பாற்கடல்

ஆண்டன் செகாவ் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களை என் சக எழுத்தாளர்களும் வாசகர்களும் வியந்து வியந்து போற்றும் போது செகாவுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத – இன்னும் சொல்லப் போனால் – அவரிலும் மேம்பட்ட நம் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி யார் பேசுவார், எப்போது பேசுவார் என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து போவது என் வழக்கம்.  பச்சைக் கனவு என்று ஒரு கதை.  ஜனனி என்று ஒரு கதை.  வேண்டப்படாதவர்கள் என்று ஒரு கதை.  லாசராவைப் போய் புரியாமல் எழுதுகிறார் என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  புத்ரவை உதாரணம் சொல்வார்கள்.  அதெல்லாம் அவர் trance நிலையில் இருக்கும்போது அவரது நனவிலி மனம் எழுதியது.  அவரது மற்ற எல்லா கதைகளும் நாம் பார்த்தது, நாம் அனுபவித்தது.  ஒருசில எழுத்தாளர்களைத் தவிர வேறு யாருமே லாசராவைப் படித்ததில்லை.  இத்தனைக்கும் அவர் சிறுபத்திரிகைகளில் எழுதியதில்லை.  பெரும் பத்திரிகைகளில் மட்டுமே எழுதியவர். 

எழுத்தாளன் என்றால் பிச்சைக்காரன் என்று இருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டவர்.  அந்த விதத்தில் சுந்தர ராமசாமி, ந. சிதம்பர சுப்ரமணியன் போல் அதிர்ஷ்டசாலி. சு.ரா. ஜமீன் போல் வாழ்ந்தவர்.  ந.சி.சு. அந்தக் காலத்து ஆடிட்டர்.  லாசரா வங்கி அதிகாரி.  யார் வம்புக்கும் போகாதவர்.  பொறாமை கொள்ளத்தக்க வாழ்க்கையை வாழ்ந்தவர்.  அவரைக் கடவுளாய்க் கொண்டாடும்  புதல்வனைப் பெற்றவர்.  லாசராவின் ஸ்க்ரைப் அவர் புதல்வர் சப்தரிஷி.  உலகத்தில் யாருக்குக் கிடைக்கும் இந்தக் கொடுப்பினை? 

லாசராவின் பாற்கடலை படித்தவர்களுக்கு அதைக் காதாரக் கேட்பதற்கு ஒரு வாய்ப்பு.  படித்திராதவர்களுக்கு இது ஒரு அற்புத அனுபவம்.  லாசராவின் பெருமையைத் தெரிந்து கொள்ள.  வித்யா சுபாஷின் குரலில்.