வாழ்வில் வாதைகளைத் தவிர வேறு எந்தவொரு கொண்டாட்டமும் இல்லை.   என்னுடைய புதினங்களைப் படிக்கும் யாவரும் படித்துக்கொண்டிருக்கும்போதே வெடித்துச் சிரிக்காமல் படிக்க முடியவில்லை என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் தாயைத்தின்னியின் வாழ்க்கையை வாசிக்கும்போது அது ஒரு சூட்டுக்கோலைப் போல் நம்மைச் சுட்டுக்கொண்டே இருக்கிறது.  கண்ணிவெடிகள் புதைந்த நிலத்தில் நடப்பது போல் இருக்கிறது.  சிறிய வயதில் திகில் நாவல்களைப் படிக்கும்போது அதன் முன்பக்கத்தில் “பலவீனமான இதயம் கொண்டவர்கள் இந்த நாவலைப் படிக்க வேண்டாம்” என்று ஒரு அறிவிப்பைப் போட்டிருப்பார்கள்.  இப்போதும் ப்ரஸீல் போன்ற நாடுகளில் கால்பந்தாட்டத்தின் முக்கிய ஆட்டத்தைக் காண்பவர் சிலர் மாரடைப்பில் இறந்து போகிறார்கள் என்பது செய்தி.  அப்படிப்பட்ட பரபரப்பும் திகிலும் இந்த நாவலில் இல்லை;  ஆனால் தாயைத்தின்னியின் வாழ்வின் வாதை நம் குரல்வளையை நெறிப்பதாக இருக்கிறது.  இருபதாயிரம் அடி உயரத்துக்கு மேல் மலையில் நடந்தால் பிராணவாயு போதாமல் சுவாசம் தடுமாறும்.  வாய் குழறும்.  மயக்கம் வரும்.  அது எல்லாமே இந்த நாவலைப் படிக்கும்போது அனுபவமாகிறது.

இப்படி இதுவரை என் இலக்கியப் பயணத்தில் இரண்டு நாவல்களை வாசித்திருக்கிறேன்.  இரண்டுமே பியர் க்யூத்தா (Pierre Guyotat) எழுதியவை.  Eden, Eden, Eden (1995) மற்றும் Tomb for 500,000 Soldiers (2009).  இந்த இரண்டு நாவல்களுமே க்யூத்தா பங்கு பெற்ற அல்ஜீரியப் போர் அனுபவங்களை அடிப்படையாக்க் கொண்டவை.  ஏதன், ஏதன், ஏதன் பதினோரு ஆண்டுகள் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்காமல் தடை செய்யப்பட்டிருந்தது.  மிஷல் ஃபூக்கோவுக்குக் கூட இந்நாவல் வாசிக்கக் கிடைக்கவில்லை என்று எழுதுகிறார்.  ஃப்ரான்ஸ்வா மித்தராந் பதவிக்கு வந்த பிறகுதான் அந்த நாவலுக்கு இருந்த தடையை நீக்கினார்.

தடைக்குக் காரணம், அந்த நாவலை Heart stimulants இல்லாமல் படிக்க முடியாது என்பதுதான்.  படித்தால் உடல் பதறும், நெஞ்சு வலிக்கும்,  அதீத தாகம் எடுக்கும், வியர்வை பொங்கிப் பெருகும், தலை அதீதமாக வலிக்கும், மயங்கி விழ நேரிடும், மாரடைப்பு வந்து சாகவும் வாய்ப்பு இருக்கிறது என்று அதைப் படித்தவர்கள் சொன்னார்கள்.  நாவலில் அந்த அளவு வன்முறை.  6762 வரிகள்.  163 பக்கங்கள்.  இடையில் முற்றுப்புள்ளியே கிடையாது.  பக்கத்துக்குப் பக்கம் வன்கலவி, குழந்தைகளை அடித்துக் கொல்லுதல் என்று போகிறது.  இந்த நாவலில் தீமை என்பது அதன் உச்சத்தில் நின்று விளையாடுகிறது. நாவலின் மொழியும் இதுவரையிலான மொழியின் குரல்வளையைப் பிடித்து நெறித்துக் கொன்று விடுகிறது; ஒரு புதிய மொழியாக, இதுவரை நாம் அறிந்திராத மொழியாக நம் முன் நடமாடுகிறது.  இந்த நாவலை எழுதியது பற்றி பியர் க்யூத்தா இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“By breaking down idealisms, I bring everything to the material level. Active verbs; present participles and the past perfects of these active verbs; these kinds of adjectives or the redoubled prefixes of verbs rather than adverbs; commas and dashes instead of full stops. The abolition of all psychological, humanistic, and metaphysical terms.”

சுருக்கமாகச் சொன்னால், பியர் க்யூத்தாவின் ’ஏதன், ஏதன், ஏதன்’ நாவலைப் படித்த அனுபவம் எனக்கு முட்கள் பதித்த சாட்டையால் உடம்பு பூராவும் விளாறிக்கொண்டது போல் இருந்தது. 

(இந்தக் கட்டுரை இந்தத் தளத்தில் வெளியிடப்படுவதற்கு முன்னால் வாசித்துப் பார்த்த என் நண்பர் சுரேஷ் ராஜமாணிக்கம், ”ஐரோப்பிய இலக்கியத்தின் பொதுவான கைப்புணர்வுக்குக் காரணம் ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது நிகழ்ந்த வன்முறையும், அதன் காரணமாக வீழ்ந்த லட்சக்கணக்கான மனித உடல்களும், அதற்கு அடுத்த நூற்றாண்டில் அங்கே நடந்த இரண்டு உலகப் போர்களும்” என்று குறிப்பிட்டார்.  ஆல்பெர் கம்யு, காஃப்கா போன்றவர்களை முன்வைத்து அது பற்றி முன்பு எழுதியிருக்கிறேன்.) 

சரி, பியர் க்யூத்தாவின் நாவலை வாசிப்பது ஒரு சுயவதை என்றால், ரொலாந் பார்த் சொன்ன Pleasure of the Text என்பதன் அர்த்தம் என்ன?  ’ஏதன், ஏதன், ஏதன்’ நாவலுக்குக் கொடுத்த முன்னுரையில் ரொலாந் பார்த்தும், மிஷல் ஃபூக்கோவும் ஃப்ரெஞ்ச் மொழியின் காலத்தை இரண்டாகப் பிரிக்கலாம் என்றும், அது பியர் க்யூத்தாவுக்கு முன்பான ஃப்ரெஞ்ச், பியர் க்யூத்தாவுக்குப் பிறகான ஃப்ரெஞ்ச் என்றும் கூறுகிறார்கள். 

ஆக, வாசிப்பு இன்பத்தைத் தராத துன்பவியல் பிரதிகளாக இருந்தாலும் அது வேறோர் விதத்தில் கலையாக மாறுகிறது என்று தெரிகிறது.  ஆனால் தமிழில் எழுதப்படும் பெரும்பாலான அழுவாச்சி கதைகள் ஏன் கலையாக மாறுவதில்லை?  அது அந்தப் பிரதியை உருவாக்குபவரின் வாழ்வியல் நோக்கையும், எழுத்தையும் வாழ்வையும் அவர் எப்படி இணைக்கிறார் என்பதையும் பொருத்து அமைகிறது.  பாரதிக்கு முன்னதாகவும் அவர் காலத்திலும் ஏராளமான கவிகள் இருந்த போதிலும் எது பாரதியைத் தனித்துக் காட்டுகிறது?  அவர் தன் வாழ்வையே கலையாகக் கண்டார் என்பதுதானே?  உதாரணமாக, மணியன் பிள்ளையும் திருடனாக வாழ்ந்தவர்தான்.  ஜெனேயும் திருடனாக வாழ்ந்தவன்தான்.  இருவரும் தங்கள் அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள்.  ஒன்று, சாட்சிய இலக்கியம்.  மற்றொன்று, கலை.  எப்படி மாறுகிறது என்பது மேஜிக்.  மேஜிக்கை வார்த்தைகளால் விளக்க முடியாது.  இந்த மேஜிக்கைத் ’தாயைத்தின்னி’யில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் தில்லை. 

பியர் க்யூத்தாவின் மேற்குறிப்பிட்ட இரண்டு நாவல்களுக்குப் பிறகு என்னை வதைத்துக் கதை சொன்ன நாவல் ’தாயைத்தின்னி’தான்.  பல சமயங்களில் heart stimulant எடுத்துக்கொண்டுதான் என்னால் ’தாயைத்தின்னி’யைப் படிக்க முடிந்தது. 

பியர் க்யூத்தாவின் நாவல்களுக்கும் ’தாயைத்தின்னி’க்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன.  ஒன்று, பியர் க்யூத்தாவின் மொழி.  அம்மாதிரியான மொழிப் புரட்சி எதுவும் ’தாயைத்தின்னி’யில் இல்லை.  ஆனாலும் மரபான வாசகர்களை முகம் சுளிக்க வைக்கும் ட்ரான்ஸ்கிரஸிவ் மொழிதான் நாவல் நெடுகிலும் கையாளப்பட்டிருக்கிறது.  அதே சமயம், தில்லை ஒரு கவி என்பதால் உரைநடையில் பல இடங்களில் கவித்துவம் சுழித்துச் சுழித்து ஓடுகிறது.  இரண்டாவது வித்தியாசம், பியர் க்யூத்தாவின் நாவல்கள் போரின் அவலங்களை விவரிக்கின்றன.  அதனாலேயே பிரதிக்கும் நமக்குமான அந்தரங்க நெருக்கம் உருவாவதில்லை.  ஆனால் தில்லையின் தாயைத்தின்னி ஒரு சிறுமி.  போர் அவலங்களை அவள் சொல்லவில்லை. 

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும்போதுதான் தாயைத்தின்னியின் கதையும் நடக்கிறது.  ஆனால் நாவலில் ஒரே ஒரு இடத்தில் – அதிலும் ஓரிரண்டு வாக்கியங்களில்தான் அந்தப் போர் பற்றிய குறிப்பு வருகிறது. 

“அவள் புலம் பெயர்ந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன.  ஒரு குண்டு வெடிப்பில் சிக்கி உயிர் பிழைத்திருந்தவள், தலைமறைவாக சில மாதங்கள் இருந்து அதன் பின்னரே சுவிஸ் நாட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள்.  அந்த குண்டு வெடிப்பின் அதிர்ச்சியிலிருந்து மீளவே பல ஆண்டுகள் தேவைப்பட்டிருந்தன.” (பக்கம்:95)

இந்த மூன்று வாக்கியங்களும் ஒரு முழு நாவலுக்கான களன்.  ஆனால் அதை எழுதியிருந்தால் ’தாயைத்தின்னி’யும் போரின் அவலங்களை விவரிக்கும் மற்ற ’சாட்சிய இலக்கிய’மாக விழுந்திருக்கும்.  ’தாயைத்தின்னி’ தன் கதையின் குவிமையமாகக் கொள்வது தாயைத்தின்னி என்ற பெண்ணுடல் இந்தப் பிரபஞ்சத்தில் – அதாவது, ஒரு சிறிய கிராமத்தில் – தனித்து விடப்பட்டதும் அதன் பாரதூரமான விளைவுகளும்தான்.  விளக்கமாகச் சொன்னால்,  தங்களின் சுதந்திரத்துக்காகவும், இன அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ஆயுதமேந்திப் போராடிய ஒரு சமூகம் தனக்குள் எத்தகைய வன்முறையைக் கொண்டிருந்தது என்பதையும், ஒரு அனாதைச் சிறுமியை அந்தச் சமூகம் எப்படி எதிர்கொண்டது என்பதையும் அந்தச் சிறுமி தன் வாழ்வைச் சொல்வதன் மூலமாக நமக்குக் கடத்துகிறாள்.  அந்த வகையில்தான் ’தாயைத்தின்னி’ பியர் க்யூத்தாவின் நாவல்களை விடவும் எனக்கு நெருக்கமாக இருக்கிறது. 

’தாயைத்தின்னி’யை வாசிக்க எனக்கு ஒரு வாரத்துக்கும் மேல் ஆயிற்று என்று குறிப்பிட்டேன்.  சில உதாரணங்களைத் தரலாம். 

தாயைத்தின்னி படிக்கும் பள்ளியில் சீகிரிய குகை ஓவியங்களைக் காண சுற்றுலா செல்கிறார்கள்.  தாயைத்தின்னிக்கு யாரும் இல்லை.  பள்ளியைச் சார்ந்த ஹாஸ்டலில் (அது ஒரு சிறைச்சாலையை விடவும் கொடூரமானதாக இருக்கிறது) தங்கியிருக்கிறாள்.  வார்டனின் பெயர் கண்பெரட்டி காளி.  குகை ஓவியங்களில் தெரிந்த நிர்வாண மனிதர்களைப் பார்த்து விட்டு வந்த அன்று நடைபெறும் சம்பவம் இது:

”தோள்ப்பையை மாட்டிக்கொண்டு தாயைத்தின்னி காலை எடுத்து நிலத்தில் வைத்தபோதுதான் அடித்தொடையில் சுள்ளென்று வலித்தது.  எப்போதும் இல்லாதபடி அடிவயிறு கடுக்கத் தொடங்கியது. 

அவசர அவசரமாக க்க்கூஸுக்குள் நுழைந்தாள்.  ஜங்கியைக் கழட்டியதும் வேப்பம் பிசின் போல் ஏதோ ஒட்டி இருந்த்தைக் கண்டாள்.  துடைத்த்தும் கைவிரல்களில் ஒட்டிக் கொண்ட்து.  தொட்டுப் பார்த்த விரல்கள் எங்கும் ரத்தம்.  என்ன ரத்தம், ஏன் ரத்தம் என்று அவளுக்குப் புரியவில்லை.  ரத்தத்தை சுவரில் துடைத்தவள் சட்டென்று மனதின் மாயமான வழிநடத்தலுக்குள் ஆட்பட்டுவிட்டாள்.  தொட்டுத் தொட்டு ரத்தத்தை சுவரில் துடைக்கும் போதெல்லாம் ஒரு ஓவியத்தை வரைவது போல தனக்குள் பூரிக்கத் தொடங்கினாள்.  சீகிரிய ஓவியத்தை நினைத்துக்கொண்டு திரும்பத் திரும்ப ரத்தத்தைத் துடைக்கத் தொடங்கினாள்.  ஊத்தை நிறத்தில் இருந்த ரத்தம் முன்னும் பின்னும் கிறுக்கும் கோடுகளால் ஓவியங்களைப் போன்று சுவரில் பதிந்தன. ஒரு எல்லைக்கு மேல் ரத்தம் வரவில்லை.  அதற்கு மேல் ஓவியத்தைக் கீற முடியாது போனது.  இடைநடுவே நிறுத்தி விட்டு ரத்தம் வடிந்த இடத்தைத் தண்ணீரால் கழுவிக்கொண்டு விடுதியறைக்குப் போனாள்.”

கக்கூஸ் சுவரில் யார் கலர் பென்சிலால் கிறுக்கியது என்ற விசாரணை தொடங்குகிறது.  தாயைத்தின்னிதான் என்று தெரிந்து அவள் அழைக்கப்படுகிறாள்.  வழக்கமான அடி உதைகளுக்குப் பிறகு “அது கலர் அல்ல, என் ரத்தம்” என்கிறாள் தாயைத்தின்னி.  உடனே தாயைத்தின்னியின் கைகால்களை சோதிக்கிறாள் கண்பெரட்டி காளி என்று அழைக்கப்படும் வார்டன். 

“சரி, சரி.  காயத்தக் காட்டு.  அப்பதான் ரெத்தத்தால நீ கிறுக்கியிருப்பாய் என நம்புவன்” என்றாள் கண்பெரட்டி.

”காயத்தைக் காட்ட முடியாது” என்றாள் தாயத்தின்னி.  

கண்பெரட்டிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.  மீண்டும் சில அடிகளைப் போட்டாள்.  அப்படியே நின்ற தாயத்தின்னி மறுபக்கம் திரும்பி, தனது சட்டையைக் கிளப்பி வைத்துக்கொண்டு தனது விரல்களால் கவுட்டைத் தடவி, மறுபக்கம் திரும்பி கண்பெரட்டி காளியிடம் ரத்தத்தைக் காட்டினாள்.

Absinthe என்று ஒரு மதுபானம்.  அதை இந்தியாவில் அறிமுகப்படுத்தினால் இந்திய ஆண் வர்க்கத்தில் பாதி காலியாகி விடும்.  அந்த மதுபானத்தில் 74 சதவிகிதம் ஆல்கஹால் உள்ளது.  நான்கு பெக்குக்கு மேல் அருந்தினால் உடனடி மரணம் என்று போத்தலிலேயே எழுதியிருக்கும்.  அதன் விசேஷம் என்னவென்றால், உலகில் உள்ள எழுத்தாளர்களுக்கு விருப்பமான பானம் அது.  ரைட்டர்ஸ் ட்ரிங்க் என்றே சொல்வார்கள்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு அமர்வில் ஒரு லிட்டர் அளவுக்கு அதை நான் குடித்துக்கொண்டிருந்தேன்.  பதினைந்து பெக்குகளுக்கு சமம். என் உடல் ஒரு அதிசயம் என்பதால்தான் யாரும் என்னைப் பின்பற்றாதீர்கள் என்று நான் சொல்வது வழக்கம். 

கிட்டத்தட்ட அப்ஸிந்த் மாதிரிதான் இருந்தது ’ஏதன், ஏதன், ஏதன்’ நாவலும்.  அப்ஸிந்த் மதுவுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை போலவே ’ஏதன், ஏதன், ஏதன்’ நாவலுக்கும் கொடுத்திருந்தார்கள்.  அப்படிப்பட்ட கடினங்களையே தாங்கிக் கடந்து வந்த என்னால் தில்லையின் ’தாயைத்தின்னி’யை சுலபத்தில் தாண்ட முடியவில்லை.  ஒரு பத்தியைப் படிப்பேன்.  மனம் பேதலித்து விட்டது போல் இருக்கும்.  எழுந்து போய் தண்ணீர் குடிப்பேன்.  வந்து அமர்ந்து மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.  அடுத்த பத்திக்குப் போகவே மனம் வராது.  ஏனென்றால், படித்த பத்தியை அப்போது நான் வாழ்ந்து கொண்டிருப்பேன்.  அதைக் கடக்கும் வழி தெரியாது.  இப்படியே இரண்டு மணி நேரம் போய் விடும்.  அல்லது, அந்த நாளே முடிவுக்கு வந்து விடும். 

நாவலில் அப்படி ஒரு தருணம் இது:

நாவலில் வரும் பெரும்பாலான பாத்திரங்களுக்கு நிஜப்பெயர் தரப்படவில்லை.  எல்லாம் பட்டப்பெயர்கள்தான்.  தாயைத்தின்னியின் சின்னம்மை பெயர் பாதகத்தி.  பாதகத்தியின் வீட்டுக்கு அழுக்குத் துணி எடுக்க வரும் சலவைக்காரரின் பெயர் புண்டமகன்.  எல்லாம் பாதகத்தி வைத்த பெயர்கள்தான்.  ஒருநாள் அழுக்குத் துணியை புண்டமகனுக்குக் கொடுக்கும்போது பாதகத்தியின் ரத்தக்கறை படிந்த தூமத்துணிகளை தாயைத்தின்னி கொடுக்கவில்லை.  அந்தத் துணிகளை வீட்டில் துவைத்துக்கொள்ளலாம் என்று கேணியின் அருகில் வைத்து விடுகிறாள் தாயைத்தின்னி. அழுக்கு உடுப்புகளை எடுத்துக்கொண்டு போன இரண்டாம் நாள் துவைத்த உடுப்புகளை பாதகத்தியின் வீட்டுக்கு எடுத்து வருகிறான் புண்டமகன்.     

இனி நாவல்:

ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு நின்ற பாதகத்திக்கு சட்டென்று தலைக்கிறுக்கு வந்து விட்டது.  அந்தக் கோரமான முகத்தையும், விரிந்து உருண்ட கண்களையும், புற்றிலிருந்து எறும்பு வெளிவருவதைப் போன்று வாயிலிருந்து துப்பிய கவித்துவ வார்த்தைகளைக் கண்டும் கேட்டும் புண்டமகன் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு உறைந்து போனான். 

“உனக்கு எண்ட புண்டச்சீலை தேவைப்படுகிறதாக்குமா?”

“அதை வச்சிக்கு என்ன நக்கித் தின்னப் போறயா?”

“உண்ட சுன்னிய முறிச்சு அடுப்புக்க வச்சிருவன்.  சொல்லுடா பேயோத்தவனே எண்ட புண்டச்சீலை எங்கடா?”

பாதகத்தியின் காட்டுக்கத்தல் புண்டமகனை வெலவெலத்துப் போகச் செய்து விட்டது.  பல்லுல பல் அடிக்கத் தொடங்கிட்டு. கைகால் உதறத் தொடங்கிட்டு.  மூத்திரம் மட்டும் வேட்டிக்கப் போகல.  மத்த அனைத்து அறிகுறிகளும் உடலில் வெளிப்பட்டுவிட்டன.  கிணத்துக்க விழுந்த அணில்பிள்ளைகள் நடுங்குவதைப் போன்று நடுங்கத் தொடங்கி விட்டான்.  அப்படியே வாசலில் இருந்த தூணில் சரிந்து விட்டான்.  வேறு வழிகளுமில்லை.  வேறு தெரிவுகளுமில்லை.  கொஞ்ச நேரம் தாயத்தின்னியைப் பார்த்து விட்டு, அவளை நோக்கிக் கைகளைக் காட்டி ஏதோ சொன்னான்.  சொற்கள் நாக்கை வந்து சேரவேயில்லை.  பற்களைத் தாண்டி அவை வெளியேறவே இல்லை.  பாதகத்தி ஆவேசமாக புண்டமகனை முறைத்துப் பார்த்தாள்.

தட்டுத் தடுமாறி, அதையெல்லாம் நீ துவைக்கத் தேவையில்லை எண்டு தாயத்தின்னிதான் தராமல் எடுத்து விட்டாள் என புண்டமகன் பாதகத்தியின் புண்டைச் சீலையின் ரகசியத்தைச் சொல்லி விட்டான்.

இந்தக் குற்றச் செயலுக்கான தண்டனையாக பாதகத்தி தாயைத்தின்னியை அன்று பூராவும் அந்தத் தூமத்துணிகளை அவளுடைய நெற்றியில் கட்டிக் கொள்ளச் சொல்கிறாள்.  துணி கண்களை மறைத்தபடி முகம் முழுவதும் தொங்க வேண்டும்.  புண்டமகனுக்குத் தூமத்துணிகளைக் கொடுக்க மறக்கும் எல்லா தினங்களிலும் தாயைத்தின்னிக்கு இதுதான் தண்டனை. 

அந்தச் சம்பவம் இப்படியாக முடிகிறது:

”இத்தனை இளவயதில் இந்தக் கொடூரங்களை அனுபவித்த எவரும் இந்த உலகில் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை என்ற ஒரு குறிப்பையும் தனது ஆவணங்களில் தாயத்தின்னி பதிவு செய்து வைத்திருக்கிறாள்.” (பக்கம்: 53-55)

இதை வாசித்தவுடன் பாதகத்தியின் தூமத்துணி அனைத்தும் என் நெற்றிக்கு இடம் பெயர்ந்து விட்டது.  காரணம், ஒரு காலத்தில் நான் மாதந்தோறும் தூமத்துணிகளைத் துவைக்க ஆட்படுத்தப்பட்டிருக்கிறேன். 

அதனால் அதற்கு மேல் நாவலை என்னால் தொடர முடியவில்லை.  மீண்டும் தொடர்வதற்கு எனக்கு ஒரு முழுநாள் எடுத்தது.

***

’தாயைத்தின்னி’யின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், நாவல் நெடுகிலும் கண்ணுக்குப் புலனாகாமல் ஓடும் பாலியல் வறட்சி.  குறிப்பாக, பாதகத்தி திருமணமாகாதவள்.  தாயைத்தின்னி வளரும் பள்ளிக்கூட விடுதியின் வார்டனான கண்பெரட்டி காளியும் திருமணமாகாதவள். 

நாவலில் தாயைத்தின்னியின் மீது அன்பு பாராட்டும் ஒரே ஆண், பாடசாலையில் கேண்டீன் வைத்திருக்கும் ஆதம் காக்கா. அவர் தாயைத்தின்னியைத் தன்னுடைய இன்னொரு மகளைப் போல் நடத்துகிறார்.  வீட்டுக்கு அழைத்துப் போய் சஹன் சோறு எல்லாம் கொடுக்கிறார்.  ஆனாலும் ஒருநாள் தாயைத்தின்னி தனியாக இருக்கும்போது அவளுடைய முதிரா முலைகளில் கை வைக்கிறார்.  இப்படியாக ஒரு கருணையுள்ள உறவாகத் தொடங்கியதும் பிறகு அச்சுறுத்தும் ஒன்றாக மாறிப் போகிறது.   

எல்லாம் முடிந்து தாயைத்தின்னிக்கு ஒரு சேவை நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது.  கவிஞர்கள், பெண்ணியவாதிகள், எழுத்தாளர்கள் என அவளுக்கு ஒரு நட்பு வட்டம் உருவாகிறது.  அவர்களில் ஒருவன் திண்டான் பாஞ்சான்.  கவிஞன், புரட்சிக்காரன், பெண்ணியவாதி, முற்போக்குவாதி, இன்ன பிற. ஒரு படப்பிடிப்பு வேலைக்காக திண்டான் பாஞ்சானும் தாயைத்தின்னியும் கொழும்பு போகிறார்கள்.  (நாவலில் தாயைத்தின்னி, தில்லை, லிலித் என்ற மூன்று பாத்திரங்கள் ஒரே உருவத்தில் மாறி மாறி வருகிறார்கள்.)  கொழும்பில்இருவருக்கும் ஒரு அறை போடப்படுகிறது. எல்லாம் திண்டான் பாஞ்சான் ஏற்பாடு.  இனி நாவல்:

பாத்றூமிலிருந்து வந்த கவிஞர் திண்டான் பாஞ்சான் தாயத்தின்னி படுத்திருந்த கட்டிலருகே நெருங்கி வந்தான்.  ஆடைகளை உரித்து அருகே போட்டான். அவள் சுதாகரித்துக்கொள்வதற்குள், பேசத் தொடங்குவதற்கு முன் அவளின் மேலே ஏறிக் கொண்டான்.  உடலில் எங்கெங்கோ கைகள் ஊர்ந்தன.  கவுட்டுக்குள் எதுவோ நுழைவது போலிருந்தது.  அவளுக்கு நோவெடுத்தது.  மெல்ல சத்தமிட்டாள்.  அதே வேகத்தில் எழுந்து விட்டான்.  தாயத்தின்னியின் உடல் தயாராவதற்கு முன்பே அவனுக்கு அவள் உடலின் மீதிருந்த தேவை முடிந்து விட்டிருந்தது. அவளுடைய உணர்வுகளோடும், மனதிற்குள் கொதித்துக்கொண்டிருந்த சொற்களோடும் எந்த வேலைகளுமிருக்கவில்லை.   அவன் தாயத்தின்னியின் உடலோடு கூட நீண்ட நேரம் உறவாடவும் பேசவும் இல்லை.  வாயடைத்துப் போய்க் கிடந்தாள்.  அழுகை மட்டுமே பீறிட்டுக்கொண்டு வந்தது.  அதன் பிறகு அந்த அறையில் என்ன நடந்ததென்று அவளுக்கு நினைவே இல்லை.  அவளுடைய மனமும் உடலும் ஒன்றை ஒன்று பிரிந்து தனித்தனியே பயணிக்கத் தொடங்கியிருந்தன. மனதிற்குள்ளிருந்து கிணறு வெளியே வந்து அவள் நினைவுகளில் அலையடித்துக்கொண்டிருந்த்து.  கிணற்றைச் சுற்றி நாய் குரைத்துக்கொண்டே இருந்தது.  இப்போது கிணற்றினுள்ளே அம்மையோடு தாயத்தின்னியும் தத்தளித்துக்கொண்டிருந்தாள்.  அவளைப் பற்றிய எந்த உணர்வுமற்று, அவளிடம் அருகிலிருந்து எந்தக் கேள்வியும் கேட்காது யாரோ ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டான்.  பேசி முடிந்ததும், ஒரு பெண் கவிஞரின் பெயரைச் சொல்லி, அவள் நாளை தன் கணவனோடு கொழும்புக்கு வருகிறாள், அவளின் பிறந்த நாள், அவள் எப்படியாவது கணவனை விட்டு வந்து தன்னைச் சந்திப்பாள்,  அவளுக்குப் பிறந்த நாள் பரிசாக இதை வாங்கி வைத்திருக்கிறேன் என ஒரு சிறிய பளிங்கு பொம்மையைக் காட்டினான்.  (பக்கம்: 184-185)

***   

நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கிணறு, நாய், மரம் என்ற மூன்று படிமங்கள் இடையறாது வந்து நம்மோடு உரையாடிக்கொண்டேயிருக்கின்றன.   அதையெல்லாம் விவரித்து எழுதுவதை விட நாவலை வாசிக்கும் நீங்களே உணர்ந்து அனுபவிப்பதுதான் நல்லது.

***    

நாவலின் முன்னுரையில் தில்லை இவ்வாறு குறிப்பிடுகிறார்:

”ஒரு சமூகம் விடுதலைக்காகப் போராடியது.  எந்தச் சமூகம் விடுதலைக்காகப் போராடியதோ, அந்தச் சமூகத்திடமிருந்து நான் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்தேன்.  ஒரு குழந்தைப் போராளியாக மாறிவிடும்படி அந்தச் சமூகம்தான் என் மீது பலவந்தமாகத் திணித்தது.  நான் போராடத் தொடங்கிய வயதில் எவரும் தங்களின் எந்தப் போராட்டத்தையும் ஆரம்பித்திருக்க முடியாது.  ஆக, நானும் ஒரு போராளிதான்.  அனைத்துப் போராளிகளையும் விட அனுபவம் அதிகம் கொண்ட ஒரு போராளி.

நான் உடைத்துக்கொண்டு வந்த சிறைக்கூடங்கள் இலகுவானவையல்ல.  கலாச்சாரம், பண்பாடு தொடங்கி கல்வி நிலையம், விடுதி என நீண்டு ஒரு வலிமையான பெரும் எதிரிக் கூட்டங்களோடு கிடந்து சமர் செய்திருக்கிறேன். இப்படிச் சொல்வது விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தை உடையதல்ல.  விடுதலைக்காக ஏங்கும் ஒரு சமூகமும் தனக்குள்ளே இத்தனை அடக்குமுறைகளைக் கொண்டிருக்கிறது, இத்தனை அடிமைகளை நிறைத்து வைத்திருக்கிறது.  என்னைப் போன்று எத்தனையோ சிறுமிகள், பெண்கள், எந்த ஆதரவுமற்ற மனிதர்கள் இந்தச் சமூகத்தோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  அவர்களை விடுதலை செய்வதற்கான பொறிமுறைகளை முதலில் கண்டுபிடியுங்கள், அதற்காகப் போராடுங்கள்.”

அந்தப் போராட்டத்தின் முதல் அடி, பெண்ணாகப் பிறந்த அத்தனை பேரும் இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்பதுதான். 

***

என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் ஸில்வியா ப்ளாத் எழுதிய ஒரே நாவலான The Bell Jar, Cristina Peri Rossi எழுதிய The Ship of Fools, Alejandro Pizarnikஇன் கவிதைகள், கேத்தி ஆக்கர் எழுதிய Blood and Guts in High School போன்ற படைப்புகளுக்கு நிகரான ஒரு மாடர்ன் க்ளாஸிக் தில்லையின் ’தாயைத்தின்னி’. 

நாவல் கிடைக்குமிடம்:

பாரதி புத்தகாலயம்

எண் 7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 18

தொலைபேசி: 044 2433 2924

விலை ரூ. 280

மின்னஞ்சல் முகவரி:  thayathy12@gmail.com