கொரோனா தினங்கள் – 6

21 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும். வெளியில் தலையே காட்ட முடியாது. இப்படி இருந்து பழக்கமும் இல்லை. சரி, என்ன படிக்கலாம்? ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அடியேனது தளங்களில் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் நாங்கள் எழுதியது அனைத்தும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன.  ஜெயமோகனின் தளத்தைப் படிக்க – ஒரு நாளில் ஆறு மணி நேரம் என்று படித்தால் – மூன்று ஆண்டுகள் எடுக்கும்.  எஸ்.ரா.வுக்கும் அப்படியே.  நான் அவர்களை விட ரொம்பக் கம்மியாகத்தான் எழுதியிருப்பேன்.  ஆனால் என்னுடையதைப் படிக்க ஆறு ஆண்டுகள் ஆகும்.  ஏனென்றால், நான் கட்டுரைகளுக்கு இடையிடையே நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுத்திருப்பேன்.  நிறைய இசைக்கான இணைப்புகள் இருக்கும்.  படங்களுக்கான இணைப்பு இருக்கும்.  உதாரணமாக, நான் ஏன் மனிதர்களை வெறுக்கிறேன் அல்லது மனிதர்களிடமிருந்து இந்த அளவுக்கு விலகி இருக்கிறேன் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமானால் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வந்துள்ள The Platform என்ற திரைப்படத்தைப் பாருங்கள்.  ஆக, இந்தக் கட்டுரை முடிந்ததும் நீங்கள் ப்ளாட்ஃபார்ம் படத்தைப் பார்க்க வேண்டும்.  அப்படியெல்லாம் செய்யாமல் தேமே என்று படித்தால் ஒரே வருடத்தில் என் இணையதளத்தை முடித்து விடலாம்.  ஆனால் முறையாகப் படித்தால் ஆறு ஆண்டுகள் ஆகும்.  ஆக, படிப்பு என்று எடுத்தால் ஒருவர் தன் வாழ்நாள் முழுவதுமே வீட்டுச் சிறையில் இருந்து படித்துக் கொண்டே இருக்கலாம்.  இந்த மூவர் தவிர இன்னும் எத்தனையோ இணையதளங்களில் சுவாரசியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.  இது ஒரு முடிவில்லாத நூலக வெளி.  இப்படிப்பட்ட வாசிப்பு வெளி இருப்பதே தெரியாமல் என்னிடம் வந்து இப்போது வீட்டில் பொழுது போகவில்லை; ஏதாவது புத்தகங்களை இணையத்தில் படிக்க என்ன வழி என்று கேட்கும் இளைஞர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்.  இன்றுகூட ஒருவர் என்னிடம் அப்படிக் கேட்டார்.  சாருஆன்லைன் லிங்க்கை அனுப்பினேன்.  அதைத் திறவுகோலாகக் கொண்டு அவர் அந்த வாசிப்புப் பிரபஞ்சத்தை அடையலாம்.  ஆனால் அவரால் முடியாது.  வாசிக்க என்ன வழி என்று கேட்பவரால் என்னதான் செய்ய முடியும்?

சரி, இதை விடுங்கள்.  இதுவாவது கண்ணைக் கட்டிக் கொண்டு கானகத்தில் நடப்பது போல.  நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்க்க என்னய்யா பிரச்சினை?  நெட்ஃப்ளிக்ஸும் சலிப்பாக இருக்கிறதாம்.  இம்மாதிரி ஆட்களை நேராக இத்தாலிக்கு அனுப்பி விடலாம்.  ஏனய்யா, நெட்ஃப்ளிக்ஸா அலுப்பாக இருக்கிறது?  நெட்ஃப்ளிக்ஸில் ஒருவர் வெப்சீரீஸ் பார்க்க ஆரம்பித்தால் – ஒரு நாளில் எட்டு மணி நேரம் பார்த்தால் – அவர் தொடர்ந்து ஒருநாள் கூட விடாமல் தினமும் எட்டு மணி நேரம் என்று பார்த்தால் – மூன்று ஆண்டுகளுக்கான சீரீஸ் அதில் இருக்கிறது.  அதாவது, படு சுவாரசியமான இருக்கையின் முனையில் உட்கார வைக்கின்ற சீரீஸை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தக் கணக்கு.  தினமும் எட்டு மணி நேரம் என்று ஒருநாள் கூட விடாமல் பார்த்தால் படு சுவாரசியமான வெப்சீரீஸ்களை மூன்று ஆண்டுகள் பார்க்கலாம்.  அதோடு முடிந்து விடாது.  அடுத்த சுழற்சி ஆரம்பமாகும்.  இந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த வெஃப்சீரீஸ்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கும்.  இப்படியாக ஒருவர் தன் வாழ்நாள் முடியும் வரை வெப்சீரீஸ்களை மட்டுமே பார்த்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு விட முடியும்.  அத்தனை சாத்தியம் இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸில்.  அதோடு முடியவில்லை.  இது தவிர, அமேஸான் ப்ரைம் மற்றும் ஹாட்ஸ்டார்.  அதையெல்லாம் நான் பார்த்ததில்லை.  நான் பார்ப்பது நெட்ஃப்ளிக்ஸ் மட்டுமே.  அதிலும் மிகவும் தேர்ந்தெடுத்துத்தான் பார்ப்பேன்.  அப்படி நான் பார்த்த பல சீரீஸ்களை நெட்ஃப்ளிக்ஸே கதி என்று கிடப்பவர்கள் கூடப் பார்த்ததில்லை.  இத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கும்போது எப்படி ஒருவருக்கு வீட்டில் இருப்பது அலுப்பாக இருக்கும்?

சில பெயர்களையும் தருகிறேன்.  இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.  இந்தியத் தொடர்களை நான் பார்ப்பதில்லை.  அவை உண்மையிலேயே தரம் குறைந்தனவாகவும் மிக மிக மிக அலுப்பூட்டுபவையாகவும் உள்ளன.  உதாரணமாக, The Inmate.  வெறும் 13 எபிசோடுகள்தான்.  ஆனால் முதல் எபிசோடில் ஆரம்பித்தால் கடைசி வரை பார்க்காமல் எழுந்து கொள்ளவே முடியாது.  இத்தனை விறுவிறுப்பான வெப்சீரீஸ் மிகவும் அரிது. ஆனால் மூட மட்டி இளைஞர் யாவருக்கும் Money Heistஐத் தவிர வேறு ஒரு மண்ணும் தெரிய மாட்டேன் என்கிறது.  ஜனரஞ்சகமான விஷயங்களில் கூட தரைமட்டமாக இருக்கிறார்கள் இளைஞர்கள். இளைஞர்களைத் திட்டுவதால் மத்திம வயசுக்காரர்களை மதிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்.  அவர்களை நான் விமர்சனத்துக்காகக் கூட எடுத்துக் கொள்ள மாட்டேன்.  திட்டுவதற்குக் கூட ஒரு தகுதி வேண்டும் அல்லவா? 

சரி, புத்தகம் படிப்பதை விடுங்கள்.  இந்த அசடுகளுக்கு நெட்ஃப்ளிக்ஸ் பார்க்கக் கூடத் தெரியவில்லை.  எல்லாம் இளசுகள், மத்திம வயதுக்காரர்கள்.  கிழங்கட்டைகள் இல்லை.  நெட்ஃப்ளிக்ஸுக்கும் சந்தா கட்டி வைத்திருக்கிறதுகள்.  ஆனாலும் பயன்படுத்தத் தெரியவில்லை. சரி, நெட்ஃப்ளிக்ஸையும் நீங்களே சொல்லிக் கொடுங்கள் என்பவர்களுக்காக மனம் இரங்கி இந்தப் பட்டியலைத் தருகிறேன்.  பிடித்துக் கொள்ளுங்கள்.

1.Game of Thrones.  இந்த சீரீஸை அடித்துக்கொள்ளவே முடியாது.  இதன் அருகில் கூட எதுவும் வர முடியாது.  இது க்ளாஸிக் ரகம்.  ஆனால் கடைசி சீஸனில் அறுத்து விட்டான்.  இந்த சீரீஸில் என்னால் மறக்க முடியாத இரண்டு பாத்திரம்  டிரியன்.  அதேபோல் இன்னொரு கதையை என்னால் மறக்கவே இயலாது.  ராம்ஸே தெயோனை சித்ரவதை செய்கிறான்.  அந்தச் சித்ரவதைகளின் முடிவில் தெயோன் முழுக்க முழுக்க ராம்ஸேவுக்கு அடிமையாகி விடுகிறான்.

கேம் ஆஃப் த்ரான்ஸில் ராம்ஸே தெயோனை சித்ரவதை செய்யும் ஒரு காட்சி.  இன்னொரு காட்சியில் தெயோனின் ஆண்குறியை அறுத்து விடுவான் ராம்ஸே. சாதாரணமாக அல்ல.  அறுப்பதற்கு முன்பு இரண்டு அழகிகளை அனுப்பி வைத்து தெயோன் அவர்களுடன் கலவி கொண்ட பிறகு ஆண்குறியை அறுத்தெறிவான்.  தெயோனின் வதைகள் எதுவும் நம்மை பாதிக்காது.  ஏனென்றால், அந்த அளவுக்கு அவன் அதற்கு முன்பு ஸ்டார்க் குடும்பத்தினருக்கு துரோகம் இழைத்து அவர்களில் சிலரை சித்ரவதை செய்திருப்பான்.

ஆண்குறியை அறுக்கும் காட்சி.

ராம்ஸேயைக் கொல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூட தெயோனுக்கு தைரியம் வருவதில்லை.  மனசே அடிமையாகி விடுகிறது.  ஒருமுறை ராம்ஸே தெயோனின் கையில் கத்தியைக் கொடுத்து தனக்கு சவரம் செய்து விடச் சொல்கிறான்.  அப்போது கூட தெயோனால் ராம்ஸேயைக் கொல்ல முடியவில்லை.

இதே போன்ற ஒரு லத்தீன் அமெரிக்கக் கதை பற்றி நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  ஒரு புரட்சியாளன் முடிதிருத்துபவனாக இருக்கிறான்.  அவனுடைய சலூனுக்குச் செல்கிறான் அவனைத் தேடிக் கொண்டிருக்கும் ஜெனரல்.  சவரம் செய்வதற்குத் தன் கழுத்தைக் கொடுத்து விட்டு ஹாயாகத் தூங்கிப் போய் விடுவான் ஜெனரல்.  புரட்சியாளன் அவன் கழுத்தை அறுக்க வேண்டும் என்று துடிப்பான்.  ஆனால் முடியாது.  தைரியம் வராது.  சவரம் செய்து முடித்ததும் எழுந்து கொள்ளும் ஜெனரல், முடிதிருத்துபவனின் பெயர் சொல்லி அழைத்து, நீ புரட்சிக்காரன் என்று ஊரில் சொல்லிக் கொள்கிறார்கள்; ஆனால் நீ அப்படி இல்லை என்றே நான் சொல்வது வழக்கம்.  அதை சோதித்துப் பார்க்கவே இன்று வந்தேன் என்று சொல்லி விட்டுக் கிளம்புவான்.  கதவைத் திறந்து வெளியே செல்லும் தருணத்தில் அவனை மீண்டும் பெயர் சொல்லி அழைத்து – பெயர் சால்திவார் என்று வைத்துக் கொள்ளுங்கள் – சால்திவார், ஒருத்தனைக் கொல்வது அத்தனை சுலபம் அல்ல தெரியுமா என்று சொல்லி விட்டுப் போவான்.  எப்படிப்பட்ட ஜெனரல்?  புரட்சிக்காரன் என்று தெரிய வருபவர்களையெல்லாம் இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லும் ஜெனரல்.  (ஸ்ரீராம், அந்தக் கதை ஞாபகம் உள்ளதா?)

ராம்ஸே, தெயோன் மாதிரி இன்னொரு இடம் ஞாபகம் வருகிறது.  மரியோ பர்கஸ் யோசாவின் Feast of the Goat நாவலில் பிரதான பாத்திரமான ரஃபேல் த்ருஹியோ (Rafael Trujillo) ஒரு சர்வாதிகாரி.  கதை நிஜக் கதை.  தொமினிகன் ரிபப்ளிக் என்ற சிறிய நாட்டை (மக்கள் தொகை ஒரு கோடி) முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொடுங்கோல் ஆட்சி செய்த சர்வாதிகாரி.  இவன் 1961-இல் கொல்லப்பட்டான். அவனைப் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் அவன் காலத்தில் உலவிக் கொண்டிருந்தன.  அந்தக் கதைகளில் பாதி உண்மையும் கூட.  38 வயதிலிருந்து 70-ஆவது வயதில் கொல்லப்படும் வரையில் அதிபராக இருந்தவன் த்ருஹியோ.  (அங்கே உள்ள அரசியல் சட்டப்படி தொடர்ந்து பதவியில் இருக்க முடியாத போதும் தன் ஆட்களை பொம்மை அதிபராக உட்கார வைத்து ஆட்சி செய்தான்.)  65 வயதுக்கு மேற்பட்ட நிலையிலும் அவர் தூங்கவே மாட்டார்; தூங்காமலேயே பணி புரிகிறார் என்று எல்லோரையும் நம்ப வைத்தான் த்ருஹியோ.  பத்திரிகையாளர்கள் பேட்டி காண விரும்பினால் நள்ளிரவில்தான் நேரம் கொடுப்பான். அப்படிப் பேட்டி அளிக்கும்போது மிகவும் தெளிவாகவும் தூக்கக் கலக்கமே இல்லாமலும் இருப்பார் என்றார்கள் பத்திரிகையாளர்கள். 

முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட த்ருஹியோவின் ஆட்சியில் அவனைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. அப்படி ஒருமுறை ஒரு புரட்சிக்குழு தங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பத்திரிகையாளர் என்ற வேடத்தில் த்ருஹியோவிடம் அனுப்பியது.  புரட்சிக்காரருக்குக் கொடுக்கப்பட்டிருந்த நேரம் நள்ளிரவு. வருவது புரட்சிக்குழுவைச் சேர்ந்தவர் என்று த்ருஹியோவுக்குத் தெரிந்து விட்டது.  ஆனால் த்ருஹியோ அவரைக் கைது செய்யவில்லை.  அது மட்டுமல்ல; அவரது உடம்பை சோதிக்காமலேயே தன்னைச் சந்திக்க அனுப்பும்படி தன் பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டான் த்ருஹியோ.  சோதிக்கப்படாமலேயே துப்பாக்கியுடன் அதிபரின் அறைக்குச் சென்றார் புரட்சிக்காரர்.  ஆனால் அவர் த்ருஹியோவிடம் இருந்த அரை மணி நேரமும் அவரால் துப்பாக்கியை எடுத்துச் சுடவே முடியவில்லை.  த்ருஹியோ அந்த அளவுக்கு அசட்டையாக இருந்திருக்கிறான்.  ’உன்னால் என்னை என்ன செய்ய முடியும் தம்பி’ என்பது போன்ற உடல்மொழியும் மனோபாவமும்.  த்ருஹியோ அந்தப் புரட்சிக்காரருக்குத் தெரிவிக்க விரும்பிய செய்தி ”நான் அசாதாரணமானவன்.”  அதை அன்றைய இரவு தன்னுடைய மிக இயல்பான நடவடிக்கைகளின் மூலம் அந்தப் புரட்சிக்காரருக்குத் தெரியப்படுத்தி விட்டான் த்ருஹியோ.  த்ருஹியோவின் நடவடிக்கைகளில், உடல்மொழியில் கொஞ்சமாவது அச்ச உணர்வு வெளிப்பட்டிருந்தால் புரட்சிக்காரரின் துப்பாக்கி வெடித்திருக்கும். 

இதெல்லாம் கேம் ஆஃப் த்ரான்ஸின் ராம்ஸே, தெயோன் காட்சிகளின்போது எனக்கு ஞாபகம் வந்தன.