ஸீரோ டிகிரி – மாத இதழ்

சாரு நிவேதிதா வாசகர் வட்ட நண்பர்கள் ஸீரோ டிகிரி என்ற பெயரில் ஒரு மாதப் பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.  ஏப்ரல் மாதம் முதல் இதழ் வெளிவரும்.  புதிய எழுத்தாளர்களுக்கும் பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.  திரும்பவும் சொல்கிறேன்.  ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கும் இப்போது ஆரம்பிக்கப்பட இருக்கும் ஸீரோ டிகிரி பத்திரிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  மாதாமாதம் நான் அதில் எழுதுவேன்.  உயிர்மையில் நான் முதல் இதழிலிருந்து பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாதம் கூட இடைவெளி விடாமல் எழுதிக் கொண்டிருந்தேன்.  அந்தக் கட்டுரைகள் மிகவும் ஆழமானவை.  அப்படி எழுதுவதற்கு ஹமீது அளித்த ஊக்கமும் உற்சாகமும் மறக்க முடியாதவை.  அப்படிப்பட்ட கட்டுரைகளை உயிர்மையிலிருந்து நான் வந்த பிறகு எழுதவில்லை.  ஒரே ஒரு விதிவிலக்கு: மெதூஸாவின் மதுக்கோப்பை.  இப்போது ஸீரோ டிகிரி பத்திரிகையில் உயிர்மையில் நான் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைத் தொடர்வேன்.  ஒரு இதழ் நூறு ரூபாய்.  ஆண்டுச் சந்தா ஆயிரம் ரூபாய்.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வாசகர்களுக்கும் பத்திரிகை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  அமெரிக்க வாசகர்களுக்கு ஆண்டுச் சந்தா நூறு டாலர்.  அரையாண்டுச் சந்தா ஐம்பது டாலர்.  தனி இதழ் பத்து டாலர்.  கிண்டில் எடிஷனும் உண்டு.  விலை குறையாது.  அதே நூறு ரூபாய்தான்.  ஆசிரியர் நான் இல்லை.  இதழ் வந்ததும் பார்த்துக் கொள்ளுங்கள்.  இதை வாசிப்பவர்கள் தயவுசெய்து இந்தச் செய்தியை நண்பர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.