ஒரு வித்தியாசமான நாள்

இன்று ஒரு வித்தியாசமான நாள்.  காலையில் பதினோரு மணிக்கு ஒரு குறிப்பிட்ட டீக்கடையில் பார்க்கலாம் என்றார் கௌதம் மேனன்.  சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன.  முன்பெல்லாம் – ஒரு ஆறு மாதத்துக்கு முன்னால் – இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அமேதிஸ்ட்-இல் சந்திப்போம்.  ஆறு மாதங்களாக இருவருக்கும் பல்வேறு வேலைகள்.  சந்திப்பு தாமதமாகிக் கொண்டே போனது.

அந்தக் குளிரூட்டப்பட்ட அமைதியான டீக்கடைக்கு சரியாக பதினோரு மணிக்குப் போனேன்.  கௌதம் ஏற்கனவே வந்து மடிக் கணினியில் வேலை செய்து கொண்டிருந்தார்.  அரை மணி நேரம் ஆறு மாதக் கதையைப் பேசி விட்டு சினிமாவுக்கு வந்தோம்.  ஒரு அருமையான கதை சொன்னார்.  ரொம்பவே பிடித்திருந்தது.  அது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  (படம் பற்றிய மற்ற தகவல்களை நான் சொல்வது சரியல்ல; அவரே பிறகு பத்திரிகைகளுக்குத் தருவார்.)   பேச்சு ஒரு கட்டத்துக்கு வந்து அடுத்ததாக என்ன பேசுவது என்று தோன்றாத போது இருவருமே மௌனமாக இருப்போம்.  அந்த மௌனம் 15 நிமிடம் கூட நீடிக்கும்.  இடையில் போனில் கூடப் பேசுவதில்லை.  மௌனம் மட்டுமே நீடிக்கும்.  அது ஒரு சிறுகதை போல் இருக்கும்.  பிறகு ஒரு விஷயம் திடீரெனத் தோன்றி அவரோ நானோ மீண்டும் ஆரம்பிப்போம்.

என்ன சாப்பிடுகிறீர்கள் என்றார்.  எப்போதும் போலவே க்ரீன் டீ என்றேன்.  க்ரீன் டீ வந்தது.  தேநீரில் பாலோ சர்க்கரையோ கலப்பது கௌதமுக்கும் வழக்கம் இல்லை.  எனக்கும் வழக்கம் இல்லை.  கௌதம் மேனனை எனக்கு மிகவும் பிடிப்பதற்குக் காரணம், அவருடைய வாழ்க்கை முறைதான்.  ஒரு ஐரோப்பியனைப் போன்ற பழக்க வழக்கங்கள் கொண்டவர் அவர்.  நானும் கிட்டத்தட்ட அப்படித்தான் என்பதால் நிறையவே ஒத்துப் போகும்.  ஒரே வித்தியாசம், அவர் ஒரு teetotaller.

அங்கே வழங்கப்படும் தேநீர் தான் உண்மையான தேநீர்.  தேயிலைகள் வெந்நீரில் கிடக்கும்.  அதை நம் தேவைக்கு ஏற்றாற்போல் மூன்று நிமிடமோ, நான்கு நிமிடமோ, ஐந்து நிமிடமோ வைத்திருந்து தேநீரை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.  அதற்கும் கைகளில் சூடான தேநீர் பட்டு விடாமல் இருக்க, மேல் மூடியை சற்றே அமுக்கினால் தேநீர் நம் கோப்பையில் விழும்.  நிமிடக் கணக்கை எப்படிப் போடுவது?  கவலை வேண்டாம்.  பக்கத்திலேயே மணல் ஆடி இருக்கும்.  அதைத் தலைகீழாகக் கவிழ்த்தால் நீல நிற மணல் முழுவதுமாக மேலிருந்து கீழே கொட்டி விட்டால் மூன்று நிமிடம்.  வெள்ளை மணலுக்கு நான்கு நிமிடம்.  பச்சை மணலுக்கு ஐந்து நிமிடம்.  நான் நீல மணல் கொட்டி முடிந்ததும் தேநீரை வடி கட்டிக் கொண்டேன்.  I always prefer blue!! கௌதம் எப்போது எடுத்தார் என்று கவனிக்கவில்லை.  அடுத்த முறை கவனிக்க வேண்டும்.

அராத்துவை வரவழைக்கலாமா என்று தோன்றியது.  அழைத்தேன்.  முக்கால் மணி நேரத்தில் வந்து விடுவதாகச் சொன்னார்.  அப்போது மணி 11.45.  ஒரு மணி நேரமாகியும் வரவில்லை.  போனில் அழைத்தேன்.  பார்க் ஷெரட்டன் பக்கத்திலேயே 20 நிமிடமாக நின்று கொண்டிருப்பதாகச் சொன்னார்.  யாரோ ஆந்திராவிலிருந்து ஜெகன் என்பவர் சென்னை வருவதால் சென்னை முழுவதும் ட்ராஃபிக் ஜாம் என்று சொன்னார்.  ஜெகன் என்றால் யார் என்று கௌதம் சொன்னார்.  சரி கௌதம், கிளம்பலாம் என்றேன்.  இல்லை, காத்திருப்போம் என்றார்.  1.15க்கு அராத்து வந்து விட்டார்.  மூன்று மணி வரை பேசிக் கொண்டிருந்தோம்.   பிறகு கௌதமிடமிருந்து விடை பெற்று நானும் அராத்துவும் அங்கே பக்கத்தில் இருந்த பிரியாணி கடையில் தம் பிரியாணி சாப்பிட்டு விட்டு நியூஸ் சைரன் வார இதழ் வெளியீட்டு விழாவுக்குச் சென்றோம்.  நியூஸ் சைரன் வார இதழில் நான் வாரா வாரம் தொடர் கட்டுரை எழுதுகிறேன்.

Comments are closed.