பூச்சி 85

ஹெலன் சிஸூவின் ரீடர் பற்றி எழுதியிருந்தேன்.  அதற்கு என் நீண்ட கால நண்பரான அ. ராமசாமி முகநூலில் ஒரு கருத்தை எழுதியிருந்தார்.  அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

”பூச்சி-84ஐப் படித்ததும் ஏன் சாருவுக்கு அதேபோல் ஒரு ரீடர் – வாசிப்பு உதவிக்களஞ்சியம் இல்லை என்று தோன்றியது. ஒரு மொழியில் செயல்படும் எல்லாருடைய எல்லா எழுத்துகளையும் ஒருவர் வாசித்துவிட முடியாது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் குறைந்தது அவர்களது சிறப்புத் தேர்வுக்குரிய இலக்கியவகையினத்தை முழுமையாகவும் அவ்வகையினம் சார்ந்த மற்றவர்களின் சாராம்சத்தை முன்வைக்கும் ஒரு தொகுப்பையும் வாசித்திருக்க வேண்டும். அப்படியான தொகுப்புகளைக் குறிக்கும் சொல்லாகவே A Reader என்பது இருக்கிறது. தமிழில் அதனை ”வாசிப்பு” என்று மட்டும் சொன்னால் கூடப் போதும். சாருநிவேதிதா- வாசிப்பு தமிழ் இலக்கியத்துறையில் ஆய்வுசெய்துவிட்டு புதுவைப்பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்த தொடக்க நிலையில் எனது நாடகத்துறை அறிவு போதுமானதல்ல. அதற்கு முன்பு நிஜநாடக இயக்கத்தில் பத்தாண்டு காலம் தெருநாடகங்களிலும் இரண்டு மூன்று பெரிய நாடகங்களிலும் நடித்த அனுபவங்களும் பின்னரங்க வேலைகள் சிலவற்றில் உதவியாளனாகப் பங்கெடுத்த அனுபவங்களும் மட்டுமே இருந்தன. மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடந்த நாடகவிழாக்களைப் பார்த்திருந்தேன். தமிழில் மொழிபெயர்க்கப்பெற்ற ஐரோப்பிய, சம்ஸ்க்ருத, இந்திய மொழி நாடகங்களை வாசித்திருந்தேன். என்றாலும் எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் தான் இருந்தது. முழுமையாக ஒரு நாடகக் கோட்பாட்டாளரின் அடிப்படை நூல்களைக்கூட நான் வாசித்திருக்கவில்லை. அந்த நேரத்தில் எனக்கு இந்த வாசிப்புக்களஞ்சியத் தொகுப்புகளே கைகொடுத்தன. ஆங்கிலத்தில் கலை,இலக்கிய வடிவங்கள், வகைகள், காலங்கள், எழுத்தாளர்கள், கோட்பாட்டாளர்கள், சிந்தனையாளர்களுக்கு வெளியிடப்படும் வாசிப்புக்கான களஞ்சியத்தொகுப்புகள் முக்கியமானவை. பல்கலைக்கழகப்பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கையில் இத்தகைய வாசிப்புக்களஞ்சியத்தொகுப்புகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழில் அப்படியான தொகுப்புகள் பற்றி எனக்குத் தெரிந்த பதிப்பகங்களின் முதலாளிகளிடம் சொல்லிப்பார்த்ததுண்டு. சொல்லும்போது கேட்டுக்கொள்வார்கள். அதைச் செய்வதற்கான தொடர்ச்சியான ஆர்வத்தையும் பொருளியல் தூண்டலையும் காட்டியதில்லை. எனவே எனது நினைப்புகள் அப்படியே நின்று போய்விட்டன. இப்போது சாருநிவேதிதாவின் நூல்களை வெளியிட நல்லதொரு பதிப்பகம் முன்வந்திருக்கிறது. அப்பதிப்பகம் நினைத்தால் – சாருநிவேதிதா – வாசிப்பு – CHARU NIVEDITA – A Reader -தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டுவந்துவிடலாம். ஓராண்டு வேலையில் அதனைச் சாத்தியமாக்கலாம். அதன் வழியாக உலகப்பரப்பிற்குள் அவர் பேசப்பட வாய்ப்புண்டு.”

அமானுஷ்யத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு.  அமானுஷ்யத்தோடு பரிச்சயம் உள்ள ஒன்றிரண்டு பேரோடு எனக்கு நட்பும் உறவும் உண்டு.  உறவு என்று பார்த்தால் அவந்திகா.  நட்பு காயத்ரி.  சமயங்களில் பிறருடைய மரணத்தையே கூட தன் தரிசனத்தில் பார்த்து மிரண்டு போய் விடுவாள்.  ஆனால் அது மிக அரிதாக நடக்கும் விஷயம்.  பல சமயங்களில் நல்ல விஷயங்களாக இருக்கும்.  பூரான் விஷயம் எழுதியிருக்கிறேன்.  காலிகோ பூனை விஷயமும் எழுதியிருக்கிறேன்.  இப்போது சாரு நிவேதிதா ரீடர் விஷயம்.  முந்தாநாள்தான் எனக்கு ஒரு ரீடர் கொண்டு வர வேண்டும் என்று சொன்னாள்.  நேற்று ராமசாமி எழுதியிருக்கிறார்.  இன்று அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியாகி விட்டது.  ரீடர் என்கிற போது எனக்கு ரொலான் பார்த் (Roland Barthes) ரீடர் ஞாபகம் வருகிறது.  பார்த் ரீடர், ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) ரீடர் இரண்டும் என்னிடம் உள்ளது.  ஃபூக்கோவுக்கு ரீடர் இருக்கிறதா என்று தெரியவில்லை.  இருக்க வேண்டும்.  என்னிடம் அவருடைய முக்கியமான புத்தகங்கள் எல்லாமே அந்தக் காலத்தில் Xerox என்ற விஷயம் அறிமுகமான சமயத்தில் புகைப்பட நகல் எடுத்து பைண்ட் செய்து வைத்தது இருக்கிறது.  இப்போதெல்லாம் புனைவெழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் இருக்கிறது.  ஃபூக்கோ, தெரிதா போன்றவர்களை தர்மராஜ் போன்ற பேராசிரியர்கள், புத்திஜீவிகள் படித்து எங்களுக்கு வகுப்பு எடுக்கட்டும் என்று தோன்றுகிறது.  நமக்குக் கிடைக்கும் கொஞ்ச நேரத்தை புனைவெழுத்தில் செலவிடுவோமே?

ஒரு ரீடர் என்பது மேலே ராமசாமி குறிப்பிட்டுள்ளபடி ஒரு எழுத்தாளர் எழுதிக் குவித்திருக்கின்ற canon-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட, அந்த எழுத்தாளரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு பெருந்தொகுப்பு.  அந்த ரீடரைப் படித்தால் அவரை முழுமையாகப் புரிந்து கொண்டு விட முடியும்.  புரிந்து கொள்ள முடிகிறாற்போல் இருக்க வேண்டும் அந்த ரீடர்.  ஹெலன் சிஸூ தன்னுடைய நீண்ட ஆயுட்காலத்தில் ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்.  எழுதிக் கொண்டும் இருக்கிறார்.  அவை எல்லாவற்றையும் ஒருவரால் படிப்பது சாத்தியம் இல்லை.  அப்போது ரீடர்தான் உதவிக்கு வரும்.  தமிழில் அப்படி யாருக்குமே ரீடர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  சி.சு. செல்லப்பாவிலிருந்து தொடங்கி நான் பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியுள்ள அத்தனை முன்னோடிகளுக்குமே ரீடர் வேண்டும்.  நாவலிலிருந்து சில பகுதிகளை எடுத்துப் போடலாம். 

***

இதுவரையிலான பூச்சியில் எதிர்மறையான விஷயங்களை நான் எழுதவில்லை.  காரணம், சூழலே மிகவும் இருண்மையாக இருக்கிறது.  அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் என்னுடைய எழுத்தை நோக்கி வரும்போது அவரை நானும் சேர்ந்து கொண்டு கழுத்தை இறுக்கக் கூடாது.  சமீபத்தில் எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.  அரூ நேர்காணலுக்காக ஒரு நாளில் பனிரண்டு மணி நேரம் எழுதினேன்.  ஒருநாள் இரவு பத்து மணிக்கு எழுதி முடித்த போது ஒரு மணி நேரம் ஏதாவது நெட்ஃப்ளிக்ஸில் பார்த்து விட்டுத் தூங்கலாமே என்று தோன்றியது.  என் நண்பனும் எனக்குப் பிடித்த இயக்குனருமான அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் Choked: Paisa bolta hai என்ற இந்திப் படம் இருந்தது.  பார்க்கத் தொடங்கினேன்.  அடக் கடவுளே…  படமா அது! இந்திக்காரியைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட ஒரு தமிழன்.  வேலை இல்லை.  சோம்பேறியாகவும் இருக்கிறான்.  அவள் ஒரு தனியார் வங்கியில் வேலை செய்கிறாள்.  ஒரு பையன்.  படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே வங்கியில் அந்தப் பெண்ணை வாடிக்கையாளர் ஒருவர் படுத்தி எடுக்கிறார்.  வீட்டுக்கு வந்தால் வேலையில்லாத கணவன் தொல்லை.  வீட்டில் அவனால் ஒரு உதவி இல்லை.  எல்லாம் போட்டது போட்ட இடத்தில்.  பாத்ரூமில் தண்ணீர் இல்லை.  வாஷ்பேசினில் ஏதோ அடைத்துக் கொண்டிருக்கிறது.  இப்படியே போகிறது படம்.  பத்து நிமிடத்துக்கு மேல் பார்க்க முடியவில்லை.  இதெல்லாம்தான் நேர் வாழ்க்கையிலேயே இருக்கிறதே, இதை ஏன் காசு கொடுத்து நெட்ஃப்ளிக்ஸில் பார்க்க வேண்டும்?  போய்த் தூங்கி விட்டேன். 

இப்படி நம்மைப் படிக்க வரும் வாசகரைத் துரத்தி அடித்து விடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.  அப்படிப்பட்ட நானே இன்று கொஞ்சம் எதிர்மறையாக எழுத வேண்டியிருக்கிறது. 

அவந்திகா வாரம் இரண்டு முறை ஆன்மீக வகுப்பை ஒருங்கிணைக்கிறாள்.  முப்பது பேர் இருக்கிறார்கள்.  ஒரு சமயத்தில் இருபது பேர் வருவார்கள்.  அந்த முப்பது பேரில் இரண்டு பேர் மொழிபெயர்ப்பாகி விட்டார்கள்.  அந்த ஆன்மீகக் குழுவில் மரணத்தை அப்படித்தான் சொல்கிறார்கள்.  இருவருமே பெண்.  ஒருவர் வயது 30.  மாரடைப்பு.  கொரோனா இல்லை.  இன்னொருவர் வயது 55.  அரசுத் தலைமை மருத்துவமனையில் மூத்த நர்ஸ்.  மக்கள் சேவையே மகேசன் சேவை என்று கருதுபவர்.  அவருடைய மகளுக்கு இப்போது பேறுகாலம்.  நீயே உன் மாமியாரை வைத்துப் பார்த்துக் கொள் அம்மா, இப்போது நான் மருத்துவ சேவை செய்யாவிட்டால் என் வேலைக்கே அர்த்தமில்லை என்று மகளிடம் சொல்லி விட்டு கொரோனா வார்டிலேயே இரவும் பகலும் சேவை செய்திருக்கிறார்.  அவரை கொரோனா தொற்றி விட்டது.  சிகிச்சை கொடுத்து பிழைத்து விட்டார்.  வீட்டில் குவாரண்டைன் இருந்து சரியாகி – என்ன செய்திருக்க வேண்டும்?  இன்னும் இரண்டு மாதங்களுக்கு வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும்.  அவர் அப்படிப்பட்டவர் இல்லை.  உயிர் எனக்கு முக்கியம் இல்லை; நான் இப்போது கொரோனா நெகட்டிவ்.  நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கிளம்பி விட்டார்.  மட்டுமல்லாமல் மருத்துத் துறையில் இன்று ஆள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.  வரலாறு காணாத நோயாளிக் கூட்டம்.  மீண்டும் தொற்றிய கொரோனாவில் அந்த வணக்கத்துக்குரிய பெண்மணி பிழைக்கவில்லை.  கேட்டபோது சங்கடமாக இருந்தது.  இப்படியும் சேவை செய்ய வேண்டுமா என்றே தோன்றியது.  கொரோனா வந்து விட்டுப் பிழைத்தால் மறுபடி வராது என்றார்களே?  ம். தெரியவில்லை. 

இது போதாது என்று என் நண்பர் சொன்ன இரண்டு மரணங்கள் படு பயங்கரம்.  அதை எப்போதாவது இரண்டு சிறுகதைகளாகத்தான் எழுத வேண்டும்.  இப்போது முடியாது.  அடுத்தவர் வாழ்க்கை.  அடுத்தவர் அந்தரங்கம்.  சென்னையின் மிகப் பிரபலமான ஒருவர் யாருமே இல்லாத அனாதையைப் போல உடம்பெல்லாம் மூடிய வினோத உடையணிந்த மனிதர்களால் மருத்துவமனையிலிருந்து நேரடியாக தகன மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டார் என்பதைக் கேட்கவே சகிக்கவில்லை. 

அவந்திகாவின் தோழியின் மகன் கல்லூரி சார்பாக சிங்கப்பூர் அனுப்பப்பட்டான்.  மார்ச்சில்.  கொரோனா வந்து விட்டது.  அங்கேயே தங்க வைத்து நல்லபடியாக கவனித்துக் கொண்டதாம் சிங்கப்பூர் அரசு.  சென்ற வாரம் சென்னை திரும்பினான்.  இங்கே தமிழக அரசு ஊழியர்களும் ரொம்பப் பிரமாதமாக கவனித்துக் கொள்கிறார்களாம்.  பொதுவாக நாம் அரசாங்கத்தை விமர்சனம்தானே செய்து கொண்டிருப்போம்?  ஆனால் முதல் முறையாக அரசாங்கத்தைப் பாராட்டுகிறாற்போல் காரியங்கள் நடந்து வருகிறது.   இப்படிச் சொன்னால் இதற்குக் கட்சி சாயம் பூசக் கூடாது.  திமுக ஆட்சியில் இருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும்.  ஏனென்றால், அரசு எந்திரத்தை நடத்துவிப்பவர்கள் யார்?  நான் மேலே குறிப்பிட்ட நர்ஸம்மா போன்றவர்கள்தானே?  இப்படிப்பட்டவர்கள்தான் டாக்டர்கள், போலீஸ், துப்புரவுப் பணியாளர், தபால் அலுவலர், மின்சார ஊழியர் எல்லாரும்.  கொரோனாவினால் எங்காவது மின்சாரம் இல்லாமல் போயிற்றா?  தெருவெல்லாம் குப்பை குவிந்திருக்கிறதா?  பால் விநியோகம் நின்று போயிற்றா?  அத்தியாவசிய செயல்பாடுகள் எல்லாமே அது அது அதனதன் போக்கில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.  இதை சாத்தியப்படுத்துபவர் எல்லோருமே நம் வணக்கத்துக்கும் நன்றிக்கும் உரியவர்களே. 

***

28-ஆம் தேதி சந்திப்புக்குத் தயாராகி விட்டீர்களா? இந்திய நேரம் காலை ஆறு மணி. ஞாயிற்றுக்கிழமை. நகுலன் பற்றிய உரையும் அதைத் தொடர்ந்து கேள்வி பதில் பகுதியும். இந்தக் காலை நேரத்தை குறிப்பாக அமெரிக்க வாசகர்களுக்காகவே தேர்ந்தெடுத்தேன். அவர்களுக்கு அது மாலையாக இருக்கும் என்பதால். பயன்படுத்திக் கொள்ளுங்கள். நகுலனை நீங்கள் படித்திருக்காவிட்டாலும் என் பேச்சைக் கேட்கலாம். அது நகுலனின் உலகில் நுழைய ஒரு அறிமுகமாக இருக்கும்.

***’

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai