முன்னோடிகள் 25: பெரியோரைப் புகழ்தலும் இலமே…

ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றிய உரை சிறப்பாக முடிந்தது.  இந்த இரண்டு தினங்களில் மூவாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  நல்ல எண்ணிக்கை.  இதுவே கட்டண உரை என்றால் இவ்வளவு பேர் பார்க்க வாய்ப்பு இல்லை.  ஆனாலும் நம்முடைய மாதாந்திர ஸூம் சந்திப்புகள் மகத்தான வெற்றி என்றே சொல்ல வேண்டும்.  எந்த நேரத்தில் வைத்தாலும் நூறு பேர் வந்து விடுகிறார்கள்.  ஆனால் அந்தப் பேச்சை ஏதோ கொஞ்சம் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் மேலும் ஒரு பத்து இருபது பேர்தான் வாங்க முன் வருகிறார்கள்.  போகட்டும், அது பற்றி நிறையவே எழுதி விட்டேன். 

பிச்சைக்காரனின் கடிதம் வழக்கம்போல் என்னை உற்சாகப்படுத்துவதாக இருந்தது.  இந்தப் பெருமை ந. சிதம்பர சுப்ரமணியனுக்கும் அவரை எழுத வைத்த அவரது நண்பர்களுக்குமானது.  திருவல்லிக்கேணி கடற்கரையில் தினந்தோறும் அவர் உரையாடிய நம்முடைய முன்னோடிகளை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

அன்புள்ள சாரு…

ந சிதம்பரசுப்ரமணியன் படைப்புலகம் குறித்த உங்களது உரை உணர்வுபூர்வமாக இருந்தது

முப்பது வருடங்களுக்குமுன் படித்திருந்தால் இதை நிராகரித்திருக்கக்கூடும் என்ற உங்கள் அறிவிப்பு முக்கியமானது

ஆத்திகம் நாத்திகம் பக்தி புரட்சி கட்சிகள் இசங்கள் என எதற்கும் அடிமையாகாமல் தொடர்ந்து தன்னை மாற்றிக்கொண்டு தன்னை சோதனைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டு புதிது புதிதாக உள்வாங்கிக் கொண்டு தேடலிலேயே இருக்கும் ஒரு ஞானியாக உங்களை பலர் பார்ப்பதற்கு காரணம் இதுதான்.

மண்ணில்  தெரியுது வானம் நாவல் குறித்துப் பேச திட்டமிருந்த நீங்கள் இதயநாதம் குறித்தும் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது

படைப்பாளிக்குத் தேவையான நேர்மை, சத்தியம்  என்பது நீங்கள் எப்போதும் பேசிவரும் ஒன்று.

சமரசமற்ற எழுத்து என்றால் சாரு என்பது வியப்பல்ல.

உங்கள் பள்ளியில் இருந்து உருவான அராத்து போன்றவர்களும் அப்படித்தான் இருக்கின்றனர்.

இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் லைக்குகளுக்காக, ஊடக வாய்ப்புகளுக்காக,  கும்பல் மனப்பான்மையில் கலக்காமல், தனித்துவமாக நிற்பது உங்கள் பள்ளி மட்டும்தான் என்பதை யார் வேண்டுமானாலும் எளிதில் சரி பார்க்க இயலும்.

இந்தப் பின்னணியில் இதயநாதம் கதையில் வரும் கலைஞனின் நிமிர்வை துல்லியமாக புரிந்து கொள்ள முடிந்தது.

உன் குடும்பமே உன் எதிரி.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என நீ நினைத்தால் நீ என்னவன் அல்ல என்று அதிரடியாகப் பேசிய புரட்சியாளர் இயேசுவின் குரல்,  மண்ணில்  தெரியுது வானம் மற்றும் இதய நாதத்தில் ஒலிப்பதை உங்களால் மட்டுமே இவ்வளவு அழகாக சொல்ல முடியும்.

குடும்பத்த முதலில் கவனிங்க என ரஜினி சொல்வதைக் கேட்டிருந்தால் ஒரு சாரு கிடைத்திருக்க மாட்டார்.

அனைவரும் கேட்க வேண்டிய உரை மட்டுமல்ல  தனி நூலாக வர வேண்டிய உரையும்கூட

அன்புடன்

பிச்சைக்காரன்

பிச்சைக்காரனின் வார்த்தைகளை இங்கே வெளியிடுவதன் காரணம், இப்படியெல்லாம் நாம் இருக்க வேண்டும் என்று நமக்கே நாம் நினைவு படுத்திக் கொள்வதற்கும் சங்கல்பம் செய்து கொள்வதற்கும்தான்.  பெரியோரைப் புகழ்தலும் இலமே என்றான் கணியன்.  ஆனால் என்னைப் போன்ற சிறியோனை யாரேனும் பெரியோன் என அழைத்தால் பெரியோனாக நடந்து கொள்ளத் தோன்றுகிறது.  அது நமக்கும் சமூகத்துக்கும் நல்லது இல்லையா?  

அந்தக் குறிப்பிட்ட உரையைக் கேட்க விரும்புவோர் இந்த லிங்க் மூலம் கேட்கலாம்.

***