மாயா இலக்கியச் சந்திப்பு – இன்று மாலை – பீச் சிறுகதை

இந்திய நேரம் மூன்றரை மணி. சிங்கப்பூர் நேரம் ஆறு மணி. ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பரின் சந்தேகம். இன்றைய சந்திப்பு பற்றி. உள்வட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னால் அவர் சந்தேகத்தைப் புறக்கணிப்பது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. இன்றைய சந்திப்பு பற்றிய சென்ற வார அறிவிப்பில் ஆலன் ராப் க்ரியேவின் பீச் சிறுகதையைப் படித்து விட்டு வரச் சொல்லி அதன் லிங்கைக் கொடுத்திருந்தேன். லிங்கைக் கொடுப்பதெல்லாம் என் கூட்டத்தில் பலரும் அ-பிராமணர்கள் என்பதால்தான். எங்களுடைய மரபு அணுவெல்லாம் இன்னும் வளர்ச்சி பெறுவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும் போல் தெரிகிறது. அதனால் பிராமணன் எல்லாம் புத்திசாலி என்று நான் சொல்வதாகவும், இது ரேஸிஸம் என்றும் என்னைக் குற்றம் சாட்டக் கூடாது. நான் சொல்வது எதார்த்தம். லிங்கைக் கொடுத்தேன். ஆனாலும் லிங்க் நண்பரின் பார்வைக்குத் தட்டுப்படவில்லை போல. நாங்களெல்லாம் – அதாவது வாசகர் வட்டத்தின் உள்வட்டக் குழு ஒரு வாட்ஸப் க்ரூப் வைத்திருக்கிறோம். அதில் அந்த நண்பர் நேற்றிலிருந்து கதறு கதறு என்று கதறுகிறார். பீச் கதையின் லிங்க் கொடுங்கள் கொடுங்கள் என்று. சொல்லியிருக்கிறேனே, நாங்கள்தான் ஒரு ஹிப்பி கும்பல் என்று. ஒருத்தரும் அவருடைய கதறலைக் கண்டுகொள்ளவே இல்லை. அவருக்கோ என்னைக் கண்டால் பயம். அவரைக் கண்டால் எல்லோருக்கும் பயம். அவருக்கோ என்னைக் கண்டால் பயம். அதனால் பயந்து கொண்டே “சாரு மன்னிக்கவும். தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள். லிங்க் கிடைக்கவில்லை. கதையைப் படித்து விட்டு வர வேண்டும் என்று நினைப்பதால் உங்களைத் தொந்தரவு செய்கிறேன். லிங்க் வேண்டும்” என்று வாட்ஸப் மெஸேஜ் கொடுத்திருக்கிறார்.

ரோல்ஸ் ராய்ஸ், பிம்டபிள்யூ போன்ற கார்களில் வருபவர்களைத்தான் உருப்பட்டவர்கள் என்று ரஜினி நினைப்பார் என்று அவர் நண்பர் ஒருவர் என்னிடம் சொல்வார். நானும் அப்படித்தான். வாழ்க்கையில் தானே முன்னேறி தானே சம்பாதித்து கோடிகளில் புரள்பவரைத்தான் உருப்பட்டவர் என்று நினைப்பேன். நானெல்லாம் உருப்படவே உருப்படாதவன். அந்தப் பிரஸ்தாப நண்பர் செமயாக உருப்பட்டவர். அப்படிப்பட்டவரால் லிங்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் நான் லிங்க் கொடுத்திருக்கிறேன். மட்டுமல்ல. Alain Robbe-Grillet The Beach என்று கூகிளில் தட்டினால் கதை வந்து விழுகிறது. இதோ மீண்டும் லிங்க்.