பூச்சி – 123

ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.  அவருடைய மண்ணில் தெரியுது வானம் நாவலை சுமாராக இருபது லட்சம் பேர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.  அந்த நாவலைப் படித்தவர்கள் அதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி இருக்க முடியாது.  அவர்களது வாழ்வியல் கண்ணோட்டத்தில் ஒரு சிறிதளவு மாற்றத்தையாவது கொண்டு வரக் கூடிய மந்திரஜாலத்தைக் கொண்ட ஒரு நாவல் மண்ணில் தெரியுது வானம்.  நாவல் தலைப்பின் அர்த்தம் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான்.  இந்த பூலோகத்திலேயே சொர்க்கத்தைக் கொண்டு வந்து விடலாம் என்பதுதான்.  சிதம்பர சுப்ரமணியன் என்ன தீர்க்கதரிசியா?  இல்லை.  ஆனால் ஒரு தீர்க்கதரிசியை தர்சனம் கண்டவர்.  அந்த தர்சனத்தை அப்படியே உள்வாங்கி எழுதியிருக்கிறார்.  அந்த நாவல் பற்றி எழுதியபோது இதை இளைஞர்கள் படித்தால் இந்த சமுதாயம் இன்னும் மேம்பட்டு இருக்கும் என்றேன்.  இளைஞர்களுக்குத் தமிழ் தெரியாதே?  அதனால் பெரியவர்களே இந்த நாவலின் ஓரிரு பக்கங்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டலாம் என்று எழுதினேன்.  இது ஒன்றும் நீதி நூல் அல்ல; அற நூல் அல்ல.  படு சுவாரசியமான நாவல்.  நாம் கேள்விப்பட்ட, சாலை முக்குகளில் காகம் எச்சிலிட சிலையாய் நின்று கொண்டிருப்பவர்தான்.  நீர் சிலையாய் நின்றால் போதும் என்று சொல்லி விட்டு நம் ஜோலியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் அந்த தீர்க்கதரிசியைத் தன் நாவலின் நாயகனாக வரித்து ஒரு நாவலைப் புனைந்திருக்கிறார் சிதம்பர சுப்ரமணியன்.

அந்த நாவலைப் பற்றி வரும் ஞாயிறு அன்று காலை பதினோரு மணிக்கு பாலம் வாசகர் வட்ட முகநூல் பக்கத்திலிருந்து பேச இருக்கிறேன்.  இது Zoom சந்திப்பு போல் அல்ல.  எத்தனை பேர் வேண்டுமானாலும் கேட்கலாம்.  எனக்கு இருக்கும் நேர நெருக்கடியில் பாலம் அமைப்பின் சஹஸ்ரநாமம் என்னைப் பேசக் கேட்ட போது முதலில் மறுத்து விடவே எண்ணினேன்.  ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாரம் தவறாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முன்பகல் பதினோரு மணிக்கு இந்த வாசகர் சந்திப்பை சேலம் பாலம் அமைப்பின் மூலமாக திரு சஹஸ்ரநாமம் நடத்திக் கொண்டிருப்பதால் மறுப்பு சொல்ல மனம் வரவில்லை. 

இதற்கு முந்தைய பாலம் சந்திப்புகளில் ஒன்றிரண்டை முகநூலில் பார்த்தேன்.  பொதுவாக 1500 பேரிலிருந்து 2000 பேர் வரை பார்க்கிறார்கள் என்று தெரிந்தது.  ஒரே ஒரு அறிஞரின் பேச்சை 2700 பேர் பார்த்திருக்கிறார்கள்.  அது கம்யூனிஸ்ட் விவகாரம்.  27000 பேர் பார்த்திருக்க வேண்டும்.  இப்போது இதைப் படிக்கும் அன்பர்கள் நண்பர்கள் வெறுமனே லைக் போட்டுக் கடந்து விடாமல் தங்கள் பக்கங்களில் நண்பர்கள் அறியப் பகிர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  ஏனென்றால், மண்ணில் தெரியுது வானம் நூல் பத்து லட்சம் பிரதி விற்றிருக்க வேண்டும்.  நூறோ அம்பதோதான் விற்றிருக்கும். நமக்கு வாசிக்கும் பழக்கம் இல்லை. நற்றிணை பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆக, வாசிக்கும் பழக்கம் இல்லாத இந்தச் சமூகத்தில் பேச்சையாவது கேட்க வேண்டும் என்று பிரியப்படுகிறேன்.  எனக்காக அல்ல.  எனக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை.  இந்த சமூகம் இன்னும் கொஞ்சம் மேம்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  சீலே ஒரு ஏழை நாடுதான்.  இந்தியாவை விட ஏழ்மை.  ஆனால் அங்கே பகலிலும் இரவிலும் – வெளிச்சமே இல்லாத நள்ளிரவிலும் கூட – ஒரு பெண்ணும் ஆணும் தனியே எந்த பயமும் இல்லாமல் நடந்து செல்ல முடிகிறது.  சோற்றுக்கு இல்லாவிட்டாலும், குளிருக்கு வெந்நீர் கிடைக்காவிட்டாலும் குற்றங்கள் இல்லாத, வேறு எந்தத் தொந்தரவுகளும் இல்லாத சமூகமாக இருக்கிறது.  ஏமாற்று வேலையே இல்லை. ஏதோ சொர்க்கலோகம் போல் இருந்தது.  அதுதான் மண்ணில் தெரியுது வானம்.  அதைத்தான் இந்தியாவில் ஒரு தீர்க்கதரிசி கனவு கண்டார்.  அதுதான் ந.சிதம்பர சுப்ரமணியனின் நாவல். 

என்னுடைய பேச்சு இரண்டு மணி நேரம் போகும்.  நேரம் இருந்தால் சிதம்பர சுப்ரமணியனின் மற்றொரு நாவல் இதய நாதம் பற்றியும் பேசுவேன்.  சங்கீதத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் மோகமுள் என்பார்கள்.  மோகமுள்ளுக்கும் முன்பாக எழுதப்பட்டது இதய நாதம்.  மோக முள் தரத்துக்கு இருக்கும். 

மண்ணில் தெரியுது வானம் உங்கள் இல்லத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.  அந்தப் பொக்கிஷத்தைப் பற்றிப் பேச இருப்பதால் என் பேச்சும் நீங்கள் தவிர்க்கக் கூடாதது என்று கருதுகிறேன்.  என் பேச்சை மொத்தம் 20000 பேர் கேட்டால்தான் அது அந்த தீர்க்கதரிசிக்கும் அவரைப் பற்றி எழுதிய சிதம்பர சுப்ரமணியனுக்கும் நாம் செலுத்தும் மரியாதை.