நிராகரிப்பும் தடையும் (4)

சாரு நிவேதிதா ஏன் பெருமாள் முருகன் ஆக வேண்டும்?

ஆர். அபிலாஷ்

16.02.20

த. ராஜனின் “சாரு நிவேதிதாவால் ஏன் பெருமாள் முருகன் ஆக முடியவில்லை?” என்னும் கட்டுரையுடன் என்னால் முழுக்க உடன்பட முடியவில்லை. ஏன்? சொல்கிறேன்.

தன்னை ஏன் தமிழ் சமூகம் பொருட்படுத்தவில்லை என சாரு அடிக்கடி சாடுவதுண்டு – அதில் பொறாமையும் உண்டு, நியாயமான வருத்தமும் உண்டு. சாருவின் அழகே அவர் தன் பொறாமைகளையும் ஆசைகளையும் லட்சிய முகமூடிகளின் பின்னால் மறைப்பதில்லை என்பது. ஆனால் சாரு சொல்வதை அதன் நேரடியானப் பொருளில் நாம் ஒரு போதும் எடுத்துக் கொள்ளக் கூடாது; அப்படி செய்தால் சாரு சொல்லுகிற நுண்ணுணர்வற்ற கும்பலுக்கும் நமக்கும் வித்தியாசம் இராது. சாரு சொல்வது ‘என் மீதும் தாக்குதல் தொடுத்து என்னையும் பிரபலமாக்குங்கள்’ என்பதல்ல. அப்படி நம்பினதால் தான் சிலர் அவரை ஏதோ நாய் சேகர் போலக் கண்டு சிரிக்கிறார்கள். ஆனால் சாருவினுடையது ஒரு ஆற்றாமையின் வெளிப்பாடே அன்றி தன்னை சாதி / மத வெறிக்கும்பல் துரத்த வேண்டும் எனும் விருப்பம் அல்ல. சாரு எதிர்பார்ப்பது தன்னுடைய எழுத்துக்கள் பொதுநீரோட்ட சமூகத்தில் சலனங்களை உண்டு பண்ண வேண்டும் என்பதைத் தான். ஆக, சாரு சொன்னதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு த. ராஜன் இவ்வளவு டேபிள் செயரை உடைத்திருக்க வேண்டியதில்லை.

அடுத்து த. ராஜன் போடுவது சற்றே பெரிய குண்டு – அதை பின்நவீன படைப்பாளிகளின் அனைவரின் தலையிலும் அவர் போட்டதாக எடுத்துக் கொள்கிறேன். சாருவின் பின்நவீன எழுத்துக்களுக்கு நேரடியான சாதி, மதப் பின்புலம் இல்லை. ஆகையால் அவை மக்களுடன் நேரடியாக உறவாடுவதில்லை, ஏனெனில் மக்கள் சாதி மற்றும் மதத்தால் தான் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார். பெருமாள்முருகனோ தன்னுடைய சமூகத்தின் மீது நேரடியான விமர்சனங்களை வைத்து எழுதுகிறார்; சமூகச் சீர்கேடுகளைச் சாடுகிறார். அதனால் ஒரு பாலுறவு சார்ந்த சிக்கல் சாதிசனத்திடம் நேரடியாக அவர்களின் வாழ்க்கை / கலாச்சாரப் பின்னணியுடன் பேசப்படும் போது அது எதிர்ப்பை உண்டு பண்ணுகிறது; அவர்கள் கொந்தளிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள், தடை கோருகிறார்கள் என்கிறார் த. ராஜன்.

இதைக் கேட்க ஆரம்பத்தில் “ஆமா உண்மையில்ல” எனத் தோன்றும் பார்வை. ஆனால் ஒரு நொடி நின்று யோசித்தாலே இதன் பிழை புலப்பட்டு விடும் – பெருமாள்முருகனை எதிர்த்தது அவரது சொந்த சாதி சனங்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட இந்துத்துவ / சாதிக் கட்சி சார்ந்த கும்பல். அதுவும் மாதொருபாகன் வெளியானது 2010-இல், ஆனால் சர்ச்சை வெடித்தது 2014-இல். நாவல் நேரடியாக மக்களிடம் பேசி எதிர்ப்பை சம்பாதித்தது என்றால் அது 2010-இலே நடந்திருக்க வேண்டும், ஆனால் நான்கு வருடங்கள் அது பெருமளவு திருச்செங்கோடு மக்கள் பார்வையில் படாமலே இருந்திருக்கிறது. ஒரு சாதிய, மதவாத கும்பல் நாவலின் சில பக்கங்களை பிரதியெடுத்து மக்களிடம் விநியோகித்து பெருமாள்முருகனுக்கு நெருக்கடி கொடுத்து அரசின் ஆதரவோடு கட்டப்பஞ்சாயத்து செய்தது. கிட்டத்தட்ட அவரை அந்த ஊரை விட்டே துரத்தியது. ஆனால் மக்கள் பெருவாரியாகத் திரண்டு பெருமாள்முருகனுக்கு எதிராகப் போராடினதாகவும் எங்கும் பதிவு இல்லை. இன்றும் அவரது சாதியை சார்ந்தவர்கள் அந்நாவலை படித்து கண்டிப்பதாக நாம் காணவில்லை. த. ராஜனுடையது ஒரு தர்க்கப்பிழை – சில அடிப்படைவாதிகளின் எதிர்ப்பை அவர் மொத்த சாதிசனத்தின் எதிர்ப்பாக வகுத்துக் கொள்கிறார். இவர்கள் அச்சாதியினரின் பிரதிநிதிகள் என த. ராஜன் சொல்கிறாரா?

அப்படி சொன்னால் அது இன்னும் ஆபத்தான பார்வை. இதை அறிய ஒரே வழி தான் உண்டு – திருச்செங்கோட்டை சேர்ந்த ஒவ்வொருவரையும் மாதொருபாகனை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் முழுமையாகப் படித்த பின் கருத்துக்கணிப்பு செய்ய வேண்டும். அப்படி ஒன்று நிகழும் வரை அந்நாவல் ஒரு குறிப்பிட்ட சாதியினரை காயப்படுத்தியதாக கொந்தளிக்க செய்ததாக, அவர்களிடம் உரையாடி கோபமூட்டியதாக நாம் கற்பனை செய்வதில் எந்த மதிப்பும் இல்லை.

இதையேத் தான் சல்மான் ரஷ்டிக்கும் தஸ்லிமா நஸ் ரீன் விசயத்துக்கும் சொல்வேன் – அவர்களுக்கு பத்வா விதித்தது ஒரு சிறுபான்மை அடிப்படைவாத கும்பலே அன்றி பொதுமக்கள் அல்ல. நான் இருவரின் நாவல்களையும் மாணவர்களிடம், இஸ்லாமிய மாணவ மாணவியரிடம் கூட, விவாதித்திருக்கிறேன். யாரும் எழுந்து நின்று அந்நாவல்களை கண்டிப்பதோ குரலெழுப்புவதோ இல்லை. பத்வாவுக்குப் பிறகு அது பெரும்பகுதி ஜனங்களிடம் போய் சேர்ந்திருக்கலாம், ஆனால் அவர்களிடம் அது போய் சேர்ந்ததால் பத்வா விதிக்கப்படவில்லை. இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம் உண்டு.

இதுவே அயோத்யா போன்ற மதச்சின்னங்கள், சில திரைப்படங்கள் மீதான சர்ச்சைக்கும், இலக்கியத் தடை பற்றின சர்ச்சைக்கும் உள்ள வித்தியாசம் – முன்னதில் பொதுமக்கள் நேரடியாக சம்மந்தப்படுகிறார்கள், அபிப்ராயம் கொள்ளுகிறார்கள் / தெரிவிக்கிறார்கள்; பின்னதில் ஒரு சில அடிப்படைவாதிகள் மட்டுமே சம்மந்தப்படுகிறார்கள்; அவர்கள் ஒரு இலக்கியப்பிரதியை ஒரு பண்பாட்டுக் குறியீடாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

ஆகையால் நீங்கள் உங்களுடைய சாதியை, மதத்தை நேரடியாக தொடர்ந்து விமர்சித்து எழுதினால் சர்ச்சைக்கு ஆளாவீர்கள் என எந்த உறுதியும் இல்லை. ஜெயமோகனின் ரப்பர் குமரி மாவட்டத்தின் இரு முக்கிய சமூகங்களை கடுமையாக விமர்சித்த, அதனாலே எளிதில் சர்ச்சைக்கு ஆளாகியிருக்க வேண்டிய நாவல். ஆனால் மூன்று பத்தாண்டுகள் கழித்து குமரியில் இருந்து யாரும் மூச்சை விடக் காணோம். இத்தனைக்கும் வேறு எந்த மாவட்டத்தையும் விட அதிகம் படித்தவர்கள் கொண்ட பகுதி அது. சர்ச்சையை விடுங்கள், அவர்களுக்கு தம் மத்தியில் தம்மைப் பற்றி இப்படியெல்லாம் எழுதிய ஒரு படைப்பாளி இருக்கிற விசயமே தெரியாது.

பெருமாள்முருகனின் சர்ச்சை நமக்குக் காட்டுகிற சங்கதி ஒன்று உண்டு – இங்கே ஒரு நாவல் அரசியல் நோக்கங்களுக்காக சர்ச்சைக்கு ஆளாகலாம்; ஆனால் அதற்காக இலக்கிய வாசிப்பு இங்கு பெருவாரியாக நடைபெறுவதாக நாம் கற்பனை பண்ணக் கூடாது. த. ராஜனின் கூற்று சரியெனில் 2014-இல் சர்ச்சை தோன்றிய போது விற்றதற்கு இணையான விற்பனை 2010-இலும் இருந்திருக்க வேண்டும். அல்லது 2014-க்குப் பிறகு விறபனை பலமடங்கு பெருகிய நிலையில் பல லட்சம் பேர் அதைப் படித்து அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தாம் அவமதிக்கப்பட்டதாக எண்ணி பெருமாள்முருகனைக் கண்டித்து தெருவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தெருவுக்கு வருவதை விடுங்கள், ஒரு கண்டனக் கட்டுரையைக் கூட வாசகத் தரப்பில் இருந்து காணோம்.
த. ராஜன் செய்வதைப் போல டி.எம். கிருஷ்ணாவை இங்கு இழுப்பது நியாயம் அல்ல – பிராமண சமூகம் பரவலாக கர்நாடக இசையைக் கொண்டாடுகிறது. ஆனால் தமிழ் சமூகம் அப்படி புத்தகங்களைக் கொண்டாடுவதில்லை. யு.ஆர். அனந்தமூர்த்தி விடயமும் அப்படித்தான் – தமிழ் சமூகத்தை நீங்கள் இவ்விசயத்தில் கர்நாடக, கேரள சமூகங்களுடன் ஒப்பிடவே கூடாது (கேரளாவில் இத்தகைய இலக்கிய சர்ச்சைகள் அடிக்கடி வெடிக்கும்.)

“சாரு, எழுத்துக்கு வெளியேயும் உள்ளேயும் தன்னை யாராக அடையாளப்படுத்திக்கொள்கிறார் என்று கேள்வி எழுப்பினால், அது விடை காண முடியாத ஒரு குழப்பமான இடத்துக்கு இட்டுச்செல்லும். அவர் திட்டவட்டமாக எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தோடும் தன்னை எழுத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, அவரிடம் உள்வட்ட உரையாடல் கிடையாது. மாறாக, அடையாளமழித்தல் எனும் உத்தியைத் தேர்ந்தெடுத்தார். சாரு தன்னுடைய ஸீரோ டிகிரி நாவலை எந்த அத்தியாயத்திலிருந்து வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பார். ராஸ லீலா நாவலின் முதல் பகுதி தவிர்த்து, பிற பெரும்பாலான படைப்புகள் இப்படியான சிதறுண்ட உத்தியையே கொண்டிருக்கின்றன. அது ஒரு வகையில் கதை என்பதை அழிப்பதோடு, அடையாளத்தையும் அழித்துவிடுகிறது; பொதுத்தன்மையைக் கொடுத்துவிடுகிறது. ‘நான்-லீனியர்’, ‘பின்நவீனத்துவம்’, ‘ஆட்டோஃபிக்‌ஷன்’ போன்ற உத்திகளை சாரு கையாளும்போது, அங்கே அடையாளமழித்தலை நிகழ்த்திவிடுகிறார். ‘சாரு நிவேதிதா’ என்ற புனைபெயர் தேர்வைக்கூட அவரது அடையாளமழித்தலுக்கான செயலாக வாசிக்க இடம் உண்டு.”

இந்த ‘குற்றச்சாட்டை’ நீங்கள் தமிழின் பல மகத்தான படைப்பாளிகள் மீது வைக்க முடியும். அது ஏன் உலகம் முழுக்க பின்நவீன எழுத்தாளர்கள் மீது வைக்க முடியும் – சமூக அரசியல் அடையாளங்கள் மொழிவயப்பட்ட கதையாடல்கள் ஆகி விட்ட நிலையில் நீங்கள் நிகழும் வாழ்க்கையை எதார்த்தமாக பேசுகிற அளவுக்கு ‘நிகழ்த்தப்படும்’ வாழ்க்கையையும் பேசித்தான் ஆக வேண்டும். பின்நவீன இலக்கியத்தின் நோக்கம் எதார்த்தத்தை பதிவு பண்ணுவதல்ல; அது எதார்த்தம் சாரமிழந்து போன ஒரு காலத்தின் கதையை சொல்கிறது. முழுக்க தகவல்களாலும் சமூகக் கோபங்களாலும் ஆன அருந்ததி ராயின் அபுனைவுகளை எடுத்துக் கொண்டால் சமூக அரசியல் நேரடி உரையாடலைக் காண முடியும். ஒடுக்கப்பட்ட சாதிகளும் மதங்களும் பாதிக்கப்படும் போது அவர் குரல்கொடுப்பார். ஆனால் அவரது The God of Small Things நாவலில் ஒரு தலித் பாத்திரம் வருகிறது – அவனது சாதியை அவர் நேரடியாகக் குறிப்பிடவோ தலித் ஒடுக்குமுறைகளை நேரடியாக காத்திரமாக சாடவோ மாட்டார். இந்நாவலில் அவர் தலித் பாத்திரத்தைக் கையாண்ட விதம் குறித்த கடும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அது அருந்ததி ராயின் தவறு அல்ல – அந்நாவலின் நோக்கம் சாதி விமர்சனத்தை முன்வைப்பது அல்ல. மார்க்வெஸின் நாவல்களின் லத்தீன் அமெரிக்க அரசியலின் பின்னணி இருக்கும், ஆனால் அவர் அவரது படைப்புகள் சமூக அரசியலை ஆவணப்படுத்தாது; பகடி செய்து விட்டு வேறு விசயங்களை நோக்கி நகர்ந்து விடும். பால் ஆஸ்டரின் நாவல்களின் சமூக அரசியல் என்ன என்று கேட்டால் எதுவுமே இல்லை என்று தான் உங்களுக்கு பதில் கிடைக்கும். ஜெ.எம். கூட்ஸியின் நாவல்களிலும் தென்னாப்பிரிக்காவின் இனவாத அரசியல் பின்னணியாக வரும் – ஆனால் அவர் ஆவணப்படுத்தவோ மக்கள் பிரச்சனைக்காக நெஞ்சை அடித்துக் கொண்டு கிங்காங் போல கதறுவதோ இல்லை. அவர் கறுப்பின ஆளால் பலாத்காரம் பண்ணப்பட்ட வெள்ளையினப் பெண் அதை எதிர்க்காமல் பணிந்து போவதைப் பற்றி எழுதுகிறார்; அதுவும் தென்னாப்பிரிக்காவில் வெள்ளை சிறுபான்மையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராட்டங்கள் வெடிக்கும் போது நில ஆக்கிரமிப்புக்காக ஒரு பெண் கறுப்பரால் பலாத்காரம் பண்ணப்படுவது பற்றி எழுதுகிறார். இதன் பொருள் கூட்ஸி இனவாதி என்றல்ல; சொல்லப்படாத தரப்பைப் பேசுவதே படைப்பாளியின் பணி. இதையெல்லாம் விடுங்கள், உலகம் முழுக்க கொண்டாடப்பட்ட பெட்ரோ பரோமோ நாவல் எந்த சமூகத்தின் வரலாற்றைப் பேசுகிறது என்று நீங்கள் கண்டுபிடிக்கவே முடியாது – அது ஒரு பேய் நகரம் பற்றிப் பேசுகிறது; அப்படி எனில் அந்நாவலைப் படிக்கிறவர்கள் எல்லாம் பேய்களா? ஒரு நாவலை அதன் ஆசிரியனின் சாதியினர் படிக்க வேண்டும் என த. ராஜன் கோருவது சரி என்றால் பெட்ரோ பரோமாவை பேய்கள் தானே படிக்க வேண்டும்?

“சாருவின் படைப்புகளில் வரும் இத்தகைய அடையாளமழிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் சமூகப் பாத்திரங்களாக இல்லாமல் தனிமனிதர்களாக இருக்கிறார்கள். அதாவது, சாருவின் பாத்திரங்களைக் கூட்டிக்கொண்டுபோய் ஐரோப்பாவில் விட்டாலும், ஆப்பிரிக்காவில் விட்டாலும் அவர்களால் அந்த நிலத்தில் உயிர்பெற்றுவிட முடியும். அவர்கள் எல்லோருக்குமானதான பொதுவான தன்மையைக் கொண்டிருக்கிறார்கள். பொதுவான தன்மையைக் கொண்டிருக்கும் இந்தப் பாத்திரங்களோடு ஒரு வாசகர் தனிநபராக அடையாளப்படுத்திக்கொள்ள முடியுமே தவிர, சமூகநபராக அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. தனிநபர்களாக அடையாளப்படுத்துதல்தான் சாத்தியம் எனும்போது, பெருந்திரளான சமூக எதிர்ப்பு எப்படிச் சாத்தியமாகும்?”

சாருவின் பாத்திரங்கள் அடையாளம் அழிக்கப்பட்டவர்கள் என நான் நினைக்கவில்லை – எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும் நாவலை மட்டுமே நீங்கள் எடுத்துக் கொண்டால் கூட அதில் தெளிவான சமூகக் குறிப்பான்கள் உண்டு. மையபாத்திரத்தின் குடும்ப வரலாறு வருகிறது; அதைக் கொண்டு ஒருவாறு என்ன சமூகப்பின்னணி என கணித்து விடலாம். த. ராஜனின் விமர்சனம் நிச்சயம் கோணங்கிக்குப் பொருந்தும்; ஓரளவுக்கு எஸ்.ரா.வுக்கும். ஆனால் சாருவின் பாத்திரங்களை நீங்கள் ஐரோப்பாவில் கொண்டு போய் விட்டாலும் பிழைப்பார்கள் என்பது ரொம்பவே ஓவர் – அந்தப் பாத்திரங்களுக்கு என்று ஒரு தனித்த தமிழ்த்தன்மை உண்டு. தில்லியில் வேலை செய்யும் ஒரு தமிழன் அங்குள்ள ஒரு பெண்ணைப் பற்றி எழுதும் போது அது தில்லிவாழ் மனிதனின் குரலாக நமக்கு ஒலிப்பதில்லை; தில்லி வாழ்க்கை பற்றி சுஜாதா எழுதியதுடன் சாருவை ஒப்பிட்டால் இந்த வித்தியாசம் புரியும். இருவருடன் ஆதவனின் எழுத்தை ஒப்பிடும் போது நகர்வயப்பட்ட தமிழ் மனத்தை இன்னும் நன்றாக அடையாளம் காண முடியும். அடையாளம் என்பது சாதியின் பெயரைக் குறிப்பிட்டு ஊர்வழக்குடன் ஊர்ப்பிரச்சனைகளை மட்டும் பேசுவதல்ல.

“தனிநபர்களாக அடையாளப்படுத்துதல்தான் சாத்தியம் எனும்போது, பெருந்திரளான சமூக எதிர்ப்பு எப்படிச் சாத்தியமாகும்?” – இதைத் தான் த. ராஜனின் மையக்கருத்து எனக் காண்கிறேன். இது தமிழில் உள்ள ஒரு கற்பிதம் என்ற வகையில் இதைப் பற்றி நிச்சயம் பேசியாக வேண்டும். தமிழில் தீவிர இலக்கியம் பரவலாக வாசிக்கப்படாததற்கு பொதுமக்களின் சமூக அரசியல் பிரச்சனைகளில் தமிழ் எழுத்தாளன் தலையிடுவதில்லை, தெருவில் இறங்கி பதாகை ஏந்துவதில்லை, அவன் மக்களை புறக்கணிப்பதால் மக்களும் அவனைப் புறக்கணிக்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இதை விட அபத்தம் வேறில்லை. சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், பி.டி. சாமி போன்றோரெல்லாம் எந்த போரட்டத்தில் பங்குபெற்றார்கள் அல்லது எந்த சமூக அரசியல் பிரச்சனையை தம் நாவல்களில் பேசி மக்களைக் கவர்ந்தார்கள்? அவை பொழுதுபோக்குக்காக படிக்கப்பட்டன, சமூக அரசியல் தேவைக்காக அல்ல என்றால் ஏன் அதே லாஜிக் இலக்கிய நாவல்களுக்கு பொருந்துவதில்லை? ஏனென்றால் நம்முடையது ஒரு நோயுற்ற சமூகம். வேறெந்த காரணமும் இல்லை.

மக்கள் பிரச்சனையைப் பேசுகிற படைப்புகள் மட்டுமே மக்களிடம் பரவலாகப் போய் சேரும் என்பதைப் போன்ற அபத்தம் வேறொன்றில்லை – நம்முடைய வெகுஜன சினிமாவையும் டி.வி. தொடர்களையும் எடுத்துக் கொண்டாலே இது புரியும். (சமூகப்பிரச்சனையையும் பொழுதுபோக்காகினால் அது ஒரு பிரச்சனை என்பதையே மறந்து நம் ஆட்கள் கைதட்டி ரசிப்பார்கள் என்பதே உண்மை.)

“தங்களை முற்றிலுமாக ‘தனிநபர்’களாகப் பாவித்துக்கொள்பவர்களும், சமூகக் குழுமங்களோடு உரையாடுவதற்கு ஏதுமில்லை என்று நினைப்பவர்களுமே சாருவோடு அடையாளப்படுத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு எனலாம்.”

கேரளாவில் மிகப்பிரசித்தமான எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர்; அவர் நாயர் சமூகத்தின், தறவாட்டின் சீரழிவைப் பற்றிப் பேசினாலும் அவரது நாவல்கள், சிறுகதைகள் ஒவ்வொன்றுமே தனிமனிதனின் அவலத்தை தனிமனிதர்களை நோக்கிப் பேசியவை. அவர் மட்டும் எப்படி பெரும்பான்மை மலையாளிகளுடன் உரையாடுகிறார்? சுஜாதாவின் கணிசமான கதைகள் தனிமனிதர்களைப் பற்றியவையே. அவர் மட்டும் எப்படி இங்கு பிரசித்தமானார்? உலக வாசகர்கள், கேரள வாசகர்களிடம் இருந்தெல்லாம் வித்தியாசமானவர்களா என்ன தமிழ் வாசகர்கள்? அவர்கள் வெகுஜன வாசிப்புக்கும் இலக்கிய வாசிப்புக்கும் தனித்தனி மதிப்பீடுகள் வைத்திருக்கிறார்களா? இலக்கிய நாவல் என வரும் போது மட்டும் சாதி, மத எதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும் என அவர்கள் கோருவார்கள் எனில் அது ஒரு பிளவுண்ட மனநிலையாகயே (அந்நியன் – அம்பி போல) இருக்க வேண்டும். சரி, ராஜன் நீங்கள் சொல்வது உண்மையென்றால் சாதிக்கொடுமைகளை விவரித்த இமயத்தின் கோவேறுக் கழுதைகளும் பிற நாவல்களும் தலா ஒரு கோடி பிரதிகளாவது விற்க வேண்டுமே? (ராஜ் கௌதனமன் போன்ற தலித் விமர்சகர்கள் அவரது கோவேறுக் கழுதைகளை அது அவலங்களை மட்டும் பேசுவதாக சாடியிருக்கிறார்களே; அதைப் பிடித்துக் கொண்டு ஏன் மொத்த தலித் சமூகமும் அந்நாவலை தடை செய்யக் கோரவில்லை? எத்தனை தலித்துகள் அந்நாவலைப் படித்திருக்கிறார்கள்?) கேரளாவில் விற்றிருக்கும், ஏன் இங்கு விற்கவில்லை?

த. ராஜன் ஒன்று நீங்கள் இத்தகைய கற்பிதங்களில் இருந்து வெளிவர வேண்டும், அல்லது இத்தகைய கருத்துக்களை உங்களுக்கு போதிக்கும் முட்டாள்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

***