ஹெச். ராஜாவின் அவதூறுக்கு எதிராக மனுஷ்ய புத்திரன்

என்னை அவர்கள் கொல்ல விரும்புகிறார்கள்

மனுஷ்ய புத்திரன்
…………….
எனது கவிதையில் எந்த இந்து தெய்வம் குறித்தும் எந்த நிந்தனையும் கிடையாது. அது பெண்ணின் பேராற்றல் குறித்த கவிதை என்பதை எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவார்கள்.என் வாழ்நாளில் எவருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் எதையும் நான் எழுதியதில்லை.

நேற்று ஹெச்.ராஜா எனக்கு எதிராக அவதூறாக ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தூண்டிய வன்முறை காரணமாக ஏராளமான கொலைமிரட்டல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேரடியாக குறுஞ்செய்திகளாக ஆபாசச்செய்திகள், கொலை மிரட்டல்கள் அனுப்பப்படுகின்றன. எனது அலைபேசி எண் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இடையறாத தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து ஹெச்.ராஜா முயன்றிருக்கிறார். அவர் எனக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் இந்த பொய்யான பிரச்சாரத்தின் மூலம் எனக்கு நேரிடக்கூடிய எந்த அபாயத்திற்கும் ஹெச்.ராஜாவே பொறுப்பு.

ஜனநாயகத்திற்காகவும் கருத்துரிமைகாகவும் தொடர்ந்து போராடி வந்திருப்பவன் என்ற முறையில் எனது பாதுகாப்பிற்கான பொறுப்பை தமிழ்சமூகத்திடமே ஒப்படைக்கிறேன். ஜனநாயக சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் மற்றொரு நிகழ்வு இது.

– மனுஷ்ய புத்திரன்