சந்திப்பு

என் எழுத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும், ஏற்கனவே சொன்ன உதாரணம் இது. மைலாப்பூர் டெலபோன் டைரக்டரி போடுகிறார்கள் அல்லது ஒவ்வொரு வீடாக ஒவ்வொரு மனிதருக்கும் ஆதார் கார்டு கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மைலாப்பூரில் வசிக்கும் என் பெயர் மட்டும் டைரக்டரியில் இருக்காது. அல்லது, பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஆதார் கார்டு கொடுக்கப்படும். எதிர்வீட்டுக்காரனுக்குக் கொடுக்கப்படும். பின்வீட்டுக்காரனுக்கு கொடுக்கப்படும். என்னை விட்டு விடுவார்கள். டேய் தம்பி, நான் என்ன தீண்டத்தகாதவனாடா? இதே காரியத்தை நீயும் உன் சகாக்களும் சுமார் 40 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறீர்களே, உங்களுக்கும் அலுப்பு சலிப்பாக இல்லையா?

சரி, செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்கிறீர்கள். என் எழுத்தையே நீங்கள் படித்ததில்லை. எப்படி பட்டியலில் சேர்ப்பீர்கள்? புரிந்து கொள்கிறேன். உங்களுக்காகவும் நான் எழுதவில்லை என்கிற போது நமக்குள் எந்த ஒட்டும் உறவும் இல்லை. நல்லது. நீங்கள் என் பெயரை உங்கள் பட்டியலில் சேர்த்தால் அதனால் எனக்கு ஒரு தம்பிடி பிரயோஜனம் கிடையாது. அதனால் ஒரு பிரதி கூட அதிகம் விற்காது. ஏனென்றால், அந்த நிலையில் நீங்கள் இல்லை.

ஆனால் ஒரு விஷயத்தை நான் இந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். என் பெயர் தெரியாத ஒருவரை, என் பெயரை இருட்டடிப்பு செய்யும் ஒருவரை நான் சந்திப்பதில்லை. எனவே, தம்பி, உன்னை நான் எந்த இடத்திலும் சந்திக்க இயலாது. என் அடையாளம் எழுத்து. அதுவே உனக்குத் தெரியாத போது உன்னை எப்படி நான் சந்திப்பது? எனவே அந்த சந்திப்பை ரத்து செய்து விடுங்கள் நண்பர்களே!