பூச்சி – 10

இப்போது மணி 3.30.  மதியம்.  காலையில் ஐந்து மணிக்கு எழுந்து இப்போதுதான் கணினியில் தட்டச்சு செய்ய அமர முடிந்தது.  இதுவரை என்ன வேலை செய்தேன்?  ’நாய்க்கு நிய்க்க நேரமில்லை; செய்ய வேலையும் இல்லை’ கதைதான்.  எடுபிடி வேலையிலேயே நாளில் பாதி நேரம் போய் விடுகிறது. இத்தனைக்கும் இன்று சமையல் வேலை வேறு இல்லை.  நேற்று வைத்த சாம்பார், நேற்று வைத்த ரசம், நேற்று வறுத்த உருளைக் கிழங்குக் கறி – இதைக் கொண்டே ஒப்பேற்றிக் கொண்டேன். சாப்பாட்டு விஷயத்தில் நான் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது மாதிரி ஆள்தான்.  ஆனால் இப்போது அப்படி இருக்க முடியாது.  வீட்டில் அவந்திகா ஸ்விக்கியைத் தடை செய்து விட்டாள்.  கொரோனா என்ற பெயர் அறிமுகம் ஆன தினமே அந்தத் துர்ச்சம்பவம் நடந்து விட்டது.   கொரோனாவுக்கு முன்பே அவளை நான் மடிப்பாப்பாத்தி என்று கிண்டல் செய்து கொண்டிருப்பேன்.  இப்போது கொரோனா வேறு வந்து விட்டதா?  சாப்பாட்டிலும் சானிடைஸர் போட்டுச் சாப்பிடு என்று சொன்னாலும் சொல்வாள்.  எங்கள் வீட்டில் அசைவத்துக்கென்று தனி சட்டி.  மீன் கழுவ.  பூனைகளுக்கு மீன் வேக வைக்க என்று எல்லாமே தனித்தனி.  பாத்திரம் தேய்க்கும் போதும் ஒன்றோடு ஒன்று கலக்கக் கூடாது.  முதலில் சைவப் பாத்திரத்தைத் தேய்த்து முடித்து விட்டுத்தான் அசைவப் பாத்திரங்களைத் தேய்க்க வேண்டும்.  வெளியிலிருந்து எது வந்தாலும் சானிடைஸர் போட்டு சுத்தப்படுத்தி விட்டுத்தான் உள்ளே அனுமதி.  வாட்டர்கேனாக இருந்தாலும் அதேதான்.  நன்றாக இறுக்கி மூடியிருப்பதால் ஸானிடைஸர் உள்ளே போய் விடாது அல்லவா?  இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள்.  அதையெல்லாம் சொல்லி உங்களை நான் டார்ச்சர் செய்ய விரும்பவில்லை.  சொல்ல வந்தது இதுதான்.  கொரோனா இல்லையென்றால், முதல் நாள் சமைத்ததை மறுநாள் தொட மாட்டேன்.  மீன் குழம்புக்கு மட்டும் இந்த விதிவிலக்கு உண்டு.  மீன் குழம்பு மறுநாள்தான் இன்னும் நன்றாக இருக்கும்.  அப்படிப்பட்ட நாட்களில் ஸ்விக்கியிலிருந்து புவனேஸ்வரி ஆர்டர் செய்து விடுவார்.  (இதனாலேயே அவரை அடிக்கடி நான் அன்னபூரணி என்று அழைப்பதுண்டு!) (ஐயோ, புவனேஸ்வரி பெயரைப் போட்டு விட்டேனே!  ஒரு பத்துப் பேராவது அவரிடம் போய் எனக்கும் ஸ்விக்கி ஆர்டர் செய்யுங்கள் என்று டார்ச்சர் கொடுக்கப் போகிறார்கள்!)  இப்போது ஸ்விக்கிக்கு இங்கே நம் வீட்டில் தடை.  புவி கேட்டார், நான் வெஜ் கிடக்கட்டும்.  சைவ உணவு ஆர்டர் செய்கிறேனே?  ஆஹா கெட்டது கதை.  ஸ்விக்கி பாக்கெட்டில் கொரோனா இருந்தால் என்ன செய்வது என்பதுதானே என் வீட்டு அம்மணியின் கேள்வி?  இல்லம்மா, நம் ஸ்ரீராமே ஸ்விக்கி மூலம்தான் மூன்று வேளையும் சாப்பிடுகிறார் என்று சொல்லிப் பார்த்தேன்.  முறைத்தாள்.  ”ஏன் சாரு இப்படி இருக்கிறாய்?  அவர் டாக்டர்.  நீ டாக்டரா?” ஒன்றும் பதில் சொல்லவில்லை.  ஸ்ரீராம் நம்ம பிள்ளை; ஒன்றும் கண்டுகொள்ள மாட்டார்.  ஆனால் மற்ற டாக்டர்கள்?  பதில் சொன்னால் எல்லா டாக்டர்களும் என்னைக் கும்மி எடுத்து விடுவார்கள்.  ஏற்கனவே அராத்துவை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். அதனால் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டேன். 

அது மட்டும் அல்ல. வீட்டில் அசைவ உணவுக்கே தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  ஏன்?  அசைவ உணவின் வழியே கொரோனா பரவும்.  இது அவந்திகாவின் கருத்து.  இதைப் படிக்க நேர்ந்தால் அவந்திகா என்ன சொல்வாள் தெரியுமா?  உனக்குப் புரிலப்பா.  நான் என்ன அப்டியா சொன்னேன்?  இப்போது நொச்சிக்குப்பம் மீனவர்கள் படகு எடுப்பதில்லை.  வேறு எங்கிருந்தோதான் கவர்ன்மெண்ட் மீன் கடையில் மீன் விற்கிறது.  என்ன மீன்?  ஐஸில் போட்ட மீன்.  அது நல்லதல்ல.  சொன்னாக் கேளு.

அடப்பாவி.  அந்த கவர்ன்மெண்ட் கடையிலிருந்துதான் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வீட்டுக்கு மீன் போகிறது.  இந்த ஏரியாவில்தான் முதலமைச்சர் மற்ற பிற அமைச்சர்கள், நீதிபதிகள் எல்லோரும் வசிப்பதால் எல்லார் வீட்டுக்கும் அந்தக் கடைதான்.  அது மட்டும் அல்லாமல், சொன்னால் நொந்து விடுவீர்கள் – எங்கள் வீட்டுப் பூனைகள் ஸிஸ்ஸி, பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி, லக்கி ஆகியோருக்கும் மீன் வருகிறது.  ரெண்டு கிலோ கானாங்கெளுத்தி வாங்கினால் ஆயிரம் ரூபாய்.  நொச்சிக்குப்பத்தில் இதே மீன் 300 ரூ.  இதெல்லாம்தாம் கொரோனாவில் எனக்கு நிகழும் பாதிப்புகள்.  சரி, நம் வீட்டுக்கே அந்த மீன் தான் என்கிறபோது நான் சாப்பிட்டால் என்ன?  ம்ஹும்.  பூனை சாப்பிடலாம்.  நீ சாப்பிடக் கூடாது. 

’இரு, வர்றேன்.  இந்தக் கொரோனா எப்படியும் மே 29ஆம் தேதி முடிந்து விடும்.  அதுக்குப் பிறகு தினமும் மீன் தான்’ என்று நினைத்துக் கொண்டேன்.  அது என்ன மே 29? ஏழு மாதங்களுக்கு முன்பே இப்போதைய கொரோனாவை கணித்த prodigy சிறுவன் மே 29ஓடு இது அகன்று விடும் என்று சொல்லியிருக்கிறார்.  அதோடு என் குருநாதர் சொன்ன தேதியும் அதுதான்.  அதனால் ஜூன் முழுக்க மீன் தான்.  இரு வச்சுக்கிறேன்.        

சரி, இன்றைய கதைக்கு வருவோம்.  இன்று சமையல் இல்லை.  அதுவும் இருந்து சமையலிலும் உதவி செய்திருந்தேன் என்றால், இங்கே கணினியில் வந்து அமர நாலரை ஆகியிருக்கும்.  இந்த வேலைகளை வேண்டுமானால் கொரோனாவினால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு என்று சொல்ல முடியுமா என்றால், முடியாது.  கொரோனா இல்லாதபோதும் இதே கதைதான்.  இதற்கு ஒரே தீர்வு, பணிப்பெண் வைத்துக் கொள்வது மட்டுமே.  ஆனால் இந்த வீட்டில் உள்ள வேலைகளைப் பார்த்து விட்டு வேலையில் சேரும் பெண்களெல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விடுகிறார்கள்.  சென்ற ஆண்டு ஒரு பெண்மணி வேலை செய்தார்.  பிரமாதமாகச் செய்வார்.  எட்டு மணிக்கு வந்து விட்டு ஒரு மணிக்குப் போவார்.  ஐந்து மணி நேர வேலை நிச்சயம் இருக்கும்.  பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து, காய்கறி நறுக்கி, வீட்டைப் பெருக்கித் துடைத்து, அவந்திகாவுக்கு மாதுளம்பழம் உரித்து வைத்து விட்டுப் போக அத்தனை நேரம் ஆகி விடும்.  இந்த வேலைக்கு மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆகக் கூடாதே என்று தோன்றும்.  எனக்கும் தோன்றியது.  ஆனால் செய்து பார்த்தால் எட்டு மணி நேரம் ஆகிறது.  அந்தப் பெண்மணி எக்ஸ்பிரஸ் வேகம்.  இத்தனைக்கும் அவந்திகாவும் ஒன்றும் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க மாட்டாள்.  தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றுவது, பணிப்பெண்ணுக்கு உதவிகள் செய்வது, சமைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பாள்.

அந்தப் பெண்மணிக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டதால் வீட்டு வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.  பிறகு அவந்திகாவே மூன்று மாத காலம் தனியாக வேலை செய்தாள்.  தனியாக என்றால் அதன் முழு அர்த்தத்தில் அல்ல.  அடியேன் எடுபிடி.  பிறகு ஒரு பணிப்பெண் வேலைக்குச் சேர்ந்தார்.  சம்பளமெல்லாம் மற்ற வீடுகளில் தருவதைப் போல் இரண்டு மடங்கு.  அப்போதுதான் தீபாவளியோ என்ன மண்ணாங்கட்டியோ வந்தது.  அவந்திகா அவளுக்கு ட்ரெஸ் எடுக்கும் போது அந்தப் பணிப்பெண்ணுக்கும் அதே மாதிரி – அதாவது தனக்கு எடுத்துக் கொண்ட மாதிரியே அதே விலையில் எடுத்துக் கொடுத்தாள்.  3000 ரூபாய்க்கு சுடிதார்.  அந்தப் பெண் வேலையில் சேர்ந்து 15 நாள் தான் ஆகியிருந்தது.  மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார் பணிப்பெண்.  என்னை அப்பா அப்பா என்றுதான் வாய் நிறைய கூப்பிடும்.  சின்னப் பெண் தான்.  வயது 22 இருக்கும்.  நான்கு வயதில் குழந்தை இருக்கிறது.  16 வயதிலேயே கல்யாணம் நடந்து விட்டதாம்.  காதல் கல்யாணம்.  அடுத்த பதினைந்து நாளில் வேலையிலிருந்து நின்று விட்டது.  காரணம்?  அது பெரிய கதை ஆயிற்றே?  இது பூச்சி பற்றிய பதிவுகள் அல்லவா?  சரி, சுருக்கமாகச் சொல்கிறேன்.  திடீர் திடீரென்று லீவு எடுக்கும்.  சொல்லாமல் அல்ல. நேரில் வந்து சொல்லி விட்டுத்தான் போகும்.  ஒருநாள் என் புருஷன் என்னை அடித்து விட்டான் என்று சொல்லி முகத்தையும் கைகளையும் காட்டியது.  எல்லாம் வீங்கிக் கிடந்தது.  மூன்று நாள் வரவில்லை.  இன்னொரு நாள் பஸ்ஸிலிருந்து விழுந்து விட்டேன்.  காலில் சிராய்ப்பு.  அவந்திகாவிடம் காட்டியதாம்.  உண்மைதான்.  அதாவது சிராய்ப்பு.  மூன்று நாள் லீவு.  வந்து சேர்ந்து பதினைந்து நாளில் ஆறு நாள் லீவு.  அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு 3000 ரூபாயில் சுடிதார்.  பாவம் சாரு, நமக்கு ஒரு பொண்ணு இருந்தா வாங்கிக் குடுக்க மாட்டமா? – அவந்திகா.  அவந்திகா செய்யும் எந்தக் காரியத்தையும் நான் ஒருபோதும் விமர்சித்ததில்லை.  அதேபோல் அப்போதும் சும்மா இருந்து விட்டேன்.  அப்போதுதான் கார்த்திக்கும் அவன் மனைவி அனுவும் மும்பையிலிருந்து சென்னை வந்திருந்தார்கள்.  ஆங்… அது தீபாவளி சீஸன் அல்ல.  மார்கழி ம்யூசிக் சீஸன். கார்த்திக் மும்பை திரும்பியதும் ”அந்தப் பெண்ணை நாங்கள் இங்கே எங்களோடு அழைத்துக் கொள்ளவா?  இங்கே ஆள் தேவை” என்றான்.  எனக்குக் கடுங்கோபம் வந்தது.  அவந்திகாவுக்கும்தான்.  ஒரு வார்த்தை இந்தி தெரியாமலேயே மராத்திப் பெண் அனுவிடம் இந்தப் பணிப்பெண் பேசி முடித்திருக்கிறாள்.  எங்களிடம் சொல்லவே இல்லை.  அடுத்த மாதம் பிறந்த உடனேயே சம்பளத்தை வாங்கிக் கொண்டு,  ஊருக்குப் போகிறேன் என்று சொல்லி நான்கு நாள் லீவு. அவந்திகா அந்தப் பெண்ணை நிறுத்தி விட்டாள். 

அடுத்த பெண்ணுக்கு எந்த வேலையும் தெரியவில்லை.  இத்தனைக்கும் ஒரு குடும்பத்தின் நிர்வாகி.  8 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு.  ஆனால் எதுவுமே தெரியவில்லை.  பாத்திரம் தேய்த்தால் எல்லாம் ஒரே பத்து.  ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.  ஒரு நாள் ஒரு உணவுப் பொருள் திறந்து கிடந்ததைப் பார்த்துப் பதறி விட்டேன்.  கொசு மொய்த்தால் என்ன ஆவது?  மூடி வையுங்கள் என்றேன்.  கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பக்கம் வந்த போது பார்த்தால் ஒரு தாம்பாளம் மாதிரி பாத்திரத்தைப் போட்டு மூடி வைத்திருந்தார்.  அடப் பாவி.  மூடுவதற்கென்று வீட்டில் 20 தட்டுகள் உள்ளன.  இவ்வளவு பெரிய பாத்திரத்தைப் போட்டு மூடினால் அது அப்படியே கீழே விழுந்து தொலைக்காதா? எங்களுக்கும் தாங்கவில்லை.  அந்தப் பெண்ணுக்கும் முடியவில்லை.  நான் நின்னுக்கிறேம்மா என்று சொல்லி விட்டே நின்று கொண்டார் அந்தப் பெண். 

வளர்த்திக் கொண்டு போக விரும்பவில்லை.  இப்படியே ஏழு பெண்கள் வந்த வந்த வேகத்தில் நின்று போனார்கள்.  கடைசியாக ஒரு பெண் ஜெட் வேகத்தில் வேலை செய்தார்.  அந்தப் பெண்ணின்  வேகத்தில் அவந்திகாவுக்கே ரத்தக் கொதிப்பு வந்து விடக் கூடும்.  நல்லவேளை, வந்த முதல் நாளே பாத்திரங்கள் இருந்த பாத்திரக் கூடையைக் கீழே போட்டு உடைத்ததில் அவந்திகா நீ கிளம்பும்மா தாயே என்று சொல்லி கையில் ரூபாயைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டாள்.  

கடந்த இரண்டு மாதங்களாக அவந்திகாவும் நானும்தான் வீட்டு வேலை.  இந்தக் கொரோனா இல்லையென்றால், பணிப்பெண்களைத் தேடவாவது செய்யலாம்.  இப்போது அதுவும் முடியாது.  இருந்தாலும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டுக்கும் பணிப்பெண்கள் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்.  இங்கே வசிப்பவர்கள் மேட்டுக்குடி என்பதால் இவர்களால் தங்கள் வேலையைத் தாங்களே செய்து கொள்வது கற்பனையிலும் சாத்தியம் இல்லாதது.  எங்கள் வீட்டுக்கு மட்டும்தான் பணிப்பெண் இல்லை.       

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து மூன்றரை மணிக்குக் கணினியின் பக்கம் வரும் அளவுக்கு அப்படி என்னதான்வீட்டு வேலை? மாடியில் வாக்கிங் முடித்து விட்டு எட்டரைக்குக் கீழே வந்தேன்.  வந்ததும் காஃபி.  பிறகு ஒன்பது மணி அளவில் தோசை போட்டுச் சாப்பிட்டேன்.  தோசைக்குப் பிறகு ஒரு காஃபி.  ஒரு நாளில் மொத்தம் மூன்று காஃபிதான்.  அதுவும் அரை டம்ளர்தான்.  முழு டம்ளர் அல்ல.  பத்து மணிக்கு பத்துப் பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தேன். 

முந்தாநாளோ என்னவோ, இரவு பதினொன்றரை மணிக்குப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள் அவந்திகா.  என்னம்மா இது என்று அதிர்ச்சியுடன் கேட்டேன்.  இப்படியே போட்டு விட்டால் காலையில் உனக்குப் பாத்திரம் அதிகமாக இருக்கும், அதனால்தான் என்றாள்.  இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொண்டாலும் பாத்திரங்கள் விழுந்துகொண்டேதான் இருக்கும்.  உங்களுக்கு அதிலெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் உண்டா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.  எனக்கு இதில் செம எக்ஸ்பீரியன்ஸ் உண்டு.  அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.  பாத்திரங்கள் விழுந்துகொண்டேதான் இருக்கும்.  நீங்களே பாருங்கள், ஒரு காஃபி குடித்தால் எட்டு பாத்திரம்.  பால் காய்ச்சும் கெட்டில், டம்ளர், ஃபில்டர் – ஓ, பிரதர்ஸ் அண்ட் ஸிஸ்டர்ஸ், ஃபில்டர் என்றால் அதில் நான்கு பகுதிகள் உண்டு – கீழ்ப்பகுதி, மேல்பகுதி, மூடி, உள்ளே உள்ள வடிகட்டி போன்ற பகுதி – ஆக நான்கு, ஸ்பூன், கடைசியாக வடிகட்டி.  ஆக மொத்தம் ஒரு காஃபி குடித்தால் சுத்தம் செய்வதற்கு எட்டு துண்டு பாத்திரங்கள் விழும்.  வடிகட்டி எதற்கு என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு எழும்.  தேநீருக்குத்தானே வடிகட்டி தேவை?  காஃபிக்கும் தேவை.  வடிகட்டி இல்லாமல் காஃபி கலக்கினால் காஃபி குடிக்கும் போது அதில் இருக்கும் ஆடையை தூ தூ என்று துப்பிக் கொண்டே குடிக்க வேண்டியிருக்கும்.  எனக்கு ஆடை பிடிக்காது. 

பாத்திரம் தேய்ப்பதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன, பார்த்துக் கொள்ளுங்கள்.  பால் பாத்திரத்தைத் தேய்க்கும்போது ஸ்க்ரப்பரில் ஆடை சிக்கிக் கொள்ளும்.  ஆக, கடைசியில் பாத்திரம் அவ்வளவையும் தேய்த்து விட்டு ஸ்க்ரப்பரை படு சுத்தமாகக் கழுவி வைக்க வேண்டும்.  பல பணிப்பெண்கள் அப்படியே போட்டு விடுவார்கள்.  பால் ஆடை ஒட்டியிருப்பதால் அதில் புழு வந்து விடும்.  இப்போதுதான் ஸ்க்ரப்பர்.  என் அம்மா இதற்கு தேங்காய் நாரும் புளிச்சக்கையும் சேர்த்துப் பயன்படுத்துவார்கள்.  அப்போதெல்லாம் இப்போது போல் லிக்விட் கிடையாது.  வேறு ஏதோ ஒன்று.  உங்களுக்குத் தெரியுமா? 

இப்படி ஒரு பதினொன்று வரை போனது.  உடனே கீழே உள்ள பூனைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்தது.  எழுதலாமா?  பூனைகளுக்குச் சாப்பாடா?  பசித்த உயிருக்கு உணவிடுவதை விட வேறு எதேடா முக்கியம் என்று கேட்டுக் கொண்டு கீழே போனேன்.  அதில் ஒரு அரை மணி நேரம்.  பிறகு திரும்பி வந்து குக்கரில் அரிசி வைத்தேன்.  குளித்தேன்.  சாப்பிட்டேன்.  அதுதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, நாய்க்கு நிய்க்க நேரமில்லை, வேலையும் இல்லை என்று.  இதோ மூன்றரை மணிக்கு எழுத ஆரம்பித்தேன். 

எல்லோரும் நேரம் போகவில்லை போகவில்லை என்கிறார்களா?  எனக்கு என்ன தோன்றும் தெரியுமா?  ஐயோ, நான்கு மணி ஆயிற்றே, இன்னும் இன்றைய நாளில் ஐந்து மணி நேரம்தானே எழுத முடியும்?  அடடா, சே.  ஐந்து மணி ஆனால் அடடா, இன்னும் நான்கு மணி நேரம்தானே எழுத முடியும்?  ஒன்பது மணிக்கு மேல் பூனைகளுக்கு உணவிடப் போய் விடுவேன்.  அவசரமாக இருந்தால் பத்து மணிக்கு மேலும் தட்டச்சு செய்வேன்.  இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த ராகவனின் போனுக்கு இன்று காலை அவரை அழைத்தேன்.  You are the busiest man on earth என்று பேச்சை ஆரம்பித்தார்.  அரை மணி நேரமும் கொரோனாதான்.  நிறைய ஜென்ரல் நாலெட்ஜ் வளர்ந்தது. 

சீனி, அந்த எழுத்தாளர் மேட்டருக்கு இன்னும் வர முடியவில்லை.  எதைத் தொட்டாலும் வளர்ந்து கொண்டே போகிறது. 

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai