சாருவின் காவிய மரபிலான கதைசொல்லல் – ந. முருகேசபாண்டியன்

தமிழரின் அடையாள அரசியலும் பாலியல் மறுபேச்சுகளும்: சாருவின் புதிய எக்ஸைல் நாவலை முன்வைத்து

ந. முருகேசபாண்டியன்

காத்திரமான நாவல்கள் எழுதியுள்ள நாவலாசிரியரான எனது நண்பர், “இன்றைய தேதியில் பாண்டியன் நீங்கதான் அதிகமாகத் தமிழ் நாவல்களை வாசிக்கிறீங்க” என்று அலைபேசியில் பேச்சுவாக்கில் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2010-ஆம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட ‘பத்தாண்டுகளில் தமிழ் நாவல்கள்’ என்றொரு கட்டுரை, காலச்சுவடு பத்திரிகையில் பிரசுரமானவுடன், இலக்கிய நண்பர்களில் சிலர் எப்படி இவ்வளவு நாவல்களை உங்களால் வாசிக்க முடிந்தது என்று கேட்டனர். அந்தக் கட்டுரையில் மொத்தம் 40 நாவல்கள் பற்றிய விமர்சனம் இடம் பெற்றிருந்தது. அவை இல்லாமல் இன்னும் நான் வாசித்த நாவல்களின் எண்ணிக்கை சுமார் 60 இருக்கும். வருடத்துக்கு பத்து நாவல்கள் வாசித்தது என்ன பெரிய சாதனையா? அப்புறம் எனது வாசிப்புப் பழக்கம், பத்து வயதில் வாண்டுமாமாவின் சிறுத்தைச் சீனன் நாவலில் இருந்துதான்  தொடங்கியது..  என்னைப் பொருத்தவரையில் நாவல் என்பது இதுவரை கேள்விப்பட்டிராத புதிய உலகிற்குள் பயணிப்பது. ஒவ்வொரு நாவலும் வாசிப்பில் ஏற்படுத்துகிற உற்சாகமும் கொண்டாட்டமும் அளவற்றவை. திராபையான வெகுஜன நாவல்களை விட்டுவிடலாம். மற்றபடி தீவிரமாக எழுதப்படுகிற நாவல்கள், கதைசொல்லல் வழியாக இதுவரை கண்டிராத புதிய உலகினுக்கு இட்டுச் செல்கின்றன; நினைவுகளின் மூலம் மனதில் படிந்திருக்கிற மதிப்பீடுகளையும் கடந்த காலத்தையும் தொந்தரவு செய்கின்றன. நாவலின் கதைப்போக்கு உருவாக்குகிற மனப்பதிவுகள் வாசகனை மீண்டும்மீண்டும் முடிவற்ற விநோதமான சூழலுக்குள் மூழ்கடிக்கின்றன. உலகமெங்கும் நாவல் என்ற இலக்கிய வடிவம் கொண்டாடப்படுகிற சூழலில்,  அண்மைக்காலமாகத் தமிழில் பிரசுரமாகிற நாவல்கள் கவனத்திற்குரியன. குடும்பம் என்ற அலகிலிருந்து வெளியேறி, நினைவுகளின் வழியாகச் சம்பவங்களைப் பதிவாக்குகிற நாவல்கள் ஒருவகையில் சமூக விமர்சனங்கள். தமிழைப் பொருத்தவரையில் எழுத்துத் தொழில்நுட்பம் சார்ந்து கொண்டாடப்பட்ட ஒரு புளிய மரத்தின் கதை, அம்மா வந்தாள், வாடி வாசல், புத்தம் வீடு, வேரும் விழுதும், சாயாவனம்  போன்ற நாவல்கள் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. அதே காலகட்டத்தில் பரந்துபட்ட கேன்வாசில் தமிழர் வாழ்வியல் குறித்துக் காத்திரமாக எழுதப்பட்ட ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவல், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எண்பதுகளுக்குப் பின்னர் சிறுபத்திரிகைச் சூழலில் அறிமுகமான கோட்பாடுகளும், அவற்றையொட்டிய புதியதான கதைசொல்லலும்  மாற்றங்களை உருவாக்கின. குறிப்பாக லத்தீன் அமெரிக்க எழுத்துகள் ஏற்படுத்திய பாதிப்புகளினால், நானும் நாலு தலைமுறைக் கதை சொல்கிறேன் எனக் கிளம்பியவர்களால், தண்டியான அளவில் பிரசுரமான நாவல்கள் வாசிப்பில் வெறுப்பை ஏற்படுத்தின. மொக்கையான நாவல்களை அச்சடிப்பதற்காகக் காடுகளில் வெட்டப்பட்ட மரங்களை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் 862 பக்கங்களில் வெளியாகியுள்ள சாரு நிவேதிதாவின் புதிய எக்ஸைல் நாவலைப் பார்த்தவுடன் எனக்குப் பதற்றமேற்பட்டது. ’என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை’ என நடிகர் பாலையா போல என் மனசு சொன்னது. எப்ப வாசித்து முடிப்பது என்ற தயக்கத்துடன் நாவலைத் திறந்த என்னால், புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை. பக்கத்துக்குப் பக்கம் புதிய கதையாடல் என மாறுபட்ட தளங்களில் விரிந்திட்ட புதிய எக்ஸைல், அண்மையில் தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான நாவல் எனத் தொடக்கத்திலே குறிப்பிடுவதில் எனக்குத் தயக்கம் எதுவுமில்லை. பின்நவீனத்துவம் குறிப்பிடுகிற வாசிப்பு உருவாக்குகிற மகிழ்ச்சியானது, நாவலின் தொடக்கம் முதலாக எனக்குள் ஏற்படுத்திய பரவசம் அளவற்றது.

          நாவல் என்றால் வாசித்தவுடன், சரி,  முடிந்தது கதை என்ற மனோபாவம் பொதுவாகச் சராசரித் தமிழ் வாசகர்களிடம் பரவலாக இருக்கிறது. அது சரியல்ல. சிறந்த நாவல், முடிவற்ற பேச்சுகளையும் அதிர்வுகளையும் வாசகரின் மனதில் உருவாக்கிடும் வல்லமையுடையது. நாவலாசிரியர் சாரு தன்வரலாற்றுப் பாணியில் சொல்கிற கதையின் மையமற்ற தன்மை, சுவராசியம் என்பதற்கப்பால் மனித இருப்பினைப் பரிசீலிக்கத் தொடங்குகிறது. கதையாடலின் தொடர்ச்சியறு எழுத்துமுறை, வாசகனைப் பிரதியிலிருந்து வெளியேற்றுகிறது. நாவல் முழுக்க நிறைய கிளைக் கதைகளும் துணைக் கதைகளும் இடம் பெற்றிருப்பதால், காப்பிய மரபிலான கதைசொல்லல் முறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. மையமான கதைசொல்லி பாத்திரத்தில் இருந்து விலகி, கட்டுரைகளும் இடம் பெற்றிருப்பது நாவலை வெறுமனேக் கேளிக்கையாகத் துய்ப்பதில் இருந்து தடுக்கிறது. சாரு நாவலின் கதையாடல் வழியாக விவாதிக்கிற விஷயங்களுக்காக, வாசகர் பிரதியோடு ஒன்றிப்போய்த் தன்னிலை மறப்பதைத் தடுத்திட காப்பிய பாணியை நாவலாக்கத்தில் பயன்படுத்தியுள்ளார்.  வெறுமனே கதைசொல்லல் என்பது சாருவின் நோக்கமல்ல. தமிழ் மொழி உருவாக்கிய அரசியல் பின்புலத்திலான  நிலவெளியில் தொல்காப்பியம், சங்கக் கவிதை தொடங்கிப் பக்தி மரபு, சித்தர் மரபின் வழியாகச் சித்திரிக்கிற சம்பவங்கள், நாவலுக்குக் காவிய மரபிலான தன்மையினை அளிக்கின்றன. சமகாலத் தமிழர் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் அணுகியுள்ள சாருவின் நாவல், மேலைநாட்டு மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமானால், சமகாலத் தமிழர்களின் கதை என அறிமுகமாக வாய்ப்புண்டு. நாவலின் கதையோட்டத்தில் உன்னதமான படைப்புப் படைத்திருந்தாலும், தமிழ் மொழியில் கதைப்பதனால் ஏற்படுகிற புறக்கணிப்புக் குறித்த கதைசொல்லியின் புலம்பல், சாருவின் குரல்தான்.

       பொதுவாகச் சாருவின் நாவல்களில் பாலியல் அம்சங்கள் கூடுதலாக இருப்பதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது. சாருவின் முந்தைய நாவல்களான ஜீரோ டிகிரி, ராஸலீலா போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, புதிய எக்ஸைல் நாவலில் பாலியல் தொடர்பான விவரிப்புகள், கதையோட்டத்துடன் இயைந்துள்ளன. பாலியல் என்பது பேசாப்பொருளாகவும் மந்தனமாகவும் உறைந்திருக்கும் தமிழ்ச் சமூகத்தில் சாருவின் பால் தொடர்பான எழுத்து, பலருக்கு அதிர்ச்சியளிக்கிறது. இன்று பாலியல் தமிழ்ச் சமூகத்தில் எங்ஙனம் ஊடுருவியுள்ளது எனக் கண்டறிந்திட வேண்டிய நேரமிது. இணையத்தில் கொட்டிக்கிடக்கிற லட்சகணக்கான போர்னாகிராபி தளங்கள் கையெட்டும் தொலைவில் இருக்கும்போது, பதின்பருவத்தினரின் மனமும் உடலும் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏராளமானவை. கிராமத்து மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிற பெண் ஆசிரியை, ”பசங்க வச்சிருக்கிற செல்போனில் எல்லாக் கண்றாவிப் படங்களும் இருக்குது” என்று பேச்சுவாக்கில் என்னிடம் சொன்னார். உடலை மர்மமாக போற்றிய சமூகம் என்பது மாறிப்போய், டிஜிட்டல் வெளியில் மிதந்திடும் நிர்வாண உடல்களின் ஆதிக்கத்தில், இதுவரை கட்டமைக்கப்பட்ட மதிப்பீடுகள் அர்த்தமிழக்கின்றன. அறுபதுகளில் மேலைநாடுகளில் அறிமுகமான கட்டற்ற பாலியல் விழைவு, இன்று தமிழகத்தில் அரையும்குறையுமாக ஊடுருவியுள்ளது. உடலுறவு என்ற சொல் ஊடகங்களில் சாதாரணமாக இடம்பெறும் சூழலில், பாலியல் பற்றிய புதிய பேச்சுகளை உருவாக்க வேண்டியுள்ளது. உடல் என்பது புதிர் அல்ல எனப் பதின்பருவத்தினர் அறிந்திடும்வகையிலான படைப்புகள் இன்றைய தேவை. நள்ளென் யாமத்திலும் சாட்டிங்கில் ஈடுபட்டிருக்கிற இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் செல்பி மூலம் தன்னுடலைக் கோவில் சிலையின் முன்னால் பதிவாக்குகிற வேட்கையானது, நாளடைவில் தனது நிர்வாண உடலையும் கணினியில் பதிவாக்கி ரசிக்கிறது. காலப்போக்கில் தனது துணையுடன் கொள்கிற அந்தரங்கமான உறவையும் டிஜிட்டலில் படமாக்கிக் காண்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். அப்புறம் delete மூலம் அந்தரங்கமான காட்சிகளை நீக்கி விட்டேன் என்ற நம்புவது பாமரத்தனம்; அர்த்தமற்றது. பின்னொருநாளில் அந்தக் காட்சியை இணையவெளில் தற்செயலாகக் காண்கிறபோது அவர்களால் என்ன செய்யமுடியும்? (தனிப்பட்ட மென்பொருள் மூலம் டெலிட் செய்யப்பட்டதாக நம்புகிற எந்தவொரு காட்சியையும் மீளுருவாக்கம் செய்வது சாத்தியம்). மனிதர்களைப் போல அற்பமான, கேவலமான உயிரினம் உலகில் எதுவும் இல்லை. எந்தவொரு விலங்கினமும் சக உயிரினங்கள் பாலுறவுகொள்வதைப் படம் பிடித்துப் பில்லியன்கணக்கில் வியாபாரம் செய்வதில்லை. கூகுள் தேடுபொறியில் ஒருவர் சற்று முயன்றால் அது காட்டும் முடிவுகள், அவரை காமவுலகினுக்குள் அழைத்துச் செல்கின்றன.  மாடுகளை இறைச்சிக்காகக் கொல்லாதே எனத் தொடங்கி, இந்தியாவைப் பின்னுக்கிழுக்கிற ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி இந்துத்துவா அரசியலை வலியுறுத்துகிற அதிகார வர்க்கத்தினர், டிஜிட்டல் பாலியல் விஷயத்தில் எதையும் கண்டுகொள்வதில்லை.  எங்கும் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் பெருகியுள்ள சூழலில் சாட்டிங்கில் தொடங்குகிற தற்செயலான உறவு, முகநூலில் ஏற்படுகிற முன்பின் அறியாதவரின் உறவு எனப் பெருகிவரும் சமூக அமைப்பில் பாலியல் என்பது மூடுண்டது எனக் கட்டமைப்பது சாத்தியம்தானா? யோசிக்க வேண்டியுள்ளது. சாட்டிங்குகள் மூலம் ஏற்பட்ட தொடர்புகள், இன்று கொலையில் போய் முடிந்துகொண்டிருக்கின்றன. இணையத்தில் போலியான பெயர்களில் பெயர், பால், முகம் அற்று ஆவியைப் போல அலைந்திடும் ஆட்கள் நிரம்ப உள்ளனர். யாரையும் எந்தக் கேவலத்திற்குள்ளாகிடும் பறிகள் விதைக்கப்பட்டுள்ள இணையவெளியில் நிகழ்ந்திடும் பாலியல் வன்கொடுமைகள் அளவற்றவை. எங்கோ ஓரிடத்தில் நடப்பது என யாரும் ஒதுங்கிட முடியாது. பருவ வயதான உங்கள் மகனோ அல்லது மகளோ அல்லது நீங்களோ அந்தப் பொறிக்குள் சிக்குவதற்கான எல்லாச் சாத்தியங்களும் உள்ளன. சாரு சித்திரிக்கிற பாலியல் சாட்டிங்குகள், மரபான மனங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும்; ஆபாசமான எழுத்தின்மூலம் சமூகத்தைக் சீரழிக்கிறார் எனக் கதற வைக்கும். ஆனால் யதார்த்தமோ, சாருவின் பாலியல் கதையாடலைவிடக் கற்பனை செய்ய இயலாதவாறு மோசமாக இருக்கிறது.

     ஆடையினால் மூடப்பட்ட உடல்களை முன்வைத்து நடைபெறுகிற உடலரசியல், மனித மதிப்பீடுகளைத் தீர்மானிக்கிறது. பாலியல் பற்றிய பேச்சுகள் வேறு பாலியல் செயல்பாட்டினைச் சொற்களால் வர்ணிப்பது என்ற புரிதல் அற்ற நிலையில் சாரு எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கதைத்துள்ளார். உலகில் பிற உயிரினங்களைப் பொருத்தவரையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடலுறவு என்பது இனவிருத்திக்கான ஆதாரம். அவ்வளவே. மனிதர்கள் மட்டும்தான் 07×24 என்ற ரீதியில் பாலுறவை மகிழ்ச்சிக்கான முழுநீளக் கொண்டாட்டமாக்கி விட்டனர். என்றாலும் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் நிகழ்த்தப்படுகிற பாலியல் செயல்பாடு, குறுகிய நேர வரையறைக்குட்பட்டது. சாரு சித்திரிக்கிற அஞ்சலி – உதயா இருவருக்கிடையிலான உறவில்  காமம் பொங்கி வழிந்துகொண்டே இருக்கிறது. முதல் கணவனான சுரேஷிடமிருந்து பிரிந்துவந்த அஞ்சலியின்  பாலியல் தேடல் அளவற்றுப் பெருகிறது. சாரு  குறிப்பிடுகிற மேலை இலக்கிய நாவல்களில் பாலியல் பேச்சுகள் நிரம்பித் ததும்பிட வாய்ப்புண்டு. தமிழிலக்கியச் சூழலில் பாலியலை முன்வைத்துக் கதைப்பது எளிதானது அல்ல. இரண்டாயிரமாண்டு பாரம்பரியமுடைய தமிழர்களிடையே சங்கம் மருவிய காலம் முதலாக மனைவியுடன் மட்டும் பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும். பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜைன, பௌத்த, வைதிக மதங்கள் உடல்கள் மூலம் அடைகிற புலன் இன்பங்களை இழிவானதாகச் சித்தரித்து, உடல்களைத்  துறப்பதற்கான மனநிலையை விதிகளாக  வகுத்துத் துறவினை வலியுறுத்துகின்றன. அவை மரபிலக்கியப் பிரதிகளின் மூலம் தமிழரின் மனோபாவத்தில் இன்றுவரையில் ஆழமாக ஊடுருவியுள்ளன. செக்ஸ் என்பது கெட்ட வார்த்தை என்று நம்புகிற பெரும்பான்மையான தமிழர்கள், சாருவின் கதையாடலையும் மேம்போக்கான நிலையில் புறந்தள்ளுகின்றனர். சாருவின் காமம் சார்ந்த சொல்லாடல்கள், சித்திரிப்புகள் பண்பாட்டுரீதியில் ஏற்படுத்துகிற விளைவுகள் ஆய்விற்குரியன.

   கிராமத்துச் சொலவடைகள் முதலாக விரிந்திடும் பேச்சுகளில் கெட்ட வார்த்தைகள் எனக் குறிப்பிட்ட சொற்களை விலக்காக்கிடும் போக்கு, பெரிய அளவில் இன்றளவும் இல்லை. ஆனால் பொது வெளியில் உடல்கள் எப்படி செயல்பட வேண்டும் எவற்றைப் பேசக் கூடாது என்ற வரையறை, கறாராக நிலவுகிறது. மேல் x கீழ் என அதிகாரத்திற்குச் சார்பாக உருவாக்கப்படும் உடல்களும் பேச்சுகளும் காலங்காலமாக ஆதிக்க அரசியலின் வெளிப்பாடுகள். நிதம்பம், யோனி, புணர்ச்சி, புண்டை போன்ற உச்சரிக்கப்படாத சொற்களை நாவல் முழுக்கச் சாரு பயன்படுத்தியதில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. அவை கிளுகிளுப்பானவையாகக் கையாளப்படாமல், பல்வேறு பொருண்மைகளாகவும் குறியீடுகளாகவும் பிரதியில் இடம் பெற்றுள்ளன. பீப் பாடல் மூலம் பெண்ணுறுப்பை வசையாகக் குறிக்கிற சொல்லைப் பிரபலப்படுத்திய நடிகர் சிம்பு வகையறாவினர் இன்றும் தமிழகத்தில் சௌகரியமாக உலவிவரும் சூழலில், சாருவின் பிரதி, பாலியல் சொற்களைக் கலைத்துப் போடுகிறது. பாலியல் சார்ந்த உறுப்புகள் பற்றிச் சமூகம் கட்டமைத்துள்ள மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்குவது நாவலில் காத்திரமாக இடம் பெற்றுள்ளது.  ’’ஒருவனுக்கு இருபது வயதில் காதல் வரவில்லை என்றால் அவனுடைய உடலில் கோளாறு என்று அர்த்தம். ஒருவனுக்கு நாற்பது வயதில் காதல் என்றால் அவன் மனதில் கோளாறு என்று அர்த்தம் என்று ஒரு புகழ் பெற்ற பேச்சாளர் பேசுகிறார். அதைக் கேட்டு ஆயிரம் பேர் கரகோஷம் செய்கிறார்கள். இது என்ன மாதிரியான நாடு’’ என்ற சாருவின் ஆதங்கம் நியாயமானது.

  புதிய எக்ஸைல் பிரதியானது, வாசிப்பின் வழியாக ஒற்றையாக நுழைகிற வாசகரின் மனநிலையைச் சிதலமாக்கி, வேறுபட்ட மனிதர்களாக உருமாற்றுகிற தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. கதைசொல்லி முடிவற்று விவரிக்கிற கதைகள், ஒருநிலையில் வாசகர் தனக்கான பிரதிகளை உருவாக்குவதன்மூலம் வலிகள், கசப்புகள், கொண்டாட்டம் ததும்பிய உலகில் பயணிக்கிறார். எங்கும் கதைகள் நிரம்பி வழிந்திடும் சூழலை உருவாக்குவதில் சாருவின் எழுத்து, தனித்து விளங்குகிறது. செக்ஸ் சாட்டிங்கிற்காக அழைக்கப்படுகிற இக்கட்டான சூழலில், யார் வேண்டுமானாலும் எந்த விநாடியிலும் பங்கேற்றிடும் நிலையில் என்ன செய்ய முடியும்? வாசகர் என்ற சொல் இன்னும் எவ்வளவு காலம் தனித்து நின்று வேடிக்கை பார்க்கும் என்ற கேள்வி தோன்றுகிறது.

 இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியத்துடன் தமிழ் என்ற நிலவெளியின் மரபுகளையும் நம்பிக்கைகளையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு, திணறுகிற வரலாற்றையும் புனைவுகளையும் உயிர்த்துடிப்புடன்  பதிவாக்கியுள்ள சாருவின் மொழி, சுவராசியமானது. மொழி கட்டமைத்திடும் வரலாற்றின் விநோதங்களுக்குள் பயணிக்கிற சாரு, எல்லாவற்றையும் விலகி நின்று கேள்விக்குள்ளாக்கியிருப்பது நாவலின் தனித்துவமாகும். கலகத்தின் மொழியிலான பிரதியில் இதுவரை சமூகம் கட்டமைத்திருக்கிற புனிதமான வாழ்க்கை பகடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சிவில் சமூகத்தின் மையத்தில் ஆதிக்கத்துடன் வாழ்கிறவர்களின் நடைமுறை வாழ்க்கையைக் கடுமையான விமர்சனத்துடன் நாவல் பதிவாக்கியுள்ளது.

     வரலாறைப் புனைவாக்குகிறபோது ஒருவகையில் இதுவரை மனித சமூகம் கட்டமைத்த  தத்துவம் சிந்தனைகளின் தொகுப்பாகிறது. நல்லது x கெட்டது என்ற முரணில், மனித இருப்பினுக்காகச் சிந்திய குருதியின் கவிச்சி நெடி, வரலாற்றின் பக்கங்களில் வீசுகிறது. நவீன சமூகத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தையும் அரசியல் பின்புலத்தில் கதைக்குள் கதையாக விரிந்திடும் கதைசொல்லலில் சாருவிற்குப் பருண்மையான நோக்கம் உள்ளது. ஊழல் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியுள்ள தமிழர்களின் அசலான மனநிலை வறண்டுபோய்ச் சப்பையாக இருப்பதுடன், ஆதிக்க அரசியலுக்குப் பணிந்து அடிமைகளாக மாறியுள்ள சூழல் குறித்த சாருவின் கவலை, கதைகளாகியுள்ளன.

 எழுபதுகளில் நவீன எழுத்தின் பிதாமகராகக் கருதப்பட்ட நகுலன், மிகப் புதியதில் மிகப் பழையதின் சாயல் இருக்கும் எனக் குறிப்பிட்டது, சாருவிற்குப் பொருந்துகிறது. சுயபுராணமாக விவரிக்கப்படும் நாவலில் உலகத்துப் படைப்புகள் பற்றித் தொடர்ந்து கதைக்கிற சாருவின் கதையுலகு, ஒப்பீடு அற்றது. ஒருநிலையில் இப்படியெல்லாம் நாவல்கள் பிரசுரமாகி இருக்கின்றனவா என்ற சந்தேகமும் தோன்றுகிறது. தமிழில் இதுவரை வெளியான நவீன இலக்கியம் குறித்துச் சாருவுக்கு அக்கறை எதுவுமில்லை என்பது கதையோட்டத்தில் பதிவாகியுள்ளது. அதேவேளையில் சாருவின் பண்டைய இலக்கியத் தேடல் வியப்பளிக்கிறது. தொல்காப்பியர் மரபியல் இயலில் குறிப்பிட்டுள்ள உயிரினங்கள் பற்றிய விவரிப்பை நவீன அறிவியலுடன் ஒப்பிட்டுச் சாரு அடைந்திருக்கிற பிரமிப்பு, வாசகரையும் தொற்றுகிறது. சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியுள்ளார். கபிலர் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிட்டுள்ள 99 பூக்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளது. கொன்றை மலரின் அழகில் ஈடுபட்ட கதைசொல்லி மடவமன்ற தடவுநிலைக் கொன்றை எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலை உற்சாகத்துடன் குறிப்பிடுகிறார். சில குறுந்தொகைப் பாடல்களைக் கதைப் பிரதியில் தந்துள்ள சாருவின் நோக்கம் தமிழ் அடையாளத்துடன் தொடர்புடையது. ஆனைமலையில் மாசானி மயானி சயனி அம்மன் கோவிலைக் குறுந்தொகையில் பரணர் பாடிய பாடலுடன் தொடர்புப்படுத்திய  ’மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை’ என்ற பாடல், வரலாறு மட்டுமின்றி தொன்மக்கதையுடன் தொடர்புடையதாகும்

   ’தசைபெரிது உடையர் நல்கலும் நல்குவ’ர் என்ற குறுந்தொகைப் பாடலைக் குறிப்பிடுகிற நாவலாசிரியர் சாரு, காஞ்சி எனக் குறிப்பிடப்படுகிற பூவரசு மரத்தின் இலையில் செய்த பீப்பியை ஊதி மகிழ்ந்த செய்தியைப் பதிவாக்குவதன்மூலம் நடப்பு வாழ்க்கையுடன் பொருத்துகிறார். இன்றைய தமிழர்களின் கசடு நிரம்பிய அபத்த வாழ்க்கை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் சாருவின் அடையாள அரசியல் சிக்கலின் வெளிப்பாடுதான் சங்க இலக்கியத் தேடல் என்று குறிப்பிடலாமா? யோசிக்க வேண்டியுள்ளது.

   தமிழின் வேர்களைத் தேடிய பயணத்தில் சங்கப் புறப்பாடல்களை வாசித்த சாரு, சங்கக் கவிகள் பெரும்பாலும் பிச்சை கேட்டு வாழ்ந்ததுடன், மன்னர்கள் தருகிற பிச்சைக்காக அவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கின்றனர் என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது. பாணர் மரபில் இனக்குழுத்தலைவனுக்கும் பாணர், புலவருக்குமான உறவு அழுத்தமானது. ஊர்கள்தோறும் பயணித்த பாணர் குடும்பத்தினர் பிச்சைக்காரர்கள் அல்ல. ஆடலுடன் பாடல்கள் புனைந்திட்ட பாணர்கள் தனித்த மரியாதையுடன் விளங்கினர். 1970களின் பிற்பகுதியிலும் வயலில் விளைந்த நெற்கட்டுகளைக் களத்தில் குவித்தபோது, அதிலிருந்து ’புலவர் அரி’ என ஒரு கட்டு நெல்தாளினைப் புலவர் பரம்பரையினருக்கு மகிழ்ச்சியுடன் வழங்கிய மரபு தமிழகத்தில் நிலவியது. வட இந்தியாவில் வசிக்கிற திராவிடப் பழங்குடியினரான சந்தால், கோண்டா போன்றோரிடம் பாணர் மரபு இன்றளவும் செல்வாக்குடன் விளங்குகிறது. மன்னனைப் புலவர் பாடியதை ’அவனை அவர் பாடியது’ எனக் குறிப்பிடுவது தமிழில் வழக்கு. ’எத்திசை செலினும் அத்திசைச் சோறே’ எனப் பாடிய ஔவையின் வரிகள் வெற்றுச் சொற்கள் அல்ல. மானுடவியல்ரீதியில் பாணர் மரபு பற்றிக் காத்திரமான ஆய்வுகள் வெளிவந்துள்ள நிலையில், அதைப் பற்றி அறியாமல் சாரு, பரிசிலைப் பிச்சை எனக் குறிப்பிடுவது தவறானது; சங்க மரபு அறியாமல் அபத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். சரி போகட்டும். புதிய எக்ஸைல் நாவலின் தொடக்கத்தில் நன்றி எனச் சாரு குறிப்பிடுகிற நல்லி குப்புச்சாமி செட்டியார், தினமலரைச் சார்ந்த ரமேஷ், வெங்கடேஷ், ஆர்.கிருஷ்ணமூர்த்தி என விரிந்திடும் நூற்றுக்கும் மேற்பட்டோரில் ஸ்பான்சர்கள் இருக்கின்றனர். இன்றைய ஸ்பான்சர்களுக்கு ஒருவகையில் முன்னோடிகள் அன்றையப் புரவலர்கள். இத்தகையோர் படைப்பாளி மீதான அக்கறையினால் செய்கிற உதவிகளைப் பிச்சை என்று சொன்னால் ஏற்றுகொள்வீர்களா சாரு?

  ஆழ்வார்களின் பக்திமயமான பாடல்கள், திருமூலரின் தத்துவப் பாடல்கள், சித்தர்களின்  ஆவேசமான பாடல்கள், வள்ளலாரின் தத்துவச் சரடு என நாவல் முழுக்கப் பரவியிருக்கிற  மரபிலக்கிய பயன்பாடு, சாருவின் புதிய எழுத்துமுறைக்குச் சான்றாகும். பூம்பாவை இறைவனுக்குத் தொண்டு செய்து கன்னியாகவே வாழ்ந்த கதையைச் சம்பந்தரின் ‘மட்டிட்ட புன்னையங் கானல் மடம்யிலை/ கட்டிடங் கண்டான் கபலீச்சுரம் அமந்தான்/ ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல் கணத்தார்க்கு/ அட்டிடல் காணாதே பூம்பாவாய் என்ற பதிகத்துடன் விவரிக்கிற பாங்கு நேர்த்தியானது. போகர் நிகண்டுவில் இடம் பெற்றுள்ள தேரையர் கதை சுவராசியமானது. அகத்தியரின் மாணவரான தொல்காப்பியருக்கு ஏற்பட்ட தீராத தலைவலியைத் தீர்த்திடத் தேரையர் செய்த செயல், விநோதமானது. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் உண்டுவர கோலையூன்றி நடப்பவன் கோலை வீசிக் குதித்து நடப்பான். உடலைப் பேணுவதற்கான மரபான வழிமுறைகளைக் குறிப்பிட்டிருப்பதில் சாருவின் தேடல் புலனாகிறது.

     முட்கள் நிரம்பிய மூலிகைகளின் பூக்களில் நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உண்டு எனச் சொல்கிற சாரு, வயக்ராவைவிட தமிழகத்தில் உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன எனக் குறிக்கிறார். வள்ளலார் எழுதியுள்ள நித்ய கரும விதியை வாசித்தால், தேக சம்பந்தம் பற்றிப் புரிந்திட முடியுமெனச் சாரு தருகிற வள்ளலாரின்  நீண்ட மேற்கோள், வாசிப்பில் புதிய அனுபவத்தைத் தருகிறது. சுக்கிலம் வெளியேறுவது குறித்துத் தமிழ்ச் சித்தர்கள் தந்துள்ள விளக்கங்கள் அபூர்வமானவை.

   நாட்டார் மரபிலான தொன்மக்கதைகளை உற்சாகத்துடன் பதிவாக்கியுள்ள சாருவின் நாவல், வேறுபட்ட அனுபவங்களை வாசிப்பில் தருகிறது. அறிவொளிக் காலம் வலியுறுத்திய பகுத்தறிவின் எல்லை வரையறைக்குட்பட்டது என்ற புரிதலின் ஊடாகச் கடவுள் மறுப்புச் சிந்தாந்தம் புதிய நோக்கில் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஈரோடு நகருக்கருகில் உள்ள தங்கமேடு கிராமத்தில் இருக்கிற தம்பிக்கலை அய்யன் கோவில் பற்றிய தொன்மக் கதையில் சித்தர் உருவான கதை குறிப்பிடத்தக்கது. புற்றிலிருக்கிற நாகம் பசுவின் மடியில் பால் குடித்த இடத்தில் அமர்ந்தவர் சித்து தம்பணம் கற்றுச் சித்தரானார். அங்கிருக்கிற நாகங்கள் இன்றளவும் யாரையும் தீண்டியதில்லை என்ற புனைவு, அமானுடத்தன்மையுடையதாக மாறுகிறது.

  பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்றவை ஏதோ ஒரு நிலையில் வாழ்க்கையில் ஊடுருவி, அன்றாட வாழ்வில் ஏற்படுத்துகிற தொந்தரவுகள் அல்லது பாதகச் செயல்கள் பற்றிய நம்பிக்கையை எளிதில் புறந்தள்ளிட முடியாது எனச் சாரு முன்வைக்கிற கருத்தியல் ஆய்விற்குரியது. இயற்கையின் அங்கமான மனிதன், இயற்கையை எப்படி எதிர்கொள்வது எனப் புலப்படாமல், பூமியில் தன்னிருப்பைப் பற்றிக் கட்டமைத்திடும் புனைவுகள் ஏராளம். யோசிக்கும்வேளையில் இயற்கையின் பெருங்கருணையினால்தான் பூமியில் மனித இருப்பு சாத்தியப்பட்டுள்ளது. குறியீட்டு முறையில் இயற்கையைப் புரிந்திட முயன்றதன் விளைவுதான் கடவுள் உள்ளிட்ட  நம்பிக்கைகள். வெறுமனே மூடநம்பிக்கை என ஒதுக்கிடாமல், சாரு கண்டறிந்திட முயலுவதன் நீட்சியாகத்தான் சோழிகளை உருட்டிப் பணிக்கர் சொல்கிற எதிர்காலம் குறித்த புனைவுகளைக் கருத வேண்டியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகிலுள்ள வனபத்ரகாளியிடம் வேண்டுகிற கதைசொல்லி, திடீரென ஆரவல்லி சூரவல்லி கதைக்குள் பயணிக்கிறார். பெரும்பாலான நாட்டார் கதைகள் போலவே முன்னர் எப்பொழுதோ நடைபெற்றதாகத் தொடங்கும் கதையில் பெண்களின் சாகசம் முன்னிறுத்தப்பட்டுள்ளது. அல்லிமுத்து பில்லி சூனியத்தினால் கொல்லப்படுகிறான். ஆரவல்லி கதையின் ஊடாகக் கதைசொல்லி, அவரைப் பயமுறுத்துகிற இருபத்தோராம் நூற்றாண்டுப் பெண்ணியச் சகோதரிகளை வீழ்த்துவதற்கான வரத்தை வனபத்ரகாளியிடம் கேட்கிறார்.  கதைசொல்லி அல்லது அல்லிமுத்து ஆரவல்லி சகோதரிகளின் அரண்மனையை அடைந்து பந்தயங்களில் கலந்துகொள்கிறார். அல்லிமுத்துவுக்குப் பெண்களைப் பிடிக்கும் என்பதால், அவனுடைய பாஸ்வேர்டைத் திருடி நிஜமும் கற்பனையும் கலந்த செக்ஸ் உரையாடல் தொடங்கப்படுகிறது. திரும்பத்திரும்ப அழைக்கிற செக்ஸ் உரையாடலின் வழியாக கதைசொல்லி தோற்றுப் போகிறார். ஆரவல்லி சகோதரிகள் கதையை மறுவாசிப்புச் செய்துள்ள சாரு எது நிஜம் எது புனைவு என வாசகரையும் குழப்புவது சுவராசியமானது.

              அமெரிக்கா பற்றிய புனைவின் மறுபக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சாரு, கார்ப்பரேட் சாமியார்கள், இந்தியா ஆன்மீக நாடு என ஆசி வழங்குவதுடன், அமெரிக்கா குறித்து மட்டமாகச்  சொல்கிற சொற்களின் அபத்தத்தைக் கதையாக்கியுள்ளார். குஷால்தாஸ் என்ற கார்ப்பரேட் சாமியாரின் பிரசங்கத்தைக் கேட்டுப் புளகாகிங்கதம் அடைகிற நடுத்தர வர்க்கத்தினர், துரித உணவு போல உடனடி நிவாரணம் தேடியலைகின்றனர், இலக்கியம் அதிகார மையத்தைத் தகர்த்திடும்போது, ஆன்மீகமோ புதிய அதிகார மையத்தை உருவாக்குகிற எனச் சொல்கிற கதைசொல்லி, குஷால்தாஸின் டூபாக்கூர் செயல்பாடுகளை அம்பலப்படுத்துகிறார். விதம்விதமான ஆடைகளில் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிற ஷோக் பேர்வழியான குஷால்தாஸ், சிஷ்யையான இளம்பெண்களின் தலைமுடியைச் சிரைத்துவிட்டுக் காவி ஆடையை உடுத்த வேண்டுமெனப்  போதிப்பது, ஆன்மீகப் பைத்தியத்தின் இன்னொருநிலைதான். அமெரிக்காவில் நாற்பத்தைந்து சதவீதம் மனநோய்க்கு மருந்து சாப்பிடுகிறார்கள் என மட்டப்படுத்திப் பேசுகிற குஷால்தாஸ், இந்தியாவில் எண்பது சதவீதம் பேர் மனநோய் இருப்பது தெரியாமல் திரிகின்றனர்; பல்லாயிரக்கணக்கான் கோடிகளில் ஊழல் செய்கிற அரசியல்வாதிகள்; எங்கும் அராஜகம்; குழந்தைக் கல்வி முதலாக ஏற்றத்தாழ்வுகள்; பெண்கள் இரண்டாம் பாலினமாக ஒடுக்கப்படுதல்; வன்புணர்வு; தொலைக்காட்சி ஒளிபரப்பிடும் ஆபாசங்கள் என எங்கும் அடக்குமுறை நிலவும் இந்தியாவை ஞானபூமி எனச் சொல்ல முடியுமா? அன்றாட வாழ்க்கையில் உணவுக்கே திண்டாடும் கோடிக்கணக்கான விளிம்புநிலை மக்களின் துயரம் அளவற்றது. தேசபக்தி, ஆன்மீகம் எனப் போதித்து கல்லா கட்டுகிற கார்ப்பரேட் சாமியார்கள் ஒருவகையில் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரிகள் எனத் தருக்க அடைப்படையில் சாரு விளக்குவது, கொந்தளிப்பின் உச்சம். குஷால்தாஸ் எல்லாவற்றுக்கும் ஆசைப்படு; சந்தோசமாக இரு எனப் போதிப்பதின் மறுபக்கம் அடிமைகளை உருவாக்கும் பாசிஸம் பொதிந்துள்ளது. பொருளாதாரரீதியில் சிரமப்படுகிற மக்களுக்கு இந்திய ஆன்மீகம், புனித பூமி, தியானம், யோகா என்ற பெயரில் புதிய சொல்லாடல்கள்மூலம் போதையில் ஆழ்த்துகிற பணியைச் செய்கிற நித்யானந்தா, ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ், ஸ்ரீசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் இன்னொருபுறம் சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்துத்துவ அமைப்புகளை வலுப்படுத்துகின்றனர். ஆன்மீக  அரசியலை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தைக் கார்ப்பரேட் சாமியர்களை முன்வைத்துள்ள  சாருவின் எழுத்து, நுண்ணரசியல் பின்புலமுடையது.

  ஐரோப்பாவில் இரு உலகப் போர்களினால் நடைபெற்ற கொடூரங்களின்  விளைவுகளை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். 1944 ஜூன் 10ஆம் தேதியன்று ஓரத்தூரில் நாஜிப் படையினரால்  641 கிராமத்தினர் கொல்லப்பட்டனர். அந்த ஊரும் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது. அந்தக் காட்சி, இன்றளவும் காட்சிப்பொருளாகக் காத்து வரப்படுகிறது. தமிழகத்தில் 1968 டிசம்பர் 25 அன்று கீழ் வெண்மணிக் கிராமத்தில் நிலப்பிரபுக்கள் 44 தலித் கூலி விவசாயத் தொழிலாளர்களை உயிரோடு கொளுத்தப்பட்டனர். கொலைகளுக்கு மூலகாரணமான கோபாலகிருஷ்ண நாயுடு, போதுமான சாட்சியம் இல்லையென நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இருவேறு சம்பவங்களையும் ஒப்பீட்டு, கீழ்வெண்மணி சம்பவம் இன்று தமிழர்களின் நினைவில் இல்லையெனக் குறிப்பிடுகிற கதைசொல்லி, கொல்லப்பட்ட 44 பேர்களின் பெயர்களையும் தந்துள்ளார். நடந்து முடிந்த கொடூரமான சம்பவங்களைப் பரிசீலனையற்று மறந்திடும் தமிழர்களின் வரலாற்றை மீண்டும் எழுதியுள்ளார் சாரு.

      இந்தியாவில் மனித உயிர்கள் குறித்த அலட்சியமும் எதுவும் நடப்பதற்கான சாத்தியப்பாடுகள்   பற்றிய விவரிப்புகளும் நாவலில் முக்கியமானவை. மருத்துவக் கல்லூரி மாணவனின் உடலைத் துண்டுதுண்டாக வெட்டிப் பல ஊர்களில் கொண்டுபோய் வீசியவன், ஐந்தாண்டுகளில் சிறையில் இருந்து வெளியே வந்து விட்டான்.’’ இந்தியாவில் நீங்கள் உயிர் பிழைத்திருப்பதே ஒரு அதிர்ஷ்டம்; தற்செயல் நிகழ்வு’’ எனச் சொல்கிற சாரு, ரவுடிகளின் அதிகாரத்தைக் குமார் என்கிற ரவுடியின் வாழ்க்கைச் சம்பவங்கள் குறித்த விவரணையின் மூலம் நிழல் உலகின் கோர முகத்தைக் காட்டுகிறார். அரசியல் பினாமி உருவாக்கத்தைப் பக்கிரிசாமி சொல்வதாக விவரித்துள்ள பகுதி நிழல் உலகில் எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியத்தை முன்னிறுத்துகிறது. வீட்டுத் தரகனாகத் தொடங்கிய பக்கிரிசாமி பின்னர் வீடுகளைக் கைமாறுவதில் பெரும் பணம் கமிஷனாகப் பெறுகிறான். நாளடைவில் அமைச்சரின் நிழலாக மாறிக் கோடிக்கணக்கில் புரள்கிறவன், நெருக்கடியான சூழலில், அப்ரூவராக மாறினால், மனைவியும் பிள்ளையும் கொல்லப்படுவார்கள் என அறிந்து, தற்கொலை செய்துகொள்கிறான். பினாமியானவரின் மரணம் ஒருவகையில் கொலைதான். தமிழக அரசியல் சூழலின் இன்னொருமுகம் பக்கிரிசாமியின் வாக்குமூலமாக நாவலில் பதிவாகியுள்ளது.

          சாருவின் நாவல் வெறுமனே கதைசொல்லலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை. புதிய எக்ஸைல் நாவலை வாசிக்கிற இளம் வாசகர்கள் இது என்ன தில்லுமுல்லு என்று யோசிப்பார்கள். கட்டுரைக்கும் புனைகதைக்கும் இடையிலான வேறுபாடு தகர்ந்து வேறுபட்ட அனுபவங்களைக் குவிக்கிற சாருவின் எழுத்து, புதிய வகைப்பட்ட வாசிப்பைக் கோருகிறது. ’’தமிழ்நாட்டில் எழுத்தாளனாக இருப்பது கண்ணில்லாதவர்களின் தேசத்தில் ஓவியனாகவும், காது இல்லாதவர்களின் தேசத்தில் பாடகனாகவும், பிச்சைக்காரர்களின் தேசத்தில் பொற்கொல்லனாகவும் இருப்பதைப் போன்றது’’ என்ற கதைசொல்லியின் குரல், சாருவினுடையதுதான். திரைப்படம் தமிழ்ச் சமூகத்தினைப் புற்று நோயைப் போல அழித்திருப்பதனால், கலைஞர்கள், தத்துவவாதிகள், துறைசார்ந்த வல்லுநர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை இயல்பாகக் கருதுகிற சூழல் வலுவாக நிலவுகிறது. ’’எந்த மொழியில் எழுதினாலும் நான் வாழ்ந்துகொண்டிருக்கிற பிராந்தியத்தின் காற்றுதானே என் எழுத்தின் சுவாசமாக இருக்கும்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன ஒருவனின் வாரிசாகப் பிறந்திருக்கும் என்னைத் தேசம், மொழி, ஜாதி, இனம், பாலினம் போன்ற அடையாளங்களால் கட்டுப்படுத்த முடியுமா?’’ சாருவின் அரசியல் பேச்சுகள் முழுக்க நாவலில் வெளிப்படுவதற்கான காரணத்தைக் கண்டறிய பிரதியில் கடவுச்சொற்கள் இடம்பெறுள்ளன.

   கும்பகோணத்தில்  மாட்டுத் தொழுவத்தைப் போன்ற பள்ளிக்கூடம் நடத்துவதற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கிய அதிகாரிகள் யாருக்கும் இன்னும் தண்டனை தரப்படவில்லை, நடைபாதையில் கடைகள் போடுவதால், தெருவில் நடக்கிறவர்கள் வாகனப் போக்குவரத்திற்கிடையில் ஒவ்வொருநாளும் உயிர் தப்பிப் பிழைக்கின்றனர். வாகனம் ஓட்டுகிறவர்களின் கவனக்குறைவினால் நாளும் கொல்லப்படுகிறவர்களின் எண்ணிக்கை பெருகினாலும், சாலை விபத்துக்குக் காரணமான டிரைவர்களுக்குப் பெரிய அளவில் தண்டனை கிடையாது, பள்ளிக்கூடத்தில் நிர்வாகம், ஆசிரியர்களின் அலட்சியத்தினால் குழந்தைகள் இறந்திடும்போது, வசதியானவர்கள் எளிதாக வெளியே வந்து விடுகின்றனர். இப்படி சிவில் சமூகத்தில் அன்றாடம் கொலைகள் குறித்து அக்கறையற்ற பொதுமக்களின் மனோபாவம் கொடூரமானது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் குப்பைகளை வீசியெறியலாம் என்ற நிலையில், தெருவில், மாடிப்படிக்கட்டு மூலையில் எச்சிலைத் துப்பலாம். நான்கு வழிப் பாதை மட்டுமின்றி, சற்று மறைவான எந்தவொரு இடத்திலும் ஜிப்பைக் கழற்றிவிட்டுக் கூச்சநாச்சமில்லாமல் குறியைக் கையில் பிடித்துக்கொண்டு சிறுநீர் கழிக்கிற ஆண்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருப்பது கேவலமானது. நாய்களைப் போல எந்த இடத்திலும் சிறுநீர் கழிப்பது அருவருப்பானது என்ற எண்ணம், படித்த ஆண்களிடம்கூட இல்லை. நகை வாங்கிச் சேர்ப்பதில் அக்கறை காட்டும் தமிழர்கள், வீட்டிற்கு தேவையான அடிப்படைப் பொருட்கள்கூட வாங்குவது இல்லை எனச் சாரு குற்றம் சாட்டுகிறார். உலகின் மிக நீளமான மெரினா கடற்கரையில் காலைவேளையில் ஆயிரக்கணக்கானோர் அலைகள் தொடும் தொலைவில் மலம் கழித்துக் கொண்டிருக்கிற காட்சி எளிதில் புறக்கணிக்கக் கூடியதல்ல. ஐந்து கி.மீ. தொலைவு பரவியிருக்கிற கடல் மணல் பரப்பில் பாலீதீன் கவர்கள், சிகரெட் துண்டுகள், பியர், விஸ்கி போத்தல்கள் என நிரம்பியிருக்கிற சூழலுக்கு யாரைக் குற்றம் சொல்வது?  சாரு தன்னைச் சுற்றிலும் நடக்கிற சம்பவங்கள் குறித்த எதிர்வினையைப் படைப்பின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

   நளினியைத் திருமணம் செய்துகொண்டு தில்லியில் வாழ்ந்த கதைசொல்லி அவளிடமிருந்து விவாகரத்துப் பெற்றுப் பெருந்தேவியுடன் வாழ்கிறார். உதயாவிற்கும் அஞ்சலிக்குமான உறவு தொடர்கிறது. அஞ்சலிக்கும் கதைசொல்லிக்கும் இடையில் நிலவுகிற பாலியல் கொண்டாட்டம் தனித்துவமானது. கணவனான சுரேஷ் ஏன் இப்படி அஞ்சலியை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டுமென்ற கேள்வி வாசிப்பில் தோன்றுகிறது. அஞ்சலியின் பதின்பருவ வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், துயரம் தோய்ந்தவை. ஏன் இப்படியெல்லாம் அஞ்சலியின் வாழ்க்கையில் சம்பவங்கள் நிகழ்ந்தன என்ற கேள்விக்கு விடை எதுவுமில்லை.

    கதைசொல்லியின் தம்பியான செல்வத்தின் வாழ்க்கை முழுக்கத் துயரம்தான். அவனுடைய பொருளியல் தேடலுக்கான  முயற்சிகள் எல்லாம் தோல்வி. வசதியான குடும்பத்தைச் சார்ந்த ரதி போன்ற பெண்ணை மறுத்துவிட்டு, வேறு மதப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். அவள் குட்டை, வறண்ட தோல், ஒல்லி, தெற்றுப் பல்லுடன் காட்சியளிக்கிறாள். செல்வத்தைவிடப் பத்து வயது மூத்தவளான அவள் விவாகரத்தானவள். கடைசியில் புற்று நோயினால் வதங்கி இறந்து போனவனின் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது என்ற கேள்வி மட்டும்தான் மிச்சம். வெறும் கதை சொல்வது மட்டும் சாருவின் நோக்கமல்ல. குடும்ப உறவுகளில் அன்றாடம் நடைபெறுகிற சம்பவங்களின் அபத்தம், செல்வத்தை முன்வைத்துச் சித்திரிக்கப்பட்டுள்ளது

   நாகூர் நகரின் நிலவெளி குறித்த விவரிப்பு, தில்லியில் வாழ்க்கை, சென்னை, தஞ்சை, புதுவை என வெவ்வேறு பின்புலத்தில் விரிந்திடும் நாவல், நுணுக்கமான பல்வேறு தகவல்களைப்  பதிவு செய்துள்ளது. இடைவிடாது தொடர்ந்திடும் சம்பவங்களின் குவியலால் நாவல் நிரம்பி வழிகிறது. கலைக்களஞ்சியம், விவரச்சுவடிகள், பயணக் குறிப்புகள், பூகோள விவரணைகள் போலச் சாரு பதிவாக்கியிருப்பது, ஒருவகையில் சமகாலத்தின் குரல். நாகூரைப் பற்றிய நுணுக்கமான பதிவுகள் விரிவான பிம்பத்தைக் கட்டமைக்கின்றன. தாவர சங்கமம் இயலில் இடம் பெற்றுள்ள புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்/ பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்/ கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்.. என்ற மாணிக்கவாசகரின் பாடல், ஐம்பூதங்கள் மட்டுமின்றி மனிதர்கள், இயற்கையிறந்த ஆற்றல்கள் குறித்தும் பேசுகிறது.

    நண்பர்  கொக்கரக்கோ உள்ளிட்ட பலரின் கதைகள் நாவலில் நிரம்ப இடம் பெற்றுள்ளன. குறிப்பாகச் சாருவின் பதின்பருவ நண்பனான சிவாவின் வாழ்க்கை புதிய கோணத்தில் விரிந்துள்ளது.  எண் கணிதம், ஜோதிடம் கற்ற சிவா பாலயோகியாக இருந்து பின்னர் அம்பாவாக மாறினான். கொங்கணவர் என்ற சித்தர் பாடிய பாடலில் இடம்பெற்றுள்ள நாகவேதையினால் பாதரசத்தை மணியாகக் கட்டிச் சாரணைகள் செய்தால் தங்கமாகும் என்று சொல்கிற சிவாவின் தேடல் முடிவற்றது. சராசரியான சிவா தன்னைச் சித்தனாகவும் எதிர்காலம் அறிந்த ஞானியாகவும் கருதிக்கொண்டு வாழ்ந்ததற்கான முகாந்திரம் என்ன?

    தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதுதான் நடுத்தர வர்க்கத்துத் தமிழர்களின் கனவாக இருக்கிறது. அது நிறைவேறியவுடன் குதூகலமடைந்து பேரன் அல்லது பேத்தியைப் பார்த்துக்கொள்வதற்காக ஆறு மாதங்கள் அமெரிக்காவில் தங்கிடப் போகிறேன் எனக் கிளம்பியவர்கள், ஒரே மாதத்தில் திரும்புவது இன்று வழமையாகி விட்டது. இரண்டாயிரமாண்டு வரலாற்றுத் தொன்மையுடைய தமிழகத்து நிலவெளியெங்கும் பரந்திருக்கிற கோவில்கள் வெறுமனே இறைநம்பிக்கை சார்ந்தவை மட்டுமல்ல. சென்னை போன்ற மாநகரத்தில் நிலைத்திருக்கிற கோவில்கள், முதியவர்களின் மனவெறுமையைப் போக்கி, ஆன்மபலத்தைத் தருகின்றன என்ற சாருவின் விவரிப்பு கவனத்திற்குரியது.

ஹம் தும் எக் கம்ரேஎ மே பந்த் ஹோ என்ற இயலில் ஹிந்தித் திரைப்படங்களின் பாடல்களும் படங்களும் எழுபதுகளில் தமிழகத்தில் பெற்றிருந்த செல்வாக்கு விரிவாக இடம் பெற்றுள்ளன. பாபி, ஷோலே, ஆராதனா போன்ற ஹிந்தித் திரைப்படங்கள் தமிழர் வாழ்க்கையில் ஊடுருவியிருந்த சூழல் பற்றிய பதிவுகள் காத்திரமானவை. ’’1976 இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எண்பதுகளில்தான் இந்திப்பட ஆதிக்கம் தமிழ்நாட்டில் குறைந்து, ஒரு கட்டத்தில் இல்லாமல் போனது’’ எனச் சாரு குறிப்பிடுவது  சரியான கணிப்பு. தமிழரின் இசைப் பயணத்தில் ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பற்றிய விவரிப்பு, இன்றைய தலைமுறையினர் அறியாததது. நாவலின் கதையோட்டத்தில் இசைப் பாடல்கள் என்பதற்கப்பால் என்ன நடந்தது என்பது என்ற கேள்வி, வரலாற்றில் முக்கியமானது    

   தில்லி நாட்குறிப்புகள் இயலில் வேலை செய்து பிழைப்பதற்காகச் சென்ற கதைசொல்லி எதிர்கொண்ட அனுபவங்கள் சுவராசியமாகப் பதிவாகியுள்ளன. சிவில் சப்ளைத் துறையில் பணியாற்றியபோது அலுவலக அதிகாரிகள், மதராசிகள் பற்றிய மனப்பதிவுகள் விரிவானவை. பிரதமரான இந்திரா காந்தி, அவருடைய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தில்லி முழுக்கச் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வெறியாட்டத்தினால்  கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்த பதிவுகள் வரலாறின் இருண்ட பக்கங்களைப் பதிவாக்கியுள்ளன. இதுநாள் வரையிலும் சகமனிதர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் விளங்கிய சீக்கியர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் கட்டவிழ்த்துவிட்ட அராஜகம், கொலைக்கான நியாயங்கள் இன்றளவும் நீடித்திருக்கின்றன. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்காகப் பழி வாங்குவதற்காக ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் துயரங்கள்  இன்றளவும் காற்றில் மிதக்கின்றன. எல்லாக் கூட்டக் கொலைகளின்போதும் போலீஸ் வேடிக்கைதான் பார்க்கிறது; போலீசின் முன்னால்தான் எல்லாக் கொலைகளும் நடக்கின்றன. இந்தியாவில் இதுபோன்ற ரத்தக் களறியான சம்பவங்கள் எப்பொழுதும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன என்பதைச் சாருவின் சீக்கியப் படுகொலைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

  தமிழரின் வாழ்க்கை குறித்த பன்முகப் பதிவாக விளங்குகிற புதிய எக்ஸைல் நாவல் கட்டற்ற சம்பவங்களின் பதிவாக விவரிக்கிற உலகம், கொலேஜ் பாணியில் விரிந்துள்ளது. அகத்தியர் தொடங்கி இன்றைய இணையத்தளத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள பாலியல் உரையாடல்கள் வரை அழுத்தமான கேள்விகளை வாசிப்பில் எழுப்புகிற கதையாடல், சமகாலத்தின் விமர்சனமாகப் பதிவாகியுள்ளது.  நாவலாசிரியராகச் சாரு பிரதியின் வழியாக எழுப்பியுள்ள கேள்விகள் முடிவற்றவை. அவை இன்னொரு நிலையில் தமிழ்ச் சமூகம் குறித்த காத்திரமான  விமர்சனங்கள், பதிவுகள்.

   இறுதியாகச் சில சொற்கள்: புதிய எக்ஸைல் நாவலில் பாலியல் செயல்பாடுகள் குறித்த  சம்பவங்களையும் விவரிப்புகளையும் அலசி ஆராய்ந்து, வெட்டப்பட்ட புதிய பிரதியை உருவாக்கிட வாய்ப்பு இருக்குமெனில்,  புதிய வகைப்பட்ட கதையாடல், பரந்துபட்ட வாசகரிடம் சென்று சேர்ந்திட வாய்ப்புண்டு. பாலியலைப் பொருத்தவரையில் இன்றளவும் தமிழர்கள் மூடுண்ட சமூகத்தினர்.

    புதிய எக்ஸைல் (நாவல்). சாரு நிவேதிதா. சென்னை: கிழக்கு பதிப்பகம். பக்கம்: 862; விலை: ரூ.700/-.

நன்றி: உயிர்மை, செப்டெம்பர் 2017