R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா

நாகூரில் சிறுவனாக இருந்த போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஒரு எழுத்தாளன் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்த போது தெரிந்த முதல் ஊர் தில்லி.  அங்கேதான் இந்திரா பார்த்தசாரதி, என்னுடைய பிரதி பிம்பம் என்று நான் சின்ன வயசிலேயே நம்பிய ஆதவன், கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன், என் குருநாதர் என மதித்த க.நா.சு., வெங்கட் சாமிநாதன் போன்ற பலர் வசித்தார்கள்.  தி. ஜானகிராமனும் அங்கேதான் இருந்தார்.  ஆனால் அவர் எழுத்து மீது அப்போது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை.  ஆனால் தில்லி போய்ச் சேர்ந்ததும் மேலே குறிப்பிட்ட யாரையும் பார்க்காமல் கடைசியில் குறிப்பிட்ட வெங்கட் சாமிநாதன் பார்வையில் விழுந்தேன்.  வெ.சா.விடம் ஒரு அபூர்வமான சக்தி இருந்தது.  அவரிடம் வந்தவர்கள் மற்ற யாரையும் சந்திக்க மாட்டார்கள்.  எல்லோருமே வீண் என்று நம்மிடம் நிரூபித்து விடுவார்.  எனக்கு ரொம்பவும் பிடித்த ஆதவனைக் கூட நான் சந்திக்கவில்லை.  வெ.சா.வின் காந்தப் பிடியிலிருந்து நான் விடுபட்ட போது தில்லியிலிருந்து சென்னை வந்திருந்தேன். 

வெ.சா.வின் உலகில் வாழும் போது நமக்குள் பல கட்டுக்கதைகளும் (myth), நம்பிக்கைகளும் இறங்கியிருக்கும்.   அப்படிப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றுதான், தமிழ் சினிமா ஒரு குப்பை.  ரொலான் பார்த்தின் Image, Music, Text-ஐப் படிக்கும் வரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன்.  வெகுஜன கலாச்சாரத்தைச் சேர்ந்த எல்லாமே குப்பை.  அதனால்தான் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முதல் முதலாக வெகுஜன கலாச்சாரத்தைச் சேர்ந்த அக்னி நட்சத்திரம் சினிமாவை சென்னை அபிராமி தியேட்டரில் பார்த்த போது அதில் நடித்திருந்த நட்சத்திரங்களைப் பார்த்து அது யார் இது யார் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.  1978-இல் தில்லி சென்றேன்.  1988 வாக்கில் சென்னை வந்த போது அக்னி நட்சத்திரம் பார்த்தேன்.  படம் வெளியாகி 200 ஆகியிருந்தது.  பக்கத்தில் இருந்தவரிடம் ”படம் இவ்ளோ நல்லா இருக்கு, ஏன் கூட்டமே இல்லை?” என்று நான் கேட்டபோது அவர் அந்த விபரம் சொன்னார்.  அவரிடம்தான் ”அப்பாவாக நடிப்பவர் நன்றாக நடிக்கிறாரே, யார் அது?” என்று கேட்டேன்.   அந்த அளவுக்கு வெகுஜன கலாச்சாரத்திலிருந்து விலகி இருந்தேன். 

பிறகுதான் வெகுஜன கலாச்சாரம் பற்றிய ரொலான் பார்த்தின் ஆய்வுகளைப் படித்துத் தெளிந்தேன்.  அதன் பிறகு தமிழ் சினிமாவை என்னால் குப்பை என்று ஒதுக்க முடியவில்லை.  பராசக்தி என்ற படத்தைப் பார்க்காமல் திராவிட இயக்கத்தின் எழுச்சியை ஒருவர் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?  நாடோடி மன்னனில் நாடோடி எம்ஜியார் “நான் ஆட்சிக்கு வந்தால்…” என்று சொல்லி சில வாக்குறுதிகளை அளிப்பார்.   அப்போதெல்லாம் அவர் அதிமுக என்று ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வருவார் என்று யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது.  1958-இல் வெளிவந்தது இந்தப் படம்.  அதிமுக ஆரம்பித்தது 1972.   நாடோடி மன்னன் வசனத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என ஆக்குவேன் என்று வரும்.  கார்ல் மார்க்ஸ்.  வசனம் எழுதியவர் கண்ணதாசன்.  அந்தக் கால தமிழ் இலக்கியத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சி பற்றி நாம் ஒரு வார்த்தை காண முடியாது.  அப்படி அவசியமும் இல்லை.  சுதந்திரப் போராட்டம் பற்றியே நம் முன்னோடிகள் யாரும் – செல்லப்பாவைத் தவிர – எழுதவில்லை என்கிற போது திராவிடக் கட்சிகள் பற்றியும் நாம் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது.  ஆனால் தமிழ்நாட்டு அரசியல் பற்றி ஒருவர் ஆய்வு செய்ய வேண்டுமானால் வெங்கட் சாமிநாதன் திரும்பத் திரும்ப குப்பை என்று சொல்லிக் கொண்டிருந்த – நானும் சில காலம் அப்படி நம்பிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில்தான் அதற்கான தரவுகள் கிடைக்கும். 

அதேபோல் தமிழ் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒருவர் அணுக வேண்டிய இடம், தமிழ் சினிமா.  தமிழர்களின் முக்கியமான குணம், இனப் பெருமை.  வீரம்.  நட்புக்காக உயிரையும் கொடுப்பேன்.  மானம்.  என் கணவனை அநியாயமாகக் கொன்றால் என் முலையைப் பிடுங்கி எறிந்து ஊரையே எரிப்பேன்.  என் நடிகனின் படம் வெளியானால் அவனுக்கு அறுபது அடி கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணுவேன்.  அதற்கு ஆகும்  செலவுக்கு என் பொண்டாட்டியின் தாலியை விற்பேன்.  என் தலைவி ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போனால் அல்லது தேர்தலில் தோற்றால் திருப்பது உண்டியலில் என் நாக்கை அறுத்துக் கொடுப்பேன். 

தமிழனின் இந்த முக்கியமான உளவியலை (psyche) புரிந்து கொள்ள தமிழ் சினிமாவில் கிடைக்கும் ஒருசில signifierகளில் ஒருவர்தான் எஸ்.வி. சுப்பையா.  சிக்னிஃபயருக்குத் தமிழில் என்ன சொல்வார்கள் என்று எஸ். சண்முகத்தைத்தான் கேட்க வேண்டும்.  சிக்னிஃபயருக்கான கூகிள் விளக்கம்: In Saussurean analysis, which Barthes largely uses, the distinction between signifier and signified is crucial. The signifier is the image used to stand for something else, while the signified is what it stands for (a real thing or, in a stricter reading, a sense-impression).

தயவுசெய்து எஸ். சண்முகம் இதை இன்னும் விரிவாக விளக்க வேண்டும். 

திடீரென்று காலங்காலையில் நான் இந்த நினைவுகளில் மூழ்கக் காரணம், R.P. ராஜநாயஹம்.  எஸ்.வி. சுப்பையா பற்றிய அவர் பதிவைப் படித்ததும் எனக்கு இதெல்லாம் ஞாபகம் வந்தது.  ராஜநாயஹத்திடம் அவ்வளவாக தன்முனைப்பு கிடையாது.  இந்த அபூர்வமான குறிப்புகளெல்லாம் தொகுக்கப்பட்டு நூலாக வர வேண்டும்.  நானும் இந்தப் படங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்.  ஆனால் எனக்கு இந்த விஷயத்தில் எல்லாம் ஞாபக சக்தி அறவே கிடையாது.  ராஜநாயஹத்தின் ஞாபக சக்தியும் அபூர்வமானது.  அபாரமானது.  கீழே ராஜநாயஹத்தின் பதிவு:  

https://www.facebook.com/rprajanayahem?__tn__=%2CdC-R-R&eid=ARAJRVg8ERCf4oe1K6mdcs_4NoQUdgnYCvrsc_ekGbU4JKDHboKEPnhDeOK1QfGtZeLi5zEByvM8fclP&hc_ref=ARRsTnZ6yP4jth_5JZrNDNVt0p-VpBaoaGPSc-DB6S3NgVYJ8SUhtpqSWiOCLRtLW_A&fref=nf