460 புத்தகங்களில் கையெழுத்திட்டேன்…

நேற்று ஒரு வித்தியாசமான நாள்.  மொத்தம் 460 புத்தகங்களில் கையெழுத்திட்டேன்.  பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 2.  அப்போது அதன் பதிப்பாளர் ராம்ஜியும் நானும் சிலவற்றைக் கதைத்தோம்.  காயத்ரி உட்பட எல்லோருக்கும் மகிழ்ச்சி.  ஆனால் எனக்கு ஆசை அதிகம்.  ஆசை அதிகம் இருப்பவரைத் திருப்தி செய்ய முடியாது.  இந்தப் புத்தகம் தயாரிப்பில் தமிழ்ப் புத்தக உலகைப் பொறுத்த வரை முதல் தரம்.  ஆனாலும் தில்லி தாம்ஸன் பிரஸ் மாதிரி யாராலும் செய்ய இயலாது.  அங்கே அச்சடித்தால் விலை கட்டுப்படி ஆகாது.  (மார்ஜினல் மேனைப் பார்த்து எல்லோரும் வியப்பதன் காரணம், அது தாம்ஸன் பிரஸ்ஸில் அடித்தது.)  சரி, பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று டைப்செட்டிங்குக்குப் போய் விட்டது.  அதை தாம்ஸனில் அடிக்க என்ன தேவை என்றேன்.  2000 பிரதி போகும் என்றால் அங்கே அடிக்கலாம்.

”சரி, நானே 1000 பிரதி ப்ரீ ஆர்டர் போடுகிறேன்.  என் நண்பரிடம் சொல்லி 500 காப்பி ப்ரீ ஆர்டர் போடச் செய்கிறேன்.  பிரதி 9 கோடி தமிழ் ஜனத்தில் மீதி 500 பிரதியை வாங்க ஆட்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தாம்ஸனில் அடிக்கலாமா?” என்றேன்.  உடனடியாக மறுத்து விட்டார் ராம்ஜி.  ஆக, 2000 பிரதி போகும் என்றால்தான் நாம் இப்போது பழுப்பு நிறப் பக்கங்கள் இராண்டாம் பாகத்தின் உயர்தரத்தையும் மிஞ்சிய தரத்துக்குப் போக முடியும்.  அது வாசகர்களின் கையில்.

460 நூல்களில் கையெழுத்துப் போட சுமாராக நான்கு மணி நேரம் ஆயிற்று.  ஒவ்வொருவரின் பெயரையும் எழுதியே கையெழுத்துப் போடுகிறேன் என்றேன்.  ராம்ஜியும் காயத்ரியும் முறைத்ததால் அந்த யோசனையைக் கை விட்டேன்.  போட்டிருந்தால் அவர்கள் ஒவ்வொரு பெயராக எடுத்து சரியான முகவரியில் வைக்க ஒரு முழுநாள் ஆகியிருக்கும்.

தரையில் அமர்ந்து அந்தக் காலத்து கணக்கப்பிள்ளை டெஸ்க் உபயோகப்படுத்தினேன்.  அப்போதெல்லாம் அது மரத்தில் இருக்கும்.  இப்போது விரித்து மடக்குகிறாற்போல் ஜப்பானிய ஸ்டைல்.   இடையில் பாத்ரூம் போக ஒரே ஒருமுறை எழுந்து போனேன்.  ராம்ஜி கேட்டார், கால் வலிக்கவில்லையா என்று.  பேண்ட் அணிந்திருந்ததால் கொஞ்சம் அசௌகரியம்.  வேஷ்டி என்றால் பத்து மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருப்பேன்.  வாசகர் வட்டச் சந்திப்புகளில்  மாலை ஏழு மணிக்கு அமர்ந்தால் காலை ஐந்து மணி வரை போகும் கச்சேரி.  அவ்வப்போது ரெமி மார்ட்டின்.  கடவுளே என் மீது பொறாமை கொண்டு இப்போது ரெமி மார்ட்டினைப் பறித்து விட்டார்.  போகட்டும்.  மௌனியும் இது போல் பனிரண்டு மணி நேரம் இடைவெளி இல்லாமல் பேசுவாராம்.  இடையில் இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு, கொல்லைப்புறமாகப் போய் இறக்கத்தில் இருக்கும் சாராயக் கடையில் ரெண்டு கிளாஸ் பட்டை சாராயத்தை ஒரே மூச்சில் குடித்து விட்டு, வெற்றிலைப் பாக்கு போட்டபடி வருவாராம்.  சக எழுத்தாளர்களுக்கு வெற்றிலை வாசம்தான் வரும்.  மாமிக்கு என்ன தெரியும்?  அவர் சாராயத்தைக் கண்டாரா விஸ்கியைக் கண்டாரா?  எல்லா ஆம்பிளைகளுமே இப்படித்தான் மணப்பார்கள் போலும் என்று நினைத்திருப்பார்.   அந்த மாதிரி ஒருக்கணம் வெளியே போய் காரில் பதுக்கி வைத்திருந்த ஆஸ்த்ரேலியன் ஒயினில் ஒரு டம்ளர் அடித்து விட்டு கம்மென்று வந்து கையெழுத்துப் போடலாமா என்று நினைத்தேன்.   சரி, பொதுநலம் பேணுவோம் என்று கையெழுத்துக்கு நடுவிலேயே ரெய்ன் ட்ரீ ரூஃப் கார்டன் போலாமா என்று ராம்ஜியைக் கேட்டேன்.  அந்தப் பேச்சே வேணாம் என்று சொல்லி விட்டார் அவர்.  மௌனி செய்ததுதான் சரி என்று நினைத்துக் கொண்டேன்.

signing in 460 books

எந்த எழுத்தாளராவது ஒரே நாளில் 460 புத்தகங்களில் கையெழுத்துப் போட்டிருப்பாரா என்று தெரியவில்லை.  இதை சாத்தியமாக்கிய ராம்ஜிக்கும் காயத்ரிக்கும் நன்றி என்று சொன்னால் அது ஒரு சடங்கு மாதிரி ஆகி விடும்.  இருந்தாலும் அதைத் தவிர வேறு வார்த்தை இல்லை.  இப்படி ஒரே நாளில் 460 பிரதிகளில் கையெழுத்துப் போடுவதும் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது.  இதே தமிழ்நாட்டில்தான் எழுத்தாளன் என்றால் யார் என்றும் கேட்கிறார்கள்.  ஒன்னுமே புரியல.