பூனைகளும் நானும்…

பூனை புராணம் போதுமே சார் என்றார் பத்திரிகை ஆசிரியர்.  வாசகர்களை ரொம்பவும் போட்டுத் தாளிக்கக் கூடாது அல்லவா, அவர் சொல்வதும் சரிதான் என்று ஏற்றுக் கொண்டேன். சாரு ஆன்லைனிலும் எழுத வேண்டாம் என்றார்கள் நண்பர்கள். ஏற்கவில்லை.  எழுத எழுத வந்து கொண்டே இருக்கிறதே, என்ன செய்ய? ஆனால் ஒரு உத்தரவாதம் கொடுக்க முடியும்.  எழுதியதையே திரும்ப எழுத மாட்டேன்.  எனவே பூனை விஷயம் பிடிக்காதவர்கள் கொஞ்ச நேரம் ஒதுங்கிக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முன்கதையை மட்டும் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.  மைலாப்பூர் அப்பு தெருவில் தனீ வீட்டில் ராஜபோகமாக இருந்த நாங்கள் சாந்தோம் நெடுஞ்சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் குடிபெயர்ந்த காரணம், அப்பு தெரு வீட்டில் ஸோரோ இறந்து விட்டதுதான்.  ஸோரோ எங்கள் காவலன்.  தனி வீட்டில் வேட்டை நாய் இல்லாமல் வாழ முடியாது.  ஸோரோ பழகியவர்களுக்குக் குழந்தை; புதியவர்களுக்கு பேய்.  அப்பேர்ப்பட்ட ஸோரோவே சிலரிடம் முதல் பழக்கத்திலேயே குழந்தை போல் கொஞ்சியிருக்கிறது.  அவர்கள் விதிவிலக்கு.  அவ்வளவு பெரிய தனீ வீட்டில் பப்புவோடு மட்டும் இருப்பது சாத்தியம் இல்லை.  பப்பு திருடனோடு கூடவே ஓடி விடும்.  ஸோரோ க்ரேட் டேன்; பப்பு லேப்ரடார்.  அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்ததும் கொஞ்ச நாளில் பப்புவும் போய் விட்டது.  முதுமை.  அப்போது எங்களிடம் கெய்ரோ மட்டுமே எஞ்சியது.  பப்புவும் கெய்ரோவும் நெருங்கிய நண்பர்கள்.  நாயும் பூனையும் விரோதிகள் என்பார்கள்.  ஆனால் எங்கள் வீட்டில் பப்புவும் கெய்ரோவும் செம தோஸ்த்.  பப்புவின் மீதுதான் கெய்ரோ தூங்குமே.  பப்பு இறந்ததும் கெய்ரோ எங்களை விட்டுப் பிரிந்து விட்டது.  அதுவே கிளம்பிப் போய் விட்டது.  பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்பில் இருக்கிறது.  ஆனால் அவந்திகாவை அந்தப் பக்கம் பார்த்தாலே ஓடி விடுகிறது.  அங்கேயுள்ள பெண்கள் பூனையை அடித்தீர்களா என்று அவந்திகாவைக் கேட்டார்கள்.  அதோடு அவள் பட்டினப்பாக்கம் பக்கம் செல்வதையே நிறுத்தி விட்டாள். கெய்ரோ எங்கள் வீட்டில் பேரரசன் வீட்டுப் பிராணியைப் போல் வளர்ந்தது தனிக்கதை.

அப்பு தெரு தனி வீட்டில் எங்களோடு இருந்த சிண்ட்டுவை அவந்திகா எங்களோடு இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்து வந்தாள்.  ஆனால் சிண்ட்டூ இந்த ஹைரோடைத் தாண்டி எப்படியோ உயிரோடு அப்பு தெருவுக்கே போய் விட்டது.  அது இன்னமும் எனக்கு ஆச்சரியம்தான்.  பூனைகள் இட மாறுதல் செய்யாது என்று படித்திருக்கிறேன்.  மேலும் சிண்ட்டூவுக்கு அங்கே பல காதலிகள் உண்டு.  ஆனால் எப்போதும் கடும் வாகன ஓட்டம் இருக்கும் இந்த நெடுஞ்சாலையை எப்படித் தாண்டியது என்பதுதான் ஆச்சரியம்.  அங்கே அப்பு தெருவில் உள்ள ஒரு வாட்ச்மேன் மூன்று தினங்களுக்கு ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்து சிண்ட்டூவுக்கான உணவை வாங்கிக் கொண்டு போவார்.

சமீபத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் அந்த வாட்ச்மேன் விடுப்பில் போனார்.  அதனால் அவந்திகாவே அங்கே போய் சிண்ட்டூவுக்கு உணவு கொடுத்து வந்தாள்.  ஒருநாள் இங்கே ஜாக்கி ஷோ ரூம் வாசலில் ஒரு பூனை செத்துக் கிடந்ததாகவும் அதை நகரசபைத் துப்புரவுத் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தி விட்டதாகவும் எங்கள் வாட்ச்மேன் சொன்னார்.  கடைசியில் பார்த்தால் அது சிண்ட்டூதான்.  சிண்ட்டூ அப்பு தெருவில் இல்லை.  16 ஆண்டுகள் வாழ வேண்டிய ஒரு உயிர் நாலே ஆண்டுகளில் போய் விட்டது.  எங்களுடனேயே இருந்திருக்கலாம், கெய்ரோவைப் போல.  கெய்ரோவும் முதலில் இங்கே இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்க மக்கர் பண்ணியது.  எல்லோரையும் கடித்தது.  அவந்திகா அதை அப்பு தெருவில் கொண்டு போய் விட்டாள்.  பத்து நாட்களில் கதறிக் கொண்டு ஓடி வந்து விட்டது.  அதுவாக நெடுஞ்சாலையைக் கடக்கவில்லை.  கடக்காது.  அது சிண்ட்டூ மாதிரி அசடு இல்லை.  புத்திசாலி.  அவந்திகா அங்கே போகும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அவளோடு வந்து சேர்ந்தது.  அப்புறம் இங்கே யாரையும் கடிக்காமல் சமத்தாக இருந்து பப்பு இறந்ததும் நீங்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டு ஓடிப் போயிற்று.  அப்படி ஓடிப் போகும் முன்னால் ஒன்று நடந்தது.  நான் அப்போது எங்கோ வெளிநாடு போயிருந்தேன்.  மூன்று வாரம்.  அந்த மூன்று வார காலமும் வீட்டை விட்டு வெளியிலேயே போகாமல் அவந்திகா எங்கே போனாலும் அவள் பின்னாலேயே இருந்திருக்கிறது.  நிழலைப் போல.  உறங்கும் போது கூட அவளுடனேயே அவள் பக்கத்திலேயே உறக்கம்.  நான் ஊரிலிருந்து திரும்பிய மறுநாள் ஓடி விட்டது.  என் கண் முன்னாலேயே ஓடியதைப் பார்த்தேன் என்றாள் அவந்திகா.  மூன்று வார காலம் அவள் கூடவே இருந்ததையும் பிறகு அவள் கண் முன்னாலேயே ஓடியதையும் பிறகு பட்டினப்பாக்கத்தில் அவள் அதை அழைக்கப் போனபோது தலைதெறிக்க ஓடிப் பதுங்கியதையும் அவந்திகாவினால் மறக்கவே முடியாமல் அவள் மூன்று மாத காலம் மிகக் கடுமையான மன உளைச்சலில் விழுந்தாள்.  பிறகு அவளாகவே தேறி எழுந்தாள்.  அந்த மூன்று மாதங்களையும் என்னால் எந்தக் காலத்திலும் மறக்க இயலாது. 

***

நாய்கள் போன பிறகாவது பிராணிகளின் பொறுப்பு இல்லாமல் வேலையைப் பார்ப்போம் என்று நினைத்திருந்தேன்.  25 ஆண்டுகளாக அந்த நாளுக்காகக் காத்திருந்தேன்.  ஆனால் நான் லெபனான் போயிருந்த போது – ஆறு மாதங்களுக்கு முன்னே – சென்னையில் ஒரு மழை இரவின் போது என் தலையெழுத்து மாறிப் போனது.  மழை பெய்த போது கீழே புஸ்ஸியின் குழந்தைகள் மூன்றும் கதறி அழுதிருக்கின்றன.  நான் என்றால் ஐயோ கடவுளே ஏன் தான் இந்த மழையில் வாயில்லா ஜீவன்களைப் படுத்துகிறாய் என்று நினைத்துக் கொண்டு தூங்கிப் போயிருப்பேன்.  அவந்திகா அந்த அழுகையைக் கேட்டு எழுந்திருந்திருக்கிறாள்.  மழை நிற்கும், அழுகை அடங்கும் என்று பார்த்தாளாம்.  ம்ஹும்.  என் விதி மழை வலுத்து, அழுகுரலும் அதிகரித்திருக்கிறது.  அவளுக்கு மனசு கேட்கவில்லை.  புஸ்ஸியையும் அதன் மூன்று குட்டிகளையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள்.  எடுத்து வந்திருக்காவிட்டால் மூன்று குட்டிகளும் மழையில் செத்துதான் போயிருக்கும்.  ஏனென்றால், அதற்கு முந்தின வாரம்தான் எங்கள் இன்னொரு பூனையான சிஸ்ஸியின் இரண்டு அழகழகான பூனைக்குட்டிகள் இரண்டு மழையில் நனைந்து இறந்து மிதந்தன.  ஒரு வாரம் கதறி அழுதது சிஸ்ஸி.  இங்கே குடியிருந்த எல்லோரையுமே அதன் கதறலும் அழுகையும் கலங்க அடித்தது. 

மூன்று வாரப் பயணத்துக்குப் பிறகு நான் வந்து பார்த்த போது மூன்று குட்டிகளும் பெயரோடு இருந்தன.  பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி.  கிட்டி மட்டும் பெண் குட்டி.  புஸ்ஸி மேலே வந்து வந்து பால் கொடுத்து விட்டுப் போனது.  எனக்கு எழுத்து வேலை.  அவந்திகாவுக்கு ஆன்மீகப் பணி.  வாரம் இரண்டு வகுப்புகள்.  இருபது பேர் வருவார்கள்.  பூனை வளர்ப்பு சாத்தியம் இல்லை.  புஸ்ஸியையும் மூன்று குட்டிகளையும் என்ன செய்வது?  வாட்ச்மேன் விஜய் இந்த நான்கையும் பட்டினப்பாக்கத்தில் மீனவர் குடியிருப்பில் கொண்டு போய் விடுவதாகச் சொன்னார்.  கொடுத்து அனுப்பினாள் அவந்திகா.  இரண்டு நாள் கழித்துப் போய்ப் பார்த்தால், புஸ்ஸியைக் காணோம்.  மூன்று குட்டிகளும் குற்றுயிரும் கொலை உயிருமாகக் குப்பைத்தொட்டியில் கிடந்தன.  விஜயைக் கேட்டால் கெக்கபிக்க என்று உளறினார்.  தவறு எங்கள் மீதுதான் என்று நினைத்துக்கொண்டு மூன்று குட்டிகளையும் கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்தோம்.  கீழே தரைத்தளத்தில் குட்டிகளை விட முடியாது.  கார்கள் அதிகம்.  வாகனத்தில் அடிபட்டு விடும்.  நிச்சய மரணம்.  இந்த நிலையில்- சொன்னால் நம்ப மாட்டீர்கள் – தன் குட்டிகளை மழையில் இழந்த சிஸ்ஸி அந்த மூன்று குட்டிகளையும் தன் குட்டிகளாக சுவீகாரம் எடுத்துக் கொண்டு பால் கொடுத்து வளர்க்க ஆரம்பித்தது.  இரண்டு ஆண்டுகளாக தெருவில் வளர்ந்த சிஸ்ஸி அந்த மூன்று குட்டிகளுக்காக எங்கள் வீட்டிலேயே வளர ஆரம்பித்து விட்டது.  ஆக, சிஸ்ஸி என்ற தாய்ப்பூனையும், பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி என்ற குட்டிகளுமாக வளர்க்க ஆரம்பித்தோம்.  கீழே தரைத்தளத்தில் பத்து பூனைகள்.  ஆனால் அந்தப் பூனைகள் யாவும் சாப்பிடும் நேரத்தில் வரும், சாப்பிடும், போய் விடும். 

இதற்கிடையில் சிஸ்ஸி அவ்வப்போது வெளியே போகிறது அல்லவா, அதுவும் ஒரு குட்டி போட்டது.  அதன் பெயர் லக்கி.  பேரழகுக் குட்டி.  பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி மூன்றும் அந்தக் குப்பைத்தொட்டி அனுபவத்துக்குப் பிறகு வீட்டை விட்டு எந்தக் காரணத்தைக் கொண்டும் கீழே இறங்கவோ வீட்டை விட்டு அந்தண்டை இந்தண்டை போகவே மறுத்து விட்டன.  யாராவது வீட்டுக்கு வந்தால் கூட வீட்டில் எங்காவது ஓடிப் பதுங்கி விடும்.  லக்கி மட்டும் ஜாலி குட்டி.  வீட்டிலேயே வளர்வதால் அதற்கு பயம் என்ற உணர்ச்சியே கிடையாது.  எல்லோரிடமும் போகும்.  படு ஜாலி குட்டி.  எங்கள் மடியிலேயே தூங்கும்.  தோளில் அமர்ந்து கொண்டு கீழே இறங்காது.  சிஸ்ஸி ஒரு தினுசான பூனை.  பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி மூன்றுக்கும் பால் கொடுத்து விட்டு தன் சொந்தக் குட்டியான லக்கிக்குக் கொடுக்காது.  லக்கியும் அது பற்றிக் கவலைப்படவில்லை.  Wet cat foodஐ சாப்பிடப் பழகிக் கொண்டு விட்டது. 

ஆக, வீட்டில் ஐந்து, தரையில் பத்து ஆகிய பதினைந்து பூனைகளுக்காகத்தான் நான் அடிக்கடி உங்களிடம் பூனை உணவு கேட்டு எழுதுவது.  சென்ற மாதம் ஒருநாள் இங்கே குடியிருப்பில் உள்ள ஒருவர் – அவர் மட்டும் எங்களை எதிரியாக பாவிப்பவர், ஏனென்றால், அவர்தான் இங்கே ட்ரில்லிங் மெஷின் போட்டு அவந்திகாவை ஓட ஓட விரட்டியவர் – அவர்தான் இங்கே குடியிருப்போர் நலச் சங்க செக்ரட்டரி.  அவர் இங்கே உள்ள பத்து குடும்பத்தாருக்கும் சென்ற மாதம் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.  ”1சி நம்பரில் குடியிருப்பவர்கள் மீது புகார்கள் வந்து குவிகின்றன; அதை விசாரிக்க ஒரு மீட்டிங் நடக்க இருக்கிறது.  1சி ஆட்களும் வந்து கலந்து கொள்ள வேண்டிய” என்று அந்த சுற்றறிக்கையில் கண்டிருந்தது.  1சி என்பது நாங்கள்தான்.  அந்த அன்பரிடம் அவந்திகா நேரிலேயே என்ன விஷயம் என்று விசாரித்தாள்.  பூனைத் தொந்தரவுதான்; போலீஸில் புகார் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என்றார்.  வேறு வேறு ஆட்களாக இருந்தால் ஒரே அடிதடி ரகளை ஆகியிருக்கும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  பிரகாஷ் என்று ஒரு பூனை ஆர்வலர் உள்ளார்.  நூறு பூனைகளுக்கு உணவு போட்டுப் பரிபாலிக்கிறார்.  வீட்டில் அல்ல. வெளியே.  அவர் குடியிருப்பிலும் பூனைகளுக்கு – பத்து – சாப்பாடு போடுவார்.  ஒரு கர்ப்பிணிப் பூனையை அது குறுக்கே வந்தது என்று ஒரு ஆள் உதைத்து விட்டான்.  பிரகாஷ் பிராமணர் என்றாலும் குத்துச்சண்டை வீரர் போல் இருப்பார்.  கர்ப்பிணிப் பூனையை உதைத்தவனை ஓங்கி ஒரு குத்து விட்டிருக்கிறார்.  மூர்ச்சை தெளிய பத்து நிமிடம் ஆனதாம்.  அவன் பிறகு உங்களை என்ன செய்தான் என்றேன்.  என்னைப் பார்த்தாலே பதுங்குகிறான் என்றார்.  நானோ சாத்வீகன்.  அவந்திகா எனக்கும் மேலே.  போலீஸில் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டாள்.  இருந்தாலும் இந்த ஆட்களையெல்லாம் பகைத்துக் கொண்டு எப்படி வாழ்வது என்று எதிர்சாரியில் உள்ள ஒரு பாழடைந்த ஷெட்டில் கொண்டு போய் நான்கு குட்டிகளையும் சிஸ்ஸியையும் விட்டு விட்டு வந்தாள்.  காலையும் மாலையும் போய் உணவு வைத்து விடலாம்.  நீ போய்க் கொடு என்றாள்.  ஒருவேளை நீ கொடேன் என்றேன்.  அத்தனை பேரும் என் வயதைக் கூட பாராமல் visual rape செய்கிறான்கள்; ஒரு மாதிரியாக இருக்கிறது என்றாள். நானே போனேன்.  ம்ஹும்.  பயனில்லை.  குட்டிகள் புது இடம் என்பதால் வெளியில் வரவே பயந்தன. வெளியில் வரவே பயந்தன என்று எழுதினால் உங்களுக்கு என்ன புரியும்?  எனக்கு ஜானகிராமன் மாதிரியெல்லாம் எழுதத் தெரியவில்லை.  உயிர்ப் பயம்.  நான்கு குட்டிகளும் வெளியிலேயே வரவில்லை.  சிஸ்ஸி வழக்கம் போல் கதறியது; அழுதது.  அதுவும் சாப்பிடவில்லை.  அவந்திகாவும் போய்ப் பார்த்தாள்.  ம்ஹும்.  ஒன்றும் நடக்கவில்லை.  மூன்று நாள் நான்கு குட்டிகளும் கொலைப்பட்டினி.  குட்டிகள் பட்டினி என்பதால் தாயும் பட்டினி.

ஒருநாள் ரொம்பக் கஷ்டப்பட்டு கெஞ்சிக் கூத்தாடி தாஜா செய்து நைச்சியம் பேசி அன்பு பாராட்டி நான்கு குட்டிகளையும் வீட்டுக்கு அழைத்து வந்தாள் அவந்திகா.  இரவு பத்து மணியிலிருந்து பனிரண்டு வரை அவைகளை தாஜா செய்தாள்.  இரவு நேரம் என்பதால்தான் அவைகளும் வந்தன.  அதிலிருந்து நாங்களே வளர்க்கிறோம்.  இடையில் சில நண்பர்களிடம் சொன்னேன்.  ஏதாவது பண்ணை வீடு மாதிரி இருந்தால் நான்கையும் கொடுத்து விடலாம்.  லக்கியை மட்டும் நாங்கள் வைத்துக் கொள்ளலாம் என்று நினத்தேன். ஒரு பூனை வளர்ப்பது பிரச்சினையே இல்லை.  ஐந்தும் என்றால் கஷ்டம்.  மேலும், இதுவே ஒரு தனி வீடு என்றால் கூடப் பிரச்சினை இல்லை.  அதுகள் பாட்டுக்குப் போகும், வரும்.   

இப்போது சிஸ்ஸிக்கு இன்னொரு பிரசவம் சம்பவித்தால் என்ன ஆகும்?  இன்னும் மூன்று குட்டிகளா?  தாங்க மாட்டோம் என்பதால் சிஸ்ஸிக்கு கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து விட்டேன். 9000 ரூபாய் ஆனது.  ப்ளூ கிராஸிலும் வெப்பேரி பிராணிகள் மருத்துவமனையிலும் இலவசமாகச் செய்கிறார்களாம்.  ஆனால் அங்கெல்லாம் போய் க்யூவில் நிற்கவும் டோக்கன் வாங்கவும் எனக்கு நேரம் இல்லை.  இங்கே தனியார் மருத்துவமனை போனதற்கே அரை நாள் செலவாகி விட்டது.  அறுவை சிகிச்சையில் மயக்க மருந்து, ஆயுதப் பிரயோகம் எல்லாம் சிஸ்ஸியை ஒருமாதிரி ஆக்கி விட்டது.  அதன் துயரத்தை, வலியைப் பார்த்து இனி ஒருமுறை எந்தப் பூனையையும் அப்படி ஒரு வேதனைக்கு ஆளாக்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.  அதன் வலி பார்த்துக் கண்ணீர் விட்டு அழுது விட்டேன். 

காலை பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தார்.  அறுவைக்கு முன்னால் ஜூனியர் சவரம் செய்து விடலாம் என்று முயற்சி செய்தார்.  அதற்கு சிஸ்ஸி இடம் கொடுக்கவில்லை.  கிளம்பும்போதே அது கூடையை விட்டு வெளியே வர முயற்சி செய்தது.  பொதுவாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளக் கிளம்பும்போதெல்லாம் அப்படிச் செய்ததில்லை.  இன்று அறுவை சிகிச்சைக்குக் கிளம்பும்போது அப்படிப் பண்ணியது.  இருந்தாலும் அமுக்குக் கொண்டு வந்து விட்டேன்.  பின்னர் பெரிய டாக்டர் வந்து மயக்க மருந்து கொடுத்து வயிற்றுப் பகுதியில் சவரம் செய்து முடியை நீக்கினார்.  பிறகு என்னை வெளியே போகச் சொல்லி விட்டார்.  பனிரண்டு வரை வெளியே வெய்யிலில் அமர்ந்திருந்தேன்.  சின்ன மருத்துவமனை.  சிறிய ரெண்டு அறைகள்தான் இருக்கும்; ஆனால் டாக்டர் மிகவும் திறமையானவர்; பணத்தாசை இல்லாதவர்.  இதே கர்ப்பப் பை நீக்க அறுவை சிகிச்சைக்கு 15000 ரூ. கட்டணம் வாங்குபவர்களும் உண்டு.  வெயிலாக இருந்தாலும் பரவாயில்லை,  உட்காரவாவது நாற்காலி இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன்.  அப்போது ஒரு ஆள் வந்து ஒரு காரை எடுக்க வேண்டும் என்றார்.  அவர் டிரைவர் போல் தெரிந்தது.  அது டாக்டரின் கார் என்று தெரிந்தது.  என்னைப் போல் டாக்டரைப் பார்க்க ஒரு பூனையுடன் வந்திருந்த ஒரு மத்திம வயதுப் பெண் – நைட்டியில் இருந்தார் – அந்த ஆளிடம் டாக்டர் சர்ஜரியில் இருக்கிறார்; இப்போது முடியாது என்றார்.  அந்த ஆள் போய் விட்டார்.  பின்னர் ஒரு பத்து நிமிடம் கழித்து வந்து சாவியையாவது வாங்கிக் கொடுங்கள் என்றார்.  அந்தப் பெண்மணி டாக்டர் இருந்த அறையின் கதவைத் தட்டினார்.  ஜூனியர் எட்டிப் பார்த்து இப்போது எதுவும் சாத்தியம் இல்லை என்று அவசரமாகச் சொல்லி விட்டு உள்ளே  போய் விட்டார்.  அதை அந்தப் பெண்மணி அந்த ஆளிடம் சொல்ல, அந்த ஆள், அப்படியானால் நான் காற்றைப் பிடுங்கி விட்டு விடுவேன் என்றார்.  உடனே அந்தப் பெண்மணி “டேய் என்னடா பேசறே?  உள்ளே அவர் ஒரு உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.  என்னடா திமிர்ப் பேச்சு பேசறே?” என்று சத்தம் போட்டுக் கத்தினார்.  உடனே அந்த ஆள் பம்மி விட்டார்.    

பனிரண்டு மணிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது.  கிழிந்து போன நார் மாதிரிக் கிடந்தது சிஸ்ஸி.  எனக்கு ஈரக்குலை நடுங்கியது.  அப்போதுதான் நினைத்தேன், நம்மால் வளர்க்க முடியாவிட்டால் கொண்டு போய் எங்கேயாவது விட்டு விடலாம்; இப்படி இனிமேல் கர்ப்பப் பை நீக்கம் வேண்டாம் என்று. 

இனி கிட்டி கர்ப்பிணி ஆனால் அதைக் கொண்டு போய் நாகேஸ்வர ராவ் பூங்காவில் விட்டுவிட வேண்டியதுதான்.  ஏனென்றால், இந்த கர்ப்பத்தடை அறுவை சிகிச்சையை விட பூங்காவில் விடுவது பூனைக்கு வேதனை இல்லை.  அங்கே பூனைகளுக்கு உணவு போட பத்து இருபது பேர் இருக்கிறார்கள்.  ரெகுலராக சாப்பாடு போடுகிறார்கள்.   மேலும், பூனையின் கர்ப்பப்பையை நீக்க நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றும் நான் நினைத்தேன்.  அது நமக்குக் கீழே இருக்கிறது என்பதால் நம்முடைய வசதிக்காக அதன் வயிற்றைக் கிழித்து கர்ப்பப்பையை நீக்குவதற்கு நாம் யார்?  இனி இந்த வேலையைச் செய்யக் கூடாது.  இப்போதே கிளம்ப வேண்டாம்.  பூனைக்கு மயக்கம் கொஞ்சமாவது தெளியட்டும் என்றார் டாக்டர்.  அதுவரை சிஸ்ஸியைத் தனியே விட மனம் இல்லாமல் அதன் கூடவே நின்று கொண்டிருந்தேன்.  ஒன்றரை மணி நேரம்.  மயக்க மருந்தின் விளைவா என்ன என்று தெரியவில்லை; அதன் உடம்பு அதிகப்படியாக நடுங்கிக் கொண்டே இருந்தது.  பக்கத்தில் நின்று நீவி விட்டபடியே இருந்தேன். 

இதற்கு இடையில் எத்தனையோ முறை அவந்திகாவிடம் சொன்னேன், லக்கி குட்டியைத் தவிர வேறு நான்கையும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் விட்டு விடலாம் என்று.  ஆனால் குழந்தைகளைப் போல் வளர்த்து விட்டு எப்படிக் கொண்டுபோய் விட முடியும் என்றாள் அவந்திகா.  அவள் சொன்னது என்னவோ உண்மைதான்.  குழந்தைகள் போல்தான் வளர்ந்தன.  ஒரு உதாரணம்.  இன்று மாலை ஐந்து மணி அளவில் சிஸ்ஸி மயக்கத்துடனேயே எழுந்து தள்ளாடியபடியே நடந்து வந்து அது சிறுநீர் கழிக்கும் மண் கூடைக்கு வந்து, கூடையில் ஏற முடியாமல் தடுமாறிக் கீழே விழுந்தது.  அந்த அளவுக்கு ஒழுக்கம்.  பிரக்ஞையற்ற நிலையில் கூட அந்த அளவு டிஸிப்ளின்.  இவை பூனைகளாக இருந்தாலும் நாய்களைப் போலவே வளர்கின்றன.  அத்தனை அன்பாக, சிநேகமாக, ஒழுக்கமாக.  இவைகளைக் கொண்டு போய் எப்படி விட என்கிறாள் அவந்திகா. 

இன்னும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.   கீழே தரைத்தளத்தில் பூனைகளுக்கு சாப்பாடு போடாதீர்கள் என்று செக்ரட்டரியிடமிருந்து கடும் உத்தரவு வரவே, மூன்று தினங்கள் தொடர்ந்து சாப்பாடு போடாமல் இருந்தேன்.  ஆனால் அந்தக் கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை.  வெளியே போகும் போதெல்லாம் ஒவ்வொரு பூனையும் பசியால் கதறி அழுதன.  ஒரு பூனை ஒரு வீட்டின் உள்ளே புகுந்து விட்டது.  மூன்றாம் நாள் மாலையே ஆனது ஆகட்டும் என்று உணவு போட ஆரம்பித்து விட்டேன்.

அவந்திகா பூனைகளின் மலஜல மண் கூடையிலிருந்து மண்ணை மாற்றும் போது என்னை என் அறையிலிருந்து வெளியே வந்து விடச் சொல்வாள்.  என் அறையில்தான் அந்த மண் கூடை இருக்கிறது. ஏன் என்று எனக்குப் புரியவில்லை.  ஒருநாள் நானும் உதவி செய்கிறேனே என்று போனேன்.  வேண்டாம் என்றாள்.  வற்புறுத்தினேன்.  இன்று ஒருநாள் மட்டும்தான்; அதுவும் நீ கேட்பதனால்தான் என்றாள்.   பார்த்தால் அந்த மண்ணை குப்பைப் பையில் கொட்டும் போது ஒரு வாயு வெளியே வந்தது பாருங்கள்… மூச்சு நின்று விடும் போலிருந்தது.  பாதாள சாக்கடையில் சில துப்புரவுப் பணியாளர்கள் விஷ வாயு அடித்துச் சாகிறார்களே, கேள்விப்பட்டதுண்டா, அந்த மாதிரி நாற்றமும் விஷமும்.  எப்படி இதைச் செய்கிறாய் என்றேன்.  ”மாற்றும் போது மூச்சு விடக் கூடாது.  மட்டுமல்லாமல் நீ ஏன் இந்தக் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்றுதான் நானே செய்து விடுகிறேன்” என்றாள் அவந்திகா.  இதற்குப் பிறகுதான் அந்த நாகேஸ்வர ராவ் பூங்கா யோசனையைச் சொன்னேன். 

சரி, பூனை உணவு தீர்ந்து விட்டது.  இரண்டு வகையான உணவுகள் தேவைப்படுகின்றன.  ஒன்று, Whiskas Dry Adult Food.  Ocean fish flavor அல்லது வேறு ஃப்ளேவர்.  சிக்கன் வேண்டாம்.  அதேபோல், Whiskas Wet cat  food – adult – salmon gravy.  ஒரு நண்பர் ப்யூர்பெட் வாங்கி அனுப்பினார்.  அது விலை கொஞ்சம் கம்மி என்பதால்.  ஆனால் பூனைகள் மனிதர்களை விட புத்திசாலி.  அந்த உணவை எந்தப் பூனையும் சீந்தக்கூட இல்லை.  பிறகு அதை மற்றதோடு கலந்து கஷ்டப்பட்டு கொடுத்தேன்.  எனவே பிராண்ட் மாற்ற வேண்டாம்.  ஆர்டர் பண்ணுவதற்கு என் முகவரி தேவையெனில் எழுதுங்கள், அனுப்புகிறேன்.  charu.nivedita.india@gmail.com

இதெல்லாம் கொஞ்சம் லஜ்ஜையான விஷயம்தான்.  இப்படி பூனை உணவைக் கேட்பதெல்லாம் எல்லோரும் செய்யக் கூடியதா என்ன?  ஆனால் என் சுயகௌரவத்தை விட பூனைகளின் பசி போக்குவது எனக்குப் பிரதானமாகத் தோன்றுகிறது.  இணைய தளத்துக்கு சந்தா அனுப்பும் வாசக நண்பர்கள் பூனை உணவு அனுப்ப வேண்டாம். 

ராஸ லீலா கலெக்டிபிள் தயாராகி விட்டது.  பணம் அனுப்பிய நண்பர்கள் முகவரி அனுப்பித் தாருங்கள். 

வரும் திங்கள் கிழமை  பெங்களூர் க்றைஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன், பி.ஏ. கிருஷ்ணன் ஆகியோருடன்  Inclusivity என்ற தலைப்பில் நடக்கும் கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன்.  வர முடிந்தவர்கள் வரலாம்.  நேரம் நாளை சொல்கிறேன். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai