பூச்சி 87

அன்பார்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு,

உங்களில் பலர் அல்லது சிலர் என்னை ஒரு சக எழுத்தாளனாகக் கருத மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.  சிலர் என்னை fake என்றும் நினைக்கலாம்.  இப்படியெல்லாம் நினைக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு.  அப்படி நினைப்பதால் உங்கள் மீது எந்த வருத்தமோ கோபமோ எனக்கு இல்லை.  நான் என்னைப் பற்றியும் என் எழுத்தைப் பற்றியும் என்ன நினைக்கிறேனோ அதையே நீங்களும் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஃபாஸிஸம். ஏனென்றால், நோபல் பரிசெல்லாம் வாங்கிய பத்ரிக் மோதியானோவை (Patrick Modiano) ஒரு fake எழுத்தாளர் என்றே நான் நினைக்கிறேன்.  அவருடைய ஒரு நாவலைப் படித்து விட்டு இந்த முடிவுக்கு வரவில்லை.  பல நாவல்களைப் படித்து விட்டே அந்த முடிவுக்கு வந்தேன்.  அதனால் என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது இங்கே நான் சொல்லப் போகும் விஷயத்துக்குத் தேவையே இல்லை. 

ஆனாலும் நான் சொல்லும் விஷயத்தை உங்கள் மீதுள்ள அக்கறையினால் சொல்கிறேன் என்பதை நீங்கள் தயவுசெய்து நம்ப வேண்டும்.  ஏனென்றால், எனக்கு மிக நன்றாகத் தெரிகிறது, நீங்கள் செல்லும் பாதையின் முடிவில் ஒரு புதைகுழிதான் இருக்கிறது என்று.  அதனால்தான் அந்த வழியில் நீங்கள் செல்வதைக் கண்டும் காணாமல் என்னால் இருக்க முடியாமல் இப்போது உங்களிடம் பேச வந்திருக்கிறேன்.  இதைத் தயவுகூர்ந்து படியுங்கள்.  இது பற்றி யோசியுங்கள்.  சக எழுத்தாளர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.  இது மிக முக்கியமான ஒரு சமூகப் பிரச்சினை.  இதனால் ஏற்படும் விளைவு உங்களை பாதிக்காது.  ஒட்டு மொத்தத் தமிழ்ச் சூழலையே பாதிக்கும்.  பாதித்துக் கொண்டிருக்கிறது.  தமிழே நாசமாகிக் கொண்டிருக்கிறது. 

இப்போது நான் செய்யத் துணிந்திருக்கும் காரியத்தை வேறு யாருமே செய்ய மாட்டார்கள்.  ஏனென்றால், இதனால் நான் பலருடைய பலருடைய பலருடைய பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும்.  ஆனாலும் கவலைப்படவில்லை.  இனிமேல் எனக்கு எதுவும் வேண்டாம்.  எனக்கு எதன் மேலும் ஆசை இல்லை.  என் பெயர் கெட்டால் கெடட்டும்.  ஆனால் ஒட்டு மொத்தத் தமிழ்ச் சூழல் கெட்டு விடக் கூடாது.  நான் என்ன செய்வது என்று கை விரித்து விடாதீர்கள்.  குறைந்த பட்சம் உங்கள் நண்பர்களிடமாவது இது பற்றிய உங்கள் கண்டனத்தைத் தெரிவியுங்கள்.  நீங்களும் உங்கள் பெயரை வைத்து யாரும் இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபடுவதற்கு இடம் கொடாதீர்கள்.

விஷயத்துக்கு வருகிறேன்.  நம் எல்லோருக்கும் நம்முடைய எழுத்து ஆங்கிலத்திலோ மற்ற ஐரோப்பிய மொழியிலோ மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.  அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் பலர் தங்களின் தகுதியின்மை காரணமாக உங்களுக்கும் நம்முடைய மொழிக்கும் தீராப்பழியை ஏற்படுத்துகிறார்கள். 

சில உதாரணங்களைத் தருகிறேன்.  சுந்தர ராமசாமியின் ஜெ.ஜெ. சில குறிப்புகள் 1981-இல் வெளிவந்த போது பெரும் விவாதங்களைக் கிளப்பிய நாவல்.  இன்றளவும் நவீன கிளாஸிக் என்று கருதப்படுகிறது.  அதை மொழிபெயர்த்த பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதியின் மொழிபெயர்ப்பு பற்றி ஆங்கில எழுத்தாளர் ஜெர்ரி பிண்ட்டோ எழுதிய மதிப்புரை கீழே:

https://www.thehindu.com/books/literary-review/Review-A-new-translation-of-Sundara-Ramaswamy%E2%80%99s-1981-classic-JJ-Some-Jottings/article16442835.ece

ஆங்கில மொழிபெயர்ப்பு எத்தனை அபத்தமாக இருக்கிறது என்று கிழித்துத் தோரணம் கட்டியிருக்கிறார் பிண்ட்டோ.  புத்தகம் முழுக்கவே passive voice-இல் செய்யப்பட்டிருக்கிறது.  அதுவே கொடுமை என்கிறார்.  ஒரு உதாரணம்:

“When a hunting dog is snapped with a camera as it leaps, all we get is a motionless shot.”

இது எப்படி இருந்திருக்க வேண்டும் என்றால்,

 “When you photograph a hunting dog, all you get is a motionless shot.”

இப்போது தமிழ் எழுத்தாளர்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்றால், முதல் மொழிபெயர்ப்புக்கும் இரண்டாவதற்கும் வித்தியாசம் தெரியாததால் – நாம் என்ன ஊட்டி கான்வெண்ட்டிலா படித்தோம்? – முதல் மொழிபெயர்ப்புக்கு ஆஹாகாரம் செய்து விடுகிறோம்.  ஆங்கில வாசகன் தலையில் அடித்துக் கொண்டு நிராகரித்து விடுகிறான்.  ஆக, இது யாருக்கு அவமானம்?  சுந்தர ராமசாமிக்கு.  இன்னும் பாருங்கள். 

“ JJ: Some Jottings is a single sparrow in the Tamil literary-intellectual summer.”

நாவலின் முன்னுரையில் நாவல் பற்றி வரும் வாக்கியம் மேலே. இது பற்றி எழுதும் பிண்ட்டோ ”சிட்டுக்குருவி என்ன தமிழ்நாட்டில் அவ்வளவு அருகி விட்டதா?  கோடைக்காலத்தில் சிட்டுக்குருவிகள் அங்கே வராதா?” என்று கிண்டலடிக்கிறார். 

“He was to look for Bawkher’s timber depot. He knew it well.”

பக்கரின் மரவாடியை அவனுக்குத் தெரிந்திருக்கும்போது அதை அவன் ஏன் தேட வேண்டும்? 

 “Readers who follow his writings closely…”

அது என்ன writings?  Writing என்றுதானே சொல்ல வேண்டும்?

“Man is unable to present himself naturally. The disturbing balls of perfection are rolled before him without thinking.”

இது பற்றி பிண்ட்டோ:

What does one make of this? The passive voice forces us to ask: who rolls those balls of perfection? Are they the people who should be doing the thinking and have not? What are ‘balls of perfection’ anyway?

“When a tailor measures us for stitching a shirt…”

ஒரிஜினலே இவ்வளவு அபத்தமாகத்தான் எழுதப்பட்டிருந்ததா? இதை எப்படி மொழிபெயர்த்திருக்க வேண்டும்:  

 “When a tailor measures one for a shirt…”?

இப்படி மேற்கோள்களைக் காட்டி விட்டுக் கடைசியாக இப்படிக் கூறுகிறார் பிண்ட்டோ:

I sound like a schoolmaster, I know. I apologise. This review does as little for JJ: Some Jottings by Sundara Ramawamy as Venkatachalapathy did for the original. All I know is the translation in English and that is what I can look at.

இப்படியெல்லாம் உங்களுடைய எழுத்து ஆங்கிலத்துக்குப் போய் அவமானப்பட வேண்டுமா சொல்லுங்கள்.  ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், பேராசிரியர்கள் அவர்களின் அறியாமையினால் நம்மை ஏமாற்றுகிறார்கள்.  இதை அவர்கள் அறியாமலேயே செய்கிறார்கள்.  ஆங்கிலம் தெரிந்தவர்கள், ஆங்கிலம் கற்பிப்பவர்கள் என்ற ஒரே காரணத்தினால் சிருஷ்டிகரத்தின் உச்சத்திலே வீற்றிருக்கின்ற நம்மை சந்திக்கு இழுத்து அவமதிக்கிறார்கள்.  எத்தனையோ கவிஞர்களைப் பார்க்கிறேன்.  சிறுகதை ஆசிரியர்களைப் பார்க்கிறேன்.  தமிழில் மணி மணியாக எழுதும் அவர்களின் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று சாக்கடையைப் போல் ஆக்கிக் கொடுக்கிறார்கள்.  நமக்கும் ஆங்கிலம் தெரியாததால் அதை ஏற்க வேண்டியிருக்கிறது.  அதைச் செய்யாதீர்கள்.  பிறகு என்னதான் வழி?  ஆங்கில இலக்கியத்தில் மிக நன்றாகப் பரிச்சயமான தமிழர் அல்லாதவர்களிடம் கொடுத்துக் கேளுங்கள்.  அவர்களும் பேராசிரியர்களாக இருக்கலாகாது.  இளைஞர்களாக, இலக்கிய மாணவர்களாக, பத்திரிகையாளர்களாக இருக்க வேண்டும்.  நிச்சயமாக தமிழர்களாக இருக்கக் கூடாது. 

இன்னும் ஒரு உதாரணம் தருகிறேன். 

முச்சந்தியில் நின்றுகொண்டிருந்தது புளியமரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா. இந்த ரஸ்தா தென்திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித்துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வட திசையில் திருவனந்தபுரம் என்ன, பம்பாய் என்ன, இமயம்வரைகூட விரிகிறது. அதற்கு அப்பாலும் விரிகிறது

என்றும் சொல்லலாம். மனிதனின் காலடிச்சுவடு பட்ட இடமெல்லாம் பாதைதானே!

மேற்குத் திசையிலிருந்து புளியமரத்தின் பின் பக்கமாக வந்து, மரத்தைச் சுற்றி இரு கிளைகளாகப் பிரிந்து சிமிண்டு ரோட்டில் கலக்கும் பாதை எங்கிருந்து புறப்படுகிறதோ, யாருக்குத் தெரியும்? சொல்லப் போனால் எல்லாப் பாதைகளும் கடலோரம் கிளைத்து மற்றொரு கடற்கரையில் கரைகின்றன. நடுவில் ஆரம்பம் எது, முடிவு எது?

புளியமரத்தடிக்கு வந்து சேராத பாதைகள் இல்லை.

சுந்தர ராமசாமி எழுதிய பிரபல நாவல் ஒரு புளியமரத்தின் கதையின் ஆரம்பம்.  இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் எஸ். கிருஷ்ணன்.  மெட்றாஸ் க்றிஸ்டியன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர்.  பிறகு அமெரிக்கத் தூதரகத்தில் அதிகாரி.  இவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பு வெங்கடாசலபதி அளவுக்கு மோசம் இல்லை.  ஆனால் சுந்தர ராமசாமியிடம் காணும் கவித்துவம் மொழிபெயர்ப்பில் போய் விட்டது.  பாருங்கள்:

The tamarind tree stood at a crossroads.  The cement road in front of it went due south to land’s end where three seas meet.  The road to the north went to Trivandrum, and possibly as far as Bombay, perhaps even to the Himalayas.  Maybe it went even beyond.  Wherever man sets foot is a path.  The road from the west behind the tamarind tree divided into two which went around the tree and joined the cement road.  One does not know where these roads began, they probably went from coast to coast, but all of them met at the tamarind tree. 

ஜெர்ரி பிண்ட்டோ சுட்டிக் காட்டிய கொடுமைகள் எதுவும் இந்த ஆங்கிலத்தில் இல்லை.  சொல்லப் போனால் அர்த்தப்பிழைகள் எதுவுமே இல்லை.  ஆனால் மொழி தட்டையாக இருக்கிறது. எப்படி? சு.ரா. எழுதுகிறார்:  இந்த ரஸ்தா தென்திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித்துறையில் நீராட இறங்கிவிடுகிறது.

நீராட இறங்கி விடுகிறதாம்.  எது ரஸ்தா?  அங்கே நிற்கிறான் படைப்பாளி.  ஆனால் ஆங்கிலத்தில் The cement road in front of it went due south to land’s end where three seas meet.  அவ்வளவுதான்.  புத்தகம் முழுவதுமே இப்படியான தட்டை மொழிதான்.

 நடுவில் ஆரம்பம் எது, முடிவு எது?

புளியமரத்தடிக்கு வந்து சேராத பாதைகள் இல்லை.

ஒரு சாதாரண narrativeதான்.  ஆனால் அதற்குள் ஏதோ ஒரு தத்துவ முடிச்சு இழையோடுகிறது.  இப்போது ஆங்கிலம்:

One does not know where these roads began, they probably went from coast to coast, but all of them met at the tamarind tree. 

ஒரே அடி.  தத்துவம் கதறியபடி ஓடிப் போய் குமரிக் கடலில் விழுந்து செத்து விட்டது.  இப்படி நான் இந்தப் புத்தகம் பூராவும் சொல்ல முடியும்.  என்ன பிரச்சினை தெரியுமா?  கிருஷ்ணன் சார் அமெரிக்கத் தூதரகத்தில் பெரிய பதவியில் இருந்தவர்.  நான் யு.எஸ். போக வீசாவுக்கு உதவிக்காக அவரை அணுக முடியாது.  இப்படியெல்லாம் எழுதுவதால் நான் எத்தனை பேரை பகைத்துக் கொள்கிறேன் என்று பாருங்கள்.  எனக்கு எத்தனை நஷ்டம் வந்தாலும் நம்முடைய மொழியும் நீங்களும் நம் மொழிக்கு வெளியே பரிகசிக்கப்படக் கூடாது என்ற ஒரே ஆதங்கத்தினால்தான் இதை இவ்வளவு தூரம் எழுதுகிறேன்.  நீங்கள் பெருமையுடன் உங்களுடைய பயோடேட்டாவில் போட்டுக் கொள்ளும் மொழிபெயர்ப்புப் பட்டியலில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் வெளியே பரிகசிக்கப்படுகின்றன என்பதைத் தயவுசெய்து உணருங்கள்.  கொள்ளைக் கூட்டத்தைப் போல் ஒரு பெரும் கூட்டம் மொழிபெயர்ப்புக்காக உங்களைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.  எல்லோரும் ஆக்ஸ்ஃபோர்ட் என்கிறார்கள்.  கேம்ப்ரிட்ஜ் என்கிறார்கள்.  டபுள் டாக்டரேட்.  ஒரு கேம்ப்ரிட்ஜ் என்ன செய்தது தெரியுமா?  கையடித்துக் கையடித்து வாழ்க்கையைத் தொலைத்தான் என்று என் கதையில் ஒரு இடம்.  ஒருத்தனின் தனிமை வாழ்க்கையைச் சொல்வதற்காக.  அதை அந்தக் கேம்ப்ரிட்ஜ் hands clapping என்று மொழிபெயர்த்திருந்தது.  கை அடித்தல் கை தட்டுவதாக மாறி விட்டது.

இரண்டு பிரச்சினைகள் உள்ளன.  ஒன்று, ஆங்கிலமே தெரியாமல் இரண்டு மூன்று டாக்டரேட் முடித்து உங்களை ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அணுகுவது.  உங்களை மொழிபெயர்ப்பது.  அவர்களின் ஆங்கிலத் துறை பட்டங்களையும் பதவியையும் பார்த்து நீங்கள் மயங்கி விடுகிறீர்கள்.  இரண்டாவது ரகம், நம் வெங்கடாசலபதி சார், கிருஷ்ணன் சார் மாதிரி.  மிக நன்றாக ஆங்கிலம் தெரியும்.  ஆனால் தமிழ் மொழியின் நுணுக்கங்கள் தெரியாது.   இந்த விபத்தில் தப்பிய ஒன்றிரண்டு நூல்கள் உள்ளன.  கல்யாண்ராமன் செய்த எல்லா மொழிபெயர்ப்பு நூல்களும் ஆங்கிலத்தில் சிலாகிக்கப்படுகின்றன.  இவர் அசோகமித்திரனை மொழிபெயர்த்திருக்கிறார்.  எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை தப்பியிருக்கிறது.  அது மொழிபெயர்ப்பு போலவே இல்லை.  (மற்றவை மேலே வெங்கடாசலபதி ரகம்.  சொல்லப் போனால் அதை விட மோசம்!)

இந்த விஷயத்தில் நான் மிக மிக கவனமாக இருக்கிறேன்.  மார்ஜினல் மேன் மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது என்று என் நண்பரும் ArtReview Asia பத்திரிகையின் ஆசிரியருமான Mark Rappolt-ஐக் கேட்டபோது “அது மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லையே” என்றார்.  அதுதான் மொழிபெயர்ப்புக்கு இலக்கணம்.  மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது என்று சொன்னால் நாற்பது மதிப்பெண்.  பாஸாகி விட்டது என்று பொருள்.  மொழிபெயர்ப்பு மாதிரியே தெரியவில்லை.  நூற்றுக்கு நூறு.  இல்லாவிட்டால் நிச்சயம் ஸீரோ டிகிரி Jan Michalski வரை போய் இருக்காது.  இந்தியாவின் 50 சிறந்த நூல்கள் பட்டியலில் ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காது.  இதே விஷயம் உங்கள் படைப்புகளுக்கும் நிகழ வேண்டும் என்று நான் மனதார விரும்புவதால்தான் இதை இவ்வளவு தூரம் எழுதுகிறேன். 

தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிக் கேட்காதீர்கள்.  தமிழைக் கொலை செய்து குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு பதிப்பகத்தில் இதை முழுநேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  அதில் செய்யப்படும் அத்தனை மொழிபெயர்ப்பும் குப்பை.  இதைச் சொன்னால் அவர்கள் என்னை விரோதியாகப் பார்க்கிறார்கள். 

25 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னணியில் இருந்த விடியல் பதிப்பகத்தில் யுவான் ருல்ஃபோவின் (Juan Rulfo) பெத்ரோ பராமா நாவல் வெளிவந்தது.  ருல்ஃபோ லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பிதாமகர்.  இந்த பெத்ரோ பராமாவை மனப்பாடமாகச் சொல்லுவேன் என்பார் கார்ஸியா மார்க்கேஸ்.  அப்படிப்பட்ட அந்த நாவலில் ஒருத்தன் சுவரில் நகத்தால் பிறாண்டுவான். அர்த்தமே ஆகவில்லை.  என்னிடம் உள்ள ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்தால் சுவரில் ஆணி அடித்தான் என்று இருக்கிறது.  இங்கே தமிழ் மீடியம் ஆட்களுக்கு நெயில் என்றால் நெயில் பாலிஷ் மூலம் அறிமுகமான நகம்தான் தெரியும்.  நெயில் என்றால் நகம்.  ஆணிக்கும் நெயில்தான் என்பதை அவன் அறிந்திருக்க மாட்டான். 

என் நண்பர்களே, இப்படிப்பட்டவர்கள்தான் உங்களுடைய மகத்தான தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.  கவனமாக இருங்கள். 

யுவான் ருல்ஃபோவின் ஒரு சிறுகதை, Don’t kill him, for God’s sake.  இதன் முழிபெயர்ப்பு என்ன தெரியுமா?  அவனைக் கொல்லாதீர்கள், கடவுளுக்காக! 

வாசகர்களே, மொழிபெயர்ப்பு நூல்களை வாங்கும் போது கவனமாக இருங்கள்.  எழுத்தாள சகாக்களே, மொழிபெயர்ப்பாளர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள்.  இப்படிப்பட்டவர்களிடம் மாட்டி அந்நிய மொழிகளில் போய் அவமானப்படுவதை விட நம் மொழியில் ராஜாவாக இருப்போம்!

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai