பழுப்பு நிறப் பக்கங்கள் (தொடர்ச்சி)

எந்த விதத்தில் பழுப்பு நிறப் பக்கங்கள் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இப்போது உங்களுக்குக் கிடைக்கும் ந. சிதம்பர சுப்ரமணியன், சி.சு. செல்லப்பா, க.நா.சு., தஞ்சை ப்ரகாஷ் போன்ற மூத்தவர்களின் புத்தகங்கள் எதுவும் பிழை திருத்தம் செய்யப்படாமல் வருகின்றன. சண்டைக்கு வராதீர்கள் பதிப்பக நண்பர்களே, பெரும்பாலான நூல்களைச் சொல்கிறேன். பிழை திருத்தம் செய்பவர்கள் தமிழில் இல்லை. இதுதான் எதார்த்தம். இதைப் பதிப்பகத்தினர்தான் செய்ய வேண்டும். தமிழ்ப் பேராசிரியர்களை நியமித்தால் அவர்கள் தி. ஜானகிராமனையும் செல்லப்பாவையும் க.நா.சு.வையும் கொன்று விடுவார்கள். அவர்களுக்கு இலக்கணம் தெரியும்; இலக்கியம் தெரியாது. ஆக, பதிப்பகத்தாரேதான் செய்ய வேண்டும். பதிப்பகத்தாருக்கு வேறு வேலை —————-ர் இல்லையா என்ன? அதனால் பெரும்பாலான நூல்கள் பிழைதிருத்தம் செய்யப்படாமலேயேதான் வருகின்றன. அதைத்தான் நாம் லா.ச.ரா., தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா என்றெல்லாம் வாசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். செல்லப்பாவின் சுதந்திர தாகம் நாவலின் முக்கிய ஊடுபாவு மகாத்மா காந்தி. முதல் பக்கத்தின் முதல் வரியில் மகாத்மா காண்டு என்று வருகிறது. செல்லப்பாவின் ஆவி துடிதுடித்துப் போயிருக்கும். காந்தி கவலைப்பட மாட்டார். இதை விட பயங்கரத்தையெல்லாம் பார்த்தவர் அவர். எதற்குச் சொல்கிறேன் என்றால், நான் பழுப்பு நிறப் பக்கங்களுக்கு ஆதாரமாகக் கொண்ட நூல்கள் அனைத்தும் 1960களில் செல்லப்பாவே பதிப்பித்தவை. அதேபோல் மற்றவர்கள் விஷயத்திலும் அவரவரின் ஒரிஜினல் புத்தகங்களிலிருந்தே மேற்கோள் காட்டியிருக்கிறேன். மேற்கோள் என்று சொல்லி இத்தனை பக்கங்களை எடுத்துக் கொடுக்கிறீர்களே என்று செல்வகுமார் ஒருமுறை கேட்டார். அப்படிக் கொடுக்காவிட்டால் இப்போது கிடைக்கும் கசாமுசா பிரதிகளையே நீங்கள் செல்லப்பா எழுதியது, தஞ்சை ப்ரகாஷ் எழுதியது என்று நம்பி அர்த்தம் புரியாமல் முழிக்க வேண்டியிருக்கும்.

இதனாலேயே பழுப்பு நிறப் பக்கங்களை இளைய தலைமுறையினர் வாங்க வேண்டியது அவசியமாகிறது.

இப்போது அந்தப் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று தொகுதியும் 700 ரூபாய்க்கு ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கிறது. மொத்த விலை 1100 ரூபாய் என்பதை 400 ரூ. தள்ளுபடி செய்து 700 ரூபாய்க்குக் கொடுக்கிறார்கள். ஆளுக்கு ஐந்து ஐந்து பிரதிகள் வாங்கி நூலகங்களுக்குக் கொடுங்கள். உங்கள் வீட்டிலும் நிச்சயம் இருக்க வேண்டிய தொகுதி. இந்த நூலை நம் பிள்ளைகளோடு படிக்கலாம்!!!

நூல் எங்கே கிடைக்கும் என்று தயவுசெய்து எழுதாதீர்கள். கீழே முகவரி தருகிறேன்.

Zero Degree Publishing
No.55(7), R Block, 6th Avenue,
Anna Nagar,
Chennai 600040
Phone: 98400 65000
E mail: zerodegreepublishing@gmail.com