ஆசிஃபா

முகநூலில் ஆசிஃபா பிரச்சினை பற்றி அராத்து எழுதியது இது:

ஆசீஃபா

போர் , இனக்குழு கலவரங்கள் , மத வெறி , என வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் முதலில் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியும். நாகரீகம் பண்படாத அந்த காலத்தில் கூட , சிறுமிகளை சீரழித்ததாக தென்பட வில்லை.

நாகரீகம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் சிறுமிகள் ஈவிரக்கம் இல்லாமல் வன்புணரப் படுவது , கொல்லப்படுவது என தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது.

மனிதனை நெறிப்படுத்துவதற்காக உருவான மதங்கள் , மதவெறி தலைவர்களின் கைகளுக்குள் போய் , சக மனிதர்களின் மீது வெறுப்பை உமிழும் அமைப்புகளாக மாறி விட்டன. இன்றைய காலகட்டத்தில் அனைத்து மதங்களும் மற்ற மத மக்களின் மீது வெறுப்பை கக்கவே பயன்படுத்தபப்டுகின்றன.

அனைத்து மதங்களும் பொதுமக்களிடம் இருந்து விலகி சென்று குறிப்பிட்ட சில குண்டர்களின் கைக்குள் அடக்கமாகி விட்டது.

மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்கள் புனிதப்படுத்தப்படுகின்றன. இந்த குற்றங்களை செய்பவன் சார்ந்திருக்கும் மதத்தின் தலைவர் மறந்தும் இந்த குற்றத்திற்கு எதிராக குரல் உயர்த்த மறுக்கிறார். மதத்திற்கும் குண்டர்கள் தேவைப்படுகிறார்கள். குறைந்த பட்சம் மத ரீதியாக குண்டர்களை தனிமைப்படுத்தினால் கூட ஓரளவு குற்றங்கள் குறையும். ஆனால் மதமும் மதத்தலைவர்களும் குற்றவாளிக்கு பக்க பலமாக நிற்கிறார்கள். ஆசீஃபா போன்ற சிறுமியை சீரழித்து கொன்றால் கூட .

மரண தண்டனை கூடாதென்பது , பண்பட்ட மனித நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து கிளம்பும் குரல்.ஆனால் இந்த குரலை யார் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று பார்த்தால் மனித நாகரீகத்திற்கு எதிராக பின்நோக்கிப் போய்க்கொண்டு இருக்கும் பிற்போக்காளர்கள்தான் .இந்த முரணை கடப்பதென்பது மனித குல நாகரீகத்தின் முன் உள்ள பெரிய சவால்.

தனிப்பட்ட குற்றங்களையும் , மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்களையும் பிரித்துப் பார்க்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். தனிப்பட்ட குற்றங்களில் சின்ன சின்ன குற்றங்கள் முதல் பெரிய குரூரமான குற்றங்கள் வரை இருக்கும். குற்றம் செய்தவன் எப்போதேனும் அதை நினைத்து வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும். ஆனால் மதத்தின் பெயரால் செய்யப்படும் அனைத்து குற்றங்களும் குரூரமாக மட்டுமே இருப்பதைக் காண முடியும். குற்றம் செய்தவன் பெருமைப்பட்டுக்கொள்வதையும் காண முடிகிறது. இது எவ்வளவு பெரிய ஆபத்து ?

இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர்களின் போது சிவில் ,கிரிமினல் சட்டங்கள் வேலை செய்யாது. மத ரீதியான குற்றங்களையும் ஒரு நாட்டின் மீது தொடுக்கும் போர் போலவே பார்க்க வேண்டும். ஒரு நாட்டு மக்களின் உளவியல் , தார்மீக சிந்தனைகளின் மீது தொடுக்கபப்டும் போராகவே பார்க்க வேண்டும்.

ஆசீஃபா விஷயத்தில் பாதிக்கப்பட்டது ஆசீஃபா ,மற்றும் ஆசீஃபாவின் குடும்பத்தினர் மட்டுமல்ல. மனசாட்சி உள்ள ஒவ்வொரு இந்தியனும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றான். தொலைக்காட்சியும் , இணையமும் பரவலான இந்த காலத்தில் , இந்த செய்தியை கேள்விப்படும் சிறுவர் சிறுமியர் மனம் என்ன விதமான பாதிப்புக்குள்ளாகும்? எவ்வளவு பாதுகாப்பற்ற மனநிலையை உருவாக்கும் ?

கோடிக்கணக்கான நாட்டு மக்களின் மனங்களின் மீது உளவியல் தாக்குதலைத் தொடுக்கும் மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்கள் அல்லது செய்யும் குற்றங்களுக்கு மதத்தை துணைக்கு அழைத்தல் போன்ற செயல்களை நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராக கொண்டு ராணுவ நடவடிக்கை எடுப்பதே சரியெனப் படுகிறது. அதாவது ராணுவம் தலையிட்டு சுட்டு கொன்றுவிடுவது.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பக்குவப்படாமல் சொல்கிறேன் எனக் கூட சொல்லலாம். ஆனால் ஒரு மாநில அரசாங்கமும் , மத்திய அரசாங்கமும் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணராமல் , இன்னுமொரு கொலை என்னும் ரீதியில் பதப்படாமல் சாவகாசமாக இதை அணுகுவதைப் பார்த்தால் உணர்ச்சி வசப்படாமல் எப்படி இருக்க முடியும் ?

அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தால் மெண்டல் ஆக வேண்டியதுதான் போலிருக்கிறது.

மோடிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என சிலர் சொல்லலாம். ஆனால் நிதர்சனத்தில் எக்கச்செக்க சம்மந்தம் இருக்கிறது. இந்துத்துவத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர் மோடி. இந்து வெறியர்களுக்கு இது மிகப்பெரிய தார்மீக பலத்தை கொடுத்து இருக்கிறது. இந்து மதத்தின் பெயரால் வெறியாட்டங்கள் முனைப்புடன் நடத்தப்படுகின்றன. அப்படி வெறியாட்டங்கள் நடக்கும்போது நடவடிக்கைகள் மென்மையாக எடுக்கப்படுகின்றன. அனைத்தும் சட்டப்படியே நடக்கிறது என்ற சப்பைக் கட்டு வேறு !

இந்து மதத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்த ஒருவன் உச்சாணிக்கொம்பு அதிகாரத்தில் அமர்ந்து இருந்தால் , கீழே இருக்கும் அதிகார அமைப்பு இந்து வெறியர்களுக்கு எதிராக மென்மையாகத்தான் செயல்படும்.

இந்த சென்ஸிபிளிட்டி கூட இல்லாமல் என்ன பெரிய பிரதமர்?

இந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் வெறியாட்டங்களுக்கு எதிராக வன்மையாக குரல் கொடுத்து இருக்க வேண்டாமா ? கடுமையான நடவடிக்கை எடுக்கச்சொல்லி தன் மனப் போக்கு எப்படி என நாட்டை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்புக்கு சிக்னல் கொடுத்திருக்க வேண்டாமா ?

இந்து வெறி அமைப்புகள் பெற்றிருக்கும் வலிமைக்கும் அவர்கள் மதத்தின் பெயரால் இழைக்கும் குற்றங்களுக்கும் , மோடியும் பாஜக வும் நேரடிப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்து மதம் என்பது மதமே அல்ல. மற்ற மதங்களில் இல்லாதவர்கள் இந்து என அழைக்கப்படுவார்கள் என்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். பழைய மதம் , இது தோன்றியதற்கு சரித்திரமே இல்லை என்றெல்லாம் பெருமை பேசுபவர்கள் சொல்வதை கேட்டிருப்போம்.

இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவில் , இந்து மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கு பொறுப்பேற்று , இந்து மதத்தை துறக்கிறேன் என இந்துக்கள் அறிவிக்க வேண்டும் என நினைக்கிறேன். மதத்தின் மூலம் மனித குலத்திற்கு எவ்வளவு நன்மைகள் கிடைத்தாலும் ,

ஒரு ஆசீஃபாவை சீரழிக்கும் மனோபாவத்தையும் , சின்னஞ்சிறு சிறுமியை கொலை செய்யும் மன அமைப்பையும் அந்த மதம் கொடுக்குமானால் அந்த மதமே , அந்த மத அமைப்பே தேவயில்லை.

***

அராத்து எழுதியிருப்பது அனைத்தும் சரியே.  முழுக்கவும் சரியே.  ஆனால் எனக்கு இதில் இன்னும் சில பிரச்சினைகள் இருப்பதாகத் தோன்றுகிறது.  பெரும்பான்மை இந்தியர்களின் மன அமைப்பே சீரழிந்து விட்டது என்பது என் கணிப்பு.    சுமார் 20 ஆண்டுகளாக அனுதினமும் இந்த சமூகத்தை ஆராய்ந்து வருபவன் என்ற முறையில் இதுதான் என் அவதானம்.  திரும்பவும் சொல்கிறேன்.  அராத்து சொல்வது அனைத்தும் உண்மை.  மறுக்கவில்லை.  ஆனால் இன்னும் சில விஷயங்கள் உள்ளன.   நான் சந்தித்த, பேசிய அத்தனை பெண்களும் இளம் வயதில், சிறு வயதில் அவர்களின் மாமன்கள், சித்தப்பன்கள், அண்ணன்கள், அரிதாக சில சமயங்களில் அப்பன்களால் வன்கலவியோ அல்லது பாலியல் சீண்டல்களினாலோ பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  சமீபத்தில் ஒரு எஞ்சினியர் பையன் – பார்க்க பால் வடியும் முகம் கொண்டவன் – தன் பக்கத்து வீட்டுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று பெட்ரோல் ஊற்றிக் கொன்றான் இல்லையா?  எத்தனை சதவிகிதம் என்று தெரியவில்லை; ஆனால் பல பேர் சிறுமிகளின் ஜனன உறுப்பில் தடவும் மனம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.  பல பெண்கள் சொல்லியிருக்கிறார்கள் என்னிடம்.  ஆறு வயதில் இந்தக் கொடுமையான அனுபவத்தை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.  காஷ்மீர் சம்பவத்துக்கும் இங்கே அன்றாடம் குடும்பங்களில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இங்கே பலாத்காரம் செய்த பிறகு கொல்வதில்லை.  ஆனால் பல சமயங்களில் அதுவும் நடக்கிறது.  வாரம் ஒருமுறையாவது சென்னையில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.

ஒரு பெண் சொன்னார், இரவு பத்து மணி.  ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு தெருவில் ஒரு பெண் தன்னுடைய 18 வயது மகனோடு வீட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணை அந்தத் தெருவில் உள்ள பரோட்டாக் கடையில் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த விளிம்பு நிலை மனிதர்கள் அசிங்க அசிங்கமாகப் பேசி கலாட்டா செய்தார்களாம்.  அது ஒரு மனித நடமாட்டம் இல்லாத பகுதி என்றால் அவர்கள் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்திருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

மேலும், குஜராத்தில் கொல்லப்பட்டது 3000 பேர்.  கொன்றது யார்?  நரகத்திலிருந்து குதித்தவர்களா?  பொதுஜனம்.  முஸ்லீம்களைத் தங்களின் எதிரிகளாக நினைக்கும் , முஸ்லீம்களைத் தங்கள் மதத்துக்கு அச்சுறுத்தலாக நினைக்கும் இந்துப் பொதுஜனம்.  இந்து மதம் அழிந்து விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.  முஸ்லீம்களால்தான் தங்கள் மதம் அழியும் என்று அந்த மிகச் சிலபேர் நினைக்கிறார்கள்.  அந்தச் சிலரின் கவலை பெரும்பான்மையினரையும் தொற்றும் போது கலவரம் வெடிக்கிறது.

மோடியின் வருகையினால் இந்தியா முழுவதுமே ஃபாஸிஸ மனநிலை வளர்ந்து விட்டது.  அதைவிட ஆபத்தான விஷயம்,  படித்தவர்களே ஃபாஸிஸ நோக்கில் சிந்திக்கிறார்கள் என்பதுதான்.  இப்போது ஆஸிஃபாவுக்காக வருந்தும் பலருமே இந்துத் தீவிரவாதிகளாக இருப்பதை நான் அவதானித்து வருகிறேன்.  அதனால்தான் தொடர்ந்து எழுதி வருகிறேன், இன்றைய இந்தியா 1930களில் இருந்த ஜெர்மனியை எனக்கு நினைவூட்டுகிறது.

இன்னும் 30 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆண்டாலும் மோடி நம் அனைவரின் மனதிலும் விதைத்து விட்ட ஃபாஸிஸ விஷத்தைக் களைவது கடினம்…