மெதூஸாவின் மதுக்கோப்பை : சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஃப்ரெஞ்ச் துறையில் நான் ஆற்றிய உரை

மதுரை நண்பர்கள் மதுரை புத்தக விழாவில் லியோ புத்தக அரங்கில் மெதூஸாவின் மதுக்கோப்பையை வாங்கிக் கொள்ளலாம். என் எழுத்து வாழ்வில் மெதூஸாவின் மதுக்கோப்பை தான் ஆக முக்கியமான புத்தகம். ஏனென்றால், அது என்னுடைய ஃப்ரெஞ்ச் தொடர்பைப் பேசுகிறது. எனக்கு ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரியாது; சாருவுக்கு ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரியும். என் புத்தகமும் நாலு பிரதி விற்கிறது; சாருவின் புத்தகமும் நாலு பிரதி விற்கிறது என்று ஒரு அன்பர் எழுதியிருந்தார். அது தவறு. அவர் புத்தகம் நாற்பதாயிரம் பிரதி விற்கிறது. என் புத்தகம் நானூறுதான் அதிக பட்சம். மேலும், அவர் நாளை புக்கர் பரிசும் நோபல் பரிசும் பெறக் காத்திருக்கிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வாங்குவார். ஏனென்றால், அவர் கதைகள் ஐரோப்பாவில் பிரபலம் ஆகி விட்டன. ஃப்ரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கிட்டத்தட்ட சல்மான் ருஷ்டி ரேஞ்சுக்குப் போய் விட்டார். (பெருமாள் முருகன் அல்ல; அவர் சல்மான் ருஷ்டிக்கும் மேலே. ஷேக்ஸ்பியர் என்று வைத்துக் கொள்ளுங்கள்…) எனவே, அந்த அன்பர் என்னைப் போன்ற விளிம்பு நிலை எழுத்தாளனையும் அவரையும் ஒப்பிடக் கூடாது.

போகட்டும். பொதுவாக முன்பதிவு பற்றி எழுதினால் முன்னூறு நானூறு பேர் பணம் அனுப்பி வாங்குவார்கள். மெதூஸாவுக்கு வெறும் 70 பேர் தான் பணம் அனுப்பி வாங்கியுள்ளனர். முன்பதிவு விற்பனையில் புத்தகத்தின் விலை 250 ரூபாய்தான். முன்பதிவை இன்னும் ஐந்து நாட்கள் நீட்டிக்கிறேன். 15 தேதிக்குள் வாங்கி விடுங்கள். கீழே வருவது சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஃப்ரெஞ்ச் துறையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. மெதூஸாவின் மதுக்கோப்பை இது பற்றியதுதான்.

***

18 வயதிலிருந்து எழுதி வரும் என்னுடைய எழுத்து வாழ்க்கையில் இது 47-ஆவது ஆண்டு.  ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு இது ஒரு நீண்ட பயணம்தான்.  இந்தக் காலகட்டத்தில் அநேகமாக நூறு புத்தகங்களை எழுதியிருப்பேன்.  பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் Tolstoy, Dostoyevsky என்று ரஷ்ய எழுத்தாளர்களிலிருந்தே தங்கள் எழுத்து வாழ்க்கையை ஆரம்பிப்பது வழக்கம்.  ஆனால் எனக்கு அது ஃப்ரெஞ்ச் இலக்கியத்திலிருந்து – அதிலும் குறிப்பாக Jean Paul Sartre-இடமிருந்து துவங்கியது.  கல்லூரி முதல் ஆண்டில் ஆங்கில வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் I am an existentialist என்று எழுதி அதை உச்சரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன்.  Exisitentialist என்ற வார்த்தையை உச்சரிப்பது அப்போது எனக்குப் பெரும் கடினமாக இருந்தது.  முதல்நாள்தான் Debonair பத்திரிகையில் அப்போது பிரபலமாக இருந்த ஹிந்தி நடிகை பர்வீன் பாபி I am an existentialist என்று சொல்லியிருந்தார்.  இப்படி எனக்கு நானே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு என்னிடம் வந்த ஆசிரியை நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து, Are you an existentialist? என்று புன்னகையுடன் கேட்டார்.  கூச்சத்துடன் எழுந்து தலையை மேலும் கீழும் ஆட்டினேன். அதே சமயம், அந்தப் பேராசிரியை மிக நேர்த்தியாக existentialist  என்ற வார்த்தையை உச்சரித்ததை மனதில் குறித்துக் கொண்டேன்.  அந்த ஆண்டு 1971. அப்போது ஆரம்பித்த தேடல் ஏழு ஆண்டுகளில் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலாக மாறியது.  அதற்குள் சார்த்தரின் L’Être et le néant, Critique de la raison dialectique போன்ற நூல்களையும் அவரது மற்ற எழுத்துக்களில் பெரும்பாலானவற்றையும் படித்திருந்தேன்.  அவருடைய Le mur, Intimité என்ற இரண்டு கதைகளை மொழிபெயர்த்தும் இருந்தேன்.  அதோடு கூடவே Jean Genet, Louis-Ferdinand Céline போன்றவர்களையும் படித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நிலையில் 1970களில் ஃப்ரெஞ்ச் தத்துவத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றம் எண்பதுகளில் இந்தியா வந்து சேர்ந்தது.  அந்தக் காலகட்டத்தில்தான் சார்த்தரின் போதாமையை நான் உணர ஆரம்பித்தேன்.  உண்மையில் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலே சார்த்தரை மறுத்து எழுதப்பட்ட நாவல்தான்.  இங்கே ஒரு சம்பவத்தை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  1968 – ஃப்ரான்ஸில் நடந்த மாணவர் மற்றும் தொழிலாளர் போராட்டம் நாட்டை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருந்தது.  அந்நாட்டின் சமூக அமைப்பையே அந்தப் போராட்டம் மாற்றி அமைத்தது.  இரண்டாம் உலகப் போரிலிருந்து ஃப்ரான்ஸின் முக்கியப்புள்ளியாக விளங்கிய Charles de Gaulle  தன் செல்வாக்கை இழந்தார்.  1969-இலேயே அவர் ராஜினாமா செய்தார்.  அந்த மாணவர் போராட்டத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும்.  போராட்ட மாணவர்களின் ஊர்வலத்தில் கலந்து கொள்ள முயன்ற சார்த்தர் அந்த மாணவர்களால் கிண்டலடிக்கப்பட்டார்.  ஒருகாலத்தில் How can one arrest Voltaire என்று சொன்ன ஷார்ல் தெ காலும் அவரால் வால்த்தேர் என்று சொல்லப்பட்ட சார்த்தரும் ஒரே நேரத்தில் செல்வாக்கை இழந்தனர்.

அப்போதுதான் பழமையான சிந்தனை முறைகளை அடித்துத் தள்ளி விட்டு எழுந்தது புதிய அலை.  அப்போது உருவான தத்துவவாதிகள் வாழ்க்கையைத் துண்டு துண்டாகப் -fragments- பார்க்க ஆரம்பித்தார்கள்.  இங்கே நாம் ஒரு முக்கோணத்தையும் Spiral-ஐயும் கற்பனை செய்து கொள்வோம்.  முக்கோணத்தின் உச்சியில் இருப்பது அதிகாரம்;  கீழே இருப்பது அதிகாரத்துக்கு அடங்கிய பிரஜைகள்.  இதுதான் இதுவரையிலான சிந்தனை.  ஃப்ரெஞ்ச் ஸ்ட்ரக்சுரலிஸ சிந்தனையாளர்கள் முதல் முறையாக அந்த முக்கோணத்தை அடித்துத் தள்ளி விட்டு Spiral- ஐ முன்வைத்தார்கள்.  ஸ்பைரலில் ஆரம்பம் இல்லை; முடிவு இல்லை; அதிகார மையம் இல்லை.

இந்த சிந்தனைப் பள்ளியில் முக்கியமானவர்கள்:  Roland Barthes, Jacques Derrida, Michel Foucault, Jacques Lacan.  அப்போது நடந்த ஒரு மிக முக்கியமான நிகழ்வு: Roland Barthes எழுதிய La mort de l’auteur என்ற கட்டுரை. தமிழ்நாட்டில் இரண்டு மூன்று பேர் சேர்ந்த ஒரு சிறிய குழுவாக நாங்கள் ஃப்ரெஞ்ச் Structuralists-ஐத் தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக மொழிபெயர்த்து வெளியிட்டோம்.  நாங்கள் வெளியிட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொரு கதைக்கு இடையிடையே ஃபூக்கோவின்  L’archéologie du savoir புத்தகத்திலிருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து அந்த நூலில் சேர்த்தோம்.  ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் இடையே சில பக்கங்கள் ஃபூக்கோ இருப்பார்.  ஒரு சக எழுத்தாளர் ஃபூக்கோவின் பிரேதத்தைத் தமிழ்நாட்டுத் தெருக்களில் சாரு இழுத்துக் கொண்டு வருகிறார் என்று என்னைக் கிண்டல் செய்து எழுதினார்.

Roland Barthes-இன் கட்டுரையான La mort de l’auteur-ஐ மொழிபெயர்த்தோம்.  உடனே ஒரு எழுத்தாளர் கேட்டார், ”அதை மொழிபெயர்த்த நீ சாகவில்லையே, உயிரோடுதானே இருக்கிறாய்?” என்று.  இதுபோன்ற கேலிகளும் கேள்விகளும் ஃப்ரெஞ்ச் தத்துவத்தில் மேலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ள தூண்டுதலைக் கொடுத்தது.  நான் அவர்களிடம் சொன்னேன், அந்த ஃப்ரெஞ்ச் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் நால்வரும் அதிகாரத்தை –அதிகாரம் (power) உடைக்கிறார்கள். நான் கொடுக்கிறேன் – நீ எடுத்துக் கொள்; நான் சிந்திக்கிறேன் – நீ பெற்றுக் கொள் என்ற அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் எழுத்தாளனைக் கீழே இழுத்து வாசகரையும் அந்தப் பிரதியின் உருவாக்கத்தில் இணைத்துக் கொள்வதையே Roland Barthes,  La mort de l’auteur என்று குறிப்பிடுகிறார் என்று சொன்னேன்.  சிறைச்சாலை, மருத்துவமனை, கல்விக் கூடங்கள், கோவில்கள், போலீஸ் நிலையங்கள் – இந்த இடங்கள் எல்லாமே.  இந்த இடங்களில் காணப்படும் uniforms, இந்த நிறுவனங்களின் கட்டிடங்கள் எல்லாமே அதிகாரத்தின் குறியீடுகளாக symbols இருப்பதை ஃபூக்கோவிலிருந்து எடுத்துக் கொண்டு விளக்கினேன்.  அது மட்டுமல்லாமல், open ended ஆன, fragments ஆன, absolute truth-ஐ நிறுவ முயலாத, ஏற்கனவே சிந்தித்து முடித்து விட்ட விடைகளைக் கண்டு பிடித்து விட்ட உண்மைகளை நிராகரிக்கும் பிரதிகளை உருவாக்கினேன்.  (என்னுடைய ஸீரோ டிகிரி என்ற நாவல் அப்படி உருவானதுதான்.) என் பிரதிகளில் விடைகளை அல்ல – கேள்விகளையே முன்வைத்தேன்.  என் எழுத்து essence என்பதற்கு எதிராக இருந்தது.  ஒற்றை அர்த்தம் என்பதற்கு எதிராக இருந்தது.  அதுவரை தமிழ் எழுத்து monolithic structures ஆகவே இருந்தன.  அதை நான் உடைத்தேன்.  இதற்குத்தான் ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகளும் எழுத்தாளர்களும் எனக்கு ஆதர்ஸமாக விளங்கினார்கள்.

ஃபூக்கோவின் பிரேதத்தை ஏன் தமிழ்நாட்டுத் தெருக்களில் இழுத்துக் கொண்டு திரிந்தேன் என்றால், ஃபூக்கோ பேசும் difference ஃப்ரான்ஸை விட இந்தியாவுக்குப் பொருத்தமாக இருந்தது.  ஃப்ரான்ஸிலாவது ஒரே மொழியையும், ஒரே மதத்தையும் கொண்ட நாடு.  ஆனால் இந்தியா பல்வேறு மதங்களையும் வழிபாட்டு முறைகளையும் இனங்களையும் மொழிகளையும் கொண்ட நாடு.  ஆனாலும் இந்த வித்தியாசங்களையெல்லாம் அழித்து விட்டு ஒற்றை மொழி, ஒற்றை அடையாளம், ஒரே மதம் என்ற – ஃபாஸிஸத்துக்கு வழிவகுக்கக் கூடிய சொல்லாடல்கள் அரசியல்ரீதியாக  கடந்த ஒரு நூற்றாண்டில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.  இந்தப் பெருநீரோட்டத்தில் நானும் அடித்துச் செல்லப்படாமல் ஜனநாயகரீதியாகச் சிந்திக்க எனக்குக் கற்றுக் கொடுத்ததே ஃப்ரெஞ்ச் ஸ்ட்ரக்சுரலிஸ சிந்தனையாளர்கள்தான்.

இதோ என் கையில் இருக்கும் மீட்சி என்ற little magazine 1991-இல் வெளிவந்தது.  இதில் மிஷல் ஃபூக்கோவின் Polemics, Politics and Problemetizations என்ற பேட்டி தமிழில் வெளியானது.  அதை விட முக்கியமாக Georges Bataille-இன்  L’experience interior இலிருந்து ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டுள்ளது.  என்னுடைய சிந்தனாமுறையையே புரட்டிப் போட்ட ஒரு நூல் இது என்று சொல்லலாம்.  இதில் பத்தாய் non knowledge பற்றிப் பேசுகிறார்.  எழுத்தின் fragmentation, ruination என்கிறார்.  Discourses-இன் inner meaning-ஐத் தேடி அலைவது அதிகாரத்துக்குக் கீழ்ப்படிதலாக அமையும் என்கிறார்.  எனவே வாசிப்பு என்பது அர்த்தத்தைத் தேடி அலைவதல்ல.   play of discourses ஐப் பதிவு செய்வதாகும்…

Michel Foucault-இன் சிந்தனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய Georges Bataille பற்றி L’histoire de l’oeil  நாவலின் மூலம் தெரிந்து கொண்டேன்.  ஒருமுறை அந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து விட்டு, என் உயிருக்கு அஞ்சி அதைப் பிரசுரிக்காமல் விட்டு விட்டேன்.  மற்ற தமிழ் எழுத்தாளர்கள் Albert Camus வாசித்துக் கொண்டிருந்த போது நான் இம்மாதிரி வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.  இந்தக் காரணங்களால் தமிழில் எழுதினாலும் நான் இங்கே ஒரு அந்நியனாகவே கருதப்பட்டேன்.  என் சொந்த நாட்டிலேயே எக்ஸைல் போல் வாழ்ந்து கொண்டிருப்பதும் என்னுடைய ஃப்ரெஞ்ச்னெஸ் காரணமாகத்தான்.  My oeuvre is this frenchness.  இதன் விளைவு என்ன ஆயிற்று என்றால், என்னுடைய 47 ஆண்டுக்கால எழுத்து வாழ்க்கையில் 30 ஆண்டுகள் என்னுடைய நூல்களை நானே பதிப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

என் பேச்சின் ஆரம்பத்தில் ஃப்ரெஞ்ச் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் ஒரு பிரதியில் essence என்ற ஒன்று இருப்பதை மறுத்தார்கள் என்று குறிப்பிட்டேன்.  இதை நான்  ஃப்ரெஞ்ச் சினிமாவின் மூலமாகவும் புரிந்து கொண்டேன்.  முக்கியமாக Jean Luc Godard, Alain Resnais, Alain Robbe-Grillet.   இவர்களில் குறிப்பாக Alain Robbe-Grillet எழுதிய மூன்றே பக்கங்களைக் கொண்ட La Plage என்ற சிறுகதை, எழுத்து பற்றிய என்னுடைய அடிப்படையான கோட்பாடுகளையே மாற்றி அமைத்து விட்டது.  மூன்று சிறுவர்கள் ஒரு கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.  அவ்வளவுதான் கதை.  இந்தக் காட்சியைத்தான் 1560 வார்த்தைகளில் எழுதுகிறார் Alain Robbe-Grillet. இந்தக் கதையைப் புரிந்து கொள்ள ஒருவர் திரும்பவும் Roland Barthes குறிப்பிடும் La mort de l’auteur என்ற கோட்பாட்டுக்குச் செல்ல வேண்டும்.  Tolstoy, Dostoyevsky போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் உங்களுக்கு நீதிபோதனைகளை வழங்குகிறார்கள்; ரஷ்ய இலக்கியத்திலேயே Vladimir Nabakov ஒருவர்தான் நவீனமான சிந்தனைகளைக் கொண்டவர் என்கிறார் Robbe-Grillet.  Robbe-Grillet பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே Tolstoy போல், Dostoyevsky போல் கதை சொல்பவர்களை – நீதி போதிப்பவர்களை விமர்சித்து தமிழ்ச் சூழலில் ஒரு literary outcaste ஆக வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு Alain Robbe-Grilletவும் அவரது சகாக்களும் எனக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தார்கள்.  மற்ற எல்லா ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களையும் விட  தன்னுடைய சிந்தனையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் Alain Robbe-Grillet என்று சொல்லியிருக்கிறார் Michel Foucault.

***

பத்ரிக் மோதியானோவுக்கு 2014-இல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாளின் அதிகாலையில் என் நண்பர் எனக்கு ஃபோன் செய்து பத்ரிக் மோதியானோ பற்றிச் சொல்லுங்கள் என்றார்.  அநேகமாக 1900-க்குப் பிறகு ஃப்ரெஞ்சில் எழுதிய பெரும்பாலான எழுத்தாளர்களைப் படித்து அவர்களைப் பற்றித் தமிழில் அறிமுகப்படுத்தி, சமயங்களில் மொழிபெயர்த்து, அவர்களைப் பற்றி விவாதித்தும் இருக்கிறேன் என்பதால் அந்த நண்பர் என்னிடம் அப்படிக் கேட்டிருக்கலாம்.  என்னுடைய 45 ஆண்டுக் கால ஃப்ரெஞ்ச் தொடர்புக்கு அந்த நண்பர் கேட்ட கேள்வியையே பெரும் வெகுமதியாகக் கருதுகிறேன்.  ஏனென்றால், 1900, 1901, 1902, 1903 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் Claudine novels என்று சொல்லப்பட்ட Claudine à l’école, Claudine à ParisClaudine en ménageClaudine s’en va  என்ற நான்கு முக்கியமான நாவல்களை எழுதி 19-ஆம் நூற்றாண்டின் Sappho என்று பெயர் எடுத்த Colette பற்றி நான் விரிவாக எழுதியிருந்தேன்.   அடுத்து, Serge Doubrovsky பற்றியும் அறிமுகம் செய்திருந்தேன் – இவர் 15 நாவல்கள் எழுதியிருந்தாலும் ஒன்று கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்று அறிகிறேன்.  ஒருமுறை என்னுடைய ஸீரோ டிகிரியைப் படித்து விட்டு எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். தான் எழுதும் autofiction போல் இருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நோபல் கிடைப்பதற்கு முன்னால் நான் மோதியானோவை வாசித்திருக்கவில்லை.  என்றாலும் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அன்று என் நண்பர் என்னிடம் கேட்ட கேள்வியை – அவர்  என் மீது கொண்டிருந்த நம்பிக்கையை – என் frenchness –க்கு உதாரணமாகச் சொல்லலாம்.  மோதியானோ எக்கச்சக்கமாக எழுதியிருக்கிறார்.  அவற்றில் ஒருசில நாவல்களையும் பெடிகிரி என்ற சுயவரலாற்று நூலையும் படித்திருக்கிறேன்.  மோதியானோ பற்றிச் சொல்வதாக இருந்தால் அவரைப் பற்றி மற்றவர்கள் சொன்னதை விட அவரே சொன்னதுதான் மிகவும் பொருத்தமாக இருந்தது.  ஆனால் மோதியானோ ஒரு எழுத்தாளர் தன் படைப்பை எழுதி முடித்த பிறகு அதிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விடுவதாகச் சொல்கிறார்.  அவரது நோபல் உரையில் அவர் சொல்கிறார்:

A novelist’s lack of awareness of and critical distance to his own body of work is due to a phenomenon that I have noticed in myself and many others: as soon as it is written, every new book erases the last one, leaving me with the impression that I have forgotten it. I thought I was writing books one after the other in a disjointed way, in successive bouts of oblivion, but often the same faces, the same names, the same places, the same phrases keep coming back in book after book, like patterns on a tapestry woven while half asleep.

So yes, the reader knows more about a book than the author himself.

ஆனால் நான் படித்தவரை அவரைப் பற்றி அவர் சொன்னதுதான் அவரைப் பற்றிய மிகச் சரியான மதிப்பீடாக உள்ளது.  நாம் வரலாற்றை மறக்க விரும்புகிறோம்.  மறந்தும் விடுகிறோம்.  அதன் காரணமாக வரலாற்றில் நாம் முன்பு செய்த பிழைகளையே மீண்டும் மீண்டும் செய்கிறோம்.  உதாரணமாக, இரண்டாக உலகப் போரை எடுத்துக் கொள்வோம்.  அதை ஒரு கெட்ட கனவாக மக்கள் மறக்க விரும்புகிறார்கள். அதைப் பற்றிப் பேசவே தயங்குகிறார்கள்.  அந்தத் தயக்கத்தின் மூலம், அந்த செயற்கையான மறதியின் மூலம் அப்படி ஒரு மனிதப் பேரழிவே நடக்கவில்லை என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.  ஆனால் மோதியானோ அந்தக் கெட்ட கனவை மீண்டும் மீண்டும் தனது எழுத்தின் மூலம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.  அவர் சொல்வதைப் பாருங்கள்.  …often the same faces, the same names, the same places, the same phrases keep coming back in book after book, like patterns on a tapestry woven while half asleep.  இப்படி ஞாபகப்படுத்திக் கொள்வதன் மூலமே நாம் செய்த வரலாற்றுப் பிழைகளிலிருந்து விடுதலை அடைய முடியும்.  இப்படி ஞாபகப்படுத்திக் கொள்வதன் மூலமே அப்படிப்பட்ட பேரழிவுகளை மீண்டும் நாம் உருவாக்காமல் இருக்க முடியும்.

இதற்கு உதாரணமாக மோதியானோ குறிப்பிடும் ஒரு அமெரிக்க எழுத்தாளர் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.  Tristan Egolf என்பது அவர் பெயர்.  அவர்தான் அமெரிக்காவின் மிகச் சிறந்த எழுத்தாளர் என்கிறார் மோதியானோ.  அவருடைய முதல் நாவலை 70 அமெரிக்கப் பதிப்பகங்கள் மறுதலித்தன.  அதனால் ஃப்ரான்ஸ் வந்த எகால்ஃப் பாரிஸ் தெருக்களில் கிதார் வாசித்து பாடிப்  பிழைத்துக் கொண்டிருந்தார்.  அமெரிக்காவில் அவர் ஒரு punk rock band-இல் பாடிக் கொண்டிருந்தவர்.  அப்போது தற்செயலாக மோதியானோவின் மகள் Marieயைச் சந்தித்தார்.  மாரி எகால்ஃபைத் தந்தையிடம் அறிமுகம் செய்ய, மோதியானோ மூலமாக Gallimard பதிப்பகத்தில் அவருடைய முதல் நாவல் வெளிவந்தது.

இப்போது நாம் யோசிக்கலாம்.  Tristan Egolf-க்கும் பத்ரிக் மோதியானோவுக்கும் என்ன சம்பந்தம்?  Tristan Egolf-க்கும் Paris under Nazi occupation-க்கும் என்ன சம்பந்தம்?  2003-ஆம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்க ராணுவம் புகுந்த போது Abu Ghraib சிறைச்சாலையில் நடந்தது என்ன?  ஹிட்லரின் நாஜி concentration centre-களில் என்ன நடந்ததோ அதேதான் அந்த சிறைச்சாலையில் நடந்தது.  Lynndie England என்ற பெண் அதிகாரியும் மற்ற சில அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் ஈராக்கியர்களைப் பிடித்து நிர்வாணமாக்கி, நாயை இழுப்பது போல் சங்கிலியால் இழுத்துச் சென்றார்கள்.  எல்லோரையும் நிர்வாணமாக நிற்கச் செய்து அவர்களை masturbate பண்ணச் செய்தார் லிண்டி இங்லாண்ட்.  இதையெல்லாம் மிகப் பெருமிதமாக புகைப்படமும் எடுத்தார்.  அபு க்ராய் புகைப்படங்களில் மிகவும் பிரபலமான ஒன்று – பத்துப் பதினைந்து பேர் நிர்வாணமாக ஒருவர் மீது ஒருவர் – உயிரற்ற உடல்களைப் போல் – பிரமிட்டைப் போல் குவிந்து கிடக்கும் புகைப்படம்.  லிண்டி இங்க்லாண்டும் மற்ற ராணுவத்தினரும் பிறகு அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.  மூன்று ஆண்டு சிறைவாசம் முடிந்து வெளியே வந்த லிண்டியிடம் பத்திரிகையாளர்கள், “நீங்கள் செய்த செயல்களுக்காக வருத்தப்படுகிறீர்களா?” என்று கேட்டதற்கு லிண்டி சொன்னார்: “இல்லை.  எதற்காக வருத்தப்பட வேண்டும்? அவர்கள் நம் எதிரிகள்.  நான் அவர்களை அப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் எங்களை அப்படிச் செய்திருப்பார்கள்” என்றார்.  அவரிடம் துளிக்கூட குற்றவுணர்ச்சி இல்லை என்பதுதான் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

இந்த மனநிலைக்கு நேர் எதிரான ஒரு இடத்தில் நிற்கிறார்கள் Tristsan Egolf-உம் Patrik Modianoவும்.  எகால்ஃப் அபு க்ராய்ப் சித்ரவதைகளுக்கு எதிராக ஒரு காரியம் செய்தார்.  ஜனாதிபதி புஷ் செல்லும் சாலையின் ஓரத்தில் தன் நண்பர்கள் குழுவுடன் முக்கால் நிர்வாணமாக – உடம்பில் ஒரே ஒரு உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு – அபு க்ராய்பில் லிண்டி இங்க்லண்ட் தன் ஈராக் கைதிகளை நிர்வாணமாக்கி human pyramid செய்தது போல் செய்தார்.  அபு க்ராய்ப் atrocities-க்குத் தன்னுடைய எதிர்ப்பு இது என்று சொன்னார் எகால்ஃப்.  இதையேதான் மோதியானோ வேறு மாதிரி செய்தார்.  Marcel Proust-இன் Remembrance of Things Past பற்றி மோதியானோ இப்படிச் சொல்கிறார்: Proust’s memory causes the past to reappear in all its detail, like a tableau vivant. Today, I get the sense that memory is much less sure of itself, engaged as it is in a constant struggle against amnesia and oblivion. This layer, this mass of oblivion that obscures everything, means we can only pick up fragments of the past, disconnected traces, fleeting and almost ungraspable human destinies.

மனிதர்களை நான் இரண்டு விதமாகப் பிரிக்கிறேன்.  ஒன்று, அதிகார மையங்களால் வார்த்தெடுக்கப்பட்ட லிண்டி இங்க்லண்ட் போன்ற ஒரு சாரார்.  இவர்களால் Jacques Derrida விளக்கும் Other-ஐ எதிர்கொள்ளத் தெரிவதில்லை.  இவர்களைப் போன்றவர்களால்தான் திரும்பத் திரும்ப சித்ரவதைக் கூடங்கள் (Torture chambers) உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  வரலாறு ஒரே விதமாகத் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  மற்றொரு சாரார், பத்ரிக் மோதியானோ போன்றவர்கள்.  அவர் சிலாகிக்கும் அமெரிக்க எழுத்தாளரான Tristan Egolf போன்றவர்கள் – Egolf தன்னுடைய 34-ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார் – இத்தகைய கலைஞர்கள் வரலாறு நமக்கு மறந்து போகாமல் இருக்க tableau vivant என்று சொல்லக் கூடிய அழியா ஓவியங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

Please contact:

https://tinyurl.com/medusacharu
தொலைபேசி எண்: 99624 45000