2000 சதுர அடியில் ஒரு வீடு கட்டியிருக்கிறோம். அதைப் பார்த்த ஒருவர் இந்த வீட்டில் கக்கூஸ் எங்கே இருக்கிறது என்று கேட்டு அதைப் பார்த்து விட்டு வீடு பூரா ஒரே கக்கூஸ் என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதைத்தான் 20 ஆண்டுகள் கழித்து என்னை சந்தித்த அந்த எழுத்தாள நண்பர் செய்கிறார். இங்கே என்ன அடிதடி மட்டுமா நடந்து கொண்டிருக்கிறது? அல்லது, 20 ஆண்டுகளுக்கு முன்னால் அடிதடி நடக்கவில்லையா? வெங்கட் சாமிநாதன் தமிழவனை நபும்ஸகம் என்று திட்டினார். நபும்ஸகம் என்றால் என்ன பொருள்? ஆண்மை இல்லாதவன். சரியாக புணர முடியாதவன். இலக்கியத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் ஏண்டா அதை சாமானோடு முடிச்சுப் போடுகிறீர்கள் என்று அப்போது அதைக் கேட்க நாதியில்லை. இந்தக் குழாயடிச் சண்டைக்கு என்றே கொல்லிப்பாவை என்று ஒரு பத்திரிகை வேறு வந்து கொண்டிருந்த்து. அதில் நடந்த குழாயடிச் சண்டையில் கலந்து கொள்ளாத எழுத்தாளர்களே அப்போது இல்லை. சுந்தர ராமசாமி, நகுலன், தர்மு சிவராமு, ஞானக்கூத்தன், அசோக மித்திரன், சா. கந்தசாமி, ந. முத்துசாமி என்று ஒருத்தர் பாக்கியில்லை. இவர்களில் சிலர் நோபல் பரிசு பெறத்தக்க அளவுக்கு இலக்கிய சாதனைகள் செய்திருந்தும் அடிதடியில் குறையே வைக்கவில்லை. ஆனால் இதையெல்லாம் அடிதடி என்று சொல்பவன் மடையன் என்பது என் அபிப்பிராயம். இதெல்லாம் எல்லா மொழிகளிலும் நடக்கும் பாலிமிக்ஸ். இந்த பாலிமிக்ஸ் இல்லையென்றால் அந்த மொழியின் இலக்கியம் செத்து விட்ட்து என்று பொருள். நகுலனை சு.ரா. நாய் என்று திட்டினார். தர்மு சிவராமுவும் விமலாதித்த மாமல்லனும் குஸ்திச் சண்டை போட்டு அது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. கொல்லிப்பாவை ஆசிரியர் ஒருமுறை நான் வேலை பார்த்த கல்லூரி முதல்வருக்கு புகார் கடிதம் எழுதி என் வேலைக்கே உலை வைத்தார். அதனால் பாண்டிச்சேரியில் ஒரு வருடம் என் குடும்பம் பட்டினி ஜீவனம் நடத்தியது. ஒருமுறை ஒரு ’பின்நவீனத்துவ்வாதி’ என் முகத்தில் குத்து விட்டு பல் ஒன்றை உடைத்தார்.
அதே கதைதான் இப்போது ப்ளாக்-களிலும் தொடர்கிறது. சமயங்களில் அத்துமீறலும் நடக்கிறது. ஜ்யோவ்ராம் சுந்தர் தாக்கப்பட்டார். மரண காயம் ஏற்பட்டது. இது இலக்கியச் சூழலில் சில ரௌடிகளும் ஸைக்கோக்களும் புகுந்து விட்ட்தால் நேர்கின்ற கோர விபத்துகள். எனக்கு கொல்லிப்பாவை ஆசிரியர் மூலம் நடந்த்து போல; என் பல் உடைந்த்து போல.
ஆனாலும் என் எழுத்தாள நண்பர் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்தான். கடந்த 20 ஆண்டுகளில் இங்கே எவ்வளவு பெரிய இலக்கிய சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை ஒருவர் ஆறு மாத காலமாவது படித்துப் பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.
