பிக் பாஸ் – 3

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். ஒவ்வொரு சாதியையும் நான் ஒரு இனக்குழுவாகவே பார்க்கிறேன். இங்கே ஒவ்வொரு சாதிக்குமான கலாச்சாரம் இருக்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகளில் கூட சாதி ஒழிந்து விடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. சில முற்போக்குவாதிகள் மற்றும் பிராமண எதிர்ப்பாளர்கள் சொல்வது போல், இந்து மதத்தில் மட்டுமே சாதி இருக்கிறது என்று சொல்வது அறியாமை. ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு இனத்திலும் சாதி உண்டு. ஆஃப்ரிக்காவில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சாதியும் ஒரு மொழியும் இருக்கிறது. சாதியை வைத்து நான் பெரிசு, நீ கீழே என்று உயர்வு தாழ்வு பேசக் கூடாது என்பது மட்டுமே என் கருத்து. நாய்களில் சாதி இருக்கும் போது மனிதர்களில் சாதி இருக்காதா என்ன? சாதி வெறிதான் ஆபத்தானது. எல்லோரும் கலப்புத் திருமணம் செய்து சாதியை ஒழித்துக்கட்டி விட்டீர்களானால் முதல் ஆளாக சந்தோஷப்படுவேன்.

இந்த நிலையில் இன்று நான் பார்த்த பிக் பாஸில் பத்திரிகையாளர் சந்திப்பில் பல பத்திரிகையாளர்கள் பிராமண பாஷையைப் பேசியது மிகவும் அருவருப்பாக இருந்தது. பொதுவெளியில் இப்படிப் பேசலாமா? இத்தனைக்கும் எனக்கு பிராமண பாஷை ரொம்பப் பிடிக்கும் என்று என்னோடு பழகுபவர்களுக்குத் தெரியும். என்னுடைய 99 சதவிகித நண்பர்களும் பிராமணரே. ஆனால் ஒருத்தர் கூட பிராமண பாஷை பேசுவதில்லை. காரணம், தெரியாது. அவர்களின் குடும்பத்திலே கூட பிராமண பாஷை பேசத் தெரியவில்லை. கும்பகோணத்து பிராமண பாஷை எத்தனை அழகு தெரியுமா? அதேபோல் பாலக்காட்டு பிராமண பாஷை! இப்போது அதெல்லாம் அழிந்து ஒரு தட்டையான மொழி வந்து விட்டது. ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் – மூன்றரைக் கோடி பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் எட்டு பத்திரிகையாளர்களில் நாலைந்து பேர் பிராமண பாஷை பேசியது அருவருப்பாக இருந்தது.

”இப்போதுதானே சொன்னாய், பிராமண பாஷை பிடிக்கும் என்று?” என்று என்னைக் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அது தனிப்பட்ட வாழ்வில் இருக்க வேண்டும். பொதுவெளியில் இருக்கலாகாது. அப்படியானால் ஊடகம் பூராவும் பிராமணர் மட்டுமே நிரம்பியிருக்கிறார்கள் என்ற மனப்பதிவை உருவாக்குகிறது. உங்கள் சாதி என்ன என்று உங்களுடன் சம்பந்தமில்லாத எனக்கு உணர்த்துகிறீர்கள். இதுதான் அருவருப்பு. உங்கள் சாதியை உங்கள் வாயில் மாட்டிக் கொண்டா வெளியே வருவீர்கள்? வெட்கமாக இல்லையா? இ

இடம் பொருள் ஏவல் என்று சொல்வார்கள். எங்கே பிராமண பாஷையைப் பேச வேண்டுமோ அங்கே தட்டை மொழியைப் பேசுகிறீர்கள். எங்கே பொதுமொழியில் பேச வேண்டுமோ அங்கே வந்துண்டு போயிண்டு என்று இண்டு போடுகிறீர்களே!