மெதூஸாவின் மதுக்கோப்பை – முன்பதிவு

 

ஃப்ரெஞ்ச் இலக்கியம் தவிர்த்து என்னை உருவாக்கிய மற்றொன்று, ஐரோப்பிய சினிமா. குறிப்பாகச் சொன்னால், ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச் சினிமா. இன்று உலக சினிமாவில் ஹாலிவுட் மற்றும் ஜப்பானிய, கொரிய, ஈரானியத் திரைப்படங்களுக்குக் கொடுக்கப்படும் ஆரவாரமான வரவேற்பும் கவனிப்பும் ஜெர்மன் சினிமாவுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் திரையுலக வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் சினிமா ஜெர்மனியில்தான் எடுக்கப்பட்டது. 1927-ஆம் ஆண்டு Fritz Lang இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ரோபலிஸ்’ தான் உலக சினிமா வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் படம். ஃபாஸிஸம் பற்றி எத்தனையோ புத்தகங்களைப் படித்துப் புரிந்துகொள்ள முடியாததை ஒரே ஒரு ஆவணப்படத்தின் மூலம் புரிய வைத்தவர் Leni Riefenstahl. ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹிட்லர். ஆக, ஃபாஸிஸத்தைப் புரிந்துகொள்ள ஃபாஸிஸ்டே உதவி செய்கிறார். அந்தப் படத்தின் பெயர் Triumph of the Will. 1935-இல் ஹிட்லரின் புகழ் உச்சத்தில் இருந்த போது அவரது மேற்பார்வையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம். அந்தப் படத்தைப் பார்த்த எவராலும் தன் வாழ்வில் ஃபாஸிஸத்துக்குத் துணை போக இயலாது.

லெனி பற்றியே தனியாக ஒரு புத்தகம் எழுதக் கூடிய அளவுக்கு சாகசங்கள் நிறைந்தது அவர் வாழ்க்கை. 1902-இல் பிறந்த அவர் 2003-இல் அவரது 101-ஆவது வயதில்தான் இறந்தார். 1934-இல் நடந்த ‘நியூரம்பர்க் ஊர்வலம்’ என்ற உலகப் புகழ் பெற்ற சம்பவத்தை லெனி படமாக எடுத்தார். அதில் நான் பார்த்த ஒரு காட்சியை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது போலிருக்கிறது. ஹிட்லர் ராணுவ அணிவகுப்போடு போய்க்கொண்டிருக்கிறார். அப்போது கேமரா, ஹிட்லரைப் பார்க்க ஆர்வமுறும் லட்சக் கணக்கான மக்களின் முகங்களைக் காண்பித்துவிட்டு திடீரென்று அவர்களின் பின்னால் பாதங்களின் பக்கம் செல்லும். எல்லோருடைய பாதங்களின் குதிகால்களும் எழும்பியபடி நிற்கும். காமரா வரிசையாக அந்தக் குதிகால்களையே காட்டியபடி நகர்ந்து செல்லும். அப்படியும் ஒரு சிறுவனுக்கு ஹிட்லர் தெரியாததால் சிறுவனின் தந்தை அவனைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொள்கிறார். ஹிட்லரின் மேடைப் பேச்சையும் டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஃபாஸிஸ்டுகள் அனைவருடைய உடல் மொழியும் பேச்சும் ஒன்றே போல் இருப்பதைக் காணலாம். இணைப்பு: https://www.youtube.com/watch?v=d0OtwfYahyg
(நியூரம்பர்க் ஊர்வலம் முடிந்து ஹிட்லர் பேசும் காட்சி, Triumph of the Will படத்திலிருந்து.)

தில்லியில் கஸ்தூர்பா காந்தி மார்க் என்ற சாலையில் இருந்தது மாக்ஸ் ம்யுல்லர் பவன். அதே சாலையில்தான் அமெரிக்க மையமும் இருந்தது. 1978-இலிருந்து 1990 வரை நான் தில்லியில் இருந்தேன். மக்களுக்கு ரேஷன் கொடுக்கும் அலுவலகத்தில் வேலை. வடக்கத்தி ஆட்கள் ராஷன் என்றுதான் சொல்வார்கள். எனவே ‘ராஷனிங் டிபார்ட்மெண்ட்’. தில்லிப் பல்கலைக்கழகம் இருக்கும் வட தில்லியில் இந்திர ப்ரஸ்தா பெண்கள் கல்லூரியின் எதிரே இருந்தது நான் வேலை பார்த்த ராஷனிங் டிபார்ட்மெண்ட். சிவில் சப்ளைஸ் என்பது அதன் மற்றொரு பெயர். அந்த அலுவலகம் இருந்த அண்டர் ஹில் ரோடுக்கும் கஸ்தூர் பா காந்தி மார்குக்கும் 13 கி.மீ. தூரம். மெட்ரோ ரயில் இல்லாத அந்தக் காலத்தில் அதெல்லாம் நாற்பது ஐம்பது கிலோமீட்டருக்குச் சமம். அந்தக் காலகட்டத்தில் சிமெண்ட் கட்டுப்படுத்தப்பட்ட விலையிலும் வெளிச்சந்தையிலும் விற்றதால் இரண்டு இடங்களிலும் இரண்டு வெவ்வேறு விலைகள் இருந்தன். ராஷன் கார்டை ராஷனிங் டிபார்ட்மெண்டில் காண்பித்து பர்மிட் பெற்று வாங்கினால் ஒரு மூட்டை 30 ரூ. வெளிச்சந்தையில் 60 ரூ. அதனால் எங்கள் அலுவலகமே ஊழல் வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தது. நானோ கலைஞனுக்குப் பணம் எதுக்கு என்று கஸ்தூர் பா காந்தி மார்க் அமெரிக்க நூலகத்திலும் மாக்ஸ் ம்யுல்லர் பவனிலுமே இருந்தேன். கஸ்தூர் பா காந்தி மார்கை குறுக்காக வெட்டிக்கொண்டு பாரகம்பா சாலை போகும். அதன் இடது பக்கத்தில் நடந்தால் மண்டி ஹவுஸ் வந்துவிடும். இந்தியாவின் கலாச்சாரக் கேந்திரம் தில்லி என்றால் தில்லியின் கலாச்சார மையம் மண்டி ஹவுஸ். மண்டி ஹவுஸில் மட்டுமே ஒரு டஜன் கலை அரங்கங்கள் உள்ளன. மாக்ஸ் ம்யுல்லர் பவனில் சினிமா இல்லாத நாட்களில் நடந்தே மண்டி ஹவுஸ் வந்துவிடுவேன்.

அலுவலகத்துக்கு மாதம் ஒருமுறை போய் எல்லா நாட்களுக்கும் கையெழுத்துப் போட்டுவிட்டு சம்பளம் வாங்கிக்கொண்டு வந்தால் போதும். என் ‘பங்கை’ என் சகாக்களே பிரித்துக்கொள்வார்கள் என்பதால் என்னைப் பற்றி அங்கே யாரும் கவலைப்பட்டதில்லை. நான் போகாவிட்டால் அவர்களின் ஜேபிக்கு நல்லது. நான் தில்லியில் இருந்த பனிரண்டு ஆண்டுகளும் இப்படி இல்லை. மூன்று நான்கு ஆண்டுகள் அப்படி இருந்தது.

அப்போது கஸ்தூர் பா காந்தி மார்க் என்றால் யாருக்கும் தெரியாது. கர்ஸன் ரோட் என்ற பெயரை எழுபதுகளின் இறுதியில்தான் காந்தியின் மனைவி பெயருக்கு மாற்றியிருந்தார்கள் என்பதால் அப்போதெல்லாம் கர்ஸன் ரோட் என்பதே புழக்கத்தில் இருந்தது. 1978-இல் ஒரு ஆண்டுக் காலம் கர்ஸன் ரோட்டிலேயே இருந்த சர்க்கிள் நம்பர் எட்டில் வேலை பார்த்தேன். சிவில் சப்ளைஸில் பல பிரிவுகள் உண்டு. அவைதான் சர்க்கிள் நம்பர் ஒன்று, இரண்டு, மூன்று என்று அழைக்கப்பட்டன. அலுவலகமும் கலாச்சார மையங்களும் ஒரே பகுதியில் இருந்ததாலும், அப்போது அந்தத் துறைக்கு நான் புதிது என்பதாலும் தினமும் போய் தலை காட்ட வேண்டியிருந்தது. ஆனால் கையெழுத்துப் போட்டுவிட்டு ஓடிவிடலாம்.

பகல் முழுதும் படிப்பு. மாலையில் சினிமா. அதே கர்ஸன் ரோட்டின் கடைசிக் கட்டிடத்தில் தான் ஹங்கேரியன் செண்டர். அங்கேயும் வாரம் இரண்டு சினிமா இருக்கும். ஆக, மாக்ஸ் ம்யுல்லர் பவனிலும் ஹங்கேரியன் செண்டரிலுமாக வாரம் நான்கு சினிமா பார்த்துவிடலாம். இரண்டு மையங்களிலும் சினிமா முடிந்து மதுபானமும் கொடுப்பார்கள். ஹங்கேரியன் செண்டர் கம்யூனிஸ்ட் என்பதால் கலாச்சார நடவடிக்கைகள் அதிகம் இருக்காது. வாரம் ரெண்டு படத்தோடு சரி. பார்ப்பதற்கும் ஒரு மாதிரி மயான அமைதியாக கலகலப்பே இல்லாமல் இருக்கும். ஆனால் மாக்ஸ் ம்யுல்லர் பவன் அப்படி இல்லை; அங்கே கலாச்சார நடவடிக்கைகள் அதிகம். (சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லி சென்றிருந்த போது பழைய ஞாபகத்தில் மாக்ஸ் ம்யுல்லர் பவன் போனேன். சினிமா முடிந்து சமோசாவும் டீயும் கொடுத்தார்கள். முன்பெல்லாம் விஸ்கி, பியர் எல்லாம் கொடுப்பார்களே என்று பவன் அதிகாரி போல் இருந்த ஒருவரிடம் கேட்டேன். வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவனைப் பார்ப்பது போல் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, சிக்கன நடவடிக்கை என்றார். பிறகு சிரித்துக்கொண்டே, “இந்தியாவுக்கு வந்தால் நாமும் இந்தியரைப் போல் ஆகிவிட வேண்டும் அல்லவா?” என்று கேட்டார். அப்படியானால் அடிக்கடி பெஹன் சூத் என்று சொல்லிப் பழகுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.)

https://tinyurl.com/medusacharu
தொலைபேசி எண்: 99624 45000