சாருவை வாசிப்பது எப்படி? அபிலாஷ் சந்திரன்

என் எழுத்து குறித்து அபிலாஷின் பேச்சை நீங்கள் கேட்டீர்களா? முகநூலில் இருக்கிறது. கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம். என் எழுத்து குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அபிலாஷ் விளக்கம் சொல்லியிருக்கிறார். இது பற்றி விரிவாக எழுத விஷயம் இருக்கிறது. எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை முடித்து விட்டு எழுதுவேன்.

அபிலாஷின் உரையை அவர் பேசும்போதே கேட்டேன். வெகுவாக ரசித்தேன். பல சந்தேகங்களுக்கு அவர் கொடுத்த பதில் நான் கொடுத்திருக்கக் கூடிய பதில்களுக்கு நேர் எதிர் நிலையில் இருந்தாலும் அவையெல்லாம் ஒப்புக் கொள்ளக் கூடிய வகையிலும் படு சுவாரசியமாக இருந்ததையும் கவனித்தேன். உதாரணமாக, வா.மு. கோமு இப்போதெல்லாம் சாருவிடம் தெரிந்து கொள்ள ஒன்றுமில்லையே என்று கேட்ட போது சாருவிடமிருந்து எதுவுமே எப்போதுமே தெரிந்து கொள்ள முடியாது என்று பட்டென்று சொன்னார் அபிலாஷ். அவர் என்ன வாத்தியாரா என்பது உள்குத்து. மேலும், இப்போதைய காலம் கூகிள் காலம். அறிவு என்பது வெள்ளமாய் வெளியே கிடக்கிறது. எழுத்து என்பது ஓர் அனுபவம். நான் என்ன சொல்லியிருப்பேன் எனில், எனக்கு ஒரு காலத்தில் ஜெயகாந்தன் வாத்தியார். பிறகு நான் உலக இலக்கியம் பயின்ற பிறகு ஜேகே ரெண்டாங்கிளாஸ் வாத்தியார் மாதிரி எனக்குத் தோன்றியது. அதே போன்ற நிலை வா.மு. கோமுவுக்கு ஏற்பட்டிருக்கலாம். என்னிடம் தெரிந்து கொள்ள எதுவுமில்லை என்கிற போது நீங்கள் மேலே போய் விட்டீர்கள் என்றுதானே அர்த்தம்? ஆனாலும் ஏதோ ஒன்று இருப்பதால்தான் நான் ஸூமில் பேசினால் பேச்சைக் கேட்க அதிகாலை ஆறு மணிக்கு 200 பேர் வருகிறார்கள், இல்லையா? அபிலாஷ் சொன்னது போல், எழுத்தில் திளைப்பது ஓர் அனுபவம். அவ்வளவுதான். அதை வைத்துக் கொண்டு கொரோனாவை விரட்ட முடியாது.

அபிலாஷின் ஒன்றரை மணி நேரப் பேச்சைக் கேளுங்கள். அந்த உரையின் எழுத்து வடிவத்தை வாசியுங்கள். அபிலாஷ், நான் உங்களுக்குப் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தொடர்ந்து நீங்கள்தான் என் எழுத்தைப் பற்றிய விரிவான அறிமுகத்தைச் செய்து வருகிறீர்கள். ஏற்கனவே என் எழுத்து பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதுவும் என் எழுத்துப் பயணத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயம்.

நண்பர்களே, என்னைப் பற்றித் தெரிய வேண்டுமானால் அராத்துவைக் கேளுங்கள். என் எழுத்து பற்றித் தெரிய வேண்டுமானால் அபிலாஷின் உரையைக் கேளுங்கள். அபிலாஷின் இந்த உரையில் மிக முக்கியமான திறப்பு ஒன்று உள்ளது. ப்யூகோவ்ஸ்கியைப் போல், நகுலனைப் போல், ஜி. நாகராஜனைப் போல் என் எழுத்தும் என் வாழ்க்கையும் வேறுவேறானது அல்ல.

ஜி. நாகராஜனைத்தான் உங்களுக்குப் பிடிக்காதே, அவரை fake என்று சொன்னீர்களே என்று மனோ கேட்டார். fake என்று சொல்லவில்லை. விளிம்புநிலை மக்களை ஜி.என். romanticize செய்கிறார் என்றேன். அதனால்தான் அந்த எழுத்து என்னைக் கவரவில்லை. ஆனால் அபிலாஷ் சொல்வது வாழ்வும் எழுத்தும் பற்றியது. அந்த வகையில் ஜி.நாகராஜனுக்கும் எனக்கும் நிரம்ப ஒற்றுமை உண்டு. ஆனால் அவர் பிராமணர் என்பதால் வாழ்வின் தோல்வியை அவரால் காட்சிப்படுத்த முடிந்தது. அந்த tragic heroவின் அவலத்தை, கஞ்சா அடித்து விட்டு அவர் சாக்கடையில் விழுந்து கிடந்ததை இலக்கியவாதிகள் கொண்டாடினார்கள். கலைஞன் அப்படித்தானே வாழ்வான்? ஆனால் அவர் மேலேயிருந்து கீழே இறங்கினார். பிராமணர். ஆங்கிலப் பேராசிரியர். அவர் வகுப்பு நடத்தினால் மதுரை சினிமா தியேட்டரில் ஸ்லைட் போடுவார்கள், இன்ன தேதியில் இன்ன நேரத்தில் ஜி.என். வகுப்பு எடுக்கிறார் என்று.

ஆனால் நான் சாக்கடையிலிருந்து வந்தேன். என்னால் லௌகீக வாழ்வின் தோல்வியைக் காட்சிப்படுத்த முடியாது. I could not afford. ஏற்கனவே என்னை வெறுத்து ஒதுக்கிய சமூகம் என்னைக் குழி தோண்டிப் புதைத்து விடும். இது பற்றி நான் நூறு பக்கம் எழுதுவேன். ஜி.நாகராஜனுக்கும் எனக்குமான வித்தியாசம் பற்றி. ஜி.என். சேற்றில் விழுந்தது கொண்டாட்டம். சிலை வணக்கம். நான் அசிங்கம். ஒரு ஊரில் கக்கூஸ் இருப்பது அவசியம் இல்லையா? அப்படித்தான் சாருவின் எழுத்து என்று ஒரு சிந்தனையாளர் எழுதியிருந்தார். பிராமணர். மெத்தப் படித்தவர். இலக்கியத்திலும். லௌகீகத்திலும். ஐஐடி என்று நினைக்கிறேன். பெயர் சொல்ல விரும்பவில்லை. அதே வார்த்தையையே கடலூர் சீனு சொன்ன போது என்ன இது, ஐஐடியும் இதையே சொல்கிறது, ஜெயமோகன் வாசகரும் இதையே சொல்கிறார் என்று ஆச்சரியம் அடைந்தேன். இங்கே நாம் வழி தவறக் கூடாது. என்னை எங்கே வைக்கிறார்கள் என்று பாருங்கள். கக்கூஸிலிருந்து வந்தவனின் எழுத்தை கக்கூஸ் என்கிறார்கள். கஞ்சா அடித்து விட்டு சுயநினைவு இல்லாமல் கக்கூஸில் விழுந்து கிடந்தவனைக் கொண்டாடுகிறார்கள். காரணம், ஜி.என். ஒரு காவிய நாயகன். tragic hero. நான் சரத்குமார் படத்தில் வரும் மன்சூர் அலிகான். அல்லது, வில்லன் பொன்னம்பலம். அதாவது ஆடியன்ஸுக்கு.

எனவேதான் என் ஜாகையை நான் மைலாப்பூருக்கு மாற்றிக் கொண்டேன். இப்போது என்னுடைய பேச்சு பற்றி சினிமா தியேட்டரில் அல்ல; முகநூலில் ஸ்லைட் காண்பிக்கப்படுகிறது. என் பேச்சுக்கு 40000 ரூபாய் கட்டணமாக வருகிறது.

ஆனாலும் அபிலாஷ் சொல்வது போல் நகுலன், ஜி. நாகராஜன், சாரு ஆகிய மூவருக்கும் ஒரு அடிப்படை ஒற்றுமை உண்டு. அது – அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வும் எழுத்தும் பிரிக்கவே இயலாத படி பின்னிப் பிணைந்து கிடக்கிறது. ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்துகிறேன்.

15 ஆண்டுகளுக்கு முன்பு. பைபாஸ் சர்ஜரி. மலையாளத்தில் கலா கௌமுதியில் ராஸ லீலா (நாவல்), மாத்ருபூமியில் உலக இசை பற்றிய தொடர், மாத்யமம் பத்திரிகையில் அரபி இலக்கியம். மூன்றுமே வாரப் பத்திரிகை. மூன்றையும் டிக்டேட் செய்து அனுப்ப வேண்டும். குரியர். கையால் எழுதிய காலம். நான் படுக்கையில் கிடந்ததால் நண்பர்கள் எழுதினர். கலா கௌமுதி ஆசிரியரிடம் தொடர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள், மாறி விடப் போகிறது, மாத்யமம் கட்டுரை ராஸ லீலாவில் சேர்ந்து விட்டால் என்ன செய்வது என்றேன். மாறினாலும் உங்கள் எழுத்து எல்லாம் ஒன்றுதான் என்றார் கலா கௌமுதி ஆசிரியர். உலக இசை கட்டுரையும் அரபி இலக்கியம் கட்டுரையும் ராஸ லீலா நாவல் அத்தியாயமும் ஒன்று!!! 15 ஆண்டுகளுக்கு முன்பு கலா கௌமுதி ஆசிரியர் சொன்னதை இப்பொது அபிலாஷ் சொல்கிறார். கவனியுங்கள்.

இதேபோல் அமெரிக்காவிலும் ஆட்கள் உண்டு. வில்லியம் பர்ரோஸ், சார்ல்ஸ் ப்யூக்கோவ்ஸ்கி, கேத்தி ஆக்கர். அவர்களின் எழுத்தும் வாழ்வும் ஒன்றுதான்.

https://thiruttusavi.blogspot.com/2020/08/2_12.html?fbclid=IwAR25L5NGEKn3e-BGNKkwWsO0G9hZE7uYg115_SKBtq-lOI1m5pUeC6yrJ6c

சுமார் இரண்டு மணி நேர அபிலாஷின் உரை

“சாருவை ஒரு பிரதியாக வாசிப்பது” – ஒரு விவாதம்!

Abilash Chandran यांनी वर पोस्ट केले रविवार, ९ ऑगस्ट, २०२०