தென்னமெரிக்கப் பெண்கள் (12)

ஒரு அரை மணி நேரம் பேசினால் போதும், நம் உயிருக்குயிரான தோழி கூட காட்டாத பாசத்தைப் பொழிந்து தள்ளி விடுகிறார்கள் ப்ரஸீலியப் பெண்களும் சீலே பெண்களும். இன்று ஒரு கஃபேவில் நானும் நண்பர் ரிக்கார்தோவும் வைன் அருந்திக்கொண்டிருந்தோம். பக்கத்தில் ஒரு ஜோடி. அறிமுகம் ஆனது. அவளுக்கு ஆங்கிலம் தெரிந்தது. கணவனுக்கு போர்த்துக்கீஸ் ஸ்பானிஷ் மட்டும் தான். ப்ரஸீல். அவள் என்னிடம் நீங்கள் இந்த பார் ஓனரா என்று. ஸ்பானிஷில். எல்லோருமே என்னிடம் ஸ்பானிஷில் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். பார்க்க அப்படி இருக்கிறேன் போல் இருக்கிறது. சீ சீ. நான் டூரிஸ்ட். இந்தியன் என்றேன். இங்கே எப்படி. நான் ஒரு எக்ரிதோர். எக்ரிதோர் என்றால் எழுத்தாளன். உடனே இருக்கையிலிருந்து எழுந்து விட்டாள். ஆர்ப்பாட்டம். ஆரவாரம். கணவனிடம் அறிமுகம். அவருக்கோ ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியவில்லை. பிறகு ப்ரஸீலில் உள்ள பெரிய நிறுவனம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசியதைப் பார்த்தால் அவள் தான் அதன் ஓனர் போல் தெரிந்தது. அப்படித்தான் இருந்தது அவள் பேச்சு. நானும் பிறகு அவளைப் போலவே கேட்டேன் அதன் ஓனரா நீங்கள். சீ சீ. அதன் மேலாளர் தான் நான். ஓ நீங்கள்தான் ஓனர் என்றால் இந்த ஜெண்டில்மேனை விரட்டி விட்டு விட்டு உங்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பார்த்தேன் என்றேன். குடித்த வைன் அவளுக்குப் புரை ஏறி விட்டது. எழுந்து அவள் கணவனிடம் நான் சொன்னதை மொழி பெயர்த்தாள். அவன் ஆஹா ஆஹா இந்தப் பெண்ணிடமிருந்து எனக்கு விடுதலையா இயேசுதான் உங்களை இந்தியாவிலிருந்து அனுப்பியிருக்க வேண்டும் என்றான். சே என்ன துரதிர்ஷ்டம் எனக்கும் இவனிடமிருந்து விடுதலை கிடைத்திருக்கும் நான் அந்தக் கம்பெனியின் ஓனராக இல்லாமல் போய் விட்டேனே என்றாள். உடனே எனக்கு வைன் பரிமாறிய இன்னொரு பெண் – இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவள் – நோ நோ நான் இந்த எழுத்தாளனை ஏற்கனவே ரிஸர்வ் செய்து விட்டேன் என்றாள். அந்தத் தம்பதியிடம் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். கடைசியில் கண்ணீர் விடாத குறையாய்ப் பிரிந்தோம். அறைக்குத் திரும்பும் போது ரிக்கார்தோ சொன்னார். சீலே ப்ரஸீல் பூராவும் இப்படித்தான். அன்பைப் பொழிவார்கள். நான் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவன். இரண்டு பேருமே ப்ரஸீல் பெண்கள். முதல் மனைவிக்கு நான்கு இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள். ஒரு குழந்தைக்கு அஞ்சு வயது. இன்னொன்றுக்கு ஏழு. ரிக்கார்தோ வயது 63.

எழுத்தாளனை ரிஸர்வ் செய்து விட்டேன் என்று சொன்னவ்ள் சீலேகாரி. நான் ஒரு எழுத்தாளராகத்தான் ஆக விரும்பினேன். ஆனால் உனக்குப் பணம் கிடைக்காது அதில் போகாதே என்று அப்பா தடுத்து விட்டார் என்றாள். இரண்டு புகைப்படங்களும் மேலே. தந்திரமாக அந்த ப்ரஸீல்காரன் நடுவில் நின்று கொண்டான். பாவம். பிழைத்துப் போகட்டும்.

பின்குறிப்பு: யோசித்துப் பாருங்கள். இப்படி என் நாட்டில் பேசியிருந்தால் நான் உயிரோடு திரும்பியிருக்க முடியுமா?