புத்தக விழா

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் இந்த 2020-ஆம் ஆண்டு புத்தக விழாவை என் வாழ்நாளில் மறக்க இயலாது.  இப்படியான கொண்டாட்டம் இதுவரை என் வாழ்வில் நடந்ததில்லை.  இனிமேல் எழுத்தாளனை தமிழ் சமூகத்தில் கொண்டாடவில்லை என்று சொல்ல மாட்டேன்.  குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை அவர்களின் வாசகர்கள் அதி உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.  சந்தேகமே இல்லை.  அப்படிக் கொண்டாடப்படுகின்றவர்களில் அடியேனும் ஒருவன் என்பதை இந்தப் புத்தக விழாவில் கண்டு கொண்டேன்.  இதற்குக் காரணமானவர்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கைத் துவக்கி என் புத்தகங்களைக் கிடைக்கச் செய்த ராம்ஜியும் காயத்ரியும்.  அவர்களுக்கு நன்றி என்று சொல்வது வெறும் சம்பிரதாயமாகி விடும்.  புத்தகங்கள் கிடைத்தால்தானே அதைப் படிப்பார்கள்?  அது கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தது.  ஏராளமான வாசகர்கள் “உங்கள் நூல்கள் என் வாழ்க்கையை மாற்றின” என்று சொன்னார்கள்.  பல வாசகர்கள் “சாருவுக்கு முன், சாருவுக்குப் பின்” என்று ஆனதாகக் குறிப்பிட்டார்கள்.  ஒரு வாசகர் என் பாதம் தொட்டு வணங்கினார்.  அவர் வயது 50 இருக்கும்.  நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.  இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் என்றார்.  எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்றும் பணியில் இருப்பவர்.  அவர் சொன்னார், “உங்கள் எழுத்து என் வாழ்வை மாற்றி விட்டது” என்று.  இதேபோல், இதே வயதுள்ள வேறொரு மனிதர் செய்தார்.  அவர் ஒரு வக்கீல்.  இதே வார்த்தைகளைத்தான் சொன்னார். 

பாதம் பணிவதைப் பற்றி நான் நேற்றைய பேச்சில் குறிப்பிட்டிருக்கிறேன்.  இதெல்லாம் காசுக்காகவோ, ஜால்ரா அடிப்பதற்காகவோ செய்வதல்ல.  குரு பக்தி.  நான் செய்தேன்.  எனக்குச் செய்கிறார்கள்.  ஆனால் ஒவ்வொரு மனிதரும் என் பாதம் பணியும் போது “நம்மிடம் உள்ள ஆசாபாசங்கள் அகல வேண்டும்; நாம் இறைத் தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்” என்ற எண்ணம் வளர்கிறது.  பொறுப்பு கூடுகிறது.  பணிவு அதிகரிக்கிறது. 

ஒருநாள் ஒரு வாசகர் – இளைஞர் – என் புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு என்னோடு புகைப்படம் எடுக்கும் போது அவர் வாய் குழறியது.  கைகள் நடுங்கின.  அவரால் எதுவுமே பேச இயலவில்லை.  பக்கத்திலேயே அவர் மனைவியும் ஆறு வயது மகனும்.  அந்தப் பெண்  “சாரு, உங்களைச் சந்தித்த அதிர்ச்சியில், பதற்றத்தில் அவரால் எதுவும் பேச முடியவில்லை” என்று ஆரவாரமாகச் சிரித்தார்.   கவுண்ட மணி செந்திலின் வாழைப்பழ ஜோக்குக்கு நாம் சிரித்தோம் அல்லவா, அப்படிப்பட்ட வெகுளியான சிரிப்பு அது.  அவருக்கோ கூச்சம் அதிகமாகி விட்டது.  அந்தப் பெண்ணுக்கோ சிரிப்பு அதிகமாகி விட்டது.  நான் கொஞ்சம் லகுவாகி, அவரிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்றேன்.  என் எண்ணம் என்னவென்றால், அவர்களின் தோற்றம் அவர்கள் ஸாஃப்ட்வேர் பணியில் இருப்பவர்கள் போல் இருந்தது.  அவரால் பதில் சொல்ல இயலவில்லை.  அந்த அளவுக்கு இன்ப அதிர்ச்சியில் இருந்தார்.  அந்தப் பெண்ணே மேலும் சிரித்தபடி,  ”நாங்கள் இருவருமே கார்டியாக் சர்ஜன்கள்” என்றார்.  எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். 

பக்கத்தில் அமர்ந்திருந்த அவந்திகா அவர்கள் போன பிறகு சொன்னாள்.  ”இப்படி ஒரு அன்பான, அழகான, இனிமையான தம்பதியை நான் பார்த்ததே இல்லை; இவர்களிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.”  அவள் சொன்னதை நான் அப்படியே வழிமொழிகிறேன்.  அவர்களின் பெயரை நான் குறிப்பிடலாமா இல்லையா என்று தெரியவில்லை.  குறிப்பிட்டால் பல நண்பர்கள் அவர்களைப் பகடி செய்யலாம் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.  ஊரில் எத்தனையோ கார்டியாக் சர்ஜன் ஜோடிகள் இருப்பதால் ஒன்றும் பிரச்சினையில்லை.  பெயர் குறிப்பிடுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. 

அமெரிக்காவில் ஒரு நண்பர் 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு நூறு டாலர் அனுப்பினார்.  அவர் வசிப்பது நியூ ஜெர்ஸி.  அவர் பெயரைக் குறிப்பிட்டு நன்றி சொல்லி நான் என் ப்ளாகில் எழுதினேன்.  மறுநாள் மாலை அவர் எனக்கு ஃபோன் செய்து விட்டார்.  என் ப்ளாகைப் படித்து நியூ ஜெர்ஸியில் உள்ள ஆன்மீக சமாஜங்கள், கோவில் நிர்வாகிகள் அனைவரும் ’சாருவுக்கு நூறு டாலர் என்றால், எங்களுடைய சத்காரியங்களுக்கும் நூறு நூறு டாலர் கொடுங்கள்’ என்று சொல்லி வரிசை கட்டி அவர் வீட்டுக்கு வந்து விட்டார்களாம்.  அதிலிருந்துதான் பெயரைக் குறிப்பிடுவதில் அதிகவனம் கொள்ள ஆரம்பித்தேன். 

இந்தப் புத்தக விழா இப்படி எத்தனையோ சம்பவங்களை எனக்குக் காண்பித்தது.  தினந்தோறும் நண்பர் பிரபு என்னை என் வீட்டுக்கு வந்து புத்தக விழாவுக்கு அழைத்துச் சென்று, ஐந்து மணி நேரம் ஸீரோ டிகிரி அரங்கில் காத்திருந்து என்னை ஒன்பது மணிக்கு மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுக் கொண்டிருந்தார்.  ஐந்து மணி நேரம் அவர் என்ன செய்தார்? எனக்குத் தேவையான ஜூஸ் போன்ற விஷயங்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பது தவிர வேறு ஒன்றுமே இல்லை.  வெறுமனே காத்திருந்ததுதான்.  மற்றொரு நண்பர் பாக்யராஜ்.  அவரும் பல நாட்கள் வருவார்.  ஐந்திலிருந்து ஒன்பது மணி வரை வெறுமனே என் அருகில் அமர்ந்திருப்பார்.  எனக்கு என்ன தேவை என்று கேட்டுக் கொண்டே இருப்பார்.  நான்கு மணி நேரம்.  வினித் என்ற நண்பரும் இப்படியே.  என் பக்கத்தில் நின்றபடியே நான்கு மணி நேரம்.  இத்தனைக்கும் அவர் காலில் அடி வேறு பட்டிருந்தது.  உட்காருங்கள் என்றால் ம்ஹும்.  ஒரு வார்த்தை பேசவில்லை.  வெறுமனே என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்.  சென்ற ஆண்டு வினித்தை நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள் வினித் என்று சொல்லி விட்டேன்.  அதிலிருந்து அநாவசியமாக வாயே திறப்பதில்லை. 

இன்னும் எத்தனையோ கதைகள்.  சொல்வேன்.  இவர்கள் அனைவருக்கும் என் எழுத்தால் சேவை செய்வேன்.