நானும் ஒரு ஏழைத்தாயின் மகன்தான் : மனுஷ்ய புத்திரன்

………………………….
மனுஷ்ய புத்திரன்
………………
இந்த நாட்டின் கோடானு கோடி
ஏழைத்தாய்களைப் போலவே
என் தாயும் ஒரு ஏழைத்தாயாகத்தான் இருந்தாள்
ஆனால்
அவள் ஒருபோதும் தன்னை
ஒரு ஏழைத்தாய் என்று சொல்லிக்கொண்டதில்லை
மேலும் எங்களை
ஒரு ஏழைத்தாயின் பிள்ளைகள் என்று
அவள் எங்களுக்கு சொல்லித்தரவும் இல்லை

அவள் எங்களுக்கு
நிறைய சொல்லித் தந்தாள்
ஏழ்மையை ஒரு மூலதனமாக பயன்படுத்தக் கூடாது
ஏழ்மையை ஒரு விளம்பரப்பொருளாக்கி
ஏழைகளை அவமதிக்கக் கூடாது
ஏழைகளின் தலையில் நடந்துபோய்
அதிகாரத்தின் பீடங்களை அடையக் கூடாது
ஏழமையை மறைக்க விலையுயர்ந்த கோட்டுகளை
அணியக் கூடாது

ஆனால்
என் அம்மா சொல்லிக் கொடுத்ததிலேயே
மிகச்சிறந்த ஒன்று இருக்கிறது
ராஜகுமாரர்களின் கண்களை
சந்திக்கும்போது நம் பார்வைகளை
தாழ்த்திக்கொள்ளக் கூடாது என்பதுதான் அது

ஒரு ஏழைத்தாயின் மகனான நான்
அதை வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்து வந்திருக்கிறேன்
எந்த அரசனின் கண்களையும்
நான் சந்திக்க தயங்கியதில்லை
எந்த அரசகுமாரனின் பார்வையாலும்
நான் தடுமாறியதில்லை
ஏழைகளிடம் இழப்பதற்கு எதுவுமில்லாததால்
அவர்களிடம் பயப்படுவதற்கும் எதுவுமில்லை

ஏழைத்தாயின் பிள்ளைகளான எங்களிடம்
குற்றத்தின் சுமைகள் இல்லை
நாங்கள் அரசர்களின் கண்களைப் பார்த்து
கேள்வி கேட்போம்
இளவரசர்களின் கண்களை
கூச்சமின்றிப் பார்ப்போம்
இளவரசிகளின் கண்களில்
காதலோடு முத்தமிடுவோம்

ஒரு ஏழைத்தாயின் மகனாக இருப்பது
ஏழ்மையிடமிருந்து கற்றுக்கொள்வது
ஏழ்மையை முகமூடியாக்கிகொள்வதற்குப்பதில்
ஏழமையின் முகத்தை மாற்றுவது

எங்கள் வாழ்நாளில் இப்போது
ஏழ்மை என்பது
ஏழைத்தாயின் மகன் என்பது
ஒரு துயரம் என்பதற்குப்பதில்
ஒரு அபத்த நாடகமாகி க்கொண்டிருக்கிறது
ஒரு கேலிச்சித்திரமாகிக்கொண்டிருக்கிறது

வாழ்நாளில் முதல் முதலாக
எனக்கு அவமானமாக இருக்கிறது
நான் ஒரு ஏழைத்தாயின் மகன்
என்று சொல்லிகொள்வதில்

21.7. 2018
பகல் 3. 41
மனுஷ்ய புத்திரன்