சமீபத்தில் ஒரு நண்பரை சந்தித்தேன். அவரைப் பார்த்து 20 ஆண்டுகள் இருக்கலாம். என்ன பெரிய பிரச்சினை என்றால் தான் சொல்வது எதையும் எழுதக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். அவர் ஒரு எழுத்தாளர் என்பதால் அவர் சொல்வது சரிதான். அவருக்கு உரிமையான அனுபவங்களை அவர்தான் எழுத வேண்டும்; நான் எழுதக் கூடாது. ஆனால் எழுத்து, சமகால இலக்கியம் போன்ற விஷயங்கள் குறித்து அவர் என்னிடம் சொல்லும் மிக மட்டமான அபிப்பிராயங்களைப் பற்றி நான் எப்படி எழுதாமல் இருக்க முடியும்? உதாரணமாக, வலைப்பூவில் எழுதுபவர்களெல்லாம் சுத்த வேஸ்ட்; வெறும் குழாயடிச் சண்டையைத் தவிர வேறு எதுவும் அதில் இல்லை; அந்தக் காலத்திலும் (20 ஆண்டுகளுக்கு முன்பு என்று பொருள்) இலக்கியச் சண்டை நடக்கும்தான்; ஆனால் இவ்வளவு ஆபாசமாகவும் அசிங்கமாகவும் அடித்துக் கொள்ள மாட்டார்கள். இப்போது நடக்கும் எழுத்தாளர்களின் சண்டை எங்கள் ஆஃபீஸ் சண்டையை விட, அரசியல்வாதிகளின் சண்டையை விட அசிங்கமாக இருக்கிறது.
இது பற்றிய என் கருத்தை இங்கே எழுதியாக வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் உயிர்மை பதிப்பகத்திலிருந்து என்னுடைய 27 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பல்வேறு பதிப்பகங்களிலிருந்து எஸ். ராமகிருஷ்ணனின் முப்பது நாற்பது புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இப்படி பல எழுத்தாளர்களின் பல நூறு புத்தகங்கள் நாள் தோறும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதையெல்லாம் பற்றி ஒரு எழவையும் தெரிந்து கொள்ளாமல், எதையுமே படிக்காமல் ஓசியிலேயே எல்லா ப்ளாகையும் படித்து விட்டு எல்லாம் ஒரே சண்டை என்று விமர்சனம் செய்பவர்களை என்னவென்று அழைக்கலாம்?
ப்ளாகில் எழுதுபவர்கள் பற்றி எனக்கும் சில விமர்சன்ங்கள் உண்டு. நான் இன்று விகடனில் எழுதுகிறேன் என்றால் அதற்குப் பின்னே என்னுடைய 35 ஆண்டுக்கால உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பு எதுவும் இல்லாமல் நொடியில் ஒரு ப்ளாகை ஆரம்பித்து விட்டு அதில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்க்ளைப் போல் இஷ்டப்படி எல்லாவற்றையும் விமர்சிக்கிறார்கள். சினிமா, அரசியல், சமூகப் பிரச்சினைகள் என்று எதையுமே விட்டு வைப்பதில்லை. அது மட்டுமல்ல; இரண்டு ஆண்டுகளாக ப்ளாகில் எழுதுபவர் நானும் என் சக எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் என்று கட்டுரையை ஆரம்பிக்கிறார். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது? இன்னொருவர், ஒரு ஆண்டாக ப்ளாகில் எழுதுபவர் – என்னுடைய இலக்கிய வாழ்க்கையில் என்று ஆரம்பித்து பேட்டி தருகிறார். சரி, நான் கேட்கிறேன். கணினி, இண்டர்நெட் ஆகியவற்றை ஒரு டாக்டரும் பயன்படுத்துகிறார். ஒரு எஞ்சினியரும் பயன்படுத்துகிறார். ஆனால் ஒரு மனிதர் இண்டர்நெட்டை மட்டுமே பயன்படுத்தி நான் டாக்டராகி விட்டேன், எஞ்சினியர் ஆகி விட்டேன் என்று சொல்வதில்லை. ஆனால் இண்டர்நெட் என்ற ஒன்று ஓசியில் கிடைத்து விட்ட காரணத்தினாலேயே அதில் ஒரு சினிமா விமர்சனத்தை எழுதி விட்டு ஒருவர் எழுத்தாளர் ஆகி விடுகிறார். அதோடு நீதிபதியாகவும் மாறி சகட்டு மேனிக்கு தண்டனைகளை வழங்க ஆரம்பித்து விடுகிறார். இதனால் ஏற்படும் அடிதடி, வம்புதும்பு, சண்டை, வசை என்று ஏராளம் ஏராளம். இன்னும் கொலைதான் நடக்கவில்லை. அந்த அளவுக்கு ஆகி விட்டது. (சரி, என் மடிக்கணினியில் பேட்டரி தீர்ந்து விட்ட்து.. இப்போது நான் பெங்களூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டிணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். பெருமாளை தரிசிக்க…)
தொடரும்…
