உணவும் ஃபாஸிஸமும்

இஸ்கான் அமைப்பு (The International Society for Krishna Consciousness)  பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  தெரியவில்லையெனில் இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளலாம்.  என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் சிலர் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.  மிக நெருங்கிய நண்பர்கள் என்றால், என் உயிருக்காகவும் என் வாழ்வுக்காகவும் நான் கடன்பட்டவர்கள் என்று பொருள்.  அவர்களோடு நான் இஸ்கான் பற்றி ஒருபோதும் விவாதித்ததில்லை.  விவாதிக்கப் போவதும் இல்லை. 

பொதுவாகவே நெருக்கமான நண்பர்களோடு நான் முரண்படும் விஷயங்கள் பற்றி விவாதிப்பதில்லை என்ற பழக்கத்தை நாற்பது ஆண்டுகளாகவே கடைப்பிடித்து வருகிறேன்.  ஏனென்றால், பெரும்பாலான விவாதங்கள் வெட்டிச்சண்டைகளாகவே இருப்பதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  மேலும், ஒருபோதும் நான் மற்றவர்களால் மதமாற்றம் அல்லது கருத்து மாற்றம் செய்யப்படுவதை விரும்புவதில்லை.  அதேபோல் மற்றவர்களையும் என் கருத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதோ அல்லது அவர்கள் என் கருத்தை நோக்கி வருவதையோ நான் விரும்புவதில்லை. 

மேலும், மிஷல் ஃபூக்கோ, ரொலான் பார்த், ஜாக் தெரிதா போன்றவர்களை நன்கு கற்று உணராதவர்களோடு விவாதிப்பதை நேர விரயம் என்று நினைப்பவன் நான்.  ஆனால் பெரும் துரதிர்ஷ்டம் என்னவென்றால் – தமிழ்ச் சூழலில் – மேற்கூறிய ஃப்ரெஞ்ச் தத்துவவாதிளை நன்கு கற்று உணர்ந்தவர்கள்  அத்தத்துவவாதிகளின் பெயர்களைக் கூட அறிந்திராத சவலைப்பிள்ளைகளை விட  தங்கள் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும்  மோசமான நிலையில் இருக்கிறார்கள்.  பச்சையாகச் சொன்னால், ஃபூக்கோவைத் தெரியாத காமன்மேனை விட ஃபூக்கோவில் பிஹெச்.டி. ஆய்வு செய்தவர் மூடராக இருக்கிறார்.  தமிழ்ச் சூழலில்.  இது ஒன்றும் ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல.  ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர் சென்னை வந்தபோது அவருக்கு சென்னையில் 50 அடி கட் அவுட் வைக்கப்பட்டது.  வைத்தது அமெரிக்கத் தூதரகம்.  வில்லியம் பர்ரோஸே தமிழில் எழுதினால் நவீன கந்த புராணம்தான் எழுதுவார் போலிருக்கிறது.  தமிழ் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள் அந்த அளவுக்கு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள்.  உதாரணமாக, மிஷல் ஃபூக்கோவைத் தலைகீழாக ஒப்பிக்கக் கூடிய ஒரு அன்பர் தமிழ்நாட்டு சமூகவியல், அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்தால் நம்முடைய எஸ்.வி. சேகர் மாதிரி பேசுவார்.  இன்னொரு திராவிட ஸ்ட்ரக்சுரலிஸ்டோ நம்முடைய மு. வரதராசனார் மாதிரி பேசுவார்.  இதெல்லாம் 35 ஆண்டுகளாக எனக்குள் குமுறும் ஆச்சரியம்.  அதனால்தான் நான் காமன்மேனுடனும் விவாதிப்பதில்லை; ஃபூக்கோ படித்த மேதாவிகளுடனும் விவாதிப்பதில்லை.

இந்த நிலையில் இஸ்கான் அமைப்பின் ஒரு செயல்பாடு தமிழகச் சூழலில் விமர்சனங்களை உண்டாக்கியிருக்கிறது.  தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அமலில் இருப்பது நமக்குத் தெரியும்.  ஆனால் பல குழந்தைகளுக்குக் காலை உணவு கிடைப்பதில்லை.  அந்தக் காலை உணவைத் தருவதற்கு இஸ்கான் அமைப்பு முன்வந்துள்ளது.  இதற்கு ஆகும் செலவில் ஒரு பகுதியைத் தமிழக அரசு ஏற்கிறது.  அதாவது, மக்களின் பணம்.  இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை.  வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.  ஆனால் இஸ்கான் அமைப்பு தாங்கள் வழங்கும் உணவில் பூண்டும் வெங்காயமும் இருக்காது என்று தெரிவிக்கிறது.  இங்கேதான் பிரச்சினை.  பெருவாரியான மக்களின் உணவுப் பழக்கத்தைத் தீர்மானிக்க மேட்டுக்குடியினரான நீங்கள் யார்?  தமிழ்நாட்டில் பூண்டும் வெங்காயமும் இல்லாத உணவை உண்போர் யார்?  முழுக்க முழுக்க பிராமணர்.  ஜைனர்களை விட்டு விடுவோம்.  அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் கம்மி.  மேலும், ஜைன மதம் இந்தியாவில் பரவாததற்குக் காரணமே அந்த மதம் உடலையும் உடல் சார்ந்த கலாச்சாரத்தையும் விலக்கி வைத்தது என்பதனால்தான்.  அந்த வகையில் இந்து மதம் உடலைக் கொண்டாடிய மதம் என்று சொல்லலாம்.  உலக அளவிலேயே மற்ற மதங்கள் உடலையும் உடல் சார்ந்த விஷயங்களையும் பாவம் என்று கருதியபோது இந்து மதம் மட்டுமே உடலைக் கொண்டாடியது.  உடல் சார்ந்த இச்சைகளைக் கொண்டாடியது.  காமத்துக்காக ஒரு சாஸ்திரத்தையே உருவாக்கியது இந்து மதம்.  உடலை மறுக்கும், உடல் இச்சைகளை பாவம் எனக் கருதும் மற்ற மதக் கோட்பாடுகளுக்கு மத்தியில் உடலையும் உடல் இச்சைகளையும் கொண்டாடும் பல்வேறு காமச் சிற்பங்களை தம் மக்களின் வழிபாட்டுத் தலங்களில் இடம்பெறச் செய்தது இந்து மதம்.  ஆனாலும் இந்து மதத்தின் சாதிப்படிநிலையில் உச்சத்தில் இருந்த பிராமணர் உடல் இச்சையைத் தூண்டக் கூடியதாகக் கருதப்படும் பூண்டையும் வெங்காயத்தையும் ஒதுக்கினர்.  இதைக் கூட அவரவர் சார்ந்த கலாச்சாரம் என்று கடந்து போகலாம்.  யாருடைய உணவுப் பழக்கத்தையும் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.  பசுவின் இறைச்சியை உண்பதைக் குறித்த மகாத்மாவின்  கருத்துக்களை நீங்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்.  என் வழிபாட்டுக்குரிய அந்த விலங்கை உண்பது குறித்து நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மட்டுமே என் இஸ்லாமிய சகோதரர்களிடம் வேண்டிக் கொள்வேன் என்றுதான் அவர் குறிப்பிடுகிறார்.  மற்றபடி, அதை உண்பது பற்றி அவர் ஒரு வார்த்தை கூட எதிர்மறையாகச் சொல்வதில்லை.  ஆனால் வெங்காயம் பூண்டைத் தங்கள் உணவில் தவிர்ப்பவர்கள் அப்படித் தவிர்க்காதவர்களை நோக்கி நீங்கள் இழிந்தவர்கள் என்கிறார்கள்.  இப்படி முதலில் சொன்னது பகவத் கீதை.  நான் கீதையின் interpretations-ஐ இங்கே குறிப்பிடவில்லை.  சம்ஸ்கிருதப் பிரதியே அப்படித்தான் சொல்கிறது.  அந்த அத்தியாயத்தை, அந்த ஸ்லோகங்களை பல சம்ஸ்கிருத அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகே இதை எழுதுகிறேன்.  பகவத் கீதையில் பதினேழாவது அத்தியாயத்தில் வரும் ஒன்பதாவது சுலோகம் இது:

कट्वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिन: |
आहारा राजसस्येष्टा दु:खशोकामयप्रदा: || 9||

இதன் பொருள் கட்டு – கசப்பு; அம்ல – புளிப்பு; லவண்ய – உப்பு; அதி உஷ்ண – சூடான; தீக்ஷ்ண – காரம்; ரூக்ஷா – உலர்ந்த; விதாஹின – மிளகாய் போன்ற சாதனம்:  இம்மாதிரி உணவு ராஜஸ குணமுள்ள மனிதர்களுக்கானது.  இந்த உணவு துக்கத்தையும், சோகத்தையும், நோயையும் உண்டாக்க வல்லது. 

இதில்தான் பூண்டும் வெங்காயமும் சேர்கிறது.  இறைச்சியும் இதில் அடக்கம்.  சாதிப் படிநிலையில் மேல்நிலையில் இருக்கும் – கடவுளுக்கு அருகில் இருக்கும் – கடவுளை வணங்கும் நிலையில் இருக்கும் – அரசனுக்கே குருவாக விளங்கும் – படிப்பையும் கல்வியையும் ஞானத்தையும் தங்கள் வசம் வைத்திருக்கும் பிராமணர்கள் பூண்டையும் வெங்காயத்தையும் இறைச்சியையும் உண்ணும் மற்ற சாதியினரை, மதத்தினரை நீங்கள் ராஜஸ குணம் உள்ளவர்கள் ஆதலால் நீங்கள் சாத்வீக உணவு உண்ணும் எங்களை விட – பிராமணரை விட – தாழ்ந்தவர்கள் என்பதுதான் இதன் பொருள்.  உணவை அடிப்படையாகக் கொண்ட cultural hegemonyயையே – கலாச்சார மேலாண்மையை – கலாச்சார ஆதிக்க மனோபாவத்தை இந்து மதத்தின் புனித நூலாகச் சொல்லப்படும் பகவத் கீதை முன்னிறுத்துவதால்தான் என் முப்பதாவது வயதிலேயே நான் அந்த நூலை நிராகரித்தேன்.  இப்படி பகவத் கீதை இந்து மதத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாராரையே (No onion, no garlic) பிரதிநிதித்துவப்படுத்துவதால்தான் அந்த நூலை இந்தியாவின் அடையாளமாக இந்தியப் பிரதமர் மோடி ஜப்பானியப் பிரதமரிடம் கொடுத்தபோது அதைக் கண்டித்தேன். 

இங்கே என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும்.  தமிழ்நாட்டில் வசிக்கும் எல்லா தெலுங்குக்காரர்களைப் போலவே என் நைனாவும் தமிழ் வெறியராகவும் திமுக அனுதாபியாகவும் இருந்ததால் – தந்தையை மறுதலிக்கும் புதல்வனாக நான் – இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் கற்க முனைந்தேன்.  அப்போது தஞ்சாவூரில் கல்லூரிக்குப் போவதாகப் பெயர் பண்ணிக் கொண்டிருந்த காலம்.  தஞ்சாவூர் சர்ஃபோஜி கல்லூரியில் சம்ஸ்கிருதப் பேராசிரியராக இருந்தவரின் இல்லத்தில் சம்ஸ்கிருதப் பாடம்.  சட்டை அணிய மாட்டார்.  சட்டையை ஒரு துணிப்பையில் வைத்து எடுத்து வருவார்.  கல்லூரிக்குள் நுழைந்ததும் சட்டையை எடுத்து மாட்டிக் கொள்வார்.  பின்னர், கல்லூரி முடிந்ததும் சட்டை துணிப்பைக்குள் போய் விடும்.  கொஞ்ச காலம்தான் சம்ஸ்கிருதம் படித்தேன்.  ஆனால் தடங்கலின்றிப் படிக்கும் அளவு கற்றுக் கொண்டேன்.  பகவத் கீதை போட்டிகளில் முதல் பரிசு பெறுவேன்.  சில அத்தியாயங்களை மனனமும் செய்திருந்தேன்.  நிவேதிதா என்ற பெயரில் ஆன்மீகப் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த காலம் அது.  ஒரு வள்ளலார் பக்தரிடம் யோகம் பயின்றேன்.  வாரம் ஒருமுறை மௌன விரதம்.  திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த  ஜெயகாந்தன்தான் குரு.  என் நைனாவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், அவர் என்னுடைய நடவடிக்கைகள் எதற்குமே குறுக்கே நின்றதில்லை.  விவேகானந்தரின் ஞான தீபம் தொகுப்புகள் அனைத்தையும் வாசித்திருந்தேன். 

பிறகுதான் இந்து மதத்தின் சாதிப் படிநிலையும், இந்து மேட்டுக்குடியினரே அம்மதத்தின் சட்டதிட்டங்களைக் கட்டமைப்பவர்களாக இருப்பதையும் பார்த்து நாத்திகனன் ஆனேன்.  இதைச் சொல்வதால் என்னுடைய இப்போதைய நிலைப்பாட்டையும் சொல்லியாக வேண்டிய நிலையில் இருக்கிறேன்.  அது இதுதான்.  எனக்கு எந்த மதமும் இல்லை.  கடவுளை நம்புபவர்களுக்கு மதம் தேவை இல்லை.  மேலும், சாதிப் படிநிலையை உடைத்து மேலே செல்வதற்கான எல்லா வழிகளும் திறந்து விடப்பட்டு விட்டன.  எனக்கு சம்ஸ்கிருதம் வேண்டாம் என்று நீங்கள் சொன்னால் அதனால் அந்த மொழிக்கு எந்த நஷ்டமும் இல்லை.  நான் ஷேக்ஸ்பியரைப் படிக்க மாட்டேன் என்று சொன்னால் ஷேக்ஸ்பியருக்கு என்ன நஷ்டம்?  மேலும், பிராமண மேலாண்மையும் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்திலிருந்து அகன்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இஸ்கான் அமைப்பு, தாங்கள் அறிந்தோ அறியாமலோ பன்மைத்துவக் கலாச்சாரத்தில் வாழ்ந்து வரும் தமிழர்களிடையே நோ ஆனியன், நோ கார்லிக் உணவு முறையின் மூலம் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கும் பிராமண கலாச்சார மேலாண்மையை நிலைநிறுத்துகிறது என்கிறேன் நான். 

இது பற்றி காலையில் அராத்துவிடம் அரை மணி நேரத்துக்கு மேல் பேசினேன்.  அவர் ஆதி திராவிடர் நலப் பள்ளியில் படித்தவர்.  அவர் சொன்ன விஷயங்கள் ரத்தக் கண்ணீர் வரவழைப்பவை.  அதையெல்லாம் அவரை ஒரு நாவலாக எழுதச் சொன்னேன்.  அதில் ஒரு விஷயம் இது:  மதிய உணவுக்கான சோறு உள்ள பானையை சாக்கடையின் அருகே வைத்துத்தான் கஞ்சி வடிப்பார்கள்.  அந்தக் கஞ்சியைக் குடிப்பதற்காக மலம் தின்னும் கருப்புப் பன்றிகள் அங்கே வந்து குவியும்.  பையன்கள் அந்தப் பன்றிகளை எவ்வளவு துரத்தினாலும் அவை போக்குக்காட்டிக் கொண்டே அந்தக் கஞ்சியையும் அவ்வப்போது சோற்றையும் தின்னும்.  எங்களுக்கும் அந்தப் பன்றிகளுக்கும் அவ்வளவாக வித்தியாசம் இல்லை. 

இன்னொரு விஷயம் சொன்னார்.  ஆயிரம் மாணவர்கள் சாப்பிட ரெண்டு கத்தரிக்காயும் ஒரு தக்காளியும் போடுவார்கள்.  எப்போதாவது வாயில் அகப்படும் ஒரே ஒரு கடுகை மென்று நான்கு கவளம் சோற்றை இறக்குவோம். 

இப்படிப்பட்ட எங்களுக்கு ஆனியன் இருந்தால் என்ன, ஆனியன் இல்லாவிட்டால் என்ன, கிடைத்தது லாபம் இல்லையா என்றார் அராத்து.  அது உண்மை.  ஆனால் இந்த நிலைமை இன்று தமிழகத்தில் இல்லை என்பது மற்றொரு எதார்த்தம்.  20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.  இப்போது இல்லை.  அப்போது அரசு ஊழியர்களான நாங்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம்.  இப்போது ஒன்றேகால் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் ஒரு குமாஸ்தா.  எடுத்த எடுப்பில் அறுபது ஆயிரம்.  ரேஷன் அரிசியில் முன்பு புழு நெளியும்.  இன்று ரேஷன் அரிசியும் ரேஷனில் கிடைக்கும் துவரம் பருப்பும் உயர் ரகமாக உள்ளது.  எங்கள் வீட்டில் அதைத்தான் உபயோகிக்கிறோம்.  சொல்லப் போனால், வளர்ச்சி அடைந்த மேற்குலக நாடுகளில் எந்தக் குழந்தையும் மதிய உணவை வீட்டிலிருந்து தூக்கிக் கொண்டு போவதில்லை.  மதிய உணவு கொடுக்க வேண்டியது பள்ளியின் கடமை.  அரசின் கடமை.  எல்லா பள்ளிகளிலும் – மேட்டுக்குடிப் பள்ளி உட்பட – எல்லா மாணவர்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டும்.  இந்த நிலையில் நாங்கள் காலை உணவு வழங்குகிறோம் என்று இஸ்கான் போன்ற ஒரு மத நிறுவனம் சொல்வதற்கு இந்தத் தமிழ்க் குழந்தைகள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை.  தானம் செய்பவனின் கை தாழ்ந்திருக்க வேண்டும் என்பது இந்திய/இந்து மரபு.  இது இந்த இஸ்கான் வெள்ளைக்காரன்களுக்குத் தெரியுமா?  தானம் கொடுக்கும் போது நோ ஆனியன் நோ கார்லிக் என்று நிபந்தனை போட நீ யார்?  இந்து மதத்தின் மீது ஆர்வமும் அன்பும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் எல்லோரும் இது போன்ற இஸ்கான் போன்ற cultகளை நிராகரிக்க வேண்டும்.   இவையெல்லாம் இந்து மதத்துக்கோ  இந்திய தர்மத்துக்கோ நன்மை புரிபவை அல்ல.   இல்லாவிட்டால் இப்படி குழந்தைகளுக்கு தானம் செய்யும்போது நோ ஆனியன் நோ கார்லிக் என்று நிபந்தனை போடுவார்களா?  மேலும், இந்து மதம் என்ற பெயரில் நடக்கும் ஆன்மீக போலித்தனங்களில், அலங்கார வெளிப்பூச்சுகளில் இந்து மதத்தின் மேல் நம்பிக்கையும் அக்கறையும் உள்ள யாரும் ஏமாந்து போய் விடக் கூடாது. 

இன்று கீழ்த்தட்டு மக்களிடம் மேட்டுக்குடி மக்களின் கலாச்சாரத்தைத் திணிக்கும் இஸ்கானின் செயலுக்கும் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போன ஐரோப்பியர்கள் – ஐரோப்பியப் பாதிரிகள் – அந்தப் பூர்வகுடி மக்களின் கழுத்தில் கத்தியையும் நெற்றியில் துப்பாக்கியையும் வைத்து மதம் மாறச் செய்தற்கும் என்ன வித்தியாசம்?  இப்போதும் தென்னிந்தியாவில் மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி கிறித்தவத்துக்கு மதம் மாற்றம் செய்து கொண்டிருக்கும் பாதிரிகளுக்கும் இஸ்கானுக்கும் என்ன வித்தியாசம்? 

எனக்கு ஞாபக மறதி அதிகம்.  ”என்னை உருவாக்கியது ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகள்;  குறிப்பாக மிஷல் ஃபூக்கோ, ரொலான் பார்த்” என்று சொல்வேன்.  எப்படி என்று கேட்டால் திருதிருவென்று விழிப்பேன்.  அவர்களின் சிந்தனையெல்லாம் எனக்குள் – என் சிந்தனைப்போக்கில் – என் ஆளுமையில் ரத்த ஓட்டமாக, எலும்பு மஜ்ஜையாகச் சேர்ந்து விட்டது.  அதை எடுத்து இயம்பிச் சொல்ல எனக்குத் திறமை இல்லை.  பன்மைத்துவம் (multiplicity) என்ற கருத்தாக்கம் பற்றி மிஷல் ஃபூக்கோவை முன்வைத்து பெங்களூர் க்றைஸ்ட் கல்லூரியில் பேசினேன்.  ஆனால் ஃபூக்கோவின் அடிப்படையான கருத்தாக்கம், அதிகாரம் குறித்த அவரது கண்டுபிடிப்புகளே.  அதுதான் என் சிந்தனைத்தளத்தின் அடியோட்டமாக இருந்து வந்துள்ளது.  என்னுடைய உணவு முறையை இன்னொரு குழுவினருக்குப் பரிந்துரைப்பதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது?  எத்தனையோ பேர் என்னிடம் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  பூண்டையும் வெங்காயத்தையும் தவிருங்கள்.  அது நல்லது அல்ல.  சொல்வோர் அனைவரும் பிராமணர்.  அவர்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அது அவர்களின் உண்மைதானே?  Absolute truth என்பது இல்லை இல்லையா?  உங்களுடைய உண்மை எனக்குப் பொய்யாக இருக்கலாம் இல்லையா?  மேலும், உங்களுடைய உணவு முறையை நல்லது என்றும் என்னுடைய உணவு முறையைத் தாழ்ந்தது என்றும் சொல்லும் போது நீங்கள் மனு தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்; பின்பற்றுகிறீர்கள் என்றுதானே பொருள்?  மனு என்ன சொல்கிறது?  பிராமணன் உயர்ந்தவன்.  சூத்திரன் தாழ்ந்தவன்.  ஐந்தாம் வர்ணமான புலையன் தாழ்ந்தவன் கூட இல்லை; மனிதனே இல்லை என்கிறது மனு தர்மம்.  இதெல்லாம் ஆங்கிலேயன் வந்த பிறகு நடந்தது என்கிறார்கள் சிலர்.  பாவம்.  2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட – பாலியில் எழுதப்பட்ட அசோக மன்னனின் வரலாற்றில் ஒரு இடம்.  அசோகரின் மகன் குணாளன் காணாமல் போய் விட்டான்.  அவன் மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்த மன்னன் எங்கோ தொலைதூரத்தில் தன் மகனின் பாட்டுக் குரல் கேட்பதை அறிந்து அழைத்து வரச் சொல்கிறான்.  பார்த்தால் அவன் ஒரு மிலேச்சன்.  மிலேச்சர்கள் தொலைதூரத்தில் வந்தாலே துர்நாற்றம் அடிக்கும் என்று போகிறது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்தப் பாலி பிரதி.  (அந்த மிலேச்சன் குணாளன் தான் என்பது கதையின் அடுத்த பகுதி). 

சென்ற வாரம் கூட பிரியாணி உடல்நலத்துக்கு நல்லதல்ல; தயிர்சாதம் நல்லது என்று ஒரு பிராமண செஃப் சொல்ல, அதை என் நண்பர் ஒருவர் முகநூலில் எடுத்துப் போட, பெரிய பிரச்சினை ஆயிற்று என்பதை நீங்கள் நினைவு கூரலாம்.  இப்படிச் சொல்பவர்களைப் போன்ற இனவாதிகள் வேறு யாரும் உண்டா?  பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மதப் பிரச்சாரகரின் சொற்பொழிவைக் கேட்டேன்.  இந்துக்களைப் பார்த்து சொல்கிறார்.  சகோதரர்களே, உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்.  உங்கள் நல்லதுக்காகத்தான் சொல்கிறேன்.  என் கடவுளின் பக்கம் வாருங்கள்.  (அவரது கடவுளின் அருமைகளைச் சொல்கிறார்.  இந்துக் கடவுள்களின் பாதகங்களைப் பற்றிச் சொல்கிறார்.  எனக்கே இவ்வளவு மோசமான மதத்திலா நாம் வாழ்கிறோம் என்று ஒருக்கணம் தோன்றி விட்டது!!! அடுத்து சொன்னார் பாருங்கள் ஒரு வார்த்தை.  நீங்கள் பீயைத் தின்கிறீர்கள் சகோதரர்களே!  நானோ அறுசுவை உணவை உண்கிறேன்.  உங்களைப் பார்த்தால் எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது.  ஏன் பீயைச் சாப்பிடுகிறீர்கள்?  வாருங்கள், என்னோடு சேர்ந்து அறுசுவை உண்ண வாருங்கள்!)  அவரது உரையின் ஆரம்பத்தில் சரி, மதம் மாறி விடலாம் என்று நினத்தவன் பீயைத் தின்கிறீர்களே என்றதும் சரி, பீயே பரவாயில்லை என்று விட்டுவிட்டேன்.  இப்போது தயிர்சாதப் பக்கிகளுக்கு வருகிறேன்.  பிரியாணி தப்பு, தயிர் சாதம் சரி என்று சொல்லுங்கள் உங்களுக்கும் மேலே நான் குறிப்பிட்ட மதவாதிக்கும் என்னய்யா வித்தியாசம்?  அவர் சொல்வதைத்தானே நீங்களும் சொல்கிறீர்கள்?

இன்றைய தினம் உலகில் சகிப்புத்தன்மை அருகி விட்டது.  நீ வேறு; நான் வேறு.  நீ வணங்கும் தெய்வம் வேறு, நான் வணங்கும் தெய்வம் வேறு; நீ உண்ணும் உணவு வேறு, நான் உண்ணும் உணவு வேறு; உன் கலாச்சாரம் வேறு, என் கலாச்சாரம் வேறு; உன் உயரம், உன் நிறம், உன் இனம், உன் மொழி எல்லாமே வேறு, என் உயரம், என் நிறம், என் இனம், என் மொழி எல்லாம் வேறு.  நீயும் நானும் சமம் கூட அல்ல.  உன்னைப் போல் என்னால் யோசிக்க முடியாது, உன்னைப் போல் என்னால் கணிதத்தில் நூறு சதம் வாங்க முடியாது, உன்னைப் போல் என்னால் முன்னிலையில் செல்ல முடியாது.  உன்னைப் போல் என்னால் மொழிகளைக் கற்க முடியவில்லை.  ஆனால் எனக்கும் உன்னைப் போலவே இந்தப் பூமியில் வாழ சம உரிமை இருக்கிறது.  என்னால் விரைவாக ஓட முடியும்.  என்னால் ஆட முடியும், என்னால் பளு தூக்க முடியும், என்னால் பாட முடியும், என் உடலை உன்னை விட அதிகம் பயன்படுத்த முடியும்.  நீயும் நானும் சமம் அல்லதான்; ஆனால் அதற்காக நீ உசந்தவன், நான் தாழ்ந்தவன் என்று அர்த்தம் அல்ல என்கிறேன் நான்.    

இந்தப் பின்னணியில் இஸ்கான் அமைப்பினரின் வெங்காயம், பூண்டு இல்லாத உணவைத் தமிழகம் மறுதலிக்க வேண்டும்.  மேலும், இஸ்கான் அமைப்பின் மீது எனக்கு எந்தத் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை.  நான் எல்லாவித cultகளுக்கும் எதிரானவன்.  Cult எல்லாமே மனிதனின் சிந்தனையைக் காயடிப்பவை.  ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் எல்லாமே கல்ட் தான்.  இஸ்கானைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அமெரிக்காவில் வசிக்கிறார்.  அவர் வீட்டில் யார் மலஜலம் போனாலும் குளித்து விட்டுத்தான் வீட்டுக்குள் புழங்க வேண்டும்.  வருடத்தில் ஆறு மாத காலம் ஸீரோ டிகிரி குளிருக்கும் கீழே இருக்கும் ஒரு ஊரில் இப்படி ஒரு இஸ்கான்வாதி.  இப்படிப்பட்ட பைத்தியங்களைத்தான் cultகள் உருவாக்கும். 

இன்னும் சில இஸ்கான் செய்திகள் உள்ளன.  இது என் நண்பர் அனுபவித்த சம்பவம்.  நண்பர் அமெரிக்காவில் வசிக்கிறார்.  அவர் வார்த்தைகளில்: சாரு சொன்னது போல் இஸ்கான் ஒரு கல்ட் தான்.  ஆனால் நல்ல கல்ட் அல்ல; மோசமான கல்ட்.  ஒருமுறை நான் சிகாகோ விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது முரட்டுத்தனமாக என் முகத்துக்கு எதிரே உண்டியலை நீட்டினார் இஸ்கான்காரர் ஒருவர்.  13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது.  அமெரிக்காவே அப்போது எனக்குப் புதிது.  அமெரிக்காவே அப்போது எனக்குப் பதற்றம்.  யோசித்துப் பாருங்கள்.  என்னைச் சுற்றிலும் வெள்ளைக்காரர்கள்.  அந்த நாட்டுக்காரர்கள்.  நான் ஒரு பழுப்புநிற இந்தியன்.  அவர்களுக்கு நடுவில் காவி உடையை சேலை மாதிரி கட்டிக் கொண்டு, நாலைந்து வாட்டசாட்டமான ஆண்கள் குடுமி வைத்துக் கொண்டு…  ஆட்கள் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்கள் தெரியுமா?  பக்கா முரடர்கள்… நம் ஊரில் காவி உடை உடுத்திய எத்தனையோ பிராமணர்களைப் பார்த்திருக்கிறேன்.  அவர்களைப் பார்த்தால் அப்படி இருக்காது.  ஆனால் அந்த முரடர்களைப் பார்த்தால்… சந்திரமுகி படத்தில் சோனு சூத் என்று ஒரு வில்லன் நடித்தார் இல்லையா?  அந்த மாதிரி ஆட்கள்.  அந்த சோனு சூத் காவி உடுத்தி குடுமி வைத்துக் கொண்டு நம் எதிரே வந்து மூஞ்சிக்கு முன்னே கொண்டு வந்து டமால் என்று உண்டியலை நீட்டினால் எப்படி இருக்கும்?  எனக்கு ஒருக்கணம் என்ன பண்ணுவதென்றே புரியவில்லை.  நிறைய அமெரிக்கர்களுக்கு நடுவே, நிறைய வெள்ளைக்காரர்களுக்கு நடுவே கொண்டு வந்து அப்படி நீட்டுகிறான்.  எனக்கு பதில் சொல்லவும் பயம்.  அவன் சொல்கிறான்.  “நீ இந்துதானே?  நாங்கள் இங்கே இஸ்கான் இந்து கோவில் கட்டுகிறோம்.  நீ டொனேட் பண்ணு.”  நான் உடனே பத்து டாலரோ என்னவோ எடுத்துக் கொடுக்க முயற்சிக்கும் போது – அந்தப் பத்து டாலரைப் பார்த்து விட்டு உண்டியலை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.  சுற்றியிருக்கும் வெள்ளைக்காரர்கள் என்னை ஒருமாதிரி பார்த்தார்கள்.  அவமானமாகப் போய் விட்டது எனக்கு.  அதனால்தான் சொல்கிறேன், இது ஒரு மோசமான கல்ட் என்று. 

***

இஸ்கான் இப்போது வழங்கும் காலை உணவு எத்தனை பேருக்குத் தெரியுமா? 5000 மாணவர்கள்.  இன்னொரு முக்கியமான விஷயம்.  இஸ்கான் இதை இலவசமாகச் செய்யவில்லை.   பத்து கோடி ரூபாய் பணத்தையும், 600 கோடி மதிப்புள்ள இடத்தையும் அரசாங்கம் இஸ்கானுக்குக் கொடுத்துள்ளது.  இந்தப் பத்து கோடி ரூபாய் பணம் யாருடையது?  வெங்காயம் பூண்டு உண்ணும் மக்களுடையது.  இந்தப் பணத்தோடு தங்களுடைய சொற்பக் காசையும் போட்டுத்தான் வெங்காயம் பூண்டு இல்லாத சாத்வீக, பிராமண உணவை ஏழை மாணவர்கள் 5000 பேருக்குக் கொடுக்கிறது இஸ்கான்.  இதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லோரும் சொல்லும் வாதம், அரசாங்கம் இந்த மதிய உணவுத் திட்டத்தை சரியாகச் செய்யவில்லை.  சரி, அரசு சரியாகச் செய்யவில்லை என்றால் அரசாங்கத்தைத்தான் நாம் தட்டிக் கேட்க வேண்டுமே அல்லாமல் வெங்காயம் பூண்டு இல்லாமல் சாப்பிடச் சொல்லும் ஒரு பஜனை கோஷ்டிக்கு நம் வீட்டுப் பணத்தைக் கொடுத்து எங்கள் குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடு என்று சொல்வது எத்தனை பெரிய அறிவீனம்? 

ஏ இஸ்கான் அறிவிலிகளே… உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.  இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று உங்களுக்கு இலவசமாகப் பன்றிக் கறி தருகிறோம் என்று சொன்னால் அது அப்படி இருக்கும்?  அது எத்தனை பெரிய கலாச்சார வன்முறை? அதேபோல் ஒரு அக்ரஹாரத்திலே போய் மாட்டுக் கறி பிரியாணியை இலவசமாகக் கொடுத்தால் அது எத்தனை பெரிய கலாச்சார வன்முறை?  அதே போன்ற கலாச்சார வன்முறையைத்தான் நீங்களும் எங்கள் குழந்தைகளின் மீது திணிக்கிறீர்கள்.  இதை நான் ரத்தம் கொதிக்கக் கொதிக்க எழுதுகிறேன்.  எப்பேர்ப்பட்ட கலாச்சார வன்முறையை (இதைப் படித்துக் கொண்டிருக்கும்) நீங்களும் நானும் வாய் பேசாமல் பார்த்துக் கொண்டு போகிறோம்? 

இறுதியாக, இஸ்கானும் ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல. எப்படி இன்று – அதாவது, மகாத்மாவின் காலத்துக்குப் பிறகு சமூகத்தின் எல்லா நிறுவனங்களும் தம் மதிப்பீடுகளை இழந்து மலினமானதோ – அதில் முதலில் வருவது ஆன்மீகம் –  கர்னாடகாவில் இஸ்கான் அமைப்பினர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அரிசியை கறுப்புச் சந்தையில் விற்று ஊழல் செய்து கையும் களவுமாக மாட்டிக் கொண்டு பிறகு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தித் தப்பினார்கள் என்கிறது ஹிண்டு நாளிதழில் வந்த செய்தி.  அதன் லிங்க் இது.  இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/198-tonnes-mid-day-meal-rice-seized-from-iskcon-premises/article28068087.ece/amp/


நடிகர் சோனு சூத்.

மேலும்,  அரசாங்கத்தின் நல்ல நலத்திட்டங்களை நாம் பாராட்டத் தவறுவதால்தான் இடையில் இப்படிப்பட்ட பஜனை கோஷ்டிகள் உள்ளே புகுந்து தங்களது இனவாத ஃபாஸிஸத்தை நுழைத்து விடுகின்றன.  என்ன நல்ல திட்டம்?  அரசு மருத்துவமனைகள்.  சுஜாதா எழுதிய நகரம் போன்ற கதைகள் இனிமேல் கதைகளில்தான்.  தனியார் மருத்துவமனைகளில் ஐந்து லட்சம் பத்து லட்சம் செலவு ஆகின்ற எந்த அறுவை சிகிச்சையையும் ஒருசில ஆயிரங்களில் அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்கள் செய்து கொண்டு விடுகின்றனர்.  இன்னொரு உதாரணம், அம்மா உணவகம்.  இப்படி திராவிடக் கட்சியினரின் பல நல்ல மக்கள் நலத் திட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.   

இறுதியாக ஒரு வார்த்தை.  எப்படிப் பார்த்தாலும் என் உணவு உசந்தது, உன் உணவு தாழ்ந்தது என்று சொல்பவன் சமூக விரோதிதான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.  

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai