காலா – எண்டெர்டெயின்மெண்டா ? அரசியலா ? – அராத்து

முதலில் எண்டர்டெயின்மெண்ட் :-

நான் ரஜினி படங்களை ஜாலியாக ஒரு எண்டர்டெயின்மெண்டாகத்தான் பார்ப்பேன். காலா என்னை இந்த விஷயத்தில் முழுமையாக ஏமாற்றியது. என்னால் தியேட்டரில் உட்காரவே முடியவில்லை. நெளிந்து கொண்டு இருந்தேன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரசியம் ஒரு மண்ணும் இல்லை. சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் காட்சிக்கோர்வைகள் நகர்ந்து கொண்டு இருந்தன. சரி , ஒரு நச் காமடி , இல்லை , ஹீரோ – வில்லன் புத்திசாலி விளையாட்டுக்கள் என்று ஒன்றுமே இல்லை. ஏன் இப்படி ?

ஏனென்றால் படத்தில் “கதை” என்ற வஸ்துவே கிடையாது. கதை ஒரு லைன் தான். தாராவி மக்கள் இடத்தை “பெரிய” வர்கள் பிடுங்கப் பார்க்கிறார்கள். அதை காலா தடுத்து நிறுத்துகிறார்.இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.அதனால் காட்சிகள் சம்மந்தம் இல்லாமல் தறிகெட்டு பறக்கின்றன. படத்தில் முக்கால்வாசி காட்சிகள் கதைக்கு சம்மந்தம் இல்லாதவைகள். சரினாவுடனான பழைய காதலும் அது சம்மந்தப்பட்ட காட்சிகளும் படத்தின் கதைக்கு எந்த அளவுக்கு உதவுகின்றன ? இந்த லட்சணத்தில் இந்த காதல் கதைக்கு ஃப்ளாஷ்பேக் வேறு.அதுவும் அனிமேஷனில்…….

“சீன்” “சீன்” ஆக யோசித்து , நடுவாந்திர ரசனையுடன் எடுத்திருக்கிறார்கள். சீன்கள் என்ற அளவில் அவை வெற்றி பெறுகின்ற்ன , ஆனால் கதையோடு ஒன்றுவதில்லை. பல சீன்களை எடுத்து எடிட்டரிடம் கொடுத்து , எப்படியாச்சும் ஒட்டி , ஒரு கதையாக்கி குடுத்துருப்பா என்று சொல்லியிருப்பார்கள் போல. உதாரணத்திற்கு , போலீஸ் ஸ்டேஷனில் , இவங்கள்ளாம் யாரு என்று ரஜினிகேட்பது ரகளையான சீன். அதேபோல ஈஸ்வரி ராவ் , நான் போய் என் பழைய காதலனை பாத்துட்டு வந்துடறேன் என்று சொல்வதும்…..

சீன்கள் தன்னளவில் , தனிப்பட்ட முறையில் நன்றாக இருக்கின்றன, ஆனால் படத்தின் கதை சம்மந்தப்பட்டு வெயிட்டான ஒரு சீனும் இல்லை. கதையில் சத்து இல்லாததால் , கதை அங்கும் இங்கும் அலைந்து , சம்மந்தமில்லாத காட்சிக்கோர்வைகளுடன் நகர்வதால் ஒரு வணிகப்படத்திற்கான சுவாரசியம் ஏதும் இன்றி கொட்டாவி வருகிறது.

அடுத்து அரசியல் :-

அர்சியல் ரீதியான படமா என்றால் அங்கும் ஏமாற்றமே!

ஒரு அரசியல் ரீதியான படம் என்பதற்கான சீரியஸ் டோன் படம் முழுக்கவே இல்லை. அமெச்சூர்தனமாக கையாண்டிருப்பது எரிச்சலைத் தருகிறது. எந்த சீரியஸான அரசியல் படத்தில் இந்த படத்தில் இருப்பது போன்ற அச்சு பிச்சு அசட்டுத்தனமான காட்சிகள் இருக்கின்றன ? ஒரு அரைகுறை மசாலா வணிக திரைப்படத்தில் ,இதைப்போன்ற வலிய திணிக்கப்பட்ட அரசியல் காட்சிகள் பின்னடைவையே ஏற்படுத்தும். உதாரணமாக, தன் மனைவியையும் , மகனையும் கொன்றவன் , நான் தான் கொன்னேன் என்று சொல்லும்போது ,அவனிடம் போய் ,பொறுக்க எதிரில் அமர்ந்து கொண்டு கருப்பு என்பது வானவில் என்கிற ரீதியில் வசனம் பேசிக்கொண்டு இருப்பது என்ன எழவு லாஜிக் ?

ஒரு அரசியலை பேச வேண்டிய படம் என்றால் அதற்குண்டான கட்டுக்கோப்பான ஸ்கிரிப்ட் இருக்க வேண்டும். அடிநாதமாக அந்த அரசியல் ஓடிக்கொண்டு இருக்க வேண்டும்.அந்த அரசியல் பொட்டில் அடித்தது போல பொறி கலங்க வேண்டும். கண்ணம்மா ,கண்ணம்மா என்று நொட்டிக்கொண்டு இருக்கக்கூடாது.

தான் பேசும் அரசியலில் ,தனக்கான நியாயம் முறையாக வெளிப்படவேண்டும். இந்த படத்தில் காலா தான் ஹீரோ.அவர் பேசும் அரசியலுக்கு அவர் ஒரு நியாயமும் செய்யவில்லை. ஒரு அமெச்சூர் தாதா. எல்லா ரவுடியும் செய்யும் அதே ரவுடியிஸம்.அவர் மூலம் தான் அரசியல் பேசப்படுகிறது.

இதில் எனக்கு ஒரு சந்தேகம்,சந்தேகம் மட்டுமே…….தாராவியில் இதுவரை ஒரு தலித் “டான்”ஆக இருந்திருக்கிறாரா?தாராவியை விடுங்கள்….வேறு ஏதேனும் பெரிய ஏரியாவில் தலித் “டான்”ஆக இருந்திருக்கிறாரா?எனக்குத் தெரிந்து இல்லை.ஒரு தலித்தை”டான்” ஆக மற்ற ஜாதியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.ஒரு தலித்தால் “டான்”ஆக கூட ஆக முடியாது.இதுதான் யதார்த்தம்,இதுதான் கள நிலவரம்.இதுதான் அரசியல்.இந்த அரசியலைப் பற்றித்தான் பேச வேண்டும். இந்தப் படத்தில் இதற்கு நேர்மாறாக தலித் ஹீரோ டான் ஆக கட்டமைக்கப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது.

அதிலும் ஒரு தலித் ,என் பர்மிஷன் இல்லாமல் வெளில போக முடியாது என மேல்ஜாதி , பொருளாதார ரீதியாக பலமிக்க , அரசியல் ரீதியாக பலமிக்க ஒரு ஆளை தெனாவட்டாக இன்றைய இந்தியாவில் சொல்ல முடியுமா? சொல்ல முடியும் என்பது உங்கள் அரசியலா ? சொல்ல முடியாது என்பது உங்கள் அரசியலா மிஸ்டர் ,திரு , ரஞ்சித் அவர்களே !

அடுத்த சந்தேகம் தாராவியில் வசிப்பவர்கள் அனைவரும் தலித்களா ?

இன்னொன்று தலித்கள் என்றாலே கருப்பு என்பது பொதுப்புத்தி……உண்மையில் அப்படி அல்ல.படம் அதைத்தானே சொல்லியிருக்க வேண்டும். ஈஸ்வரி ராவைக் கூட கொஞ்சம் சிவப்பாக காட்டிய இயக்குநர் ,சமுத்திரக்கனியை ஏனோ கரி அடித்து விட்டு விட்டார்.இதற்கே சமுத்திரக்கனி ஒன்றும் கோவைப்பழ சிவப்பு இல்லை.அவருடைய இயற்கையான நிறத்தை காட்டாமல் அவருக்கு ஏன் கருப்பு அடித்து விட்டனர் ?

ஒரு சமூகத்திற்கு இயல்பாகவே பல அழகியல் கூறுகள் உள்ளன.அதை வெளிப்படுத்தினாலே போதும். ஆப்பிரிக்கர்கள் அழகியலை,கலாச்சாரத்தை ,ஸ்டைலை ,நடனத்தை ,இங்கே சென்னையில் சமீபமாக சில தலித்கள் உபயோகிக்க ஆரம்பித்து உள்ளனர்.அதை மொத்த இனத்துக்கான அடையாளமாக படம் முழுக்க இளைஞ்ர்கள் அந்த ஸ்டைலில் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பது உறுத்தலாக உள்ளது.

ஒரு அரைகுறை ஆஃபாயில் படத்தில் நல்ல அரசியலை பேசி விட்டேன் என்பதாலேயே ,அது உன்னத படமாகி விடாது.ஒரு அரசியலை படத்தில் பேசுவதற்கு நல்ல அரசியல் ஞானமும், தேர்ந்த கலையுணர்வும் இருக்க வேண்டும். சினிமா மேக்கிங்க் நாலேட்ஜும், சினிமா மொழியும் அதைவிட முக்கியம்.

இதெல்லாம் இல்லையெனில் ,பவர் ஸ்டாரை வைத்து , டிரான்ஸ்ஜெண்டர்களின் அரசியலை பேசுகிறேன் என்று உப்புமா கம்பனிகள் கிளம்பி விடும்.

ரஜினி தலித்தாக நடித்து விட்டால் , தாதாவாக நடித்து விட்டால் , தலித் எல்லாம் சூப்பர் ஸ்டார் ஆகி விடுவார்களா? தாதாவாக ஆகிவிடுவார்களா ? இதுதான் தலித் அரசியலா ? இந்த ரொமாண்டிசைஸ் எதற்கு ? எண்டர்டெயின்மெண்ட் என்றால் ஓக்கே!!! அரசியல் என்றால் சாரி……..

சரி ,ஜாலி டிட் பிட்ஸை பார்த்து விடலாம்……

1) நானா படேகருக்கு எப்படி பிளாக் கேட்ஸ் ? ஓ….தனியாக வைத்துக்கொண்டாரா? பிஸ்டல் வைத்துக்கொள்வதற்கே கலக்டர் பர்மிஷன் வேண்டும் மேன்…

2)தலைவா படத்தில் , விஜய்யையை பல பெண்கள் தொடர்ந்து காப்பாற்றிக்கொண்டு வருவதைப் போல ,இதில் ரஜினியை பலரும் தங்கள் உடம்பில் குண்டடி பட்டு ,காப்பாற்றி வருகிறார்கள். தலைவர் மருந்துக்கு கூட யாரையும் காப்பாறுவதில்லை.வொண்டர்பாரையாவது காப்பாற்றுவாரா என்று பார்ப்போம்.

3)ரஜினி நடிப்பு சில இடங்களில் அல்டிமேட். அமிதாப் , மோகன்லால் , கமலைத் தாண்டி இருந்தது. விழலுக்கு இறைத்த நீர்.உதாரணமாக ,குடித்துக்கொண்டு இருக்கும் சீக்வென்ஸில் , ஈஸ்வரி ராவிடம் , உனக்காக உட்காருகிறேன் என்று சொல்லும் இடம்.க்ளாஸ்…..

4)ஆனால் நானா படேகர் திரையை ரஜினியுடன் பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம் ,நானா படேகரே திரையை ஆக்கிரமிக்கிறார். ரஜினி போட்டி மனப்பான்மையில் ,சீரியஸாக நடிக்கிறார்.நானா வரும்போது ,ரஜினியிடம் இருக்கும் அந்த “அசால்ட்” இல்லை.சூப்பர் ஸ்டாரும் தகுதியான போட்டி வந்தால் டென்ஷன் ஆவார் என்பது ஆரோக்கியமானதுதான்.

5)ரஞ்சித் படங்களில் ஒரு சின்ன கலவரம் நடந்தால் புருஷன் – பொஞ்சாதி , காதலன் -காதலி 30 வருஷம் பிரிஞ்சிடுவாங்க. நடுவுல தேடக்கூட மாட்டாங்க……

6) இந்த கடைசி பாயிண்டை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. அநியாயம்….அக்கிரமம்….அராஜகம். காஃபி ஷாப்பில் தன் பழைய காதலியை(!) தாத்தா ரஜினி சந்திக்கிறார். நான் உன்னை மொத மொறை பாத்தப்ப பிரவுன் கலர் ஜட்டி போட்டு இருந்த என்பது போன்ற வழிசல் வார்த்தைகளை முதலில் தலைவர்தான் விடுகிறார்.சரினா பேச ஆரம்பித்ததும், எனக்கு பொண்டாட்டி இருக்கா …..நாம பழைய மாதிரி பழக முடியாது என்றெல்லாம் 30 வயசு ஹீரோ கணக்காக பேரன் பேத்தி எடுத்த காலா பேசுகிறார்.

யோவ் பழகித்தான் பாருங்களேன்யா ….ஏன்யா லந்து பண்றீங்க ?.நாம் தமிழர் வாழ்வில் 70 + வயசுல ஆள் காட்டி விரல் விரைச்சாலே பெரிய விஷயம்….:-)