அன்ஃபூ

என்னை ரவி என்று அழைக்கக் கூடிய நண்பர்கள் கவிஞர் சுகுமாரனும் கவிஞர் கலாப்ரியாவும் ஆவர். அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள் இருவரும். அதிலும் கலாப்ரியா என் குடும்ப நண்பரைப் போல. அவரது வேனல் நாவல் சரியானபடி பேசப்படாதது பற்றி என் ஆதங்கத்தை எழுதியிருந்தேன். அதற்கு கலாப்ரியா தன் முகநூலில் பின்வரும் பதிலை எழுதியிருந்தார். அதை நான் புரிந்து கொள்கிறேன். கலாப்ரியாவின் இந்தப் பதிவுக்கு தமிழ் இலக்கிய உலக தாதாவான வண்ணதாசனும் அவரது அடிப்பொடிகளும் பின்னூட்டம் என்ற பெயரில் என்னைத் தாக்கியும் அவதூறு செய்தும் எழுதியிருக்கிறார்கள். அதற்கு மிக விரைவில் பதில் சொல்லுவேன். மொத்தத்தில் வேனல் பற்றி நான் சொன்னது என்னவென்றால், இந்த நாவல் ஏன் போதுமான அளவுக்குப் பேசப்படவில்லை என்பதைத்தான். நேற்று உலக சினிமா பாஸ்கரன் என்னை அழைத்தார். மிஷ்கினின் சைக்கோ பற்றி வெள்ளிக்கிழமை ஒரு கலந்துரையாடல்/கூட்டம் இருப்பதாகச் சொல்லி என்னை அதில் கலந்து கொள்ள அழைத்தார். நான் என்ன சொன்னேன் தெரியுமா? கலாப்ரியா தமிழின் ஒரு மூத்த கவி. அவர் எழுதிய வேனல் நாவல் பற்றிப் போதுமான அளவு பேச்சே இல்லை. விமர்சனமே இல்லை. மதிப்புரையே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ஒரு காப்பியடிக்கப்பட்ட சினிமா பற்றிப் பேச நான் தயார் இல்லை என்று அங்கே கூட கலாப்ரியாவின் வேனல் பற்றித்தான் குறிப்பிட்டேன். ஒரே குடும்பத்தில் என் அப்பாருக்கும் சாகித்ய அகாதமி, எனக்கும் சாகித்ய அகாதமி வாங்கிக் கொண்டு, நண்பர்களின் நூலைப் பற்றி ஒரு வார்த்தை வராவிட்டாலும் பரவாயில்லை, நம் குண்டு சட்டி நிறைந்ததா என்று பார்ப்பவன் அல்ல நான்.

வண்ணதாசனை அன்பின் மொத்த உருவம் என்பார்கள். இங்கே முகநூலில் பின்னூட்டம் என்ற பெயரில் ட்ராகுலாவாக மாறியிருக்கிறார் பாருங்கள். அது ஏன் ஐயா, அன்பின் மொத்த வடிவம் கூட சாரு நிவேதிதா என்றால் ட்ராகுலாவாக மாறி விடுகிறீர்கள்? விரைவில் வண்ணதாசனின் பின்னூட்டங்களை இங்கே பதிவு செய்கிறேன். கீழே வருவது கலாப்ரியாவின் வருத்தம்:

சாரு நிவேதிதா என்னுடைய நீண்ட நாள் நண்பர். என் மீதும் என் படைப்புகள் மீதும் அன்[பும் அக்கறையும் கொண்டவர். அதே போல சந்தியா பதிப்பகமும் என் மீதும் என் படைப்புகள் மீது அக்கறையும் அன்பும் உடையவர்கள். கடந்த 25 வருடங்களில் என்னுடைய நூல்களில் அதிகமானதை அவர்களே தரமாகவே வெளியிட்டிருக்கிறார்கள்.
சாரு தன் வலைப் பக்கத்தில் என்னுடைய வேனல் நாவல் பற்றி சில கருத்துகளைச் சொல்லி இருக்கிறார், நாவல் வந்ததே பலருக்கும் தெரியாது என்பது போல. ஆனால் அதற்கு நிறைய வரவேற்பு இருந்தது. தமிழ் இந்துவில் அரைப்பக்கம் நல்ல விமர்சனம் வந்தது. தடம், குங்குமம், விகடன் ஆகிய இதழ்களிலும் எழுதியிருந்தார்கள். அந்த நாவலை சந்தியா பதிப்பகம் சிறப்பாகவே வெளியிட்டிருந்தார்கள். கணிசமான பிரதிகள் அச்சிட்டு, மூன்று வருடங்களாக நன்றாகவும் விற்றுக் கொண்டிருக்கிறது. அதெல்லாம் சாருவை எட்டவில்லையோ என்னவோ. என் மீதுள்ள அக்கறை, ஆதங்கம் காரணமாகவோ என்னவோ, வேனல் நாவலின் தயாரிப்புத் தரம் பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகம் போல இருக்கிறது, என்று சந்தியா பதிப்பகத்தார், அச்சகத்தார் மீது sarcastic ஆக கமெண்ட் சொல்லியிருக்கிறார், இது அவர்களைக் காயப்படுத்துகிற விஷயம். வேனல் நாவலோ அல்லது அவர்கள் வெளியிட்ட எனது மற்ற நூல்களின் தயாரிப்புத் தரம் குறித்தோ எனக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை. எல்லோருடனும் நல்ல உறவைப் பேண நினைக்கிற எனக்கு இது ஒரு சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது.

பின்வருவது நெல்லை இலக்கிய தாதா வண்ணதாசனின் பின்னூட்டம்:

Vannadasan Sivasankaran S ‘ எல்லோருடனும் நல்ல உறவைப் பேண நினைக்கிற’ என்கிற, ‘ என்னத்துக்கு வம்பு’ என்று ஒதுங்கிப் போகிற நம்முடைய இயல்பைத் தான், அவர்கள் முதலில் தாக்குவதற்கான பலவீனமான இலக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.- கலாப்ரியாவை நாற்பது வருடத்திற்கு முந்திய ஹீரோவாகக் காட்டிவிட்டு, அவர் ஒரு நாவல் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். மிகுந்த சிரமப்பட்டு அதன் பெயர் வேனல் என்று அறிந்து, மிகுந்த சிரமப்பட்டு அதை வெளியிட்டது சந்தியா பதிப்பகம் என்றும் தெரிந்து கொண்டேன்.” என்று எழுதுகிறார். –

Vannadasan Sivasankaran S அடுத்த அவருடைய
நான் லீனியர் அக்கறை இப்படி இருக்கிறது – “அந்த நாவல் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. யாரும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்படி ஒரு நாவல் வெளிவந்ததே யாருக்கும் தெரியாது. புத்தக பைண்டிங்கும் ஏதோ பன்னண்டாம் வகுப்பு கணித நூல் மாதிரி இருக்கிறது”. இவ்வளவு தேடிக் கண்டுபிடித்த , வேறு யாரும் ஒருவார்த்தை சொல்லாத ‘ வேனல்’ பற்றி அவர் நான்கு வார்த்தைகள், குறைந்த பட்சம் எஸ்.செந்தில் குமாரின் க’ கழுதைப்பாதை’க்குச் சொன்னது போலவேனும் எழுதியிருக்கலாம் தானே.

Vannadasan Sivasankaran S பன்னிரண்டாம் வகுப்புக் கணக்கும், அதைச் சரியாகக் கற்றுக்கொடுக்கிற கணித ஆசிரியரும் தான் முக்கியமே தவிர, புத்தகம் அல்ல. பத்தொன்பது வருடங்களுக்கு மேலாக, அவர் கேலிசெய்கிற, பன்னிரண்டாம் வகுப்புக் கணக்குப் புத்தகம் போல இருக்கும் என்னுடைய தொகுப்புகளை, நடந்துகொண்டு இருக்கும் நெல்லை புத்தகக் கண்காட்சி வரை வாங்கி வாசிக்க, கையில் இருநூறும் முன்னூறும் மட்டுமே வைத்திருக்கிற, யாராவது ஒரு பையன் வந்துகொண்டுதான் இருக்கிறான். – சரி.2000 ரூபாய் விலைதான் அவருடைய தர நிர்ணய அளவை எனில், சந்தியா பதிப்பகம்
2000 ரூபாய் விலையில் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்களின் – உதாரணமாக ஏ.கே.செட்டியார்- தரம் குறித்தோ அல்லது உள்ளடக்கம் பற்றியோ , இந்த ஃபிலிஸ்டைன் சமூகம் பற்றி வருத்தப்படும் அவர் ஏதாவது பதிவு செய்ததுண்டா? –

***

தாதா சார், கலாப்ரியா நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஹீரோ என்று சொல்லவில்லை தாதா சார். என் வார்த்தையைத் திரிக்காதீர்கள். கலாப்ரியா இன்றைக்கும் ஹீரோதான் என்றே சொன்னேன். உங்களுடைய ஹீரோ க்ரீடம் போய் விடுமே என்று பயந்து நான் சொல்லாததை சொன்னதாகத் திரிக்காதீர்கள் தாதா சார்.

***

வாழ்நாள் பூராவும் அன்பு பற்றிக் “கதெ” எழுதுகிறார்கள். ஆனால் பிரச்சினை என்று வந்து விட்டால் விஷத்தைக் கொட்டுகிறார்கள் பாருங்கள். இப்போது எங்கே ஐயா போயிற்று உங்கள் அன்ஃபூ?

ஒரு புத்தகத்தின் பைண்டிங் சரியில்லை என்று சொன்னால் அந்தப் பதிப்பகத்தைக் குறை சொன்னதாக ஆகி விடுமா? சந்தியா நடராஜனும் என் நண்பர் தான். நான் உண்மையில் யாரையும் குறை சொல்லவில்லை. 400 ரூபாய்க்கு விலை போட்டால் இப்படித்தான் பைண்ட் பண்ண முடியும். மணிபாலில் அச்சடித்தால் உலகத் தரமான பைண்டிங் கிடைக்கும். ஆனால் அதற்கு 2000 ரூ விலை வைக்க வேண்டி வரும். ஆனாலும், புத்தகங்கள் 2000 பிரதிகள் விற்றால் இதே நூலை மணிபாலிலேயே அச்சடித்து 400 ரூபாய்க்கே கொடுக்கலாம் என்றுதான் சொன்னேன் மட்டிகளா? அது எப்படி சந்தியாவை விமர்சிப்பதாகும்? புத்தகமே வாங்க முடியாது என்று சபதம் போட்டு வாழும் தமிழ்ச் சமூகத்தை அல்லவா விமர்சித்ததாகும்?

ஏன் தாதா சார், இதில் என்ன சார் பிரச்சினை இருக்க முடியும்? ஏன் தாதா சார், எனக்கும் கலாப்ரியாவுக்கும், கலாப்ரியாவுக்கும் சந்தியா நடராஜனுக்கும், எனக்கும் சந்தியா நடராஜனுக்கும் சண்டை மூட்டி விடுகிறீர்கள்? இதில் ஒரு தாத்தா வந்து இதுதான் அய்யம்பேட்டை வேலை என்று எழுதியிருக்கிறது. அட கோவிந்தா, அட சுப்ரமணியா, உங்கள் தாதா வண்ணதாசன் செய்திருப்பதுதான் அய்யம்பேட்டை வேலை என்பது கூடவா உம்முடைய மூளைக்குப் புரியவில்லை?