பூச்சி 80

இஸ்லாத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம், எந்தக் காரணத்துக்காகவும் – அதிலும் குறிப்பாக கடவுளின் பெயரைச் சொல்லி, ஆன்மீகத்தின் பெயரால் உடலின் இயல்பான இச்சைகளை அடக்க மாட்டார்கள்.  உலகில் உள்ள மதங்களிலேயே உடலை அடக்கி ஒடுக்காத ஒரு மதம் எதுவென்றால், அது இஸ்லாம்தான்.  அதிலும் குறிப்பாக, விசேஷமாக பெண்கள்.  முத்துசாமியின் நீர்மை என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  அசோகமித்திரனின் இருவர் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  லா.ச.ரா.வின் பாற்கடல் என்ற கதையைப் படித்திருக்கிறீர்களா?  நீர்மையில் வரும் அந்தப் பெண்மணிக்குப் பெயர் உண்டா என்று நினைவில்லை.  அவள் அவள் என்றுதான் வரும்.  பத்தாவது வயதில் வீணானவள். இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூறுக்கு மேல்.  யோசித்துப் பாருங்கள்.  85 ஆண்டு காலம் ஆண் ஸ்பரிஸமே மேனியில் படாமல் காமத்தை – அது காமம்தான் என்பதைக் கூட அறியாமல் – நீரிலேயே கிடந்து கிடந்து அதை அடக்கி ஒடுக்கினாள்.  அதனால்தான் நீர்மை.  அந்தப் பெண் அந்தக் கதையில் அந்த ஊர்க் குளத்தில் குளித்துக் கொண்டே இருப்பாள்.  இருவர் கதையில் வரும் வாலா.  பாற்கடலில் வரும் விதவைப் பெண்.  தீபாவளி சமயத்தில் பட்டாசு வாங்க கடைக்குச் சென்ற கணவன் கடையில் பட்டாசு விபத்து நடந்து அதில் தீக்கிரையாகிச் சாகிறான்.  அந்தக் கதையில் ஒரு இடம் வரும்.  கணவன் இறந்த தீபாவளிக்கு அடுத்த தீபாவளி.  அது ஒரு கூட்டுக் குடும்பம்.  இவளுடைய மாமியாரின் மாமியாரே இன்னும் உயிருடன் இருக்கிறார்.  அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பம்.  இவளுக்கு ஒரு மகன்.  பொடியன் அம்மாவை ஏதோ படுத்துகிறான்.  இவளே கடும் மனவேதனையில் இருக்கிறாள்.  ஊரெல்லாம் பண்டிகை குதூகலத்தில் கணவன் இல்லாத தனிமை.  மகன் சொல்பேச்சு கேட்காமல் நச்சரிக்கவே அடித்து விடுகிறாள்.  உடனே மாமியார் வந்து திட்டுகிறாள்.  எப்படி?  ஏம்மா, உனக்கு உன் ஆம்படையான் போய்ட்டான்னு வருத்தப்படறே.  எனக்கும் என் பையன் போய்ட்டான்னு வருத்தமா இருக்காதா?  அதுக்காக பையனைப் போட்டு அடிக்கிறதா?  அப்போது அந்தப் பெண் சொல்கிறாள், உங்களுக்குப் பையன் போனதும் எனக்கு ஆம்படையான் போனதும் ஒண்ணா? 

என்னென்னவோ சொல்கிறார்கள், முராகாமி கராகாமி என்று.  மேற்கண்ட இடத்தைப் போல் உலக இலக்கியத்தில் ஒன்றே ஒன்றைக் காண்பிக்க முடியுமா?  2000 வருஷத்து இந்துப் பெண்ணின் கண்ணீர்தான் அந்தக் கேள்வியைக் கேட்டது.  இந்துப் பெண் என்று சொல்வது கூட எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை.  பிராமணப் பெண் என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும்.  இந்து மதத்தின் மற்ற சாதிகளில் கூட இந்த அளவுக்குப் பெண் உடலை ஒடுக்கும் வழக்கம் இல்லை என்று நினைக்கிறேன்.  அபிராமணர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்வது இல்லை.  கணவன் இறந்து போனால் இன்னொருவனோடு வாழ்வது அங்கே சாத்தியம்தான்.  அதற்கு சமூக அங்கீகாரம் இருக்காதே தவிர அதற்காக யாரும் தள்ளி வைத்து விட மாட்டார்கள்.  பிராமணப் பெண்ணைப் போல் மனித வரலாற்றில் ஒடுக்கப்பட்ட பெண் இனம் வேறு எதுவும் இல்லை.  இஸ்லாமில் இந்தப் பிரச்சினை இல்லை.  அங்கே நீர்மை இல்லை; இருவர் இல்லை; பாற்கடல் இல்லை.  கணவன் இறந்தால் அடுத்த திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.  இந்து மதத்தைப் போன்ற உடல் ஒடுக்குமுறை இல்லை.  (இன்று பல இந்துத்துவ நண்பர்களிடமிருந்து வசை கடிதம் எதிர்பார்க்கிறேன்.  அவர்கள் எனக்கு வசை கடிதம் எழுதுவதை விட 20 வயதிலேயே பெண்களையும் ஆண்களையும் சாமியாராக மாற்றி இந்து மதத்தை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கும் நவீன இந்துச் சாமியார்களைத்தான் கண்டிக்க வேண்டும்.  அவர்கள்தான் இன்று இந்து மதத்தை வேர் அறுத்துக் கொண்டிருப்பவர்கள்.   அவந்திகாவின் நெருங்கிய சொந்தக்காரப் பையன் வீட்டில் ஒரே வாரிசு ஒரு சாமியாரிடம் சேர்ந்து அவனும் சாமியாராகி விட்டான்.  அந்தக் குடும்பம் வாரிசு இல்லாமல் அதோடு அழிந்தது.)    

நான் சொல்ல வந்தது வேறு விஷயம். நாகூரில் வஹாப் சாபு என்று ஒரு சூஃபி ஞானி இருந்தார்.  அவர் ஒரு சூஃபி என்பதே எனக்கும், நாகூர் ரூமி போன்ற ஒருசில நண்பர்களுக்கும் மட்டுமே தெரியும்.  ஊரில் மற்றவர்களுக்கு உடம்புக்கு நோவு வந்தால் மந்திரிப்பவர் என்றுதான் அவரை அறிவார்கள்.  பெரும் அறிஞர்.  குடும்பம் குட்டியெல்லாம் உண்டு.  அவர்தான் முதலில் எனக்கு மன்சூர் அல்ஹலாஜ் பற்றிச் சொன்னவர்.  அன் அல்-ஹக் என்று சொன்னதனாலேயே அல்ஹலாஜை எண்ணெய்க் கொப்பரையில் போட்டுக் கொன்றார்கள் என்பார் வஹாப் சாபு.  பிறகு பல ஹதீஸ் கதைகளிலும் இந்த மன்ஸூர் அல்ஹலாஜ் பற்றிக் கேட்டிருக்கிறேன்.

இப்போது அவரைப் பற்றி அறிந்து கொள்வது கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்கக் கூடிய விஷயம்.  கணினி வருவதற்கு முன்னால் எல்லாமே நூலகம்தான்.  அல்ஹலாஜ் பற்றி ஒருவர் தன் வாழ்நாள் முழுவதையுமே செலவழித்து ஆய்வுகள் செய்து எழுதினார்.  Louis Massignon என்ற ஃப்ரெஞ்ச் அறிஞர்.  இஸ்லாமும் கிறித்தவமும் அடிப்படையில் ஒன்றுதான் என்று கருதும் லூயி மஸிஞ்ஞோ மகாத்மா காந்தியை ஒரு ஞானி என்கிறார்.  அவர் எழுதிய The Passion of al-Hallaj, Mystic and Martyr of Islam  என்ற நான்கு தொகுதிகளாக வந்திருக்கும் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு.  ஆனால் ஒரு தொகுதியே – அதுவும் கிண்டிலிலேயே – நாலாயிரம் ஐயாயிரம் என்று போட்டிருக்கிறது.  அதெல்லாம் ஆகாது.  ஏதாவது அமெரிக்க நூலகங்களில் ஆன்லைனில் படிப்பதற்கு வசதி பண்ணிக் கொடுத்திருக்கிறார்களா என்று தெரிந்தால் நலம்.

இஸ்லாமிய சூஃபி வரலாற்றில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்ஸூர் அல்-ஹலாஜுக்கு நிகரான ஒரு சூஃபியை என்னால் வேறு யாரையும் சொல்லத் தெரியவில்லை.  சொல்லப்போனால் இவர் இயேசு அளவுக்கு – அல்லது அதை விடவும் மேலான வகையில் எதிரிகளிடம் அன்பு பாராட்டியவர்.   தன் காலத்தில் அவர் தான் பிறந்து வளர்ந்த ஈரானிய மன்னனைக் காட்டிலும் பிரபலமாக இருந்தார்.  காரணம், அவர் ஒரு சூஃபி கவிஞனாக இருந்த போதிலும் மக்கள் போராளியாகவும் விளங்கினார்.  இயேசுவைப் போலவே ஏழை எளியவர்களுக்காகவும் விளிம்புநிலை மக்களுக்காகவும் போராடினார்.  அதன் காரணமாக, மக்கள் நல விரோதியாக இருந்த மன்னனுக்கு அல்ஹலாஜ் பெரும் தொந்தரவாக இருந்தார்.   அவரை ஒழித்துக் கட்டுவதற்காக என்னென்னவோ செய்தான்.  மக்களிடம் அது எடுபடவில்லை.  பின்னர் அவருடைய வார்த்தைகளையே கொண்டு அவரைச் சிறைப்படுத்தினான். 

அல்ஹலாஜ் தன் இளம்பிராயத்திலேயே ஏனைய சூஃபிகளிடமிருந்தெல்லாம் வித்தியாசப்பட்டு இருந்தார்.  இந்தியாவுக்கு வந்தார்.  இங்கே உள்ள வேத சாஸ்திரங்களையெல்லாம் படித்தார்.  தான் உணர்ந்த அனல் ஹக்கும் ப்ருஹதாரண்யக உபநிஷதத்தில் வரும் அஹம் ப்ரும்மாஸ்மியும் ஒன்றேதான் என உணர்ந்தார்.  பலரும் மன்ஸூர் அல்ஹலாஜ் அனல் ஹக் தத்துவத்தை ப்ருஹதாரண்யக உபநிஷதத்திலிருந்தே எடுத்தார் என்பார்கள்.  ஆனால் அல்ஹலாஜ் இந்தியா வருவதற்கு முன்பாகவே அனல் ஹக் என்று சொல்லி விட்டார்.  நானே இறைவன், நானே உண்மை எனப் பொருள்படும்   அனல் ஹக் என்பது அல்லாஹ்வின் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்களில் ஒன்று.  ஏழைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடினாலும் அவரது புரட்சிகர கருத்துக்களும் கவிதைகளும் மக்களிடையே பெரும் விவாதங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில்தான் அவர் இந்தியா வந்தார்.  இந்தியத் தத்துவமும் சூஃபி தத்துவமும் ஒன்றுதான் என உணர்ந்தார்.

மெக்கா சென்றார்.  அங்கே சென்று ஒரு ஆண்டு முழுவதும் எதுவும் உண்ணாமல் யாரிடமும் பேசாமல் இருந்தார்.  திரும்பவும் ஈரான் வந்தபோது ஏழை எளிய மக்களால் மெக்கா சென்று காபாவைக் காண இயலாது என்பதால் காபா என்பது உங்கள் மனதிலே இருக்கிறது என்ற கவிதையைப் பாடினார்.  கீழ்க்கண்ட சிவவாக்கியர் பாடலைப் பாருங்கள்:

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;

சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!

நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!

சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த மன்னன் இதைப் பிடித்துக் கொண்டான்.  மன்ஸூர் அல்ஹலாஜ் காபாவை அழிக்க நினைக்கிறார் என்று சொல்லி அவரை சிறைப்பிடித்தான்.  மொத்தம் பதிமூன்று ஆண்டுகள்.  மன்னன் அப்போதும் விடவில்லை.  அல்ஹலாஜைக் கொன்றால்தான் தன் ஆட்சி பிழைக்கும் என நினைத்தான்.  25 மார்ச் 922 அன்று முரசு அறிவிப்பவன் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.  இஸ்லாமுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டதால் நாளை அவருக்கு மரண தண்டனை. 

அல்ஹலாஜை ஏன் நான் இயேசுவுக்கும் மேலே வைக்கிறேன் எனில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது சரீர வேதனை தாங்காமல் ஏலி ஏலி லாமா சபக்தானி என்றார்.  (தேவனே, தேவனே, ஏன் என்னைக் கை விட்டீர்?) ”இயேசு சரீர வேதனை தாங்காமல் அப்படிச் சொல்லவில்லை; அவரது வாழ்நாளெல்லாம் ஜெபித்து வந்த சங்கீதத்தின் வசனங்களின் முதல் வாக்கியத்தையே சொல்லி ஜனங்களே நான் ஏற்கனவே சொன்னது நடந்து கொண்டிருக்கிறது என்றார்” என்பதையும் நான் அறிவேன்.  ஆனாலும் இந்த சங்கீதம் 22ஐ வாசிக்கும் போதெல்லாம் கேட்கும் போதெல்லாம் எனக்கு ஒரே ஒரு உணர்வுதான் தோன்றும்.  உலகின் வேதனைகளையெல்லாம் ஒன்று சேர்த்து ஓர் உன்னதமான கவிமனம் வெளிப்படுத்தும் என்றால், அது இந்த சங்கீதம் 22 தான்.  மனித வாதையின் உச்சபட்ச வெளிப்பாடு இது.  மற்ற எல்லாமே இதற்கு அடுத்துதான்.  இதை இயேசு தன் வாழ்நாளெல்லாம் சொல்லி வந்தார்.  சிலுவையில் அறையப்பட்ட போதும் சொன்னார்.  அந்த சங்கீதம் 22 கீழே:

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

2. என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன். உத்தரவு கொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.

3. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.

4. எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.

5. உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள்.

6. நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.

7. என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:

8. கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.

9. நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாயிருக்கப் பண்ணினீர்.

10. கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.

11. என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.

12. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.

13. பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.

14. தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

15. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

16. நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

17. என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

18. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.

19. ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

20. என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.

21. என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.

22. உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.

23. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.

24. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.

25. மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

26. சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.

27. பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

28. ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.

29. பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.

30. ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

31. அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.

வளனோடு இது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது சில தெளிவுகள் கிடைத்தன.  இயேசு ஒரே சமயத்தில் மனிதனாகவும் தேவனாகவும் இருந்தவர்.  மேற்கண்ட வசனங்கள் அவர் மனிதனாய் உணர்ந்த போது உதிர்த்தவை.  இந்த வரிகளைப் படிக்கும் போதெல்லாம் என் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை.  ஆனால் ஏன் மன்ஸூர் அல்ஹலாஜை இங்கே குறிப்பிட்டேன் என்றால், அவரை மேலே நீங்கள் காணும் ஓவியத்தில் உள்ளபடி தூக்கில் போடவில்லை.  முகத்திலேயே அடித்தார்கள்.  மேலும் மேலும் அடித்தார்கள்.  அப்போதும் அவர் அவர்களிடம் சிரித்துக் கொண்டே பேசினார்.  உங்கள் மீது எனக்குக் கோபமே வரவில்லை.  நீங்கள்தான் நான்; நான் தான் நீங்கள் என்று பித்தனைப் போல் சொல்லிக் கொண்டே இருந்தார்.  சிரித்தபடியே இருந்தார்.  இது அரசனை மேலும் கோபப்படுத்தியது.  அவர் உடம்பில் எண்ணெயை ஊற்றி தீயை வைக்கச் சொன்னார்.  அப்போதும் சிரித்தார் அல்ஹலாஜ்.  பிறகுதான் எரிந்து போன அவர் உடலின் தலையையும் சீவி அதை டைக்ரிஸ் நதியில் எரிந்தார்கள்.  இதெல்லாம் அப்படி அப்படியே வரலாற்றாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

என் இதயத்தின் கண்களால் கடவுளைக் கண்டேன்

யார் நீங்கள் எனக் கேட்டேன்

நீ என்றார் அவர்.

அல்ஹலாஜின் கவிதை ஒன்று.

அல்ஹலாஜைப் பற்றி இன்று ஏன் நினைத்தேன் என்றால், அல்ஹலாஜ் நான் கடவுள் என்று சொன்னது போல் – சரி, அவ்வளவு வேண்டாம், திட்டுவீர்கள் – கொஞ்சம் இறங்கி வந்து பரமஹம்ஸாவின் வாழ்வில் நடந்த ஒன்று என் வாழ்வில் பலமுறை நடந்துள்ளது என்றேன் என் நண்பரிடம்.  ஐயோ என்றார்.  நல்ல வார்த்தை சொல்லும்போது இப்படிக் கெட்டதாகச் சொல்லலாமா என்று கடிந்தேன்.  பிறகு அது என்ன என்று விளக்கினேன்.

கங்கைக் கரையில் தக்ஷிணேஸ்வர் காளி கோவிலில் அர்ச்சகராக இருக்கும் போது – வயது என்ன, இருபது இருக்குமா?  இன்னமும் அவருக்கு காளி தர்சனம் தரவில்லை – ஒருநாள் கங்கைக் கரையில் போய் நின்று கொண்டு, ஒரு கையில் காலணாவும் ஒரு கையில் பிடி மண்ணுமாக பரமஹம்ஸர் தன்னையே கேட்டாராம், எது உசந்தது என்று.  மனம் சொன்னது, ரெண்டும் ஒன்றுதான் என்று.  உடனே ரெண்டையும் கங்கையிலே போட்டார். 

அப்படி நேரடியாக நடக்கவில்லை என்றாலும் மண்ணையும் பொன்னையும் நான் ஒன்றாகவே கருதுகிறேன்.  கருதி வந்திருக்கிறேன்.  ஐயோ என்றார் நண்பர் மீண்டும்.  வாசகர்களிடம் பணம் வாங்குகிறீர்கள், நீங்கள் பேசியதைக் கூட இலவசமாகத் தருவதில்லை; பணம் கொடுத்தால்தான் தருகிறீர்கள்.  நீங்களா மண்ணையும் பொன்னையும் ஒன்றாகக் கருதுவது? 

இதற்கு நான் விளக்கம் தர வேண்டும்.  கருத்து நிலையில், மனதளவில் நினைப்பது வேறு.  மனோதர்மம்.  லௌகீகம் வேறு.  லௌகீக வாழ்வில் அந்தக் காகிதம் தேவைப்படுகிறது.  எனக்கு சில பயணங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.  அது ஒரு இரண்டு ஆண்டுகள் தடைப்பட்டிருக்கிறது.  அதற்குப் பணம் வேண்டும்.  ஏற்கனவே என்னுடைய இன்னொரு கனவு தேசமான திபெத்துக்குப் போகும் தகுதியை இழந்து விட்டேன்.  12000 அடிக்கு மேல் பயணித்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.  மேலும் சில காரியங்களுக்கும் பணம் தேவைப்படுகிறது.  சமீபத்தில் ஒரு ஆய்வுக்காக ஆளவந்தார் (916 – 1041) எழுதிய கீதார்த்த சங்கிரகம் தேவைப்பட்டது.  எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை.  பா. ராகவனைக் கேட்டேன்.  விசாரித்து சொல்கிறேன் என்றவர் மறுநாளே முகவரி கொடுத்தார்.  ஸ்ரீரங்கம்.  அங்கே கூட அந்தத் தொகுதிகள் ஒரே ஒரு பிரதிதான் இருந்தது.  எல்லாவற்றையும் புகைப்பட நகல் எடுத்து அனுப்புகிறேன் என்றார்.  அப்போது நான் எனக்குக் காசும் கல்லும் ஒன்றுதான், அனுப்பி வையுங்கள் என்றா சொல்ல முடியும்?  2000 ரூபாய்.  கருப்பசாமியிடம் சொல்லி வாங்கினேன்.  (கருப்புவிடம் போட்ட சண்டை சமாதானம் ஆகி விட்டது!)   இதெல்லாம் கூடப் பரவாயில்லை.  இருபது பூனைகளுக்கு சாப்பாடு போட வேண்டும்.  வாடகை கொடுக்க வேண்டும்.  பாரதி மாதிரி, சுதந்திரம் வாங்கினதும் வாடகையை அனுப்புகிறேன், போய் வாரும் செட்டியாரே என்று சொல்ல முடியாது இல்லையா?  அதனால்தான் பணம் தேவைப்படுகிறது.  மற்றபடி மண்ணும் பொண்ணும் ஒண்ணுதான் எனக்கு.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai